Saturday, January 16, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க குற்றவாளி ஜெயலலிதா : குப்பைக்கு எதற்கு ஒளிவட்டம் ?

குற்றவாளி ஜெயலலிதா : குப்பைக்கு எதற்கு ஒளிவட்டம் ?

-

ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவோடு அவரும் பரப்பன அக்ரஹாரா சிறைக் கம்பிகளை எண்ண வேண்டியிருந்திருக்கும். ஜெயில் களியைத் தின்ன வேண்டிய தண்டனையிலிருந்து ஜெயாவை மரணம் காப்பாற்றிவிட்டாலும், அவர் தமிழகச் சொத்துக்களை வளைத்துப் போட்டுக்கொண்ட ஊழல் குற்றவாளி, சதிகாரி என்ற உண்மையை அந்த மரணத்தாலும் மூடிமறைத்துவிட முடியவில்லை.
ஜெயா-சசி கும்பலின் ஊழல், கொள்ளை, கிரிமினல் சதித்தனங்கள் குறித்து, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ம.க.இ.க., உள்ளிட்ட புரட்சிகர ஜனநாயக சக்திகளும், சமூக அக்கறை கொண்ட சில தனிநபர்களும், திராவிட முன்னேற்றக் கழகமும் கூறி வந்தவை, இப்பொழுது உச்சநீதி மன்றத் தீர்ப்பு வழியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வேறு மாதிரியாக வந்திருந்தாலும், ஜெயா-சசி இணை கடைந்தெடுத்த கிரிமினல்-மாஃபியா கும்பல், தமிழகத்தைக் கவ்வியிருந்த மலைப்பாம்பு என்ற உண்மை மறைந்து போயிருக்காது.

ஜெயாவின் மரணம், தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நல்வாய்ப்பை அவருக்கு வழங்கியதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அ.தி.மு.க.வைச் சேர்ந்த இரண்டு கோஷ்டிகளுக்கும், ஊடகங்களுக்கும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் “நிலைய வித்வான்களுக்கும்” ஜெயாவின் குற்றப் பின்னணி பற்றிப் பேச வேண்டிய தர்ம சங்கடத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் நல்வாய்ப்பையும் சேர்த்தே வழங்கிவிட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கின் மூளையாகச் செயல்பட்ட சதிகாரி ஜெயா.

“சசிகலாவின் கூடாநட்பினால்தான் ஜெயாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது; உச்சநீதி மன்றத் தீர்ப்பில் மற்ற மூவர்தான் தண்டிக்கப்பட்டுள்ளனர், ஜெயா விடுவிக்கப்பட்டுவிட்டார்; தமிழக மக்களுக்கு ஜெயலலிதா மீதிருந்த மதிப்பும் மரியாதையும் இந்தத் தீர்ப்பினால் மங்கிப் போய்விடவில்லை; ஒவ்வொரு நீதிமன்றமும் ஒவ்வொரு விதமாகத் தீர்ப்பளிப்பதால், உச்சநீதி மன்றத் தீர்ப்பை இறுதியானதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை” எனப் பலவாறு வாதங்களை அடுக்கி, ஜெயாவை உத்தமியாகக் காட்டுவதை அ.தி.மு.க. அடிமைகளும், ஜெயாவின் ஊதுகுழல்களும் திறமையாகச் செய்து வருகின்றன.

ஆனால், உச்சநீதி மன்றத் தீர்ப்போ, சொத்துக்களைச் சட்டவிரோதமாகவும் முறைகேடான வழிகளிலும் வாங்கிக் குவித்த இந்த கிரிமினல் வழக்கின் மூளையாகச் செயல்பட்டிருப்பது சசிகலா அல்ல, ஜெயலலிதாதான் என உறுதிபடுத்தியிருக்கிறது.

