உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 2

விமானி அலெக்ஸேய் மெரேஸ்யெவ் இரட்டை “இடுக்கியில்” அகப்பட்டுக் கொண்டான். விமானச் சண்டையில் நேரக்கூடிய மிக மோசமான கேடு இது. தன்னிடம் இருந்த குண்டுகளை எல்லாம் அவன் சுட்டுத் தீர்த்திருந்தான். உண்மையாகவே ஆயுதமற்றவனாகவே இருந்தான். அத்தகைய நிலையில் நான்கு ஜெர்மன் விமானங்கள் அவனுடைய விமானத்தை நெருக்கமாகச் சூழ்ந்து கொண்டு, திரும்பவோ, செல்வழியை மாற்றவோ அவனுக்கு இடந்தராமல் தங்கள் விமான நிலையத்துக்கு இட்டுச் செல்லத் தொடங்கின….

இந்தக் கதி நேர்ந்த விதம் இதுவே; பகை விமான நிலையத்தின் மேல் திடீர் தாக்கு நடத்தப் புறப்பட்டன, “இல்” விமானங்கள். லெப்டினன்ட் மெரேஸ்யெவின் தலைமையில் சண்டை விமானங்கள் அணி அவற்றிற்குத் துணையாகப் போயிற்று. துணிகரத் திடீர்த்தாக்கு வெற்றிகரமாக நடந்தேறியது. “பறக்கும் டாங்கிகள்” என்று காலாட் படையினரால் அழைக்கப்பட்ட தாக்கு விமானங்கள் பைன் மர உச்சிகள் மீதாக அனேகமாக ஊர்ந்து சென்று, பகைவர் அறியாதபடி நேரே விமானத் திடலை அடைந்தன. அங்கு வரிசையாக நின்றன “யூன்கெர்ஸ்” ரகத்தைச் சேர்ந்த பெரிய துருப்பு விமானங்கள். ரம்ப பற்கள் போன்ற மங்கிய நீல மரவரிசைகளின் பின்னியிலிருந்து திடீரென முன்னே பாய்ந்து, துருப்பு விமானங்களின் பேருடல்களுக்கு மேலாகப் பறந்து, பீரங்கிக் குண்டுகளையும் வால்வைத்த வெடிகுண்டுகளையும் அவற்றின் மீது பொழிந்தன சோவியத் தாக்கு விமானங்கள். தனது அணியின் நான்கு போர் விமானங்களுடன் தாக்கிடத்தின் மேலிருந்த வானவெளியைக் காவல் செய்து கொண்டிருந்த மெரேஸ்யெவ் கீழே நோக்கினான். ஆட்களின் கரிய உருவங்கள் விமான நிலையத்தில் ஒடிச் சாடியதும், திமிசு போடப்பட்ட வெண்பனி மீது துருப்பு விமானங்கள் பெருங்கனத்துடன் நாற்புறமும் ஊர்ந்து செல்லத் தொடங்கியதும், தாக்கு விமானங்கள் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் பாய்ந்து குண்டுமாரி பொழிந்ததும், சுய நிதானத்துக்கு வந்த “யூன்கெர்ஸ்” விமானிகள் குண்டு தாக்குக்கு இடையே தங்கள் விமானங்களை ஓட்டப் பாதைக்குச் செலுத்தி வானில் கிளம்ப ஆரம்பித்ததும் எல்லாம் அவனுக்கு நன்றாகத் தென்பட்டன.

