மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதியளித்திருப்பது நாம் அறிந்ததே. இவ்விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் புரிந்துள்ளதும், அரசியல் சட்ட விரோதமாக செயல்பட்டதும் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளிக்குமாறு, மத்திய அரசின் நீர்வளத்துறை, வனத்துறை ஆகியவற்றிடம் கடந்த 2018, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் செயல்திட்ட வரைவு அறிக்கை மற்றும் கோரிக்கை மனுவை அளித்தது கர்நாடக அரசு. இதில் மேக்கேதாட்டுவில், ரூ 5,912 கோடியில் அணையும் சுமார் 400 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையமும் அமைப்பதற்கான திட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் கொடுக்கப்பட்ட மேக்கேதாட்டு அணைக்கான செயல்திட்ட வரைவு அறிக்கையை அங்கீகரித்து கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை நேற்று (27-11-2018) கர்நாடக அரசிற்கு அனுப்பியது மோடி அரசு. மேலும் இது குறித்து விரிவான ஆய்வறிக்கை தயாரிக்குமாறும் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
இச்செய்தி வெளியானதும் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இச்சூழலில் டெல்லியில் 03.12.2018 அன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியது.
தில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் அதன் தலைவர் மசூத் ஹுசேன், தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலப் பிரதிநிதிகளும், மத்திய அரசின் நீர்வளத்துறை ஆணையத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் ஆர்.செந்தில்குமார், காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்ரமணியன், துணைத்தலைவர் கே.எஸ்.ராம்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக பிரதிநிதிகள் பேசும்போது, “உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல், காவிரி ஆற்றின் குறுக்கே எந்த புதிய அணையும் கட்ட முடியாது. இந்நிலையில், மத்திய அரசு கர்நாடகாவுக்கு மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளித்தது சட்டப்படி தவறு. இந்தத் திட்டம் நிறைவேறினால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அரசு இந்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தினர்.
மேலும் “பெங்களூரு குடிநீர் தேவைக்காக நெட்கல் நீர்த்தேக்கத்தில் இருந்து ஏற்கனவே கர்நாடகம் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, குடிநீருக்காக மேக்கேதாட்டுவில் அணை கட்ட அவசியம் ஏதும் இல்லை. அப்படி அணை கட்டப்பட்டால் கிருஷ்ணராஜசாகர், கபினி மற்றும் பில்லிகுண்டுலுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தற்போது தமிழ்நாட்டுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கிடைத்துக் கொண்டிருக்கும் நீர் தடுத்து நிறுத்தப்படும். இதனால் மிக முக்கியமான ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் தமிழ்நாட்டின் பாசனத்துக்கு நீர் கிடைக்காமல் போய் விடும்.” என்று கூறினர்.
படிக்க:
♦ மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி!
♦ அகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் ?
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹூசேன் கூறியதாவது:
“கூட்டம் சமூகமான முறையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவை இப்போது கூற முடியாது. அடுத்த கூட்டம் ஜனவரியில் நடைபெறும். மேக்கேதாட்டு பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. தமிழக அரசின் எதிர்ப்பை ஆணையம் கருத்தில் கொண்டுள்ளது. கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மேலாண்மை ஆணைய அனுமதி பெற்றே தாக்கல் செய்ய முடியும். இந்த திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு, மற்ற மாநிலங்கள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும்.”
இதனிடையே கர்நாட அரசின் நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், அணைக் கட்டுமான பகுதியை நிபுணர் குழுவுடன் 07.12.2018 அன்று பார்வையிடுவதாக கூறியிருக்கிறார்.
ஆக மத்திய அரசு முதற்கட்ட அறிக்கையை ஏற்று முழு விரிவான அறிக்கையை முன்வைக்குமாறு ஏன் கர்நாடக அரசிடம் கூறியது? இச்செய்தி வெளியானதும் இப்படி அறிக்கை முன்வைப்பது தவறு என காவிரி மேலாண்மை ஆணையம் ஏன் கூறவில்லை?
