கார்டியன் பார்வையில் மோடியின் தவறான பணமதிப்பழிப்பு நடவடிக்கையும் அதனால் இந்தியாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பும் !

தமது சொந்தக் கொள்கைகளின் தவறுகளால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், வேலை வாய்ப்பிழப்பு, பொருளாதார சரிவு ஆகியவற்றிற்கு இந்திய பிரதமர் பொறுப்பேற்க வேண்டும். அப்படி அவர் செய்யவில்லையென்றால், வாக்காளர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் தமது பொறுப்பைக் காட்டுவதற்கான வாய்ப்பு வரும். அப்போது மக்கள் அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

லகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றழைக்கப்படும் இந்திய நாட்டின் பிரதமர் வளர்ந்து கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரத்தை, காற்று ஊதப்பட்ட ஒரு பலூனை ஊசியால் குத்தி வெடிக்க வைத்ததைப் போல, ஒரு தவறான நடவடிக்கையின் மூலம் நிலைகுலைய வைத்தார்.

அடிமுட்டாள்தனமான இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் 100 அப்பாவி உயிர்கள் பலியானது மட்டுமன்றி, குறைந்தபட்சமாக 15 இலட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோய், 15 கோடி இந்திய மக்கள் வாரக்கணக்கில் சம்பளம் கிடைக்காமல் அலைகழிக்கப்பட்டனர். நடந்த அத்தனைக்கும் பொறுப்பு திருவாளர் மோடி மட்டுமே.

நவம்பர் 2016-ஆம் ஆண்டு உலக மீடியாக்களின் கவனம் முழுவதும் அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் மீது திரும்பியிருக்கையில், ரூ.500/- மற்றும் ரூ.1000/- நோட்டுக்கள் செல்லாது என்று ஒரு இரவில் அறிவித்து ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஒரு நொடியில் தன் பக்கம் ஈர்த்தது மோடியல்லவா?

வங்கி வர்த்தகத்திற்கு அப்பாற்பட்டு புழக்கத்திலிருந்த 86% நோட்டுக்களை செல்லாது என அறிவித்து, அதற்குப் பதிலாக மிகக்குறைந்த அளவிலான கரன்சிகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது மோடியின் அரசு. இவையத்தனையும் மோடியின் மாயஜால வார்த்தைகளை நம்பி ஏமாந்த ஏழை மக்களின் மேல் இடியாக இறக்கினார் மோடி. கருப்புப் பணத்தை அறவே ஒழிப்பதுதான் பணமதிப்பழிப்பின் ஒரே நோக்கம் என்று அடித்துச் சொன்னார் மோடி.

ஆனால் மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களோ புழக்கத்திலிருந்த 99.3% ரூபாய் நோட்டுக்கள் வங்கிக்கணக்கிற்குள் வந்துவிட்டன என தெரிவிக்கிறது. ஊழல் செய்து குவித்த கோடிக்கணக்கான பணத்தை யார் தான் வீட்டிற்குள் வைத்துப் பாதுகாத்துக்கொண்டிருப்பர்? பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி அது என்றைக்கோ பங்குச்சந்தையிலோ அல்லது தங்கமாகவோ அல்லது அசையாச் சொத்துக்களாகவோ உருமாற்றம் பெற்றிருக்கும். பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் மத்திய வங்கிக்கு எந்தவித வருடாந்திர இலாபமும் இல்லை, மாறாக கூடுதல் சுமையே மிஞ்சியது. மோடி அரசால் ஒன்றை மட்டுமே பெருமையாகச் சொல்லமுடியும்.

அதாவது, ஒரு அரசாங்கம் எப்படி திறமையான வழிமுறைகளைக் கையாண்டு மக்களிடம் உள்ள ஒட்டுமொத்த பணத்தையும் வங்கிகளை நோக்கித் திருப்ப முடியும் என்பதே அது. ஒரு பத்திரிக்கையாளர் சொன்னது போன்று பணமதிப்பழிப்பு நடவடிக்கை என்பது ‘உயரமான கட்டிடத்தில் இருக்கும் ஒருவன், தரையில் விழுந்தால் எத்தனை கொடூரமானதாக இருக்கும் என்பதை மற்றவருக்கு விளக்கிக்கொண்டே குதித்து தற்கொலை செய்துகொள்வதற்குச் சம்மானதாகும்’ என்கிறார்.

மோடி தான் கொண்டுவந்த இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை தவறு என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் எந்த ஒரு தண்டனையையும் ஏற்றுக்கொள்ள தயார் என்றார். பணமதிப்பழிப்பு நடவடிக்கை தவறானது என்று பல்வேறு கோணங்களில் நிரூபிக்கப்பட்டும் அதைப் பற்றிப் பேசக்கூட மறுக்கிறார். அதோடு கூட இது தொடர்பான விவாதங்களை நீர்த்துப்போகச் செய்வதிலேயே குறியாக இருக்கிறார். இதுகுறித்து கேள்விகள் எழுப்பப்படும்போதெல்லாம் கீழ்க்கண்ட வழிகளில் அதை திசைதிருப்புகிறார்.

”வளர்ச்சி ஒன்றே எங்களுடைய ஒரே இலட்சியம்” (அல்லது) ”நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக முக்கியமானது. இரகசியம் கருதி எல்லாவற்றையும் வெளியிட முடியாது” என்று மழுப்புகிறார். தன்மேல் கேள்வி எழக்கூடாதென்பதற்காக சட்ட விதிமுறைகளைப் புறந்தள்ளி மனித உரிமை ஆர்வலர்களைக் கைது செய்கிறார்.

ஒரு ஜனநாயக நாட்டில் அதை ஆளும் அரசாங்கமே எல்லா நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் நியதி. மோடியின் நடவடிக்கைகள் எப்போதுமே இதற்கு எதிர்மாறாகவே உள்ளன. உண்மைதான், இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்து விட்டது. ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கும் இந்தியாவில் வரவிருக்கும் மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், அம்மாநிலங்களில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் பா.ஜ.க.-வுக்கு மிகப்பெரிய தலைவலியாக அமையப்போவது உறுதி. காங்கிரஸ் உட்பட மற்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் மோடிக்கு மிகப்பெரிய தலைவலியாகப் போவதும் உறுதி. காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் நிலைகூட வரலாம்.

எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்தி வெற்றிபெறலாம் என்ற மோடியின் திட்டமும் தகர்த்தெறியப்பட்டுவிட்டது. தவறை ஒப்புக்கொண்டு வினையாற்றுவதற்குப் பதிலாக, மேலும் மேலும் பூசி மெழுகுகிறார் மோடி. மோடி தன்னுடைய தவறுகளை ஏற்க மறுக்கும் பட்சத்தில் மக்கள் அவருக்குத் தண்டனை கொடுக்கத் தயாராக வேண்டும்.

நன்றி : தி கார்டியன் இணைய இதழ் எழுதிய தலையங்கத்தின் (The Guardian view on Modi’s mistakes: the high costs of India’s demonetisation) சுருக்கப்பட்ட வடிவம்.

தமிழாக்கம் :
– வினவு செய்திப்பிரிவு