இப்போது தான் அலெக்ஸேய் தவறு செய்தான். தாக்கு இடத்துக்கு மேலே வானத்தைக் கண்காணிப்பதற்குப் பதிலாக அவன், விமானிகள் சொல்வது போல, அனாயாசமாகக் கிட்டிய இரையால் கவர்ந்து இழுக்கப்பட்டு விட்டான். அப்போது தான் தரையிலிருந்து கிளம்பிய, மெதுவான இயக்கம் கொண்ட கனத்த துருப்பு விமானத்தின் மீது கல்லெறி போலப் பாய்ந்து, நெளிவலிவு அலுமினியத்தாலான அதன் பல நிற நாற்கோண உடல் மீது சில நீள் வரிசைக் குண்டுகளை மனநிறைவுடன் சுட்டான். தனது இலக்குத் தப்பவில்லை என்ற நம்பிக்கை காரணமாக, பகை விமானம் தரையில் வீழ்ந்து புகுந்ததை அவன் பார்க்கக் கூட இல்லை. விமான நிலையத்தின் மறுபுறத்தில் இன்னொரு “யூன்கெர்ஸ்” விமானம் உயரே கிளம்பியது. அலெக்ஸேய் அதைத் துரத்திச் சென்றான். தாக்கினான், ஆனால் குறி தவறி விட்டது. அவனுடைய குண்டு வரிசைகள், மெதுவாக எழும்பிக் கொண்டிருந்த பகை விமானத்தின் மேலாக வழுகிச் சென்றன. அவன் விமானத்தைச் சட்டெனத் திருப்பி, மறுபடி தாக்கினான். மீண்டும் இலக்கு பிசகி விட்டது. பின்னொரு முறை தன் இரையை எட்டிப் பிடித்து, அதன் சுருட்டு வடிவான அகன்ற உடலில் விமான பீரங்கிகள் அனைத்திலுமிருந்த குண்டுகளை விமானத்தைப் பல நீண்ட வரிசைகளாகச் சுட்டுச் செலுத்தி காட்டுக்கு மேலே எங்கோ ஒரு பக்கத்தில் அதை வீழ்த்தினான். “யூன்கெர்ஸ்” விமானத்தைத் தரையில் வீழ்த்திய பின், எல்லையின்றிப் பரந்து அலை வீசிய பசிய கடல் போன்ற காட்டில் கரிய புகைப் படலம் எழுந்த இடத்துக்கு மேலே இரண்டு வெற்றி வட்டங்கள் இட்டு விட்டு, ஜெர்மன் விமான நிலையத்தை நோக்கித் தன் விமானத்தைத் திருப்ப முற்பட்டான் அலெக்ஸேய்.

ஆனால், அங்கே பறந்து செல்ல அவனுக்கு வாய்க்கவில்லை. தனது அணியின் மூன்று சண்டை விமானங்கள் ஒன்பது “மெஸ்ஸெர்” ரக விமானங்களுடன் போர் செய்து கொண்டிருக்கக் கண்டான். ஜெர்மன் விமான நிலையத் தலைமைக் காரியாலயத்தினர் தாக்கு விமானங்களை எதிர்க்கும் பொருட்டு இவற்றை அழைத்திருக்க வேண்டும். எண்ணிக்கையில் தங்களைப் போல் மூன்று மடங்கான இந்த ஜெர்மன் விமானங்கள் மீது துணிவுடன் பாய்ந்து, தாக்கு விமானங்களிலிருந்து அவற்றின் கவனத்தைத் திருப்ப சோவியத் சண்டை விமானிகள் முயன்றார்கள். காயமடைந்தது போலப் பாசாங்கு செய்து வேட்டைக்காரர்களைத் தன் குஞ்சுகளிடமிருந்து அப்பால் ஈர்த்துச் செல்லும் பெட்டைக் காடை போல், அவர்கள் சண்டையிட்டவாறே பகை விமானங்களை ஒரு புறமாக மேலும் மேலும் தொலைவில் இழுத்துச் சென்றார்கள்.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! ஆளுநர் ஷாநவாஸ், தியாகு, பாலன் உரை | ஆடியோ
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள் | ஆடியோ

