Thursday, November 26, 2020
முகப்பு செய்தி விசுவ இந்து பரிஷத்தின் யாத்திரைக்கு எதிராக கிளம்பியது தமிழகம் !

விசுவ இந்து பரிஷத்தின் யாத்திரைக்கு எதிராக கிளம்பியது தமிழகம் !

-

பாபர் மசூதி இடிப்பை ஒட்டி நடக்கும் வழக்கின் இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெறப் போவதை ஒட்டி இந்துமதவெறியர்கள் தமது கலவர திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். பார்ப்பனிய இந்துமதவெறி இயக்கமான விஸ்வ ஹிந்து பரிஷத் இதற்கெனவே ஒரு ரத்த யாத்திரையை “ராம ராஜ்ஜிய ரத யாத்திரை” என்ற பெயரில் அயோத்தியில் பிப்ரவரி 13, 2018 அன்று துவக்கியது. ஆறு மாநிலங்களில் பயணித்த இந்த யாத்திரை இறுதியாக தற்போது தமிழகத்தில் நுழைந்திருக்கிறது.

இந்து மதவெறியை நேரடியாக கிளப்பி ஆட்சியைப் பிடித்த பாஜக முதல்வர் யோகி ஆதித்தியநாத் கும்பலால் அயோத்தியில் துவக்கப்பட்ட இந்த யாத்திரை உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா  வழியாக கேரளா வந்த யாத்திரை, பின்னர் தமிழக – கேரள எல்லையில் இருக்கும் நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டையை அடுத்த புளியரை வழியாக தமிழகத்தில் இன்று 20.3.2018 நுழைந்திருக்கிறது.

(தமிழகத்துக்குள் நுழைந்துள்ள காவி பயங்கரவாதிகள்)

இந்துமதவெறியர்களின் ‘இர(த்)த யாத்திரைக்கு’ தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயன்று அனுமதி மறுக்கப் பட்டதால் எம்.எல்.ஏ.க்கள் முகமது அபுபக்கர், தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் சட்டசபையில் நேற்று வெளி நடப்பு செய்தனர்.

ராமராஜ்ஜிய ‘ரத்த யாத்திரையை’ தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோமென காவி பயங்கரவாத எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதில் பெரியார் அமைப்புகள், மதிமுக, தலித் அமைப்புகள், முஸ்லீம் அமைப்புகள் பங்கு பெற்றன. இக்கூட்டமைப்பின் சார்பில் செங்கோட்டை புளியரையில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு தற்போது நடந்து வருகிறது.

பாஜக மோடி அரசின் அடிமையாக அடியாள் வேலை செய்யும் அதிமுக எடப்பாடி அரசு, ‘ரத்த யாத்திரைக்கு’ மட்டும் அனுமதி கொடுத்து விட்டு எதிர்ப்பு செய்பவர்களுக்கு நெல்லை மாவட்டம் முழவதும் 144 தடை உத்தரவு போட்டுள்ளது. அதாவது கலவரத்தை தூண்டுபவர்களுக்கு அனுமதி, தடுப்பவர்களுக்கு தடை!

இதற்கென நெல்லை மாவட்டம் முழுவதும் 32 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து வெளி மாவட்டங்களில் இருந்து வரும் காவி பயங்கரவாத எதிர்ப்பு கூட்டமைப்பின் தொண்டர்களை கைது செய்கின்றனர். எல்லா வகை போலீசையும் ஆயிரத்திற்கும் மேற்பட்டு நெல்லையில் குவித்துள்ள எடப்பாடி அரசு எப்பாடு பட்டாவது ‘ரத்த யாத்திரையை’ நடத்தியே தீர வேண்டும் என உறுதி பூண்டுள்ளது.

செங்கோட்டை மறியல் போராட்டத்திற்கு வரும் வழியில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொளத்தூர் மணி, த.மு.மு.க-வின் ஜவஹாருல்லா, தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல் முருகன் ஆகியோர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர். செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகே நடக்கும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்களை கைது செய்கிறது போலீசு. நாம் தமிழர் கட்சியின் சீமானும் அந்த மறியலில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த மறியலை தடுத்து நிறுத்தும் தமிழக அரசைக் கண்டித்தும், தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை அண்ணாசாலை, சேலம் உள்ளிட்டு பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடக்கின்றன.