 • சொத்துக்களை வாங்கி குவிக்கவும், அச்சொத்துக்களை பினாமி லெட்டர் பேடு நிறுவனங்களின் பெயரில் காட்டவும் ஆழமான சதித் திட்டம் இவ்வழக்கில் தீட்டப்பட்டிருக்கிறது. இறந்து போன ஜெயலலிதாவும், சசிகலா உள்ளிட்டு மற்ற மூவரும், ஜெயலலிதா முறைகேடான வழிகளில் சேர்த்த பணத்தைக் கொண்டு, லெட்டர் பேடு நிறுவனங்களின் பேரில் சொத்துக்களை வாங்கிக் குவிப்பதற்கு போயசு தோட்டத்தில் இருந்துகொண்டு ஒன்றன் பின் ஒன்றாகப் பல்வேறு சதித் திட்டங்களை தீட்டியுள்ளனர்.
 • இந்த வழக்கின் முதல் குற்றவாளி ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளும் சதித் திட்டம் தீட்டி, அதன் அடிப்படையில், ஜெயலலிதா வருமானத்துக்கு மீறிய வகையில் குவித்த சொத்துக்களை, மற்ற மூவரும் தங்களுக்குள் பிரித்துக்கொண்டதோடு, பினாமி நிறுவனங்களின் பெயரிலும் மாற்றிக்கொண்டு, ஜெயலலிதாவின் முகமூடியாகச் செயல்பட்டிருப்பது சாட்சியங்களின் மூலம் நிறுவப்பட்டிருக்கிறது.
 • இந்த லெட்டர் பேடு நிறுவனங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்துதான் இயங்கி உள்ளன; இதெல்லாம் தனக்கு தெரியாது; சசிகலா, சுதாகரன், இளவரசியின் நடவடிக்கைகள் பற்றித் தனக்கு தெரியாது என ஜெயலலிதா பாசாங்கு செய்வதை ஏற்க முடியாது.
 • ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தைப் பயன்படுத்தித்தான் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனக் கணக்கில் புழங்கியுள்ளன. இத்தகைய சொத்துக் குவிப்பிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று காட்டிக் கொள்ளும் நோக்கில்தான், ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை (பவர் ஆஃப் ஆட்டர்னி) சசிகலாவுக்குக் கொடுத்திருக்கிறார், ஜெயலலிதா.
 • குற்றவாளிகள் நால்வரும் போயசு கார்டன் இல்லத்தில் சமூக உறவின் அடிப்படையிலும் சேர்ந்து வாழவில்லை. முதல் குற்றவாளி ஜெயலலிதா, மற்ற மூவரையும் மனிதாபிமான அடிப்படையிலும் தனது வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை. மாறாக, முதல் குற்றவாளி முறைகேடாகச் சேர்த்த பணத்தில் குவித்த சொத்துக்களை, மற்ற மூன்று குற்றவாளிகளின் பெயர்களில் பிரித்துக்கொண்டு நிர்வகிப்பது என்ற சதித் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்தில் மட்டுமே, முதல் குற்றவாளி ஜெயலலிதா, மற்ற மூன்று குற்றவாளிகளையும் தனது இல்லத்தில் இலவசமாகத் தங்கிக்கொள்ள அனுமதித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் கொள்ளைகளுக்கு உடந்தையாகவும், அவரின் முறைகேடான சொத்துக்களுக்கு பினாமியாகவும் இருந்த திருட்டுக் கும்பல்: சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி.

 • சொத்து சம்பாதிப்பதில் இவர்களுக்கு எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லை. இவர்களிடம் பேராசை மட்டுமே இருந்துள்ளது. இவர்களது தந்திரங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும். இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் நாட்டில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்.- இவை அனைத்தும் பரலோகம் போய்விட்ட ஜெயலலிதாவின் பங்கு குறித்து உச்சநீதி மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகள் (findings). மேலும், உச்சநீதி மன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷும், அமிதவராயும் ஜெயலலிதா மரணம் அடைவதற்கு முன்பாகவே, இந்த வழக்கில் அவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளனர். குன்ஹாவின் தீர்ப்பு ஜெயலலிதாவின் சதிகளையும், கிரிமினல்தனங்களையும் அசைக்க முடியாத ஆதாரங்களோடும் சாட்சியங்களோடும் நிரூபித்திருக்கிறது.குன்ஹா அளித்த தீர்ப்பில், இவர்களின் நிறுவனங்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தங்களுக்குச் சொந்தமாக வைத்துள்ளன. அந்த மூவாயிரம் ஏக்கர் நிலமும் எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதைக் குற்றவாளிகளால் சொல்ல முடியவில்லை.
 • வடக்கு கடற்கரை சப்-ரிஜிஸ்ட்ரார், தோட்டக்கலைத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் அளித்த சாட்சியத்தில், அந்த இருவரும் அவர்களது மேலதிகாரிகளின் உத்தரவுப்படி ஜெயலலிதாவின் போயசு தோட்ட வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு, விதிமுறைகளைப் பின்பற்றாமல் பத்திரங்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் பதிவு செய்த நிலங்களின் பத்திரங்கள் அனைத்தும் அடிமாட்டு விலைக்குப் பதியப்பட்டுள்ளன. மிகவும் அதிர்ச்சியான விடயம் என்னவென்றால், அதில் ஆறு பத்திரங்கள் யார் வாங்குகிறார் என்ற விவரம் இல்லாமல், பெயர்கூடக் குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போது அவை யாருடைய அனுபவத்தில் உள்ளது எனப் பார்த்தால், அவை அனைத்தும் ஜெயலலிதாவுக்காக வாங்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்திருக்கிறது.

