இலங்கையைப் போதைக் கடத்தலின் மையமாகவும், ஊழல் தேசமாகவும் ஆட்சியாளர்கள் மாற்றியுள்ளனர்.

(இலங்கை) புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் தெரிவிப்பு :

“நாட்டின் இன்றைய அரசியல் பொருளாதார நிலைமைகள் என்றுமில்லாதவாறு மோசமடைந்துவருகின்றன. உழைக்கும் மக்கள் அனைவர் மீதும் உழைப்புச் சுரண்டலும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளும் சுமத்தப்பட்டுள்ளன. அதேவேளை அடக்குமுறைகள் அதிகரித்துச் செல்கின்றன.

உயர்வர்க்க மேட்டுக்குடியினரும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளான ஆட்சி அதிகார ஆளும் வர்க்கத்தினரும் அதியுயர் சம்பளங்கள், தரகு, ஊழல் மற்றும் குறுக்கு வழிகள் போன்றவை மூலம் சொத்து சேர்த்து வருகிறார்கள். அதிகாரத்தில் இருப்போரின் துணையுடன் நாட்டின் வளங்கள் அந்நிய, உள்நாட்டு கொம்பனிகளுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன.” என புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் அவர்கள் அக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அண்மைய அரசியல் போக்குத் தொடர்பாக வெளியிட்டுள்ள கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகத் தெளிவுபடுத்தும் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில், “உழைக்கும் மக்களின் உழைப்பு கோரமாகச் சுரண்டப்படுகிறது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மறுக்கப்படுகிறது. இதற்கு அண்மைய உதாரணமாக, அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவைக் கோரிய பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, நாளந்த சம்பளத்தில் வெறும் இருபது ரூபா மட்டுமே பிச்சை பணம் போன்று வழங்கப்பட்டமையை கூறலாம். இதில் முதலாளிமார் சம்மேளனமும் அரசாங்கமும் ஒன்றாக நின்றனர். பிரதமர் முன்னிலையில் அலரி மாளிகையில் இருபது ரூபாவிற்கு முதலாளிமார்களும் காட்டிக் கொடுப்புத் தொழிற்சங்கங்களும் கைச்சாத்திட்டனர். இதனை முழுநாடும் அனைத்து உழைக்கும் மக்களும் கண்டனர். இதனூடாக வர்க்க வேறுபாட்டின் ஆழமும் சமூகத்தின் ஏற்றத் தாழ்வான நிலையும் அப்பட்டமாக வெளிப்பட்டது. இது இலங்கையின் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் ஆளும் சொத்துடைய வர்க்கத்திற்குமிடையிலான அடிப்படையான முரண்பாட்டிற்கு ஒரு சோற்றுப் பதமாகும்.

படிக்க:
♦ இலங்கைத் தேர்தல்: இனவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!
♦ இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !

இத்தகைய அடிப்படை முரண்பாட்டின் வழியாகவே, பொருளாதார நெருக்கடிகளும் வரிச் சுமைகளும் 5,300 கோடி அமெரிக்க டொலர்கள் அந்நியக் கடனும் மக்களின் தலைகளில் சுமத்தப்பட்டுள்ளன. அனைத்து அத்தியாவசிய பொருட்களினதும் மீதான அதிகரித்த வரிகளே அவற்றின் தொடர்ச்சியான விலையுயர்வுக்குக் காரணமாகும். இதனால் வாழ்க்கைச்செலவு அதிகரித்தும் வாழ்க்கைத் தரம் கீழிறங்கியும் செல்கிறது. வறுமையும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோரின் தொகையும் அதிகரித்துச் செல்கின்றன. வேலைவாய்ப்பின்மை வளர்ந்து செல்கிறது. விவசாயமும் சிறு தொழில்களும் அழிவடைந்துள்ளன.

சேவைத்துறையினைக் காட்டி இலங்கையை மத்தியதர வாழ்க்கையுடைய நாடாக மாற்றப் போவதாக ரணில் விக்கிரமசிங்க பிரகடனம் செய்து நான்கு வருடங்களாகிவிட்டது. பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று கூவியவரும் அவரே. அதேபோன்று, ஊழலை ஒழிப்போம் என்று கூறியவர்களே பெரும் ஊழலுக்குத் துணை போனார்கள். முன்னைய பெரும் ஊழல் வாதிகளைத் தண்டிப்பதற்கு பதிலாகப் பாதுகாத்தும் கொண்டனர். இன்று இலங்கை ஊழல் தேசமாகி நிற்பதையே காண முடிகிறது.

