privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : வினவு செய்தியாளரின் நேரடி அனுபவம் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : வினவு செய்தியாளரின் நேரடி அனுபவம் !

ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு மே 22 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை ஒட்டி நேரில் சென்ற வினவு செய்தியாளர்களின் அனுபவத் தொகுப்பு.

-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்:
வினவு செய்தியாளர்களின் நேரடி அனுபவங்கள் !

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ஆம் தேதி நடந்த போராட்டம் காலை எட்டு மணிக்கு முத்து நகரில் உள்ள பனிமாதா ஆலயத்தில் தொடங்கியது. அதே நேரத்தில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலவகத்தை நோக்கி மக்கள் அணிதிரள ஆரம்பித்தனர். கிராமங்களில் இருந்து நிறைய பேர் வருவார்கள் என அவர்களை அங்கேயே முடக்கும் வேலையை போலீசு செய்ய ஆரம்பித்திருந்தது.

பனியமாதா ஆலயத்தில் உள்ள திடலில், ஆரம்பத்தில் சுமார் இருநூறு பேர் மட்டுமே கூடியிருந்த நிலையில் சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரள ஆரம்பித்தனர்.  மாதா கோவில் எதிரில் இருந்த சாலையில் மக்கள் கூட்டம் கூடியதால் போராட்டத்தின் முன்னணியாளர்கள், மக்களை ஒழுங்கமைத்து வாகன ஓட்டிகளுக்கு வழிவிட்டுக் கொண்டிருந்தனர். கூட்டம் கூடியதும் அங்கேயே மத்திய மாநில அரசுக்கு எதிராக தங்களது கண்டன முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். அப்பொழுதே அங்கு இருந்த போலீசின் ஒருபிரிவினர் வரிசையாக வெளியேறத் துவங்கினார்கள்.

மக்கள் நான்கு திசைகளிலிருந்தும் மாதாகோவில் திடலுக்கு வந்து கொண்டிருந்தனர். அடுத்த சில மணித்துளிகளில் பேரணி துவங்கியது. கிட்டத்தட்ட ஐநூறு மீட்டர் தூரம் பேரணி சென்ற நிலையில் அந்த பேரணியை முடக்கும் நோக்கில் போலீசின் வாகனங்களைக் கொண்டு பேரணி சென்ற தெருக்களில் மறித்து நிறுத்தினார்கள். அதனையும் பொருட்படுத்தாமல் பேரணியை மக்கள் தொடர்ந்தனர். ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் போலீசு இருந்தது. பேரணியின் கடைசியில் இரண்டே இரண்டு ஜீப்புகளில் போலீசு வந்தது.

பேரணி சென்ற தேவர்புரம், ஆசிரியர் காலனி, வ.உ.சி. கல்லூரி ஆகிய தெருக்கள் எங்கும் வீடுகள் பூட்டிக் கிடந்தன. கடைவீதிகள் வெறிச்சோடி போயிருந்தன. ஒட்டு மொத்த தூத்துக்குடியும் ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது. மண்டையை பிளக்கும் உச்சி வெயிலில் பேரணி சென்றதால் தண்ணீர் கேட்டு குடிக்கக்கூட வீடுகள் இல்லை. கடையும் இல்லை. வெயிலின் தாக்கத்தில் தங்களது சக்தியை பேரணியின் பாதியிலேயே மக்கள் இழந்த நிலையில் போலீசு சொல்வது போல, இந்த மக்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பே இல்லை. உடல்ரீதியான சக்தியை இழந்த பிறகும், அம்மக்களின் போராட்ட உணர்வே அவர்களை மாவட்ட ஆட்சியர் அலவலகம் வரை உந்தித் தள்ளியது என்றால் அது மிகையில்லை.