  1991−96 காலக் கட்டத்தில் ஜெயலலிதா முறைகேடான வழியில் சம்பாதித்து, போயசு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த தங்க, வைர நகைகளின் ஒரு பகுதி.
 • சசிகலாவுக்கும் இளவரசிக்கும் ஆடிட்டராக இருந்த பாலாஜி அளித்த வாக்குமூலத்தில், “இந்த நிறுவனங்கள் எந்தக் காலக்கட்டத்திலும் எதையும் உற்பத்தி செய்யவில்லை. பொருட்களை வாங்கி விற்கவும் இல்லை. ஆனால், நிறுவனங்களின் கணக்குகளில் மட்டும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன” எனக் கூறியிருக்கிறார்.
 • நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வங்கிப் பரிவர்த்தனை விவரங்களைப் பார்க்கும்போது மலைப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. மூலதனமே இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் நிறுவனங்களும், எந்த வியாபாரத்திலும் ஈடுபடாத நிறுவனங்களும் ஒவ்வொரு முறையும் பல ஆயிரங்களிலும் இலட்சங்களிலும் பணப் பரிவர்த்தனை செய்துள்ளன. இப்படிப் பணத்தைச் சுற்றி வளைத்துப் போட்டு எடுப்பதற்காகவே, 1991-க்கு முன்புவரை 12 வங்கிக் கணக்குகளை மட்டுமே வைத்திருந்த ஜெயலலிதாவும் சசிகலாவும், அதன் பிறகு 52 வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.
 • போயசு கார்டனில் வேலை பார்த்த கார் டிரைவர் ஜெயராமனிடம் ஒவ்வொரு முறையும் பை மற்றும் சூட்கேஸில் இலட்சக்கணக்கான ரூபாய்களை வைத்து, நிரப்பப்பட்ட வங்கி சலான்களைக் கொடுத்து வங்கியில் செலுத்த சசிகலாதான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்தப் பணத்தை இவர்கள் நடத்தும் நிறுவனத்தின் கணக்குகளில் வரவு வைத்து, அவற்றை நிறுவனத்தின் பணமாக மாற்றி, அதன் பிறகு நிறுவனத்தில் இருந்து தங்கள் பெயர்களில் உள்ள வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டுள்ளனர்.
 • ஜெயலலிதாவிடம் இருந்து அரசு தரப்பு கைப்பற்றிய நகைகளின் எடை 27,588 கிராம். இதில், ஜெயலலிதா பதவிக்கு வருவதற்கு முன்பே அவரிடம் இருந்த நகைகள் 7,040 கிராம். மீதமுள்ள 20,548 கிராம் எடையுள்ள தங்கம் பதவிக் காலத்தில் சம்பாதித்தவை என்றாகிறது. இத்துணை ஆயிரம் எடையுள்ள தங்கம் தனது வீட்டுக்கு எப்படி வந்தது என்பதை ஜெயலலிதாவால் கடைசி வரை சொல்லவே முடியவில்லை.
 • ஜெயலலிதாவிடம் இருந்த வைரங்களின் மதிப்பு 1,62,61,200 ரூபாய். அதனைத் தங்க நகைகளின் மதிப்போடு சேர்த்துக் கணக்கிட்டால், 2,51,59,144 ரூபாய் வருகிறது. இத்தனை மதிப்புடைய தங்கத்தாலும், வைரத்தாலும் இழைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் ஜெயலலிதாவால் முறைகேடான வழியில் சம்பாதிக்கப்பட்டது.

1991−96 காலக் கட்டத்தில் ஜெயலலிதா முறைகேடான வழியில் சம்பாதித்து, போயசு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த வெள்ளிப் பொருட்களின் ஒரு பகுதி.