நாளாந்தம் போதைப் பொருட்களின் கடத்தலும் விற்பனையும் அதிகரித்து செல்கிறது. போதைப் பொருள் பாவனை பாராளுமன்றத்திற்கு உள்ளும் ஜனாதிபதி மாளிகைகளுக்குள்ளும் சென்றிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது போன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்போரும் எதிர்த்தரப்பில் இருப்போரும் இருந்து வருகிறார்கள்.

ராஜபக்சே, சிரிசேனா, விக்கிரமசிங்கே

இந்நிலையிலே நாடு இவ்வாண்டு மூன்று முக்கிய தேர்தல்களைச் சந்திக்கிறது. நாட்டின் தெற்கு அரசியலில் அடுத்த ஆட்சி அதிகாரத்திற்கு யார் வருவது என்பதில் மூன்று தரப்புக்களாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் தலைமையிலான பெரு முதலாளிய பேரினவாத கட்சிகளிடையே கடுமையான போட்டி இடம்பெற்று வருகிறது. ஆனால் இவர்களில் எத்தரப்பும் நாட்டின் அடிப்படை பிரச்சனையான பொருளாதார நெருக்கடிப் பிரச்சனையில் ஏகப் பெருபான்மையான உழைக்கும் மக்களுக்குச் சார்பான கொள்கை நிலைப்பாடு உடையவர்களல்லர். அதேபோன்று நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு நியாயமான தீர்வைக் கொண்டு வருவதற்குச் சாதகமானவர்களும் அல்லர். இவர்கள் அனைவருமே முப்பது வருட கொடிய போரினை நடத்தியவர்கள் என்பது மறக்கப்படமுடியாததாகும்.

அதேபோன்று கடந்த நாற்பது வருட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நாசகாரம் கொண்ட தாராளமயம் தனியார்மயம் பூகோளமயமாதல் என்பவற்றையும் அதன் தொடர்ச்சியான நவதாராள பொருளாதாரத்தையும் எக் கேள்வி நியாயங்களுக்கு அப்பால் நடைமுறைப்படுத்தி அந்நிய ஏகாதிபத்திய – பிராந்திய மேலாதிக்க சக்திகளுக்கு ஆதரவும் அரவணைப்பும் கொடுத்தவர்களும் இதே ஆட்சி அதிகார வெறிபிடித்து நிற்பவர்களேயாவர். அதே போன்று தேசிய இனப்பிரச்சினையை போர் வரை வளர்த்துச் சென்ற இனவாதத் தலைமைகளும் இத்தகைய தரப்புக்களேயாவர். அவர்களில் எத்தரப்பு அதிகாரத்திற்கு வந்தாலும் மேலே சுட்டிக் காட்டிய எந்தவொரு பிரச்சினைகளுக்கும் மக்கள் சார்பான தீர்வுகள் ஏற்படப் போவதில்லை.

அதேபோன்று வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் தமிழ் முஸ்லீம் மலையக மக்களின் வாக்குகளைப் பெற்று தத்தமது ஆதிக்க அரசியலைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளக் குறுந்தேசியவாத நிலைப்பாட்டையும் இனமத அடையாள அரசியலையும் முன்தள்ளி மக்களிடையே வாக்கு வேட்டை நடாத்த தயாராகி வருகிறார்கள். வழிவழி வந்த மேட்டுக்குடி உயர்வர்க்க உயர்சாதியத் தலைமையை நிலை நிறுத்துவதில் ஆதிக்க அரசியல் தலைமைகள் மிக கவனமாக இருந்து வருகின்றன. தங்களுக்குள் மாற்றம் வேண்டிப் போட்டி போடுகிறார்களே தவிர உழைக்கும் மக்களின் பிரதிநிதிகள் எவரும் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதுடன், தமது சாதிய சமூகச் சிந்தனை வழியாக மேட்டுக்குடி ஆதிக்க அரசியல் தலைமை தொடர்வதையே குறுந்தேசியவாத தமிழ் தலைமைகள் தமது உள்ளார்ந்த நிலைப்பாடாகக் கொண்டுள்ளன.

இச்சூழலில் உழைக்கும் மக்கள் அனைவரும் சரியானதும் தூரநோக்கிலுமான அரசியல் சிந்தனையை அறிவுபூர்வமாகவும் நடைமுறை வாயிலாகவும் விளங்கித் தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் தெளிவான நிலைப்பாட்டிற்கு வருவது அவசியமாகும் என்பதை எமது கட்சி வலியுறுத்துகின்றது.

