Wednesday, December 11, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்போலீசை முறியடித்து கொள்ளிடத்தை காப்பாற்றிய மக்கள் போர்

போலீசை முறியடித்து கொள்ளிடத்தை காப்பாற்றிய மக்கள் போர்

-

ஆற்று மணல் கொள்ளை: கொள்ளையர்களை விரட்டியடித்த திருச்சி, இலால்குடி-அன்பில் சுற்றுவட்டார கிராம மக்களின் வீரம் செறிந்த போராட்டம் !

மிழக மக்களின் ஆரோக்கியத்தையும், மன நலத்தையும் வேகமாக கொல்லும் டாஸ்மாக்குக்கு அடுத்து தமிழகத்தை வேரும் விழுதுமாக சூறையாடி வரும் பிரச்சனை ஆற்று மணல் கொள்ளை.

“காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்” என்று அழைக்கப்பட்ட கொள்ளிடம் ஆறு தமிழகத்தின் மையத்தில் இருந்து வட தமிழகத்திற்கு நீர் பாயும் ஒரு முக்கிய வலைப்பின்னலாகவும் இருந்தது. காவிரியில் வெள்ளம் வரும் போது அதை வீணாக்காமல் வீராணம் ஏரி வரை கொண்டும் செல்லும் வல்லமையை அளித்தது கொள்ளிடம்தான்.

அப்படி டெல்டாவின் ரத்த நாளமாய் விளங்கும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் உயிரைப் பறிக்கும் மணல் கொள்ளையால் கொள்ளிடம் ஆறு முழுவதும் தனது மணலை இழந்து, வெறும் களிமண் தரையாகி விட்டது.

இதில் விதிவிலக்கு அன்பில்-மங்கம்மாள்புரமும், கூகூரும்தான். காரணம், தஞ்சை, நாகை மாவட்டங்களின் விவசாயத்திற்கு ஆதாரமாய் விளங்கும் கல்லணை கம்பீரமாய் வீற்றிருப்பது இந்த ஊர்களில் படிந்துள்ள 100 அடி ஆழம் கொண்ட மணலாலான அடித்தளத்தின் மீதுதான். இந்த அடித்தளத்தை சுரண்டினால் கல்லைணையே கவிழும்! ஆனால், ஆற்றின் மணல் அனைத்தையும் சூறையாடிய மணல் கொள்ளையர்களின் கண்களை இந்த மணலும் உறுத்துகிறது. விளைவு, கல்லணையையே அழிக்கத் துடிக்கின்றனர் இந்த மாபாவிகள்.

அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மணல் கொள்ளை
அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மணல் கொள்ளை

தாசில்தார் ஞானவேலு, SDO பாலசுப்பிரமணி, DSP விஜயகுமரன், inspector செல்வராசன் போன்ற அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடராசபுரம் அருகிலுள்ள படுகை கிராமத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவில், குவாரி அமைக்க குடிசை போட்டார்கள் மணல் கொள்ளையர்கள்; விழித்துக் கொண்டார்கள் சுற்று வட்டார கிராம மக்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊருக்கு கிழக்கே உள்ள குவாரிகளில் மணல் அள்ளிக் கொண்டு, ஒரு நாளைக்கு சுமார் 1500 முதல் 2500 லாரிகள் வரை இந்த ஊர் வழியே வந்து போனதால் சாலைகளே குண்டும் குழியுமாக ஆனது; மணல் கொள்ளையர்களின் லாப வெறிக்கு 21 பேர் பலியாகினர்; புழுதியை கிளப்பிக்கொண்டு ஓடிய மணல் லாரிகள், மக்கள் சோற்றில் மண்ணை இறைத்தன; சாலையின் இருபக்க வீடுகளின் கூரைகளிலும் புழுதி படிந்தது; இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

இந்நிலை கண்டு சினந்து வெடித்த மக்கள் ஒன்று திரண்டனர். “மணல் லாரிகள் இன்றோடு எங்கள் ஊர் வழியாக வரக்கூடாது” எனத் தடுத்து நிறுத்தினர். இப்போது அந்த கெட்ட அனுபவம் மீண்டும் வரக்கூடாது என்று விழித்துக் கொண்டனர். முக்கியமாக பெண்கள் முன்னணியில் நின்றனர்.