தங்க, வைர நகைகள், வீட்டு மனைகள், நிலங்கள், கட்டிடங்கள், கொடநாடு எஸ்டேட், பையனூர், சிறுதாவூர் பங்களாக்கள் என ஜெயா-சசி கும்பல் முறைகேடான வழிகளில் சம்பாதித்த பணம், சொத்துக்களை நுணுக்கமாக ஆராய்ந்துள்ள குன்ஹா, தனது தீர்ப்பில் குற்றவாளிகள் 1991-96 காலக் கட்டத்தில் 53,60,49,954 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முறைகேடான வழிகளில் ஈட்டியதாக நிரூபித்திருக்கிறார்.

வழக்கு தொடர்பான காலக்கட்டத்தில் (1991-96) ஜெயா-சசி கும்பல் முறைகேடான வழிகளில் குவித்த சொத்துக்களின் மதிப்பு இவ்வளவுதானா என்றால், நிச்சயமாக இல்லை. “இன்னும் நிறைய சொத்துக்கள் வைத்திருக்கின்றனர். எனவே, அவற்றை எல்லாம் விசாரிப்பதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 178(2)-ன் படி எனக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே, விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை” என்கிறார், சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற நல்லம்மா நாயுடு. (ஜூ.வி., 22.2.17, பக்.14)

1991-96 காலக் கட்டத்தில், ஜெயா-சசி கும்பல் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொத்துக்களை மட்டுமா வாங்கிக் குவித்தார்கள்? தமது ஊழல், கொள்ளைகளை அம்பலப்படுத்திய எதிர்க்கட்சியினர், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மீதும், கவர்னர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் மீதும் ரவுடிக் கும்பலை ஏவிவிட்டு வன்முறைத் தாக்குதலை நடத்தியதற்கு ஏராளமான ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன. இந்த கிரிமினல் குற்றங்கள் தொடர்பாக அக்கும்பல் மீது இதுவரை எந்தவொரு வழக்கும் தொடரப்படவில்லை.

அ.தி.மு.க.வின் 2011-16 ஆட்சிக் காலம் 40 பர்செண்ட் ஆட்சி என்ற அடைமொழியால் குறிப்பிடுமளவிற்கு ஊழலிலும் கொள்ளையிலும் மூழ்கித் திளைத்தது. தாது மணல், ஆற்று மணல், கிரானைட் – என இயற்கை வளங்கள் தொடங்கி முட்டை, பால், மின்சாரக் கொள்முதல் வரை எங்கும் எதிலும் ஊழல், கமிசன் என பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதில் வரலாறே படைத்தது ஜெயா-சசி கும்பல்.

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சியையும் கட்சியையும் நடத்தி வந்த ஜெயா, தனது கிரிமினல் குற்றங்களைத் தமிழகத்தின் பாமர மக்கள் உணர்ந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே, அவர்களைச் சாராய போதையிலும், இலவச போதையிலும் மூழ்கடித்தார். பணத்தை வாரியிறைத்துப் பாமர மக்களின் ஓட்டுக்களை, வழிப்பறித் திருடனைப் போலப் பறித்துக் கொண்டார். இதனையும் மீறித் தன்னை எதிர்த்தவர்கள் மீது அவதூறு வழக்குகளையும், தேசத் துரோக வழக்குகளையும் போட்டு, அவர்களைச் சிறையில் அடைத்தார்.

ஜெயா−சசி கும்பல் அடித்த கொள்ளையின் வெளிப்படையான ஆதாரங்கள்: கொடநாடு எஸ்டேட் (இடது) சென்னையில் உள்ள மிக நவீன ஜாஸ் திரையரங்கு.

தனது அரசியல் வாழ்நாள் முழுவதும் பொதுச் சொத்துக்களை அபகரித்துக் கொள்ளும் கொள்ளைக்காரியாக, சதிகாரியாக, மேல்தட்டுப் பொறுக்கியாக, ரவுடியாகவே வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா, அந்தக் குற்றங்களில் ஒரு சிறு பகுதிக்காகவே தண்டிக்கப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்டதொரு இழிந்த கழிசடையை, தண்டிக்கப்பட்ட குற்றவாளியைத் தமிழகத்தின் அம்மாவாக அ.தி.மு.க. கும்பலும், அக்கட்சியின் துதிபாடிகளும், அவர்களது அரசும் கொண்டாடுவதும் துதி பாடுவதும் தமிழகத்திற்கு நேர்ந்துவிட்ட அவமானம்.

