மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டிக் கொள்ள அனுமதியளித்துள்ளது மத்திய அரசு. இதன்மூலம் ஏற்கெனவே கஜாவால் துவண்டு போயுள்ள காவிரி டெல்டா மாவட்டங்களை ஒட்டு மொத்தமாக ஒழிக்கலாமென இறங்கியுள்ளது மோடி அரசு.

மேட்டூர் அணை அருகே பாய்ந்து வரும் காவிரி

கர்நாடகாவில் உள்ள தலைக்காவிரி பகுதியில் உருவாகிறது காவிரி ஆறு. அங்கிருந்து கிளம்பி வரும் காவிரி, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் வழியாக ஓடி கடலில் கலக்கிறது. இந்த 4 மாநிலங்களுக்கும் காவிரியின் மீது உரிமை உண்டு. இதனை சர்வதேச நீர் பங்கீட்டு விதிமுறைகளே அங்கீகரித்திருக்கின்றன.

ஆனால், கர்நாடகம் எப்போதுமே, தமிழகத்துக்கு முறைப்படி வழங்க வேண்டிய பங்கை வழங்காமல் மழையைக் காரணம் காட்டி நீர் திறந்து விட மறுத்துவருகிறது .

இந்நிலையில், காவிரி ஆற்றின் வழித்தடத்தில் ஒகேனக்கல்லில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கர்நாடகத்தின் மேக்கேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு அந்த மாநில அரசு 1967-ம் ஆண்டிலிருந்தே அவ்வப்போது முயற்சிகள் செய்து வந்தது.

படிக்க:
♦ அகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் ?
♦ காவிரி : தொடருகிறது வஞ்சனை !

முக்கியமாக, 2011-2013 காலகட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு கர்நாடக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து மனு செய்து வந்துள்ளது. இதனை மத்திய அரசு அனுமதிக்காததற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருந்தன. முதலாவதாக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இத்திட்டத்திற்கு காவிரி தீர்ப்பாயம் அனுமதியளிக்கவில்லை. இரண்டாவதாக, அடர்ந்த காட்டில் 2,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பை இந்தத் திட்டம் மூழ்கடிக்கும் மற்றும் வனவிலங்குகளைப் பாதிக்கும் என்பது போன்ற பல காரணங்களால் வனத்துறையும் சுற்றுச்சூழல் துறையும் அனுமதியளிக்கவில்லை.

அதன் பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில், நவம்பர் 11-ம் தேதியன்று அன்றைய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், கரும்பு விவசாயத்தை விரிவுபடுத்தவும், பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்கும், மின்சாரத் தேவைக்கும் மேக்கேதாட்டுவில் கர்நாடக வனப்பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் சமநிலை நீர்த்தேக்கம் கட்டவிருப்பதாகத் தெரிவித்தார்.

மொத்தம் 66 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இந்த அணையை அமைக்கும் முயற்சியில் அன்றைய சித்தராமையா அரசு இதனை மிகத்தீவிரமாக செயல்படுத்தத் தொடங்கியது.

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தருமபுரியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

இதற்கு அப்போதே தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தமிழகம் முழுவதும் புரட்சிகர அமைப்புகளும் ஜனநாயக சக்திகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா மாவட்டத்து மக்கள் கடையடைப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அடுத்த சில ஆண்டுகளில் அவ்வப்போது மேக்கேதாட்டு அணை குறித்து பேசி வந்தது கர்நாடக அரசு. உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு நிலுவையில் இருந்ததால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதத்தில் காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம். தமிழகத்தை வஞ்சிக்கும் விதமான தீர்ப்பையே வழங்கியது. அத்தீர்ப்பில் கூடுதலாக, ”காவிரியின் குறுக்கே தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கர்நாடகா புதிய அணைகள் கட்டக்கூடாது. இந்த தீர்ப்பின்படி அடுத்த 15 ஆண்டுகளுக்கு நீர்பங்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.

காவிரி நதிநீர் தொடர்பாக ஏற்கனவே கொடுக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும், இடைக்கால உத்தரவுகளையும் கழிப்பறைக் காகிதமாக மதித்த கர்நாடக அரசு, இந்தத் தீர்ப்பை மட்டும் மதித்துவிடவா போகிறது? இல்லையேல் தமது தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்காததைக் கண்டுங்காணாமல் நகர்ந்து சென்ற உச்சநீதிமன்றத்திற்கு திடீரென சொரணை வந்துவிடத்தான் போகிறதா ? எதுவும் நடக்கப் போவதில்லை.

படிக்க:
♦ ரிசர்வ் வங்கியா ? ரிலையன்ஸ் வங்கியா ?
♦ டி.சி.எஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு குறைந்த ஊதியத்தில் 28,000 கூடுதல் அடிமைகள் !

அந்த தைரியத்தில்தான், மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளிக்குமாறு, மத்திய அரசின் நீர்வளத்துறை, வனத்துறை ஆகியவற்றிடம் கடந்த 2018, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் செயல்திட்ட வரைவு அறிக்கை மற்றும் கோரிக்கை மனுவை அளித்தது கர்நாடக அரசு. இதில் மேக்கேதாட்டுவில், ரூ 5,912 கோடியில் அணையும் சுமார் 400 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையமும் அமைப்பதற்கான திட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டது.