அப்படி ஒரு முதற்கட்ட அறிக்கையை அனுமதிக்க கூடாது என மத்திய நீர்வளத்துறை ஆணையத்தை தடுக்க முடியாது என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் கூறுகிறார். ஆனால் இரண்டாம் கட்ட விரிவான அறிக்கைக்கு ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறுகிறார். ஏனிந்த முரண்பாடு? இதன்படி இந்த ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என தமிழகம் கூறியது உண்மை என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து விடுதலைச் சிறுத்தை கட்சியின் ரவிக்குமார் ’தி இந்து’வில் எழுதிய கட்டுரையில், “கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு நடந்தபோது, அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘மேகேதாட்டு நீர்த்தேக்கத் திட்டத்தை உபரி நீரைத் தேக்கி வைப்பதற்கான ஏற்பாடாக ஏன் கருதக் கூடாது?’’ என தமிழகத்துக்காக வாதாடிய வழக்கறிஞரிடம் கேட்டார். ‘கர்நாடகம் அல்லாத மூன்றாவது தரப்பின் கட்டுப்பாட்டில் அந்த நீர்த் தேக்கம் இருக்குமானால் அதை ஏற்றுக்கொள்கிறோம்’ என அவர் பதிலளித்தார். வழக்கறிஞர் கூறியது கர்நாடகத்துக்கு ஆதரவாக இருக்கிறது என அப்போதே அதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன.
மேக்கேதாட்டு திட்டத்தை எதிர்த்து இப்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உடனடியாக நியாயம் வழங்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. 2019 பொதுத்தேர்தலை மனதில் வைத்துதான் மத்தியில் ஆளும் பாஜக அரசு அப்பட்டமாக கர்நாடகத்துக்கு ஆதரவான நிலை எடுத்திருக்கிறது. அரசியல் நோக்கம் கொண்ட இந்த முடிவை அரசியல் களத்திலும் எதிர்கொண்டாக வேண்டும்.
எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒட்டுமொத்தத் தமிழகமும் ஓரணியில் இருக்கிறது எனக் காட்ட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி இதற்காகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.
படிக்க:
♦ ஆய்வுக்குழு கிடக்கட்டும் ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம்
♦ தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : வினவு செய்தியாளரின் நேரடி அனுபவம் !
இதன்படி மேக்கேதாட்டு அணையில் உபரிநீரைத் தேக்கி அதை மூன்றாவது தரப்பு நிர்வகித்தால் பிரச்சினை இல்லை என தமிழக அரசு கூறியிருப்பது தெரிகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக-வின் வெற்றிக்கு எப்படி இந்த மேக்கேதாட்டு அணை தேவைப்படுமோ, அதே போல எடப்பாடி அரசு தமிழகத்தில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்தே ஆக வேண்டிய அடிமைத்தன நிலையில் மேக்கேதாட்டு அணைப் பிரச்சினையை அடக்கி வாசிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது.
இனி வரும் காலத்தில் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்று எடப்பாடி அரசு சொல்லும். கர்நாடக அரசோ, மத்திய அரசின் ஆதரவுடன் அணை கட்டும் முயற்சியை செய்யும். இதை தடுக்க வக்கற்ற காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டங்களை மாதாமாதம் நடத்தும்.
ஆக மத்திய அரசு சட்டப்படியோ, நீதிமன்ற உத்தரவுப்படியோ, காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைப்படியோ நடக்கவில்லை. அப்பட்டமாக அனைத்து சட்டங்கள், தீர்ப்புக்களை மீறி கர்நாடக மாநிலத்தை ஆதரிக்கிறது. இந்தப் பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்படுவது மட்டுமின்றி, இந்தியாவில் அரசியல் சாசன சட்டத்தின்படி ஜனநாயகமோ அரசாட்சியோ இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடைபெற வேண்டுமென்றாலே மத்திய அரசின் துரோகம் தமிழக மக்களால் வீழ்த்தப்பட வேண்டும்.