சி.பி.ஐ மாவட்ட செயலாளர் இந்திரஜித் தலைமை
CPI மாவட்ட செயலாளர் இந்திரஜித் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

பேச்சுவார்த்தை நாடகம்

கொள்ளிடம் ஆற்றின் நடுவே சட்டவிரோதமாக போடப்பட்ட கொட்டகையைப் பிரிக்க வேண்டுமென 20-03-2015 அன்று மனுகொடுத்தனர். தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தையும் நடந்தது. அதிகாரிகள் கீற்றுக் கொட்டகையை தங்கள் ஊழியர்களை (லஸ்கர்) வைத்து அப்புறப்படுத்துவதாக ஏற்றுக்கொண்டனர். அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதை எழுத்துபூர்வமாக எழுதி வாங்கினார்கள் ஊர் மக்கள்.

எழுதிக் கொடுத்த அதிகாரிகள் அதை நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, கூரைக்கொட்டகையின் மேற்பகுதியில் தகரக் கூரையும் போட்டு மேலும் உறுதிமிக்கதாக மாற்றிய மணற்கொள்ளையர்களை அனுமதித்தனர். தண்ணீர் தேவைக்கு ஒரு ஆழ்துளைக் கிணறும் அடி பம்ப்பும் போட்டு விட்டனர்.

ஆற்றுமணல் கொள்ளை
அதிகாரிகள் எழுதிக் கொடுத்ததை அதிகாரிகளே மதிக்கவில்லை.

அதிகாரிகள் எழுதிக் கொடுத்ததை அதிகாரிகளே மதிக்கவில்லை என்பதோடு, மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டதைக் கண்டு அன்பில், மங்கம்மாள்புரம் , கூகூர், ஆனந்திமேடு, சாத்தமங்கலம், வழுதியூர், நடராசபுரம், மேட்டாங்காடு, கோவிந்தபுரம், கொன்னக்குடி ஆகிய கிராம மக்கள் வெகுண்டெழுந்தனர். முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். கிராமம் கிராமமாக சென்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்கள் கொள்ளிடம் ஆற்று நல பாதுகாப்பு சங்கத்தின் முன்னணியாளர்கள்.

முற்றுகைப் போராட்டத்திற்கு தலைமையேற்க இந்திய கம்யூனிஸ்டு கட்சியை அழைத்தனர். விருத்தாச்சலம் – கார்மாங்குடி வெள்ளாற்றில் செயல்பட்ட மணல் குவாரியை, இழுத்து மூடிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தினரையும் அழைத்திருந்தனர்.

மார்ச் 31-ம் தேதி காலை 9 மணிக்கு நெடுஞ்சாலையில் மக்கள் கொத்துக் கொத்தாக ஆயிரக் கணக்கில் குவிந்தனர்.

ஆற்றுமணல் கொள்ளை
நெடுஞ்சாலையில் மக்கள் குவிந்தனர்.

காலை 11 மணிக்கு போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்குடன் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது அதிகார வர்க்கம். இதில் டி.எஸ்.பி, தாசில்தார், ஆர்.டி.ஓ, பி.டபிள்யூ.டி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மக்கள் தரப்பிலிருந்து சி.பி.ஐ மாவட்டச் செயலாளர் இந்திரஜித் கலந்து கொண்டார். பேச்சுவார்த்தையை நீட்டித்துக்கொண்டே சென்றால், விவசாயிகள் சோர்வுக்குள்ளாகி கலைந்து விடுவார்கள் என்று மனப்பால் குடித்தது அதிகாரிகள் கூட்டம்.

