கல்விராயன் பேட்டை உடைப்பு

நீதிமன்றம், மோடி, குமாரசாமி, எடப்பாடிகளின் தடைகளை உடைத்துக் கொண்டு இயற்கை நிகழ்வாக காவிரிநீர் மேட்டூர் அணையின் கொள்ளளவை தொட்டு விட்டது. ஐந்தாண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் 120 அடியை தொட்டுள்ளது. கால் நுாற்றாண்டாக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் சற்று மகிழ்ச்சியடைந்து சுறுசுறுப்பானர்கள். என்றாலும் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை.

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 19/07/2018 அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. 22/07/2018 அன்று கல்லணை திறக்கப்பட்டு கடைமடை நோக்கி தண்ணீர் சென்றது. 28/07/2018 காலை வரை மயிலாடுதுறை துலாக்கட்டத்தை காவிரி நீர் தொடவில்லை. நாற்பதாயிரம் ஏக்கர் பாசன பரப்பை கொண்ட மண்ணியாற்றிக்கு நீர்வரவில்லை, சேதுபாவா சத்திரத்திற்கு நீர்வரவில்லை.

அமைச்சர் ஒ.எஸ் மணியன் ஊரான தலைஞாயிறில் குடிநீர் பஞ்சம், வேளாண்  அமைச்சர் துரைக்கண்ணு சட்டமன்ற தொகுதியில் தண்ணீர் வரவில்லை. ஆறுகள் துார் வாரப்படவில்லை, ஆறுகள் வாய்க்கால்களில் இறங்கி விவசாயிகள் போராட்டம். இவைகள்தான் ஒருவார காலமாக காவிரி டெல்டா குறித்த பத்திரிகை செய்திகள். ”துார் வாரும் பணிகள் நடைபெறாததால் டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லை” என்ற குற்றச்சாட்டை விவசாய சங்கத் தலைவர்கள் எழுப்புகிறார்கள்.

”துார்வாரும் பணிகள் குறித்த புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. அந்தந்த பகுதி விவசாயிகள் கொண்ட குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு துார்வாரும் பணி நிறைவேற்றப்படுகிறது. பதினோரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நேரடி ஆய்வு மூலம் சோதித்து உறுதி செய்யப்படுகிறது” என்று சத்தியம் செய்கிறார்கள் அமைச்சர் பெருமக்கள்

உண்மை நிலையோ நேர் எதிராக உள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, வாய்க்கால்களில் வறட்சி என்பதுதான் காவிரி டெல்டாவின் இன்றைய அவலம். கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்ட மறுநாளே புது ஆறு (கல்லணைக் கால்வாய்) கல்விரயான் பேட்டை அருகில் உடைந்து வயல்களிலும், கள்ளப்பெரம்புர் ஏரியிலும், வெண்ணாற்றிலும் தண்ணீர் வடியத்தொடங்கியது.

வெள்ளப் பெருக்கு
தூர்வாரப் படாமல் அடைப்புகளோடு காணப்படும் இருபது கண் பாலம் தஞ்சை

புது ஆற்றின் முதல் தடுப்பணையான தஞ்சை இருபதுகண் பாலத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் கதவுகள் உயர்த்த முடியவில்லை திறக்கப்பட்ட கதவுகளிலும் ஆகாயதாமரை மற்றும் கழிவுகளால் மூடப்பட்டு, அடைப்பு எற்பட்டு தண்ணீர் வெளியேறவில்லை. புது ஆற்றின் பலவீனமான பகுதியான கல்விராயன் பேட்டையில் ஆறு உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

3400 கன அடி  தண்ணீர் பாய்ந்தோடும் கொள்ளளவு கொண்ட புது ஆற்றில் 2000 கன அடிக்கே பருவ மழை இல்லாத காலத்தில் உடைப்பு என்பது அதிர்ச்சிக்குரியது.