மோடியை சந்தித்த குமாரசாமி

இதனைத் தொடர்ந்து 10, செப்டம்பர், 2018 அன்று கர்நாடக முதல்வர் குமாரசாமி டில்லி சென்று மோடியை சந்தித்து மேக்கே தாட்டு அணை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படியும், இத்திட்டத்தை ‘தேவையில்லாமல்’ எதிர்க்கும் தமிழக அரசை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் படியும் கோரிக்கை வைத்துச் சென்றிருக்கிறார். அதாவது டில்லி எஜமானரிடம் அவரது தமிழக அடிமையை தமக்கு ஒத்துழைக்க பணிக்குமாறு கோரிக்கை வைத்துவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் கொடுக்கப்பட்ட மேக்கேதாட்டு அணைக்கான செயல்திட்ட வரைவு அறிக்கையை அங்கீகரித்து கர்நாடக அரசு அணைகட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை நேற்று (27-11-2018) கர்நாடக அரசிற்கு அனுப்பியது மோடி அரசு. மேலும் இது குறித்து விரிவான ஆய்வறிக்கை தயாரிக்குமாறும் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை கர்நாடக மாநிலம் இந்துத்துவ சக்திகளுக்கு ஒரு முக்கியமான மாநிலம் என்பதாலும் இந்த ஓரவஞ்சனை அரங்கேறுகிறது.

*****

மேக்கேதாட்டு அணைத்திட்டம் பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்காகவே கொண்டு வரப்படுவதாக கர்நாடக அரசு கூறுவது முதல் பொய். பெங்களூருவில் ஏற்கனவே குடிநீரைத் தனியார் வசம் ஒப்படைக்கும் வேலைகளைச் செய்து வரும் கர்நாடக அரசுக்கு, குடிநீர் வியாபாரத்தில் தனியார் கல்லா கட்ட தங்குதடையின்றி தண்ணீர் வேண்டும் என்பதற்காகவும், கரும்புப் பாசனத்தை விரிவுபடுத்தவும்தான் அணை கட்டத் துடிக்கிறது.

பெங்களூரு சுற்றி வளர்ந்து வரும் நீர்நிலை பொழுதுபோக்குத் தளங்கள்

பெங்களூரு மாநகர எல்லைக்குள் மட்டும் சிறிதும் பெரிதுமாக ,2789 ஏரிகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் பெங்களூருவில் இருந்த ஏரிகள் பாதியாகச் சுருங்கி உல்லாச, ஆடம்பர விடுதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றிற்கு நீர்வரும் வழிகள் அனைத்தும்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 99% ஏரிகள் சாக்கடைகளாகவும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கழிவுகள் கொட்டும் இடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

இன்னும் சொல்லப் போனால் இந்தியாவிலேயே குடிநீரை வீணடிக்கும் நகரங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது பெங்களூரு. நாள்தோறும் காவிரியில் இருந்து எடுத்து பெங்களூருக்கு விநியோகம் செய்யப்படும் சுமார் 140 கோடி லிட்டரில், சுமார் 52% அங்கு வீணடிக்கப்படுகிறது.

அங்கு பயன்படுத்தப்படும் குடிநீரிலும் பெருமளவு மால்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு, கேளிக்கை விடுதிகளுக்குமே செலவிடப்படுகிறது. ஆனால் இனி அணையைக் கட்டி அதிலிருந்து எடுக்கப்படும் நீர்தான் பெங்களூருவின் தாகத்தைத் தீர்க்கவிருப்பதாகவும், அதனைத் தமிழகம்தான் தடுத்து வருவதாகவும் கர்நாடக மக்களிடையே பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறது.

படிக்க:
♦ மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி!
♦ காவிரி டெல்டாவை அழிக்க வரும் மேக்கே தாட்டு அணை

இந்த விவகாரங்கள் எதுவும் மத்திய அரசுக்கோ, உச்சநீதிமன்றத்திற்கோ தெரியாத விசயங்கள் அல்ல. இந்த சூழலின் பின்னணியில்தான் மேக்கேதாட்டு அணைக்கு மோடி அரசு அளித்திருக்கும் ஒப்புதலை உற்றுநோக்க வேண்டும்.

மீத்தேன் திட்டத்தின் மூலம் டெல்டாவை மொட்டையடிக்க முயற்சித்த பா.ஜ.க. அரசு, மக்கள் எதிர்ப்பு தொடர்ச்சியாக இருந்ததை அடுத்து சிறிது நாட்கள் பிரச்சினையை கிடப்பில் போட்டு, மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது. இதனையடுத்து கதிராமங்கலம், நெடுவாசல் என டெல்டா மக்கள் தொடர்ந்து போராடத் துவங்கினர். இன்றும் போராடி வருகின்றனர்.

தமக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சங்க பரிவாரக் கும்பலுக்கும்  “Go Back ” சொன்ன தமிழகத்தைக் காவு வாங்க காத்துக் கொண்டிருக்கும் மோடி

எப்போதாவது வரும் காவிரியால் அரை உயிருடன் இருந்து வந்த டெல்டா விவசாயம், உச்சநீதிமன்றத்தின் அயோக்கியத்தனமான தீர்ப்பால், கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது வீசிய கஜா புயல் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒட்டு மொத்தமாக பிடுங்கி வீசியெறிந்துவிட்டது. மரணப் படுக்கையில் இருக்கும் டெல்டா விவசாயிகளின் வாழ்க்கை தழைப்பதற்கு இருந்த ஒரே வாய்ப்பு, காவிரியில் நீர் வந்தால் மட்டுமே. அதுவும் கூட ஓரளவு பொருளாதார பின்புலமுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது.

டெல்டா விவசாயத்தின் இறுதிமூச்சை நிறுத்துவதற்காகவே இவ்வளவு நாள் கிடப்பில் கிடந்த இத்திட்டத்திற்கு, உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி ஒப்புதல் கொடுத்துள்ளது மோடி அரசு. தமிழகத்தின் இதயமான டெல்டாவை கருக்கத் துடிக்கும் பாஜக சங்கபரிவாரக் கும்பலை தமிழகமே ஒன்றுதிரண்டு விரட்டியடிக்காமல் இதற்குத் தீர்வில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க