எளிதில் கிடைத்த இரையினால் தான் மயங்கிவிட்டது குறித்த அலெக்ஸேய் நாணமடைந்தான். தலைகாப்புக்கு இடியில் கன்னங்கள் சிவந்து காந்துவதை உணரும் அளவுக்கு அவனுக்கு வெட்கம் உண்டாயிற்று. ஒரு பகை விமானத்தை இலக்கு கொண்டு பற்களை நெரித்தவாறு சண்டையில் பாய்ந்து கலந்து கொண்டான். அவனது தாக்குக்கு இலக்கான “மெஸ்ஸெர்” விமானம் மற்றவற்றிலிருந்து சற்று தனித்து ஒதுங்கியிருந்தது. அதுவும் தனக்கு உரிய இரையைத் தேடிக் கோண்டிருந்தது போலும். தனது விமானத்தை முழு விரைவுடன் செலுத்திப் பகைவன் மீது பக்கவாட்டிலிருந்து பாய்ந்தான் அலெக்ஸெய். ஜெர்மனியனை அவன் முற்றிலும் முறைப்படியே தாக்கினான். பகை விமானத்தின் சாம்பல் நிற உடல் இலக்குக் காட்டியின் துவாரத்தில் முழுதும் தென்பட்ட போதுதான் அவன் பீரங்கி விசையை அழுத்தினான். எனினும் பகை விமானம் நிம்மதியாக அருகே வழுகிச் சென்றது. குறி தவறியிருக்க முடியாது. இலக்கு அருகாமையில் இருந்தது, அசாதாரணத் துலக்கத்துடன் தென்பட்டது. குண்டுகள் தீர்ந்து விட்டன என்பதை அலெக்ஸேய் ஊகித்துக் கொண்டான். முதுகு குப்பென்று வியர்ப்பதை உணர்ந்தான். சரிபார்ப்பதற்காக விசையை மீண்டும் அழுத்தினான். விமானப் பீரங்கியை இயக்கும் போது விமானி தன் உடல் முழுவதாலும் உணரும் அதிரொலி அவனுக்குப் புலப்பட வில்லை. குண்டுப் பெட்டிகள் வெற்றாயிருந்தன. பகைத் துருப்பு விமானங்களை விரட்டிச் செல்கையில் அவன் தன்னிடமிருந்த குண்டுகளை எல்லாம் சுட்டுத் தீர்த்துவிட்டான்.

குண்டடிபட்ட விமான எஞ்சினின் நடுப்பாகத்தை விமானி தன் உடல், உள்ளம், அனைத்தாலும் உணர்ந்தான். இது பழுதுற்ற எஞ்சினின் மரணத் துடிப்பு அல்ல போலவும் தனது சொந்த உடலைப் பீடித்த நடுங்குக் காய்ச்சல் போலவும் அவனுக்குத் தோன்றியது.

ஆனால், பகைவனுக்குத்தான் இது தெரியாதே! ஒப்பு வலிமையைக் குறைந்த பட்சம் எண்ணிக்கையிலாவது அதிகப்படுத்தும் பொருட்டு, சண்டை அமளியில் ஆயுதமின்றியே கலந்து கொள்ள அலெக்ஸேய் தீர்மானித்தான். அவன் எண்ணியது தவறு. அவன் வீணாகத் தாக்கிய போர் விமானத்தில் இருந்தவன் அனுபவம் முதிர்ந்த, கூர்ந்த கவனிப்பு உள்ள விமானி – சோவியத் விமானம் ஆயுதமற்றது எனக் கண்டுகொண்ட அந்த ஜெர்மானியன் ஏனைய விமானங்களின் விமானிகளுக்கு கட்டளையிட்டான். நான்கு ஜெர்மன் விமானங்கள். சண்டையிலிருந்து விலகி இருமருங்கிலும் மேலேயும் கீழேயுமாக அவனைச் சூழ்ந்து நெருக்கித் தாம் விரும்பிய வழியில் செல்லுமாறு நீல வானத்தில் தெளிவாகத் தென்பட்ட குண்டு வரிசைகளால் அவனை நிர்பந்தித்தவாறு இரட்டை “இடுக்கியில்” பற்றிக் கொண்டன.