ஐந்து மாநிலங்களில் எதிர்ப்பில்லாத போது தமிழகத்தில் மட்டும் கிடைத்த இந்த எதிர்ப்பை பார்த்து இந்துமதவெறியர்கள் கடும் அதிர்ச்சியிலும், வெறியிலும் இருக்கின்றனர். இதனாலேயே டெல்லியில் இருந்து எடப்பாடி கும்பலுக்கு கடுமையான உத்தரவுகள் வந்திருக்கும். இல்லையென்றாலும் அடிமையின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதில் இவர்களுக்கே தனி அக்கறை உண்டல்லவா?

ராமராஜ்ஜிய ‘ரத்தயாத்திரை’ இன்று காலை கேரள மாநிலம் புனலூரில் இருந்து தமிழக எல்லையான புளியரைக்கு வந்த போது இந்துமதவெறியர்களோடு ஏராளமான போலீசும் பாதுகாப்பிற்காக செல்கின்றனர். எதிர்ப்பு காட்டுபவர்களை சிதறடிக்க வஜ்ரா வாகனங்களும் யாத்திரையுடன் செல்கின்றன.

ராமராஜ்ஜிய ‘ரத்த யாத்திரை’ தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சிவகிரி வழியாக விருதுநகர் மாவட்டத்திற்கு செல்கிறது. தொடர்ந்து நாளை (21, மார்ச், 2018 – புதன்கிழமை) மதுரை, காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. பிறகு 22 -ந்தேதி ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி, நெல்லை பகுதிகளுக்கும், 23 -ந்தேதி நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கும் சென்று இறுதியில் திருவனந்தபுரம் சென்று முடிகிறது.

பாஜக -வின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி 1990 -களில் துவக்கிய முதல் ரத யாத்திரை பல நூறு முஸ்லீம் மக்களைக் கொன்று கலவரங்களை உருவாக்கியது. குஜராத்தில் இந்த யாத்திரை பயணித்த போது திருவாளர் மோடி அவர்கள் அத்வானியின் சாரதி போன்று ரதத்தில் பயணித்தது குறிப்பிடத்தக்கது. பாபர் மசூதியை இடிக்கவும், பிறகு ஆட்சிக்கு வரவும் பாஜக-விற்கு இந்த யாத்திரை பயன்பட்டது.

மார்ச் 14-ல் பாபர் மசூதி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை நிலத் தகராறாக மட்டுமே கருதுமென தெரிவித்திருந்தாலும், மனுநீதியின் படியும், பார்ப்பனிய பாஜக -வின் நீதிமன்ற செல்வாக்கின் படியும் தீர்ப்பு அவாளுக்கு ஆதரவாகவோ, இல்லை சுற்றி வளைத்து ஆதரவாகவோதான் வருமென்பதை எவரும் யூகிக்க முடியும்.

அத்வானி யாத்திரை முடிந்து, பாபர் மசூதி இடிக்கப்பட்டு நாடு முழுவதும் இந்துமதவெறியர்கள் நடத்திய கலவரங்களில் பல நூறு முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இன்று பொருளாதார அரங்கில் நாட்டு மக்களை வாட்டி வதைத்து வரும் பா.ஜ.க, மற்றொரு முனையாக இந்துமதவெறியை மீண்டும் கையில் எடுத்து நாட்டு மக்களை சிதைக்க முடிவு செய்திருக்கிறது.

சட்டசபையில் தி.மு.க. -வின் சார்பில் மு.க. ஸ்டாலின் ரத யாத்திரை அனுமதித்த அரசைக் கண்டித்து பேசினார். அதன் பொருட்டு கவன ஈர்ப்பு தீர்மானமும் தி.மு.க சார்பில் கொண்டு வரப்பட்டது. பிறகு தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். சிறிது நேரம் சாலை மறியல் செய்த தி.மு.க எம்.எல்.ஏக்கள் உடனேயே கைதாகி மண்டபம் சென்று விட்டனர். போராட்டத்தை கொஞ்சம் கூடுதல் நேரம் செய்வதற்கு கூட தி.மு.கவிற்கு தெம்பு இல்லை. முதலமைச்சர் எடப்பாடியோ மற்ற மாநிலங்களில் ரத யாத்திரை அமைதியாக நடக்கும் போது தமிழகத்தில் மட்டும் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பு காட்டுவது சரியல்ல என்று வாங்கும் காசிற்கு அதிகமாகவே கூவியிருக்கிறார்.

இருப்பினும் இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் இந்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஏனெனில் இது பெரியார் மண். பார்ப்பனியத்தை கல்லறைக்கு அனுப்பும் வரை தொடர்ந்து போராடுவோம்.

 

  1. பார்ப்பனியத்திற்கு இந்த மண்ணிலேயே சவ குழி தோண்ட வேண்டும். சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான கோட்பாட்டை தாங்கி வரும் ரதத்தை அடித்து நொறுக்குங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க