பேரணி, அம்பேத்கர் சிலையை தாண்டியதும் ஒரு சில போலீசார் பேரணிக்குள் ஊடுருவினர். அவர்களை மக்கள் அப்புறப்படுத்தினர். சிலர் ஆவேசத்தில் போலீசை  எதிர்க்க ஒடினாலும் அவர்களை தடுத்து நிறுத்தி அது நம் நோக்கமல்ல என்று விளக்கி புரிய வைத்தனர் மக்கள். சிறிது நேரம் கழித்து பேரணிக்குள் மாட்டை அவிழ்த்து விட்டது போலீசு. அந்த எதிர்பாராத நிகழ்வில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனை எல்லாம் சகித்துக் கொண்டு மூணாம் மைல் பாலம் அருகே சென்ற மக்கள் மீது திடீரென்று கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியது போலீசு. அதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீசை விரட்டினார்கள். அநேகமாக இந்த காட்சியை மட்டும்தான் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் காட்டினார்கள். அமைதியாக போய்க் கொண்டிருந்த பேரணி மீது போலீசார் திடீரென்று கண்ணீர்ப் புகை குண்டு வீசியதே அந்த அமைதி குலைந்து போனதற்குக் காரணம். அதன் பிறகே மக்கள் பாலத்தின் கீழ் இருந்த போலீசு தடுப்பரண்கள் மற்றும் சில வாகனங்களைக் கொளுத்தினர்.

அதற்குள் நிறையப் பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்று விட்டார்கள். மீதி பேர் மூணாம் மைல் பாலம் அருகே புகை மண்டலமாக மாறிப்போன அந்த இடத்தை கடக்க முடியால் பின்தங்கினர். கலவரம் செய்ய நினைத்திருந்தால் அங்கேயே மக்கள் கலைந்து சென்று செல்லுமிடங்களில் எல்லாம் தீ வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களது நோக்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சென்று அமர்ந்து போராட்டம் நடத்துவதுதான். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நுழையும் போதே அங்கே போலீசார் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். முன்னே சென்ற மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது போலீசு. ஆத்திரமடைந்த மக்கள் அங்கு நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இவையெல்லாம் தற்காப்பின் பொருட்டும், அமைதியான பேரணியின் மீது போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் நடந்தவை.

இதன் பிறகே போலீசு கும்பல், காக்கைக் குருவிகளை சுடுவதைப் போன்று மக்களை சுட்டுத் தள்ளிய அந்த படுகொலை நிகழ்ந்தது.  சம்பவ இடத்திலேயே மூன்று பேர் இறந்தனர். மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடுவதுமாக இருந்தனர். துப்பாக்கி சூட்டில் பலியான, காயமடைந்தவர்களை மீட்பதா? இல்லை, துப்பாக்கி சூட்டில் இருந்து தங்களை காத்துக் கொள்வதா?  எனப் புரியாமல் மக்கள் கதறுகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளே இருந்த மக்கள் வேறு வழியின்றி தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தென்பட்ட கட்டிடங்களில் நுழைந்தனர். வெளியில் இருந்தவர்கள் சாலையில் அமர்ந்து கதறிக் கொண்டிருந்தனர். அடுத்து என்ன நடக்கும், யார் மீது துப்பாக்கித் தோட்டாக்கள் துளைக்கும் என்று யாருக்கும் தெரியாது. இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் கூட்டம் கலையாமல் உறுதியாக இருந்தனர். அப்போதும் போலீசுப் படை வெறி கொண்டவாறு கண்ணில் மாட்டியவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டவர்கள் மருத்துவனைக்கு அழைத்து செல்லப்படவில்லை. மக்கள்தான் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அரைமணி நேரம் கழித்துத்தான் ஆம்புலன்ஸ் உள்ளே வருகிறது. அதிலும் சிலரை ஏற்றி அனுப்புகிறார்கள். இதனை எல்லாம் மக்கள்தான் செய்து கொள்கிறார்கள். போலீசுப் படையோ தடியடி நடத்துவது, சுட்டுத்தள்ளுவது, கொளுத்துவது என்ற இந்த வெறிச்செயல்களில் மட்டும் குறியாய் இருந்தது. போலீசின் நோக்கம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்பதோ, பொதுச்சொத்தை பாதுகாக்க வேண்டுமென்பதோ அல்ல.