மேலை நாடுகளில் ஊழல் மற்றும் குற்றம் புரிந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் கைவிலங்கிட்டு இழுத்துச் செல்லப்பட்டுச் சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள். அந்நாடுகளில் குற்றவாளிகள் எவ்வளவு பெரிய செல்வாக்கு மிக்க நபராக இருந்தாலும், எந்தவிதமான சலுகையும் மரியாதையும் காட்டப்படாது எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற மத்திய உளவுத் துறை அதிகாரி ப.ஸ்ரீ.ராகவன். சீனா உள்ளிட்ட சில நாடுகளில் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் தூக்கில் தொங்கவிடப்படுகிறார்கள்.

ஆனால், தண்டிக்கப்பட்ட ஜெயா விடயத்தில் என்ன நடக்கிறது? அம்மாவின் வழியிலேயே ஆட்சியை நடத்துவோம் என வெட்கங்கெட்டு அறிவிக்கிறார், சசிகலாவின் பினாமி முதலமைச்சர் பழனிச்சாமி. ஜெயாவின் பெயரில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நலத் திட்டங்கள் இன்னமும் அவரது பெயரிலேயே தொடர்கின்றன. அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயாவின் பிறந்த நாளைத் தமிழக அரசே முன்னின்று கொண்டாடுகிறது. மெரினாவைக் களங்கப்படுத்தும் ஜெயாவின் சமாதியை நினைவிடமாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன.

தலைமைச் செயலர், காவல் துறை தலைவர் தொடங்கி அதிகார வர்க்கம் அனைத்தும் குற்றவாளி ஜெயாவின் படத்தின் கீழ் அமர்ந்துகொண்டு நீதி பரிபாலனம் செய்யும் கேலிக்கூத்து நடக்கிறது. சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவைச் சந்திப்பதற்குத் தமிழக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அனுமதி அளிக்கக் கோரி தமிழக போலீசு தலைமையே கர்நாடக சிறைத்துறைக்குக் கடிதம் எழுதும் அசிங்கமும் அரங்கேறுகிறது.

அம்மாவின் வழியில் நடப்பதாகக் கூறப்படும் இந்த ஆட்சியின் சுக்கான், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட சசிகலா, அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், லெக்ஸஸ் கார் இறக்குமதி மோசடி வழக்கை எதிர்கொண்டுவரும் நடராஜன் ஆகிய கிரிமினல் பேர்வழிகளின் கைகளில்தான் உள்ளது.

முதலமைச்சர் நாற்காலி தொடங்கி அனைத்து உயர் பதவிகளிலும் இந்தக் கும்பலின் அடிவருடிகள்தான் உட்கார முடியும் என்பதை உளவுத் துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் தூக்கியடிக்கப்பட்ட விதம் உணர்த்துகிறது. சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், உளவுப் பிரிவு கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் உள்ளிட்ட தனது விசுவாசமிக்க ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வைத்துக்கொண்டு, மக்களின் எதிர்ப்பையும் மீறி இந்த ஆட்சியை அடுத்த நான்காண்டுகளுக்குத் தொடர்ந்து நடத்திவிட எத்தணிக்கிறது, சசிகலா குடும்பம். சுருக்கமாகச் சொன்னால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைந்துள்ள அ.தி.மு.க. அரசு, கிரிமினல்களால், கிரிமினல்களுக்காக, கிரிமினல்கள் மூலம் நடத்தப்படும் அரசாகும்.

அம்மா கொடுத்த இலவசப் பொருட்களை வாங்கி அனுபவித்து வரும் தமிழக மக்கள் அம்மாவையும் எதிர்க்க மாட்டார்கள், இந்த அரசையும் எதிர்க்கத் துணியமாட்டார்கள் என வாதாடி, இந்த மானக்கேட்டை நியாயப்படுத்தி வருகிறது, அ.தி.மு.க. கும்பல். இதன் மூலம் தமிழக மக்களை எவ்வித அறவுணர்ச்சியும் அற்ற, தன்மான உணர்ச்சி இல்லாத சோற்றால் அடித்த பிண்டங்களாக இழிவுபடுத்துகிறது.

