Saturday, August 20, 2022
முகப்பு புதிய ஜனநாயகம் மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி!

மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி!

-

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் முடிவைத் தொடர்ந்து செயல்படுத்த மறுத்துவரும் கர்நாடக அரசு, இப்போது காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு மற்றும் இராசிமணல் ஆகிய இடங்களில் புதிதாக அணைகள் கட்டத் தீர்மானித்துள்ளது. இவ்விரு அணைகளும் கட்டப்பட்டுவிட்டால், மேட்டூருக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கிடைக்காமல், விவசாயம் அழிந்து தமிழகம் பாலைவனமாக மாறிப்போகும் அபாயம் ஏற்படும்.

மேக்கேதாட்டு பகுதி
தமிழக எல்லையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் பாறைகள் நடுவே காவிரி பாய்ந்தோடும் மேக்கேதாட்டு பகுதி.

கடந்த நவம்பர் 2014-ல் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சரான எம்.பி.பாட்டீல், “பெங்களூரு மக்களின் குடிநீர்த் தேவைக்காகவும், பெங்களூரு புறநகர மக்களின் மின்சாரத்திற்காகவும், கரும்பு விவசாயத்தை விரிவுபடுத்துவதற்காகவும் தமிழக எல்லையிலிருந்து ஏறத்தாழ 3 கி.மீ. தொலைவிலுள்ள மேக்கேதாட்டு (ஆடு தாண்டும் காவேரி) என்ற இடத்திலும், மைசூரின் சுற்று வட்டாரப் பகுதியிலும் அணைகள் கட்ட” இருப்பதாக அறிவித்தார். “மேக்கேதாட்டு அணையானது, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நிகரான கொள்ளளவைக் கொண்டதாக இருக்கும்” என்றும், “சுமார் 2,500 ஏக்கர் வனப்பகுதியில் அமைக்கப்படவுள்ள இந்த அணையானது சமநிலை நீர்த்தேக்கமாக இருக்கும்” என்றும் அவர் அறிவித்துள்ளார். இது தவிர, இராசிமணல் பகுதியிலும் கர்நாடக அரசு ஒரு அணை கட்டத் திட்டமிட்டு களப்பணிகளையும் தொடங்கியுள்ளது. காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதற்காக கர்நாடக அரசு உலக அளவில் ஒப்பந்தப் புள்ளிகளைக் கேட்டு அவற்றில் மூன்று நிறுவனங்களைத் தெரிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

ஏற்கெனவே கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பி அதிலிருந்து வழியும் நீரும், கிருஷ்ணராஜசாகரிலிருந்து மேக்கேதாட்டு வரையிலான சுமார் 110 கி.மீ. தொலைவுக்கு காவிரிக்கரையில் பெய்யும் மழைநீரும்தான் மேட்டூர் அணைக்குக் கிடைத்து வருகிறது. மேக்கேதாட்டு மற்றும் இராசிமணல் பகுதிகளில் அணைகள் கட்டுவதன் மூலம் இதுவரை கிடைத்துவந்த காவிரிநீரையும்கூட இனி கர்நாடகம் தடுத்து வைத்துக் கொள்ளும். இதனால் தஞ்சை டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக உள்ள காவிரி நீரானது இனி கானல் நீராக மாறிவிடும்.

தஞ்சை டெல்டா கடையடைப்புப் போராட்டம்
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்டத் திட்டமிடும் கர்நாடக அரசின் அடாவடித்தனத்தை எதிர்த்து தஞ்சை டெல்டா மாவட்டங்களில் நடந்த கடையடைப்புப் போராட்டம்.

மேக்கே தாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு கர்நாடக அரசு 2011-லிருந்து மைய அரசிடம் தொடர்ந்து மனு செய்து வந்துள்ளது. இக்காலகட்டங்களில் கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியும், மத்தியில் காங்கிரசு கூட்டணி ஆட்சியும் அதிகாரத்தில் இருந்துள்ளன. இப்போது கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சியும் மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியும் அதிகாரத்தில் உள்ளன. காங்கிரசு, பா.ஜ.க. ஆகிய இரு “தேசிய” கட்சிகளுமே இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரமாக இருப்பதையே இவை காட்டுகின்றன. போதாக்குறைக்கு, “எங்கள் மாநிலத்தில் அணைகட்ட தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிப்பது எந்தவகையிலும் நியாயமானதல்ல” என்கிறார், கர்நாடகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா.