இங்கே, ஸ்தாராய ருஸ்ஸா பிரதேங்களில் “ரிஹத்கோபென்” என்னும் பெயர் பெற்ற ஜெர்மனி விமான டிவிஷன் மேற்கே இருந்து வந்திருப்பதாகச் சில நாட்களுக்கு முன்பு அலெக்ஸேய் கேள்விப் பட்டிருந்தான். பாசிஸ்ட் சாம்ராஜ்யத்தின் சிறந்த விமானிகள் அதில் பணியாற்றினார்கள். கோயெரிங்கின் அரவணைப்பு அதற்குக் கிடைத்திருந்தது. இந்த விமானி ஓநாய்களின் நகங்களில் சிக்கிவிட்டோம் என்பதை அலெக்ஸேய் புரிந்து கொண்டான். அவனைத் தங்கள் விமான நிலையத்துக்கு இட்டுச் சென்று, இறங்கும் படி கட்டாயப்படுத்தி, உயிரோடு சிறைபிடிக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்பது தெளிவாயிருந்தது. அந்தக் காலத்தில் இம்மாதிரிச் சந்தர்ப்பங்கள் நேர்ந்தன. தன் நண்பன், “சோவியத் வீரனின் வீரன்” பட்டம் பெற்ற அந்திரெய் தெக்தியாரென்கோவின் தலைமையில் சண்டை விமான அணி ஒன்று ஜெர்மன் வேவு விமானத்தை இட்டு வந்து தன் விமான நிலையத்தில் இறங்கச் செய்ததை அலெக்ஸேய் கண்கூடாகப் பார்த்திருந்தான்.

சிறைப்பட்ட ஜெர்மனியனின் நீண்ட பசிய வெளிர் நிற முகமும் அவனது தள்ளாட்ட நடையும் அலெக்ஸேயின் நினைவில் கணப்போது தோற்றம் அளித்தன. “சிறைப்படுவதா? ஒருக்காலும் இல்லை! அது மட்டும் நடவாது!” என்று அவன் தீர்மானித்தான். பற்களை இறுகக் கெட்டியடித்துக் கொண்டு விரைவாக முடிந்தவரை விமானத்தின் வேகத்தை அதிகப்படுத்தினான் மெரேஸ்யேவ். பின்பு விமானத்தை செங்குத்து நிலைக்குக் கொண்டு வந்து, தன்னைக் கீழ்ப்புறம் அழுத்தி வைத்திருந்த மேற்பக்கத்துக்கு ஜெர்மன் விமானத்துக்கு அடியே புக முயன்றான். காவல் விமானங்களிடமிருந்து தப்பி வெளியேற அவனுக்கு வாய்த்து விட்டது. ஆனால், ஜெர்மனியன் சரியான நேரத்தில் பீரங்கி விசையை அழுத்திவிட்டான். அலெக்ஸேயின் விமான எஞ்சின் பழுதடைந்து அடிக்கடி வெட்டி வெட்டி இயங்கத் தொடங்கியது. விமானம் முழுவதும் மரண சுரத்தில் நடுநடுங்கிற்று.

சேதப்படுத்திவிட்டார்கள்! விமானத்தைத் திருப்பி மேகத்தின் வெண்மை மூட்டத்துக்குள் புகுந்து தன்னை, பின் தொடர்ந்தவர்களைத் தடம் தவறச் செய்வதில் அலெக்ஸேய் வெற்றி பெற்றான். ஆனால், அப்புறம் என்ன செய்வது? குண்டடிபட்ட விமான எஞ்சினின் நடுப்பாகத்தை விமானி தன் உடல், உள்ளம், அனைத்தாலும் உணர்ந்தான். இது பழுதுற்ற எஞ்சினின் மரணத் துடிப்பு அல்ல போலவும் தனது சொந்த உடலைப் பீடித்த நடுங்குக் காய்ச்சல் போலவும் அவனுக்குத் தோன்றியது.