இந்த இழிவை, அவமதிப்பை எப்படித் துடைத்தெறிவது? இந்த இழிவைத் தடுக்கக் கோரித் தலைமைச் செயலரிடம் மனு கொடுக்கிறது, தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளதாக அறிவிக்கிறது, பா.ம.க. சட்டம், நீதிமன்றங்கள் மூலம் இந்த இழிவிற்கு விடிவு கிடைக்குமா என்றால், முந்தைய அனுபவங்கள் இந்த நிறுவனங்களை நம்ப முடியாது என்றே உணர்த்துகின்றன. பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயா அடைபட்டிருந்த நாட்களிலும், அவர் தண்டிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நடந்துகொண்டிருந்த போதும் தமிழகத்தில் என்ன நடந்தது?

இப்பொழுது சசி-தினகரன் இருக்கும் இடத்தில், அப்பொழுது ஜெயா இருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இடத்தில் ஓ.பி.எஸ். இருந்தார். குற்றவாளி ஜெயா போயசு தோட்டத்தில் பதுங்கிக்கொண்டு நடத்திய ஆட்சியை நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட எந்தவொரு உயர் அதிகார நிறுவனமும் கேள்விக்குள்ளாக்கவில்லை.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயாவின் சட்டமன்றத் தொகுதியான சீறிரங்கம் தொகுதி காலியாக இருப்பதை உடனடியாக அறிவிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியது, “சுதந்திரமான” தேர்தல் ஆணையம். அரசு அலுவலகங்களிலும் அதன் இணைய தளங்களிலும் ஜெயாவின் படத்தை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, வாய்தாவுக்கு மேல் வாய்தா என இழுத்தடிக்கப்பட்டது.

ஜெயா தண்டிக்கப்பட்டதைக் கண்டிப்பது என்ற பெயரில் அ.தி.மு.க. ரவுடிகள் நடத்திய வன்முறை குறித்து உச்சநீதி மன்றத்தில் நடந்த விசாரணையில், “ஜெயாவின் கட்சிக்காரர்கள் கட்டுப்பாடின்றி நடந்துகொள்வதற்கு அவர் என்ன செய்ய முடியும்? அவர்தான் இந்த வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்தினார் என்பதற்கு ஏதாவது ஆதாரமுண்டா?” என ஜெயாவின் வக்கீலாகவே மாறி வாதிட்டார், உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து. “அம்மா என்பது அனைவரும் பயன்படுத்தும் பொதுவான சொல்தானே” என அ.தி.மு.க. அடிமையைப் போல விளக்கமளித்த பெருமைமிக்கது சென்னை உயர்நீதி மன்றம்.

ஜனநாயகத்தைத் தாங்கும் நான்காவது தூணாகக் கூறப்படும் ஊடகங்களின் அறவுணர்ச்சியோ நீதிமன்றங்களைவிடக் கேவலமாக இருக்கிறது. ஒருபுறம் உச்சநீதி மன்றத் தீர்ப்பை வரவேற்று எழுதிக் கொண்டு, இன்னொருபுறம் ஜெயாவிற்கு வக்காலத்து வாங்கும் மாமா வேலையையும் திறம்பட நடத்துகின்றன, ஊடகங்கள். குற்றவாளி ஜெயாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லும் தமிழக அரசின் விளம்பரத்தைக் காசுக்காக முழுப் பக்க அளவில் வெளியிட்ட ஊடகங்களுக்கு (தினமணி, தமிழ் இந்து உள்ளிட்டவை) பொதுவாழ்வில் நேர்மை, தூய்மை குறித்துப் பேசும் தகுதி இருக்க முடியுமா?

இன்றைய அரசியல் அமைப்பு முறை தோற்றுப் போய் நிற்பதை, எந்தச் சட்டம், நீதி, அறம் குறித்துப் பேசுகிறதோ அதற்கு எதிராக இவ்வமைப்பு செயல்படுவதை ஜெயா விவகாரம் துலக்கமாக எடுத்துக் காட்டுகிறது. எனவே, குற்றவாளி ஜெயாவின் படங்களை, அவரது சமாதியை, அவரது பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அகற்றவும், நீக்கவும் கோருவதோடு, கிரிமினல்களால் நடத்தப்படும் அ.தி.மு.க. அரசைப் புறக்கணிக்கும் மக்கள் திரள் போராட்டங்கள் மட்டும்தான் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்ட இழிவை, அவமானத்தைத் துடைத்தெறியும்.

-செல்வம்
புதிய ஜனநாயகம், மார்ச் 2017

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க