கர்நாடக ஆட்சியாளர்கள் மேக்கேதாட்டு அணையின் மூலம் பெங்களூருவின் குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்க்கப் போவதாகவும், விவசாயிகளின் நலனுக்காக கரும்பு விவசாயத்தை விரிவாக்கப் போவதாகவும் கூறுவது கடைந்தெடுத்த மோசடியாகும்.

பட்டுக்கோட்டை வி.வி.மு முற்றுகைப் போராட்டம்
கார்ப்பரேட் கொள்ளைக்கான மேக்கேதாட்டு அணைத்திட்டத்த எதிர்த்தும், காவிரியில் தமிழகத்தின் நியாயவுரிமையை வலியுறுத்தியும் பட்டுக்கோட்டை வி.வி.மு.வினர் நடத்தி முற்றுகைப் போராட்டம்.

உலக வங்கி – உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி, தண்ணீரை வர்த்தகப் பொருளாக்கி அதற்கு விலை நிர்ணயிக்க வேண்டுமென்பதுதான் மைய அரசின் கொள்கை. தேசிய நீர்க்கொள்கையும் இதைத்தான் வலியுறுத்துகிறது. இதன்படி, உலகமயமாக்கம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து பெங்களூரு நகரை குளோபல் சிட்டியாக்குவது என்ற முடிவின்படி எஜ்ஜிபுரா, எல்.ஆர்.நகர், அம்பேத்கர் நகர், சாஸ்திரி நகர் போன்ற பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான ஏழைகள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதோடு, பெங்களூரின் குடிநீரைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதும் வேகமாக நடந்தேறி வருகிறது. 2002-ல் பெங்களூரு ஏரிகள் வளர்ச்சி ஆணையம் தொடங்கப்பட்டு ஹெப்பல ஏரியானது ஓபரா குழுமத்தின் ஈஸ்ட் இண்டியா ஓட்டலுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் பிடியில் உள்ள பெங்களூருவின் குடிநீர் விநியோகத்தின் காரணமாக காவிரியின் துணை ஆறான ஆர்க்காவதியிலிருந்தும், ஏரிகள்-குளங்களிலிருந்தும் வரைமுறையின்றி நீர் உறிஞ்சப்பட்டு, ஷாப்பிங் மால்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், பேரங்காடிகள், சுற்றுலா விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், மேட்டுக்குடியினருக்கான ஆடம்பர குடியிருப்புகள், வாட்டர் தீம் பார்க்குகள் – என தாரை வார்க்கப்பட்டு வருகிறது. பெங்களூரு நகர எல்லைக்குள் சாரக்கி அக்கிரகார ஏரி, சம்பங்கி ஏரி, கதிரேனஹள்ளி ஏரி, தர்மபூதி ஏரி, கோரமங்களா ஏரி முதலான ஏரிகள் இருந்த இடம் தெரியாமல் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. பெங்களூருவின் குடிநீர் தேவையை ஏரிகள் மூலம் கணிசமாக ஈடு செய்ய வாய்ப்பிருந்த போதிலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காகவும், வீட்டுமனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள புதுப்பணக்கார மாஃபியா கும்பலின் ஆதாயத்துக்காகவும் ஏரிகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன; அல்லது, அவை வீட்டுமனைகளாக மாற்றப்பட்டன. இதனால்தான் பெங்களூரு நகரில் குடிநீர் தட்டுப்பாடும் கட்டணக் கொள்ளையும் தீவிரமாகியுள்ளது.