இனி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யாரும் போராடக்கூடாது என்ற மரண பயத்தை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். அதனால்தான் பேரணி வந்த சாலையில் மக்கள் எங்கு நின்றிருந்தாலும் அவர்களை காட்டுமிராண்டித்தனமாக விரட்டி விரட்டி அடித்து துரத்தியது. ஒருவரையும் அந்த சாலையில் விட்டு வைக்கவில்லை. அந்த அடிகளும் ஏதோ மிரட்டி கூட்டத்தை கலைக்கும் எச்சரிக்கை அடிகள் அல்ல. உடலுக்கு படுகாயத்தை ஏற்படுத்தி, உள்ளத்தில் ஒரு மரணபயத்தை ஏற்படுத்தும் வண்ணம் கொடூரமானவை. ஒருவர் சிக்கினார் என்றால் அவரை சுற்றி வளைத்து நாயை அடிப்பது போல பத்து பதினைந்து நிமிடம் அடிப்பார்கள். இத்தகைய காட்சிகள் எல்லாம் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் கூட பார்ப்பதற்கோ, ஏற்பதற்கோ, பதிவு செய்வதற்கோ சாத்தியமல்ல. கண்முன்னே இப்படி அப்பாவி இளைஞர்களை அடிக்கும் காட்சிகள் எங்களை இப்போதும்கூட நிலைகுலைய வைக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டிற்கு பயந்து ஓடிய மக்களை விடாமல் துரத்தி வந்து FCI குடோன் அருகே கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள், வெறி பிடித்த போலீசார். இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை கீழே இறக்கி சாவியை பிடுங்கி தூக்கி எறிந்து விட்டு, அந்த வாகனத்தையும் தூக்கி வீசி எறிந்தது போலீசு. அந்தநாள் முழுவதும் தூத்துக்குடி மக்களை தனது வெறியாட்டத்திற்கு பலியாக்கியது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய கையோடு திரேஸ்புரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தி தனது வெறியை தீர்த்துகொண்டது போலீசு கும்பல். ஒன்றும் அறியாத ஜான்சி என்ற தாயின் தலையில் சுட்டதில், அவருடைய மூளையே சிதறி கொட்டிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் இருக்கிறார்கள். அடுத்த நாள் காலை அப்பகுதி மக்களை சந்திக்கச் சென்றபோது கையில் ஆயுதம் வைத்திருப்பவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவது போல் எங்களைக் கண்டும் ஓடி ஒளிகிறார்கள் திரேஸ்புரம் பகுதி மக்கள். இவர்கள்தான் போலீசுக்கு எதிராக கலவரம் செய்தார்கள் என்று ஊடகங்கள் வாந்தி எடுக்கின்றன.

மக்களிடம் அப்படி ஒரு மரணபயத்தை ஏற்படுத்துவதுதான் போலீசின் நோக்கம். ஆனால் இந்த அநீதிகளைக் கண்டு ஆத்திரமும், கோபமும் கொண்ட இளைஞர்கள் நிறைய பேர் செய்வதறியாது ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களை அங்கே வழிநடத்த யாருமில்லை. அல்லது இத்தகைய தாக்குதல் காலத்தில் ஒரு தலைமையே அங்கிருந்தாலும் ஆயுதங்களோடு தாக்குதலை நடத்தி வரும் போலீசிடமிருந்து மக்களை காப்பது சிரமமே! அதனால்தான் தங்களது கோபத்தை ஒரு சில வாகனங்களை தீவைப்பதன் மூலம் அவர்கள் தீர்த்துக்கொண்டனர்.

அரசு மருத்துவமனை முழுவதையும் போலீசு கைப்பற்றியதால் குண்டடிபட்டவர்களைக் கூட சென்று பார்க்க முடியாமல் மக்கள் தவித்த தவிப்பு ஒருக்காலும் அவர்களால் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. எங்களாலும் மறக்க முடியாத ஒன்று.

அடுத்த நாள் 23-ம் தேதி விடியற்காலை தூத்துக்குடி முழுவதும் மயான அமைதி நிலவியது. ஒரு சிலர் மட்டும் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். சைக்கிளில் டீ விற்றுக் கொண்டிருந்த இடத்தில் மட்டும் சிறு கூட்டத்தை பார்க்க முடிந்தது. தூத்துக்குடி பேருந்து நிலையம், WGC கடை வீதி, திரேஸ்புரம் கடற்கரை, அண்ணாநகர் மார்கெட் மற்றும் கடைவீதி, என எங்கும் அமைதி. இன்று என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தனர் தூத்துக்குடி மக்கள். ஆனால் அரசுக்கெதிரான கோபம் தணியாமல் இருந்தது.

சுமார் ஒன்பது மணியளவில் தூத்துக்குடியின் பதற்றமான பகுதியான திரேஸ்புரம், அண்ணாநகர், விவிடி சிக்னல், மூணாம் மைல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் போலீசு குவிக்கப்பட்டு இருந்தது.

