இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இங்கிலாந்து அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததன் மூலம் இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்திருக்கிறது மோடி அரசு.
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், போலந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. அதே சமயத்தில் சீனா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட 11 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டது. பெரும்பான்மை அடிப்படையில் இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்து குவித்தது இலங்கை அரசு.
இந்தப் போரை இலங்கையின் மோடியான ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு முன்னின்று நடத்தினாலும், இந்தப் போருக்கு சீனா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு ஏகாதிபத்தியங்களும் அவற்றின் அடியாட்களான இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் முக்கிய பங்களிப்பு செய்தன.
படிக்க :
♦ இலங்கையை ஊழல் – போதை தேசமாக மாற்றிய ஆட்சியாளர்கள் !
♦ இலங்கை புத்தளம் : சிங்கப்பூரின் குப்பை மேடா ?
இந்தப் போருக்கு இந்திய அரசு உதவி புரிந்ததை முழுக்க முழுக்க சோனியா காந்திக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் உள்ள தனிப்பட்ட பகைமையின் காரணமாக நடந்ததாக சித்தரித்து, அதன் மூலம் தமிழகத்தில் “நாம் தமிழர்” உள்ளிட்ட பாசிச, பிழைப்புவாத தமிழ்தேசிய கட்சிகள் இன்றளவும் பிழைப்பு நடத்தி வருகின்றன.
சோனியா காந்திக்குப் பழிவாங்கும் உணர்வு இருந்ததா இல்லையா என்பதை இங்கு நாம் விவாதிக்கப் போவதில்லை. ஆனால் அப்பாவி இலங்கைத் தமிழர்களை போர் என்ற பெயரில் இலங்கை அரசு கொன்று குவிக்க, இந்தியா துணை போனதற்கு சோனியாவின் பழிவாங்கும் உணர்வு மட்டுமே காரணமாக இருந்திருக்க முடியுமா? அப்படியெனில், சீனாவும் பாகிஸ்தானும் அந்தப் போர்க் குற்றத்தில் இலங்கைக்கு உதவி செய்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு சீமான் உள்ளிட்ட தமிழ் தேசிய சித்தாந்தவாதிகள் வாய் திறப்பதில்லை.
அதிகபட்சமாக, இலங்கை பூலோக ரீதியாக முக்கியமான இடத்தில் இருப்பதாகவும், அதாவது அமெரிக்காவைப் பொருத்தவரையில் சீனாவிற்கு ‘செக்’ வைக்கவும், சீனாவைப் பொருத்தவரையில் தனது நாட்டை அமெரிக்காவின் இராணுவ முற்றுகையில் இருந்து காத்துக் கொள்வதற்கும் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அவசியம் இருப்பதாகவும் அதற்காகவே இந்தப் படுகொலைகளுக்கு இந்த நாடுகள் துணை போயிருப்பதாகவும் கூறுகின்றனர். பெரும் ஏகாதிபத்தியங்களான அமெரிக்கா, சீனா போன்றவற்றிற்கு இப்படி ஒரு அவசியம் இருந்தாலும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஏகாதிபத்திய அடியாள் நாடுகளுக்கு இந்தப் போரை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன ?
இந்த நாடுகளின் ஆளும் வர்க்கங்களாக அமைந்துள்ள ஏகபோக முதலாளிகள், தரகு முதலாளிகள் மற்றும் நிதியாதிக்கக் கும்பலின் நலன்கள் தான் இந்தப் போருக்கு பிற நாடுகள் துணைபோனதன் பிண்ணனியில் அடங்கியுள்ளன. இந்த உண்மை பல்வேறு சமயங்களில் அம்பலப்பட்டிருந்தாலும் ஊடகங்களும், தமிழகத்தைப் பீடித்திருக்கும் தமிழ் தேசியவாதிகளும் அது குறித்து வாய் திறப்பதில்லை.
இலங்கை அரசு தமிழ் ஈழ மக்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலைத் தொடுத்து ஒரு இன அழிப்புப் போரை முடித்த பின்னர், இலங்கையை நோக்கிப் பாய்ந்த இந்திய முதலாளிகளின் மூலதனத்தைப் பார்க்கும் போதுதான் அப்போருக்கு இந்தியா ஏன் ஆதரித்தது என்பது புரியவரும் ! அதே போல சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் எவ்வளவு மூலதனத்தை இலங்கையில் இட்டு அந்த நாட்டு மக்களைச் சுரண்டினர் என்பதிலிருந்துதான் இந்தப் போரின் உண்மையான நோக்கம் தெரியவரும்.
இந்தப் போர் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடத்தப்படும் உள்நாட்டுப் போர்கள், அண்டை நாடுகளின் மீதான தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இத்தகைய மூலதனப் போர்தான்.
அந்த அடிப்படையிலேயே தற்போது இந்திய அரசு இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்ததாகக் கணக்குக் காட்டி விட்டு, மறைமுகமாக இலங்கையை காப்பாற்ற முயற்சித்ததன் பின்னணியைப் பார்க்கலாம்.