12-mekke-dattu-captionஅடுத்து, கர்நாடகத்தில் கரும்பு விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தின் மூலம் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் கரும்பு விவசாயத்தை விரிவாக்கப் போவதாக அமைச்சர் எம்.பி.பாட்டீல் அறிவித்துள்ளார். கர்நாடக விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை காரணமல்ல. கரும்புக்கு உரிய விலை கிடைக்காததாலும், உரம்-பூச்சிமருந்துகளின் விலையேற்றத்தாலும், இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதாலும், கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கு சர்க்கரை ஆலை முதலாளிகள் ஆண்டுக்கணக்கில் பாக்கியைத் தராமல் விவசாயிகளை வஞ்சித்து வருவதாலும்தான் கரும்பு விவசாயிகள் கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்போது கரும்பு விவசாயத்தை விரிவுபடுத்துவதன் மூலம் சர்க்கரை மற்றும் கரும்புச் சக்கையிலிருந்து மின்சாரம் மற்றும் சாராயத்துக்கான கச்சாப்பொருள் முதலானவற்றின் மூலம் கார்ப்பரேட் முதலாளிகள் மேலும் கொழுப்பதற்குத்தான் மேக்கேதாட்டு அணைக்கட்டு திட்டமே அன்றி, அது விவசாயிகளின் நலனுக்கானதல்ல.

ஏற்கெனவே சுற்றுலாத் தலம் என்ற பெயரில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமிப்பது, காட்டை அழிப்பது, கிரானைட் குவாரிகள் அமைப்பது, சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவது முதலானவற்றால் யானைகளும் காட்டு விலங்குகளும் வாழ்விடம் பாதிக்கப்பட்டு உணவுக்கும் குடிநீருக்குமாக அலைபாய்ந்து கிராமங்களையும் விவசாயப் பயிர்களையும் நாசமாக்குவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மேக்கேதாட்டு அணை கட்டப்படுமானால் இப்பகுதியில் வாழ்ந்துவரும் யானைகள், குரங்குகள் முதலான விலங்கினங்களின் வாழ்விடம் பறிக்கப்பட்டு அவை எதிர்த்தாக்குதலை நடத்தும் அபாயம் ஏற்படும். மேலும், ஏறத்தாழ ஐயாயிரத்துக்கும் மேலான மரங்கள் வெட்டப்பட்டுதான் மேக்கேதாட்டு அணையையே கட்ட முடியும் என்பதால், ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இந்த உண்மைகளை மூடிமறைத்துவிட்டு, கூடங்குளம் அணு மின் நிலையம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் மின்தட்டுப்பாடு நீங்கிவிடும் என்ற மாயத் தோற்றத்தை ஜெயா கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் ஏற்படுத்தியதைப் போலவே, மேக்கேதாட்டு அணைக்கட்டு திட்டத்தால் பெங்களூருவின் குடிநீர் பற்றாக்குறை தீர்ந்து குடிநீர் கட்டணம் குறைந்துவிடப் போவதைப் போன்றதொரு பிரச்சாரத்தை ஊடகங்களின் துணையோடு கர்நாடக ஆட்சியாளர்கள் நடத்தி வருகின்றனர்.

மேலும், “காவிரியில் நீர் கேட்டால், நாங்கள் ஒகேனக்கல்லை திருப்பிக் கேட்போம்” என்று இனவெறியைக் கிளறிவிடுகின்றனர். தமிழகத்தில் கடந்த மார்ச் 28 அன்று முழு அடைப்பு நடந்த அதேநாளில், கன்னட இனவெறியர்கள் தமிழக அரசியல் தலைவர்களின் படங்களை வைத்து பாடைகட்டி ஊர்வலம் நடத்தி அவற்றைக் கொளுத்தியதோடு, தமிழகத்துக்கு எதிராகக் கன்னட இனவெறியைத் தூண்டும் வகையில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதியன்று கடையடைப்புப் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். கர்நாடக காங்கிரசு முதல்வரான சித்தராமையாவும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கன்னட இனவெறி அமைப்புகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றனர். தங்களைத் “தேசிய” கட்சிகளாகக் கூறிக் கொள்ளும் காங்கிரசும் பா.ஜ.க.வும் கன்னட இனவெறி அமைப்புகளை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றன. இது எங்களது மாநில உரிமை என்று அவை வாதிடுகின்றன. ஆனால் தமிழகத்தில் காவிரி நீருக்கான நியாயவுரிமைக்காகப் போராடினால், அது குறுகிய இனவாதம், பிராந்தியவாதம் என்கின்றன.

