டந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நவ 26, 27 ஆகிய நாட்களில் விடாது மழை வெளுத்து வாங்கியது. இதனால் 47 ஆயிரம் முதல் 54 ஆயிரம் ஏக்கர் விளைநிலமும் தாழ்வான மக்கள் குடியிருப்பு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டது என கூறியுள்ளார்கள். ஆனால், களநிலவரத்தைப் பார்த்தால் “எங்களுக்கு அறிவிப்பும் வரவில்லை நாங்கள் இருக்கிறோமா என இதுவரை யாரும் பார்க்கவும் வரவில்லை” என்கின்றனர் மக்கள்.

விவசாய நிலங்கள் பாதிப்பை எடுத்துக்கொண்டோம் என்றால் குறிப்பாக நாகை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும், தஞ்சை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும், திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ஆகிய 4 மாவட்டங்களோடு முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வேதாரண்யம், ஆகிய 4 நகராட்சிப் பகுதிகளும் என மொத்தமாக 47 ஆயிரம் முதல் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது என தெரியவருகிறது.

உட்கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்பு என்றால் தஞ்சை கீழையூர் கிராமத்தில் நன்னம் குலம் நிரம்பி விவசாய நிலத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் 50 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வலங்கைமான், புலவை நத்தம் என்ற கிராமத்தில் 26 நாள் பயிர் மழைநீரில் மூழ்கியுள்ளன. வேதாரண்யம் பகுதியில் வண்டல், முண்டுரான் வெளி, வடக்கு வெளி, அவரிக்காடு என சம்பா பயிரிட்ட ஏராளமான நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சின்ன பெரும்தோட்டம் கிராமத்தில் 300 ஏக்கர் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளன. திருவாரூர் திருக்குவளை பகுதியிலும் பயிர்கள் பாதிக்கப் பட்டுள்ளன. தஞ்சை தலைஞாயிறுப் பகுதியில் பயிர்கள் நாசமடைந்துள்ளது. இதற்கு முன்பாகவே விவசாயிகள் உரம் பற்றாக்குறை உள்ளது என்றும், அரசு அவற்றைக் கிடைக்கச் செய்வதன் மூலமாகப் பயிர்களைப் பாதுகாக்கலாம் என கூறியிருந்தனர். இந்நிலையில் தீவிரமடைந்த மழையால் பாதிப்பு மேலும் அதிகமாகியுள்ளது.

மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் ஊடகங்களில் தேடியபோது பெரும்பாலும் கோவிலுக்குள் நீர் புகுந்தது, விளைநிலங்களுக்குள் நீர் புகுந்தது என்று தான் செய்திகள் வருகிறதே தவிர மக்கள் பாதிப்பு பற்றிய செய்திகள் ஒன்றிரண்டு தான் காணமுடிகிறது. நமது கேள்வி யாதெனில் “கோவிலுக்குள் நீர் புகுகிறது என்றால் வீட்டிற்குள் சென்றிருக்காதா என்ன?” மக்கள் பகுதிக்குள் மழைநீர் புகுந்துள்ளது தான். ஆனால், அவற்றை ஊடகங்கள் வெளியில் சொல்வதே இல்லை.

குறிப்பாக, தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஓரிரு பதிவில் பார்த்த வகையில் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் 14 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இவர்களின் குடியிருப்புக்கு அருகாமையிலேயே வலவன் கால்வாய்கள் மற்றும் கெழுத்திக் கால்வாய்கள் ஓடுகின்றன. கடந்த 25 ஆண்டுகளாகவே நீர் இடுப்பளவு ஏறிவருகிறது. இந்தாண்டு முட்டி அளவுக்குத் தண்ணீர் ஏறியுள்ளது. இப்பகுதிக்குள் முதல் முறையாக சன் டிவி சென்றுள்ளது.


படிக்க: ஃபெங்கால் புயல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த வஞ்சியூர் மக்கள்!


திருவாரூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அழகிரி நகரில் அனைத்து தரப்பட்ட மக்களும் வசிக்கிறார்கள். இங்கு 700 குடும்பங்களுடன் சுமார் 2,800 மக்கள் வசிக்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன் சாலை போடப்பட்டுள்ளது. அது தற்போது என்னவாக இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.

மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளைக் கூட மாவட்ட நிர்வாகம் செய்யாமல் இருந்துள்ளது. சீரமைத்துத் தரக் கோரினால், முந்தைய ஆட்சியாளர்கள், அதிகாரிகள் தற்போதைய ஆட்சியாளர்கள் என மக்களிடம் சாக்குப் போக்கு கூறி வருகிறார்கள். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், “எங்க பிள்ளை எல்லாம் சின்ன சிறுசா இருந்தப்போ இந்த ரோடு போடப்பட்டது. இப்படி மழைக் காலம் வந்தா இதுல வண்டி வாகனம் போக முடியாது… ஒரே சகதியா இருக்கும் அதுலதான் நடக்கணும்! சில பேருக்கு சேத்துப்புண்ணு, அது இதுன்னு சீக்கு புடிச்சு படுத்துரும். இப்பகூட மண்டபத்துல வந்து தங்கிக்கங்க’ன்னு சொல்றாங்க, அவங்க கொடுக்குற ரொட்டிக்கும், பன்னுக்கும் பொழங்குன இடத்தை விட்டுட்டு வர்றதா! எதை செஞ்சாலும் எங்க இருப்பிலேயே பண்ணிட்டு போங்க, கஞ்சியோ… கூழோ… எங்க பொழப்ப இங்கேயே ஓட்டிக்கிறோம். இந்த அரசாங்கமும் அதிகாரிகளும் தான் நல்ல தீர்வு சொல்லணும்” என்று வேதனையுடன் கூறுகிறார்கள். பலகட்ட கோரிக்கை சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகும் இதுவரை அப்பிரச்சினை தீர்ந்த பாடில்லை.