இந்த தீர்மானம் ஐ.நா. சபையில் கொண்டு வரப்படுவதற்கு முன்னரே, இதில் இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆதரவாகத் தான் நடக்கும் என்று தான் நம்புவதாக இலங்கை வெளியுறவுத்துறை செயலர் உறுதிபட வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் இலங்கை அதிபர் நேரடியாக இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக கட்சிகள் அனைத்தும் இது குறித்து ஒரே குரலில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய அரசு அந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட வேண்டும் என்றும், எதிராக வாக்களிக்கவோ புறக்கணித்து வெளிநடப்பு செய்யவோ கூடாது என்று குறிப்பாக சுட்டிக் காட்டி கூறினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைவரின் பார்வையும் இந்த தீர்மானத்தின் மீது இருக்கையில், தமிழக பாஜக – அதிமுக கூட்டணிக்கே ஐ.நா.-வின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் இருந்தது.
இலங்கைக்கும் மனம் நோகக் கூடாது, இங்கு ஓட்டுக்கும் எவ்வித சேதாரமும் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நைச்சியமாக வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகச் சொல்லி வெளியேறிவிட்டார். ஒருவேளை தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் இருந்திருந்தால் இலங்கை மீதான இந்தத் தீர்மானத்திற்கு எதிராகவே தான் பாஜக அரசு வாக்களித்திருக்கும். ஏனெனில் இலங்கைக்கு ஆதரவு தருவதன் பின்னணியில் இந்திய முதலாளிகளின் முதலீட்டு நலன்கள் இருக்கின்றன.
உதாரணத்திற்கு ஒன்று பார்க்கலாம். இலங்கையின் துறைமுக மேம்பாட்டு பணிக்கான டெண்டர் இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற இழுபறி நிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், டெண்டர் வேண்டுமெனில் இலங்கை அரசுடன் அனுசரித்துப் போக வேண்டியக் கட்டாயம் இந்திய அரசுக்கு முதன்மையாக இருக்கிறது. இந்தக் கார்ப்பரேட் நலனில் இருந்துதான் இலங்கை அரசுடன் முதன்மையாக நெருங்கிச் செல்கிறது மத்திய மோடி அரசு.
தமிழர்கள் மீதான மோடியின் வெறுப்பும், ராஜபக்சே மோடியின் இயற்கையான கூட்டாளி என்பதும் இரண்டாவதாகத் தான் பங்காற்றுகின்றன.
படிக்க :
♦ குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !
♦ ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்
சரி, இந்தத் தீர்மானத்தை மறைமுகமாக எதிர்க்கும் இந்திய அரசுக்கு மட்டும்தான் இத்தகைய நலன் இருக்கிறதா? இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கும் இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் உண்மையிலேயே ஈழத் தமிழ் மக்கள் மீதான கரிசனம் மற்றும் மனித உரிமைகள் மீதான தீராக்காதல் காரணமாகத்தான் தற்போது ஐ.நா. சபை-யில் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்களா ?
கண்டிப்பாகக் கிடையாது. அமெரிக்க ஒற்றைத் துருவ ஆதிக்கத்தைத் தகர்த்து மற்றொரு சக்தியாக உருவாகி வரும் சீனா தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளைக் கொண்டு வருவதற்குப் பொருளாதார ரீதியான பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளை தனது அணியில் சேர்த்துக் கொண்டு அந்த நாட்டு வளங்களைச் சுரண்டுகிறது.
இலங்கை அரசும் சீனாவின் பக்கம் சாய்ந்து வருகிறது. பல ஒப்பந்தங்கள் சீன நிறுவனங்களுக்கு வழங்கப் படுகின்றன. இந்நிலையில் சீனாவை நோக்கிய இலங்கையின் சரிவை தடுத்து தங்களது பக்கத்திற்கு மிரட்டிக் கொண்டு வருவதற்காகவே, ஐ.நா. சபை-யில் தற்போது கொண்டுவரப்படும் மனித உரிமை மீறல், போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றன, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் .
ஏற்கெனவே இலங்கையின் மீது பொது விசாரணை நடத்தப்பட வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குப்பையில் வீசப்பட்ட நிலையில், மீண்டும் புதியதாக தீர்மானம் எனத் துவங்கியிருப்பது முழுக்க முழுக்க இலங்கையை மீண்டும் மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சிதான்.
இன அழிப்புப் போர்களின் பிணங்கள் முதல் போர்க்கால அகதிகளாய் கடலில் மூழ்கிச் சாவும் பச்சிளங் குழந்தைகளின் பிணங்கள் வரை அவற்றின் மீதுதான் ஏகபோக மூலதனம் நடனமாடிக் கொண்டிருக்கிறது. மூலதனத்தின் வெறியாட்டத்தின் மீது வரவேண்டிய மக்களின் கோபத்தைக் குறுகிய இனவாதமாக மடைமாற்றி, ஏகபோகங்களின் மூலதனத்தை வாழச் செய்யும் வேலையைத்தான் ஊடகங்களும், பாசிச கும்பல்களும் செய்து கொண்டிருக்கின்றன.
அடிக்கொள்ளியைப் பிடுங்கி எரியாமல் தீயை அணைக்க முடியாது. மூலதனத்தின் வெறியாட்டத்தை அடக்கி ஒடுக்காமல் இத்தகைய துயர்களை ஒழிக்க முடியாது !
சரண்