anbil-river-sand-prpc-dist-treasurer-com-anand
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத் தோழர் ஆனந்த், மக்கள் கலை இலக்கியக் கழக தோழர் ஜீவா இருவரும் மக்களிடையே உரையாற்றினார்கள்

“கொட்டகையை அகற்றுங்கள், மணல் எடுக்க அனுமதித்ததை ரத்து செய்யுங்கள்” என்று பல மணி நேரம் பேசியும் அதிகாரிகள் ஏற்கவில்லை. மாறாக “கொட்டகை இருப்பதனால் எந்த பிரச்சனையும் இல்லை, மக்களின் விருப்பத்தை மீறி மண்ணெடுக்க மாட்டோம்” என்று கூறிவிட்டு, “அப்படி எடுத்தாலும் 3 அடி மட்டுமே அள்ளுவார்கள்” என்று வாங்கிய காசுக்கு மேலாகவே பேசினார் ஆற்று பாதுகாப்புக் கோட்டத்தின் எஸ்.டி.ஓ (SDO) பாலசுப்பிரமணி. காலை 11.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை மதியம் 1.30 மணிவரை தொடர்ந்தும் பலனளிக்க வில்லை. சட்ட விரோத கொட்டகையை அகற்ற மேலதிகாரிகளிடம் கேட்டு சொல்கிறோம் என நேரத்தைக் கடத்தினர், அதிகாரிகள். மக்களின் கோபம் கொப்பளித்தது.

anbil-river-sand-protest-photos-05ஆற்றங்கரையிலுள்ள ஆலமரத்தடியில் ஒன்று திரண்ட விவசாயிகள் மத்தியில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர் ஆனந்த் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் ஜீவா ஆகியோர் உரையாற்றினர்; விருத்தாச்சலம் கார்மாங்குடி ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராக நடந்த போராட்ட அனுபவத்தையும் விளக்கினர். மணல் கொள்ளையர்கள், அதிகாரிகளின் கள்ளக்கூட்டை அம்பலப்படுத்தி பேசினர். தோழர்களின் உணர்ச்சி பூர்வமான பேச்சும், விண்ணைப்பிளந்த முழக்கமும் சிதறிக்கிடந்த மக்களை ஒன்று திரட்டியது.

anbil-river-sand-protest-photos-07சட்டத்துக்குப் புறம்பான கொட்டகையை அகற்றக்கூட இந்த அதிகாரிகள் மறுத்ததுடன் மேலதிகாரிகளிடம் கேட்டுத்தான் முடிவை சொல்வோம் என்றும் காலம் கடத்திய பித்தலாட்டத்தையும் கண்ணுற்ற மக்கள் “அவனுங்க கிட்ட என்ன பேச்சு வார்த்தை? தாசில்தார் கைப்பட எழுதிக் கொடுத்ததை அவன் அமுல்படுத்த மாட்டான்னா நாம அமுல்படுத்துவோம். எவன் வந்தாலும் வரட்டும் பாத்துக்கலாம்” என்றும் “அதிகாரிகள் என்ன நமக்கு டைம் கொடுப்பது? நாம் அவர்களுக்கு டைம் கொடுப்போம்” என மக்கள் தங்கள் கையில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டனர்.

அரை மணி நேரம் டைம் தர்ரோம் அதற்குள் நீயே வந்து இடித்துவிடு; இல்லையென்றால் நாங்கள் இடித்துவிடுவோம்” என எச்சரிக்கை செய்தனர். அந்த அரை மணி நேரம் கடந்தும் அதிகாரிகள் இறங்கி வரவில்லை. மணல் கொள்ளையர்களுக்கு வக்காலத்து வாங்கி வளைத்து வளைத்துப் பேசினர். பொறுமையிழந்த மக்கள், அதிரடிப் படை போலீசின் தடுப்பரண்களை மீறி கடப்பாறை, கம்புகளுடன் ஆற்றுக்குள் இறங்கினர். கொட்டகைக்குள் பதுங்கியிருந்த அடியாட்களை விரட்டியடித்தனர். போலீசோ, சட்டவிரோத கொட்டகையை தன் வசப்படுத்தி பாதுகாக்க முயன்றது.

anbil-river-sand-protest-photos-06போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க போலீசின் கட்டுக்குள் இருந்த கொட்டகையை மக்கள் தன் வசப்படுத்தினர். நாலாபக்கமும் சுற்றி வளைத்து கீற்றுக் கொட்டகையை பிரித்து எறிந்தனர்.