மக்கள் அரசு மருத்துவமனையில் கூடிவிட்டனர்.  அரசு மருத்துவமனை முழுவதும் போலீசின் கட்டுப்பாட்டில் இருந்தது. மருத்துவமனையின் முன்கதவை மூடிவிட்டு வெளியே போலீசு காவல் காத்தது. துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் கட்சித் தலைவர்கள் சென்று பார்ப்பதற்கு மட்டும் அனுமதித்தது போலீசு. அப்போது மருத்துவமனையை திறக்கக்கோரி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டனர். போலீசோ, பாடியை வாங்க சொல்லி மிரட்டியது. “மக்கள், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை பிணங்களை வாங்கப் போவதில்லை. அதற்காக கையெழுத்து போடவும் முடியாது” என்று தொடர்ந்து போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முக்கியமாக தமிழ் தெரியாத உயர்போலீசு அதிகாரி தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால், மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல், தங்கள் கோரிக்கைகளை சொல்லக்கூட முடியாமல் தவித்தனர்.

கமலஹாசன், டி.ராஜேந்தர் போன்ற சினிமா நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் முழக்கமிட்டனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத போலீசு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தத் துவங்கியது. சிறிது நேரத்தில் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்து கட்சித்தலைவர்கள் வந்து பார்ப்பதற்கு ஏதுவாக மருத்துவமனை வளாகத்தில் ‘அமைதியை’ நிலைநாட்டியது போலீசு. மருத்துவமனைக்கு வெளியே காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு மட்டுமில்லாமல் கண்ணீர் புகைக்குண்டும் வீசியது. வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு மக்களை அச்சுறுத்தியது போலீசு. மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்த நபர்கள் மிகவும் சொற்பமானவர்கள்தான். அதிலும் குறிப்பாக போலீசின் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள். அவர்களைக்கூட அனுமதிக்க மனமில்லாமல் அடித்து விரட்டியதுதான் அரசு பயங்கரவாதத்தின் உச்சகட்டம்.

அதேநேரம் திருச்சி ஐஜி வரதராஜு தலைமையில் சிறப்பு அதிரடிப்படை வந்திறங்கியது. கிட்டத்தட்ட எட்டு மாவட்ட போலீசுப்படை உதவியுடன் தூத்துக்குடியில் மக்கள் வெளியே வர முடியாதபடி அராஜகங்களை நிகழ்த்தியது போலீசு கும்பல்.

விவிடி சிக்னலில் இருந்து பிரையன்ட் நகர் பன்னிரெண்டாவது தெருவரை போலீசு நடத்திய அணிவகுப்பு தொடக்கத்திலேயே சந்தேகத்துக்குரியதாகவே இருந்தது. பிரையண்ட் நகரில் வசிக்கக் கூடியவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்க மக்கள். அங்கு இரண்டாவது தெருவில் இரண்டு பேருந்துகள் எரிகின்றன. ஒரு பேருந்து கொழுந்து விட்டு எரிகிறது. மற்றொரு பேருந்தை போலீசு அணைத்துக் கொண்டிருந்தது. கவனிக்கவும், பேருந்தை அணைத்துக் கொண்டிருந்தவர்கள் சீருடை அணியாத போலீசு. அந்த பன்னிரண்டு வீதியிலும் கல் வீச்சோ, மக்கள் கூட்டமாக நிற்பதோ எங்கும் இல்லை. அப்படி இருக்கும்போது அந்த பேருந்துகள் மட்டும் எப்படி எரிந்தன என்பதுதான் கேள்வி ? அணிவகுப்பு நடத்திய போலீசு அந்த தீயினை அணைக்கவோ, அல்லது பதட்டமோ இல்லாமல் பேருந்து எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மெரினா போராட்டத்தில் குடிசைக்கு போலீசு தீவைத்த சம்பவம்தான் தவிர்க்கவியலாமல் நம் நினைவுக்கு வந்தது.