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் முடிவைச் செயல்படுத்த மறுத்து வருகிறது கர்நாடகம். இந்த விவகாரத்திலும், மேக்கேதாட்டு அணை விவகாரத்திலும் கர்நாடக காங்கிரசு, பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் நிற்கின்றனர். அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் சமமாக மதிப்பதாக நாடகமாடும் மோடி அரசு , தமிழகத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்காக பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்க ஒப்புதல் அளிப்பதன் மூலம் கர்நாடகத்துக்கு ஆதரவாகவும் தமிழகத்துக்கு எதிராகவும்தான் செயல்படுகிறது.

ஏற்கெனவே காவிரியில் உரிய நீரைத் தராமல் தமிழகத்தின் நியாயவுரிமையை கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருவதற்கெதிராகப் போராடி வருகிறோம். தற்போது அரைகுறையாகக் கிடைக்கும் நீரையும் கர்நாடகம் பறித்துக் கொள்ளக் கிளம்பியுள்ளது. தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி பிரச்சினையில் மட்டுமல்ல; முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சினை பிரச்சினை முதலானவற்றிலும் “தேசிய” கட்சிகளும் மைய அரசும் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகவே உள்ளன. நாட்டு நலனுக்கானது, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கானது என்ற பெயரில் கூடங்குளம், மீத்தேன் திட்டம், கெய்ல் எரிவாயுக் குழாய் பதிப்பு, நியூட்ரினோ திட்டம் – என அடுத்தடுத்து தமிழகத்தின் மீது கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கான நாசகாரத் திட்டங்கள் திணிக்கப்படுவதும், தமிழர்களின் வாழ்வுரிமை பறிப்பும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதர மாநிலங்களில் எதிர்க்கப்படும் பேரழிவுக்கான திட்டங்கள் எல்லாம் தேசியம், தேசிய ஒருமைப்பாடு, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமிழகத்தில் திணிக்கப்படுகின்றன.

இந்நிலையில், கார்ப்பரேட் கொள்ளைக்கான நாசகாரத் திட்டங்களைத் திணிக்கும் இன்றைய ஆட்சியை எதிர்த்தும், தேசியம் பேசும் ஓட்டுக்கட்சிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தியும், குருட்டுத்தனமான தேசியத்தை நிராகரித்தும், தமிழகத்தின் நியாயவுரிமையை நிலைநாட்டும் வகையில் போர்க்குணமிக்க மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். தமிழகத்தின் நியாயவுரிமையை மறுக்கும் மைய அரசுக்கு எதிராக, தமிழகத்தில் எந்தவொரு அதிகாரத்தையும் அது செயல்படுத்த முடியாதபடி, அவற்றின் அதிகார அமைப்புகளும் அலுவலகங்களும் செயல்படாவண்ணம் தொடர் முற்றுகைப் போராட்டங்கள் மூலம் நிர்ப்பந்தித்தும், மைய அரசுக்கு வரி கொடுக்க மறுத்தும் பெருந்திரளான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் வேண்டும். அத்தகைய தொடர்ச்சியான விடாப்பிடியான போராட்டங்கள் மூலம்தான் வஞ்சிக்கப்படும் தமிழகத்தின் நியாயவுரிமையை நிலைநாட்ட முடியும்.

– குமார்
___________________________
புதிய ஜனநாயகம், மே 2015
___________________________

  1. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பரப்பன அக்கிரகார சிறையில் ஜெயா அடைக்கபட்டிருந்த போது அதிமுக அடிமைகள் காவிரியை வைத்துக்கொள் அம்மாவை விட்டுவிடு என சுவரொட்டி ஒட்டினர்.இப்போது மேக்கே தாட்டுவில் அணை கட்டிக் கொள்.குமாரசாமியின் குளறுபடி தீர்ப்பை எதிர்த்து அப்பீல் போகாதே என சித்தராமையாவிடம் டீலிங் முடித்துவிட்டனர் போல் தெரிகிறது.அதான் தீர்ப்பு வந்து பத்து நாள் ஆகியும் பயபுள்ள வாயே திறக்கவில்லை போலும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க