ஏற்கனவே இருந்துவருகின்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்தை  எதிர்த்துவந்த மக்களை, அதைக் கைவிடுவதாகக் கூறி ஏமாற்றியவாறு, அச்சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எனும் முன்னிலும் கொடுமையான அடக்குமுறைச் சட்டத்தை அரசு கொண்டுவர முனைகிறது. அதனை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஆரம்பம் முதலே வலுவாக எதிர்த்து வந்ததுபோன்று எமது கட்சி மிக வன்மையாகக் கண்டித்து எதிர்க்கின்றது.

படிக்க:
♦ வீழ்ந்த விமானம் – விடாத உறுதி ! உண்மை மனிதனின் கதை 2
♦ யார் இந்த அருந்ததிராய் ?

தமது பாரம்பரிய நிலங்கள், வீடுகள், தொழிலிடங்களை மீட்பதற்காக இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போராடிவரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்தையும் அதே போன்று காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு தொடர்ச்சியாக நடந்துவரும் மக்கள் போராட்டங்களையும் எமது கட்சி ஆதரித்து வந்திருக்கிறது. அதேபோன்று அண்மையில் மன்னார் சிலாவத்துறையில் தமது நிலங்களை படையினரிடமிருந்து மீட்பதற்காக ஆரம்பித்திருக்கின்ற மக்கள் போராட்டங்களையும் நாம் ஆதரித்து நிற்கின்றோம்.

புத்தளத்தின் அருவக்காட்டில் பாரிய அளவில் குப்பையை கொண்டுவந்து கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து தமது சுற்றுச்சூழலைக் காப்பதற்காக நூறு நாட்களுக்கு மேல் போராடிவரும் புத்தளம் மக்களின் போராட்டத்தை எமது கட்சி ஆதரித்தும் அதில் பங்குகொண்டும் வந்திருக்கிறது. தொடர்ந்தும் அப்போராட்டத்துடனும் புத்தளம் மக்களோடும் கட்சி தன்னை இணைத்து நிற்கிறது.

புத்தளத்தைக் காப்போம் – இலங்கையில் தொடரும் போராட்டங்கள் !

புதியதோர் கொள்கை வகுத்து அதனை உழைப்போரிடையே கொண்டு செல்ல வேண்டும். ஆண்ட பரம்பரையினரினதும் ஆதிக்க அரசியல் தலைமைகளினதும் பிற்போக்குத்தனங்களையும் அந்நிய சக்திகளை அடிமைத்தனமாக நம்பி மக்களை ஏமாற்றுவதையும் அம்பலபடுத்துவது இன்றைய தேவையாகும். உழைக்கும் மக்களுக்கான அதிகாரத்தை நோக்கிய அரசியல் பயணத்தில் வெகுஜன மார்க்கத்தில் மக்களை அணிதிரட்டுதல் வேண்டும். அத்தகைய அணிதிரள்வு எத்தகைய அந்நிய சக்திகளுக்கும் புலம்பெயர்ந்த, தமிழ்க் குறுந்தேசியவாத மேட்டுக்குடித் தலைமைகளுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் விலை போகாத வெகுஜனப் போராட்டங்களை ஐக்கியப்பட்ட கூட்டுத்தலைமையின் ஊடே முன்னெடுக்க வேண்டும்.அதற்கான பரந்துபட்டதும் உறுதியானதுமான ஐக்கிய முன்னணி கட்டப்பட வேண்டும். அத்தகைய வெகுஜனப் போராட்ட மார்க்கத்தின் ஒரு பகுதியாக மட்டுமே தேர்தல்களம் அமைய வேண்டும். மாறாக, தேர்தல் வெற்றிக்காக மக்களைத் தவறான பாதையில் இட்டுச் செல்லக் கூடிய சந்தர்ப்பவாதக் கொள்கை கொண்டிராது, உழைக்கும் மக்களையும் ஒன்றிணைத்த மாற்று அரசியல் மார்க்கத்தில் பயணிக்க வைப்பதற்கு, நேர்மையான உழைக்கும் மக்களுக்கான சக்திகள் ஒன்றிணைய வேண்டும். அதற்கான அர்ப்பணிப்புடன் செயலாற்ற எமது கட்சி முன்னிற்கிறது.

தனது கொள்கை வேலைத்திட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கும் அதேவேளை, ஏனைய இடதுசாரி, முற்போக்கு, சனநாயக அமைப்புக்களுடன் ஐக்கியப்பட்டு முன்செல்வதை எமது கட்சி வலியுறுத்தி நிற்கின்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் : புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க