அந்த நேரத்தில்தான், பிரையன்ட் நகருக்கு நேர் எதிரே அமைந்துள்ள அண்ணா நகரில் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தது. அதில் இருபத்து இரண்டே வயதான காளியப்பன் என்பவர் அந்த துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தார். மேலும் இரண்டு பேர் குண்டடி பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்கள்.அவர்களை அப்பகுதி மக்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்து கிடந்த காளியப்பனை காலால் உதைத்தும், கால்சட்டையை பிடித்து தரதரவென்று இழுத்தும் போட்டது போலீசு. இந்தியாவில் மக்களின் மதிப்பு என்ன என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

திரேஸ்புரம் பகுதியிலும் போலீசின் அராஜகம் தொடர அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள, போலீசு ஊருக்குள் வருவதை தடுப்பதற்கு வள்ளத்தினை (நாட்டுப்படகு) கொண்டுவந்து தெருவின் குறுக்கே போட்டிருந்தனர். அந்த  வள்ளத்தினை தீ வைத்துக் கொளுத்திய போலீசு அங்கேயும் துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களை கலைத்துள்ளது. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சொல்லி வைத்தாற்போல் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள்.

அண்ணாநகரைப் பொறுத்தவரையில் நாடார் சாதி மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி. இப்பகுதியில் போலீசு கும்பல் நிகழ்த்திய வன்முறை சொல்லி மாளாது. சாலைகளில் வருவோர் போவோர்களை எல்லாம் வழிமறித்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது போலீசு கும்பல். அழுக்கு சட்டையணிந்த ஒரு இளைஞர் அவ்வழியாக வந்த குற்றத்திற்காக அவர் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நிகழ்த்தியது போலீசு.  வந்தவரோ, “நான் டிரைவராக இருக்கிறேன். எனக்கும் இந்த போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை, என்று கூறி தனது ஓட்டுனர் உரிமத்தை எடுத்து காட்டுகிறார். அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாத போலீசு கும்பல் அவரை சராமாரியாகத் தாக்கியது.

அதேபோல், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை வழிமறித்து அவர்களிடம் எந்த விசாரணையும் செய்யாமல், அவர்கள் இளைஞர்கள் என்பதற்காகவே கொலைவெறியுடன் அடித்தது. அடி தாங்க முடியாமல் வண்டியின் பின்னால் உட்கார்ந்திருந்த ஒருவர் ஓடுகிறார். அவரை விடாமல் துரத்திச் சென்று பிடித்து வந்து அடிக்கிறார்கள். இந்த சம்பவங்களை எல்லாம் பத்திரிகையாளர்கள் படம் பிடிக்காமல் அமைதி காத்து போலீசு கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பது அருவெறுப்பின் உச்சம்.

அந்தக் கூட்டத்தில் இருந்த போலீசு ஒருவன், நாங்க அடிக்கிறதை எல்லாம் போட்டோ புடிக்கிறிங்களா? என்று மிரட்டும் தொனியில் பத்திரிகையாளர்களைப் பார்த்துக் கேட்க, அதற்கு கொஞ்சம் கூட சுரணையில்லாத சில பத்திரிகையாளர்கள், “நாங்கள் உங்கள் நண்பர்கள், இதனை எல்லாம் எடுக்க மாட்டோம்“ என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார்கள். இவர்கள் அனைவரும் தமிழகத்தின் முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றுபவர்கள்தான்.

அண்ணாநகர் ஏழாவது தெருவில் தடாலடியாக ஒரு வீட்டிற்குள் புகுந்த போலீசு கும்பல், ஒரு இளைஞரை வெளியே இழுத்து வந்து சராமரியாக தாக்கியது. அதேபோல் வயதான ஒருவரை ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே போலீசு அடித்து உதைத்த காட்சி இவர்கள் எவ்வளவு பெரிய காட்டுமிராண்டிகள் என்பதையும் உணர்த்துகிறது. இத்தகைய சம்பவங்கள் எவையும் பத்திரிகையாளர்களால் பதிவு செய்யப்படவில்லை. இவற்றில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் விதி என்பது போலீசின் தாக்குதல்களை யாரும் படம் பிடிக்கக்கூடாது என்பதே.

மக்கள் ஆவேசத்தில் எதிர்தாக்குதலாக, கல் எரிவதையும், பெட்ரோல் குண்டு வீசுவதை மட்டும் எடுத்து ஒளிபரப்புவதற்காகவும், மக்களை வன்முறையாளர்கள் என்று சித்தரிப்பதற்கும்தான் போலீசும், ஊடக முதலாளிகளும் திட்டமிட்டுள்ளார்கள் என்பதற்கு இது மறுக்க முடியாத ஒரு சான்று.