அடித்து நொறுக்கப்பட்டது கீற்றுக் கொட்டகை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

போர் பம்ப் மற்றும் சின்டெக்ஸ் தண்ணீர் டேங்க்கையும் அடித்து நொறுக்கி தரை மட்டமாக்கினர். போலீசும் அதிகார வர்க்கமும் நமக்கானதல்ல என்பதை உணர்ந்த கிராம மக்களின் போர்க்குணத்தின் முன் மண்டியிட்டது கொள்ளையனின் சதிகளும் அதிகாரிகளின் ஆணவமும்! மக்கள் சக்தியின் மகத்துவத்தை ருசித்த மக்களின் உற்சாகத்தைக் காண கண் கோடி வேண்டும்.

ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு போராட்டம்
மக்களின் போர்க்குணத்தின் முன் மண்டியிட்டது கொள்ளையனின் சதிகளும் அதிகாரிகளின் ஆணவமும்!

தற்போது சட்ட விரோத கொட்டகையை அகற்றி விட்டோம்; மணல் கொள்ளையனின் அடியாட்களும், போலீசும் ,அதிகாரிகளும் தற்காலிகமாக பின்வாங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் மீண்டும் வருவார்கள். சட்டமும் நீதிமன்றமும் அவர்களின் கையிலுள்ளது.

திருச்சி, தஞ்சை டெல்டா பகுதியில் விவசாயம் நடக்கவேண்டுமென்றால் கல்லணை நிலைத்து நிற்க வேண்டும். கல்லணை நிலைத்து நிற்க வேண்டுமென்றால், கூகூர், அன்பில் – மங்கம்மாள்புரத்தின் ஆற்றுப் பகுதியில் ஒரு பிடி மணலைக்கூட எடுக்க அனுமதிக்கக் கூடாது. மக்களுக்கு அதிகாரம் வழங்கும் கமிட்டிகளை கிராமம்தோறும் கட்டியமைப்பது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு.

ஆற்றுமணல் கொள்ளை
கூகூர், அன்பில் – மங்கம்மாள்புரத்தின் ஆற்றுப் பகுதியில் ஒரு பிடி மணலைக்கூட எடுக்க அனுமதிக்கக் கூடாது.

செய்தித் துளிகள் : மக்கள் கருத்து

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களைப் பார்த்து, “வெள்ள சட்டை கருப்பு பேண்டு போட்ட தம்பிங்க மட்டும் இல்லன்னா சோர்ந்து போயிருப்போம்!” என்றார் ஒரு வயதான மூதாட்டி.

”உங்கள யாருன்னே தெரியாது எங்களுக்கு வந்து உதவுனீங்க, நீங்க நல்லா இருக்கணும் தம்பி” என்றும்  “உங்களின் தொடர்பால் எங்களுக்கு இன்னொரு கை கிடைத்தது மாதிரி தெம்பு வந்தது” என்றும் வாழ்த்தினார்கள்.

சிறிது நேரம் இருந்து விட்டு சென்று விடலாமென்று வந்த தம்மை, “சொந்த வேலையைக் கூட கவனிக்கத் தோன்றாத அளவுக்கு இந்தப் போராட்டம் வசப்படுத்தி விட்டது” என்றார் ஒரு தோழர். அந்த அளவுக்கு போராட்டத்தின் போக்கும் மக்களின் உற்சாகமும் இருந்தது.

செய்தி:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
திருச்சி.

  1. எங்களால் போராட்டத்தை முன்னெடுக்க இயலா விட்டாலும் உதவ தயார்.அலைபேசி எண் தரவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க