வெள்ளப் பெருக்கு
கல்விராயன் பேட்டை உடைப்பு

நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் இருநுாறு கோடியில் பராமரிப்பு பணி  புது ஆற்றில் தொடங்கப்பட்டது. முதல் கட்ட பணியோடு மராமத்து பணிகள் முடக்கப்பட்டு கிடப்பில் கிடக்கின்றன. உடைப்பு அடைப்பதற்காக புது ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவுருணி, பகுதிகளுக்கு தண்ணீர் போய்ச் சேரவில்லை. புது ஆற்றில் திறந்து விடப்பட்ட நீர் கல்லணையின் பாதுகாப்பு கருதி கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு கடலுக்குச் சென்றது. முக்கொம்பு மற்றும் கல்லணையிலிருந்து சுமார் 15TMC அளவு தண்ணீர் பயன்பாடு எதுவும் இன்றி கடலில் கலந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

மராமத்து பணிகள் முடிக்கப்படாதால் காரைக்காலுக்கும், கடலுாருக்கும் செல்ல வேண்டிய நீர் அடைபட்டு கடலில் கலந்து கொண்டிருக்கின்றது.

காவிரியின் தென்கரையிலும் வெண்ணாற்றிலும் சில இடங்கள் உடைப்பு எடுக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் எச்சரிக்கிறார்கள்.  காவிரி தென்கரையில் உள்ள பொன்னாவரை, உப்புகாய்ச்சிக் கோட்டை, கல்யாணபுரம், மேலஉத்தமநல்லுார் ஆகிய ஊர் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

விக்ரமன் ஆற்றில் தண்ணீர் விடப்படாததால் உக்கடை பாசன வாய்க்கால் பகுதிகளான களஞ்சேரி, பள்ளியுர், திபாம்பாள்புரம், அம்மாபேட்டை, மகிமாலை, செம்பியன்நல்லுார், அவளிவநல்லுார், நெடுவாசல் பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி தண்ணீர் கேட்டு போராடினர்.

வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணுவின் பாபநாசம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுள்ளான் ஆறு, வெட்டுவாய்க்கால், இடையிருப்பு வாய்க்கால், வழுதியூர் வாய்க்கால், மணக்கால் வாய்க்கால்,  பாசன பகுதிகளுக்கு இன்னும் நீர் வரவில்லை துார்வாரும் பணிகளும் நடைபெறவில்லை. மக்கள் போராடும் இடங்களில் பணிகள் முடிக்கப்படாத நிலையில் அவசர கதியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வாய்க்கால்களில் பொக்லைன் இயந்திரம் நிறுத்தப்பட்டு அடைப்பு நீக்கி தண்ணீர் திறக்கப்படுவதை ஆங்காங்கு பார்க்க முடிகிறது.

உலக வங்கி  திட்டத்தின் கீழ் 1200 ஏரி, குளங்கள் மராமத்து பணி  திட்டமிடப்பட்டு ரூ780 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஐம்பது பணிகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன. ”காண்ராக்டுக்கு 20% கமிஷன் என்பது எழுதப்படாத விதி. கூடுதல் கமிஷன் கேட்கப்படுவதால் பிற பணிகள் தொடங்கப்படவில்லை. உலக வங்கிக் குழு 30/07/2018 அன்று பணிகளை பர்வையிட இருப்பதால் சில வேலைகள் அவசரகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று பொதுபணித்துறை காண்ராக்டர்கள் புலம்புகிறார்கள்.

மணல் கொள்ளையால் ஆற்றின் நீரோட்ட போக்கு மாறியுள்ளது. கரைகள் பலவீனப்பட்டும் உள்ளது. காவிரி வெண்ணாறு புது ஆறு (கல்லணை கால்வாய்) இவைகளில் இருந்து பிரியும் 36 துணை ஆறுகளிலும் கோரைபுல், காட்டுஆமணக்கு, ஆகாயதாமரை பேன்றவை அடைந்துக் கிடப்பதை எல்லா பகுதிகளிலும் காண முடிகிறது.

மராமத்து பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஜீன் மாதம் முதல் வாரத்தில்தான் நடத்தப்பட்டது. தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு விட்டதால் ஒப்பந்தகாரர்களுக்கு மேலும் வசதியாகிவிட்டது.

மேலத்தஞ்சை பகுதியிலேயே இந்த நிலை என்றால் கடைமடையான கீழத்தஞ்சை நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை.  பட்டினி சாவுகளும், அதிர்ச்சி மரணங்களும் காவிரி டொல்டாவில் நிரந்தரமாகிவிடுமோ என்ற அச்சமே மேலிடுகிறது.

  • வினவு களச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க