13.09.2022
அன்று பாபர் மசூதி!
இன்று ஞானவாபி மசூதி !
இசுலாமியர்களின் கண்ணியமான வாழ்வை காப்பது நம் கடமை!
நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் போராட்டங்களே தீர்வு!
மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாக தொழுகை செய்கின்றனர். திடீரென்று இந்த மசூதி, காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்றும் மசூதியில் சென்று காசி விஸ்வநாதரை வழிபடுவோம் என்றும் ஐந்து பெண்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை சட்டவிரோதமாக நீதிமன்றம் நியமித்தது.
இதற்கெதிராக ஞானவாபி மசூதி கமிட்டி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் முடிவில் “மசூதியில் சென்று காசி விஸ்வநாதரை வழிபட வேண்டுமென்று ஐந்து பெண்கள் அளித்த மனு விசாரணைக்கு உகந்தது” என்று வாரணாசி நீதிமன்றம் நேற்றைய (12.09.22) தினம் தீர்ப்பளித்திருக்கிறது.
பாபர் மசூதியை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக 30 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி, பார்ப்பன பாசிச கும்பல் அபகரித்தார்களோ அதைப்போன்றே ஞானவாபி மசூதியிலும் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களின் பாசிச நடவடிக்கைகள் ஞானவாபி மசூதியோடும் கண்டிப்பாக முடிவடையாது.
1947 ஆம் ஆண்டுக்கு முன் வழிபாட்டுத்தலங்கள் எந்த நிலைமையில் இருந்ததோ அதைப் போன்ற நிலைமையே நீடிக்கப்பட வேண்டும் என்பதையே 1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் (சிறப்புச் சட்டங்கள்) தெரிவிக்கிறது.
பாபர் மசூதியை தவிர்த்த வழிபாட்டுத்தலங்கள் என்று அச்சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிட்டதன் மூலம் 1991 ஆம் ஆண்டு முதலே பாபர் மசூதியை அபகரிப்பதற்கான முயற்சிகள் அப்போதே தொடங்கிவிட்டன என்பதை எவராலும் உணர முடியும்.
இப்போது 1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அந்தச் சட்டத்திற்கும் எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
பாபர் மசூதியோடு பிரச்சினை முடிந்தது இனி அமைதியான வாழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த இஸ்லாமியர்களுக்கும் “இந்த ஒரு மசூதி தானே விட்டுவிடுங்கள், அமைதி கிடைக்கும்” என்று கூறிய மற்ற மக்களுக்கும் பேரிடியாக அமைந்திருக்கிறது இந்த வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு. இத்தீர்ப்பினை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.
கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளை, உப்புக்கும் தயிருக்கும் ஜி.எஸ்.டி வரி, குமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து இயற்கை வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பு என மக்களை வாட்டிவதைக்கும் பாசிச நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மோடி தலைமையிலான பாசிச கும்பல்தான் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள், தலித் மக்களின் கண்ணியமிக்க வாழ்வை பறித்து அவர்களை அகதிகளாக்குகிறது.
இராணுவம், நீதிமன்றம், போலீசு உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் ஊடுருவி இருக்கிறது ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பல்.
இஸ்லாமிய மக்களின் உரிமைகளை படிப்படியாக அழித்து, அவர்களின் கண்ணியமிக்க வாழ்வைப் பறிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி, அம்பானி-அதானி பாசிச கும்பலை வீழ்த்த வேண்டும் என்றால் தேர்தல் மூலமாக ஒருபோதும் முடியாது என்பதைத்தான் இந்த நீதிமன்றம் தீர்ப்பு நமக்கு தெரிவிக்கிறது.
இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் சுயமரியாதை மிக்க வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துவது நம்முடைய கடமை.
ஆகவே ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி, அம்பானி-அதானி பாசிச கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321.