நாகை மாவட்டத்தை எடுத்துக்கொண்டோமேயானால், நாகை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிவசக்தி நகர், நாகூர் வள்ளியம்மை நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் நடுநிலைப் பள்ளி ஒன்றில் 110 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளார்கள். கோமதி காலனி பகுதியில் 20 வீடுகளில் நீர் புகுந்த நிலையில் முகாமிற்கு 1 குடும்பத்தினர் மட்டுமே வந்துள்ளார்கள்.

இதே போன்று வேப்பத்தாங்குடி ஊராட்சி வஞ்சியூர் கிராமம் வடக்கு தெருவில் பட்டியல் சாதி மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் மழைநீர் புகுந்ததால் மீட்கக்கூடிய பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு அருகாமையில் உள்ள மாடி வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளார்கள். சிலர் பள்ளிக்கூடங்களில், ஒரே வீட்டில் 4 குடும்பங்கள் தங்கியும் இருந்தார்கள். இந்த அவலநிலையை அறிந்த மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் சென்று பார்த்தபோது நிலைமை மேலும் மோசமாக இருந்ததை உணர முடிந்தது.


படிக்க: இயற்கை பேரிடர்களால் அல்லல்படும் 3.5 கோடி ஆப்பிரிக்க மக்கள்


40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்திரா ஆவாஸ் யோஜனா (IAY) தொகுப்பு வீடுகளில் காரைகள் கொட்டியும், விரிசல் விட்ட வீட்டிலும் பச்சிளங்குழந்தைகளோடு ஒதுங்க இடமின்றி மக்கள் இருந்தார்கள். மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையிலிருந்தது. ஈரமான சுவர் மூலமாகவும் மழைநீர் சொட்டிக்கொண்டே இருந்தது. நீர் மட்டம் அதிகமாகி வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்து இருந்தது. உடனே, பேரிடர் மீட்புக் குழுவிற்கும் தகவல் சொல்ல முயன்றார்கள். ஆனால், அறிவித்த எண்ணில் அழைப்பு போகவில்லை.

எனவே மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் காணொளியாகப் பேசி சமூக வலைத்தளங்களில் போட்ட பிறகுதான் பிரச்சினை வெளியே தெரியவந்தது. அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? மாறாக போலீஸ் தரப்பிலிருந்து “பிரச்சினையாக்க முயற்சி செய்யாதீர்கள்; பாதிப்புகள் ஒன்றுமில்லை” என மிரட்டல் தான் வந்துள்ளது. அதன் பிறகு தான் திருவாரூர் பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மக்களைச் சந்திக்கச் சென்றது. இருப்பினும் அத்தியாவசியப் பொருட்கள் இதுவரை கொடுக்கப்படவில்லை. எனவே அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத மாவட்ட நிர்வாகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் வரும் குடியரசுத் தலைவருக்குப் பாதுகாப்பிற்காக 2500 போலீஸ், என மாவட்ட நிர்வாகமே ஒரு நாள் கூத்திற்குத் திரண்டுள்ளது. இந்நிலையில் அவர் வருவது புயல் காரணமாக ரத்தாகியுள்ளது. ஆனால், இங்கு புயலில் பாதிக்கப்பட்டிருக்கும் உழைக்கும் விவசாய கூலிகளைச் சென்று பார்க்க ஒரு நாதியும் இல்லை என்ற அவலநிலைதான் உள்ளது.

மக்கள் தற்போது அவர்களின் தேவைகளுக்கே போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் போலீஸ் தரப்பில் நெருக்கடி ஏற்பட்டு பிரச்சினையாகும் என கருதி மக்கள் அவர்களாகவே அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறார்கள். கிராம நிர்வாகிகளோ எப்போதும் போலவே அண்ணாந்து பார்த்துவிட்டு “இது ஒரு பாதிப்பே இல்லை” என தன் மேட்டுக்குடி புத்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 54 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு உரிய இழப்பீடு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் சென்ற ஆண்டு இயற்கை சீற்றங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கே போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் நாட்டிற்கே சோறு வழங்கியவர்கள் இன்று கையறு நிலையில் உள்ளார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆக, வரும் காலத்தில் கோரிக்கைகளோடு களத்தில் இறங்கி போராடுவதே தீர்வாகும்.

காலநிலை எப்படி மாறும் என ஆய்வாளர்களே கணிக்க முடியாத நிலையில் தற்போது, புயலாக வலுப்பெற்று 30ஆம் தேதி காரைக்கால்-மகாபலிபுரம் இடையே 70 முதல் 80 கி.மி வேகத்தில் காற்றுவீசி கரையைக் கடக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளார்கள். இதனால் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு மக்களைக் காக்கத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.


பிரதீப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க