சில பத்திரிகை நிருபர்கள் போலீசுக்கு மக்களைத் தாக்குவதற்கான சில வழிகளையும், ஆலோசனைகளையும் சொல்லிக்கொண்டும், போலீசு கும்பலோடு சேர்ந்து போராடிய மக்களை ஏளனம் செய்து நகைச்சுவை பேசியதெல்லாம் சகிக்க முடியாதவை. இத்தகைய சூழலிலும் நாங்கள் உலவிக் கொண்டிருந்தது ”வேறு வழியில்லை, இவற்றை எப்படியாவது பதிவு செய்ய வேண்டும்” என்ற ஒரே காரணத்திற்கு மட்டுமே.

தூத்துக்குடியில் நடைபெற்ற பேரணியை போலீசால் கட்டுப்படுத்த முடியாத நிலையோ, மக்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்ற நிலையோ இல்லை. அமைதியான முறையில் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. உண்மையில் மக்களுக்கு கலவரம் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்திருந்தால், அவர்கள் பேரணியாக வந்த வழியில் பல அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், சேதாரம் ஏற்படுத்தக் கூடிய கட்டிடங்கள் எத்தனையோ இருந்தன. ஆனால் மக்களின் நோக்கம் அதுவல்ல.

பேரணியை தடுக்க வேண்டும் என்று போலீசு நினைத்திருந்தால் விவிடி சிக்னலோ, அல்லது மூணாம் மைல் பாலம் அருகிலோ கூட மக்களின் குறைகளை கேட்டிருக்கலாம். அங்கேயே பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம். இல்லை மாவட்ட அலுவலகம் அருகே அவர்களை அமர வைத்திருந்தாலும் வேறு பிரச்சினைகள் வந்து விடப் போவதில்லை. ஆனால் எந்த இடத்திலும் மக்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்கள் என்று கேட்பதற்கு போலீசு தயாராக இல்லை. போலீசின் நோக்கம் இனி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது, போராடக்கூடாது என்பது மட்டுமே. அதனால்தான் கொலை வெறியோடு இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளது. இது தற்செயலாக நடந்ததோ. கூட்டத்தை கலைக்க நடந்ததோ அல்ல. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட பச்சைப்படுகொலை. போலீசின் திட்டமிட்ட வன்முறை வெறியாட்டம்.

போலீசின் வெறியாட்டத்தைப் பார்க்கையில் வேதாந்தா ஸ்டெர்லைட்டின் நிதிக் கவனிப்பில் இவர்கள் வெகுவாக கவனிக்கப்பட்டிருக்க வேண்டும். ஈவு இரக்கமின்றி இவர்கள் அடிப்பதற்கு இந்தக் காரணத்தை தவிர வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை.

இவ்வளவு பெரிய கொலையும், அராஜகமும் நடந்தாலும் தூத்துக்குடி மக்கள் தமது போராட்ட உணர்விலும், ஸ்டெர்லைட்டை மூடுவதிலும் உறுதியாக இருக்கிறார்கள். அதனால்தான் எந்த அதிகாரி வந்தாலும், எந்த அமைச்சர் வந்தாலும் அவர்கள் அச்சமில்லாமல் கேள்வி கேட்கிறார்கள். இதுதான் அரசும் ஆளும் வர்க்கமும் இன்றளவும் பயப்படும் அம்சம்.

இன்றைக்கு எடப்பாடி அரசு ஸ்டெர்லைட்டை மூடுவதாக நாடகமாடியிருக்கிறது. இந்த நாடகத்தை தூத்துக்குடி மக்கள், கடந்த காலங்களிலேயே அறிந்திருக்கிறார்கள். மேலும் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே போராடும் மக்கள் மீது கைது, வழக்கு, சிறை என பல அடக்குமுறைகளை போலீசு ஏவியிருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை நடக்க விடாமல், போராட்டக் குழுவை உடைத்து விடலாம் என்ற போலீசின் சதித்திட்டங்கள் அனைத்தையும் மக்கள் முறியடித்தார்கள்.

இதுதான் போலீசும், அரசும் தூத்துக்குடி மக்கள் மீது நடத்திய படுகொலைக்கு பிரதான காரணம்!

  • வினவு செய்தியாளர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க