எஞ்சின் எந்தப் பகுதியில் தாக்குண்டிருக்கிறது? இன்னும் எவ்வளவு நேரம் காற்றில் நிலைத்திருக்க விமானத்தால் முடியும்? பெட்ரோல் தொட்டிகள் வெடித்துவிடுமோ? இவற்றை எல்லாம் அலெக்ஸேய் எண்ணவில்லை, உணர்ந்தான் என்பதே சரியாயிருக்கும். தான் வெடிமருந்துப் பீப்பாய் மீது அமர்ந்திருப்பதாம் வெடித்திரி வழியாக அதை நோக்கித் தீ நாக்கு விரைந்து வந்து கொண்டிருப்பதாகவும் அவனுக்குத் தோன்றியது. விமானத்தை எதிர்ப்புறமாக, முன்னணி வரிசையை நோக்கி, தன்னவர்களின் பக்கம் திருப்பினான் அலெக்ஸேய். ஏதேனும் நேர்ந்துவிட்டால் சொந்த மனிதர்களின் கரங்களால் அடக்கம் செய்யவாவது படலாமே என்பது அவன் நோக்கம்.

முடிவுக்கட்டம் விரைவிலேயே தொடங்கிவிட்டது. எஞ்சின் சட்டென இயக்கத்தை நிறுத்தி ஓசை அடங்கிப் போயிற்று. செங்குத்தான மலையிலிருந்து சரிவதுபோல விமானம் விரைவாகக் கீழ் நோக்கிப் பாய்ந்தது. விமானத்துக்கு அடியில் பசிய சாம்பல் அலைகளாகப் பெருகியது கடல் போன்று எல்லை காண முடியாத காடு… அருகில் இருந்த மரங்கள் நீண்ட பட்டைகளாக ஒன்று கலந்து விமானத்தின் இறக்கைகளுக்கு அடியில் பாய்ந்தோடுகையில், “என்ன ஆனாலும் சிறைப்பட வில்லையே!” என்று எண்ணினான் விமானி. காடு, வனவிலங்கு போன்று தன்னை நோக்கித் துள்ளிப்பாய்ந்த போது இயல்பூக்கத்தால் தூண்டப்பட்டு எரிவூட்டி விசையைச் சட்டென மூடினான். மடாரொலி கேட்டது. அவ்வளவுதான், கணப்போதில் எல்லாம் மறைந்துவிட்டன – விமானத்தோடு அவன் கொழு கொழுப்பான கரு நீரில் மூழ்கிவிட்டது போல.

விழுகையில் விமானம் பைன் மர முடிகள் மேல் மோதியது. இது தாக்கு வேகத்தை மட்டப்படுத்திற்று. சில மரங்களை முறித்துவிட்டு விமானம் பல பகுதிகளாகச் சிதறியது. ஆனால், அதற்கு ஒரு நொடி முன்னதாக அலெக்ஸேய் தனது இருக்கையிலிருந்து பிய்த்துக் காற்றில் எறியப்பட்டான். கிளைகள் அகன்ற நூற்றாண்டுப் பிர் மரத்தின் மேல் விழுந்து அதன் கிளைகள் மீதாகச் சருக்கி அதன் அடியில் காற்றினால் திரட்டிக் குவிக்கப்பட்டிருந்த வெண்பனிக் குவியலின் ஆழத்தில் புதைந்தான். இது அவன் உயிரைக் காப்பாற்றியது.

எவ்வளவு நேரம் உணர்வற்ற நிலையில் அசையாது கிடந்தான் என்பதை அலெக்ஸேயால் நினைவுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இனந்தெரியாத மனித நிழல்களும் கட்டிடங்களின் ஒப்புயரக் கோடுகளும், நம்ப முடியாத வகை இயந்திரங்களும் இடையறாது பளிச்சிட்டவாறு அவன் முன்னே விரைந்தன. அவற்றின் சூறாவளி இயக்கம் காரணமாக அவன் உடல் முழுவதிலும் தெளிவற்ற சுறண்டல் வலி உண்டாயிற்று. பின்பு இந்தக் குழப்பத்திலிருந்து பெரிய, வெம்மையுள்ள, நிச்சயமற்ற வடிவம் கொண்ட ஏதோ ஒன்று வெளிப்பட்டு சூடான நாற்ற மூச்சை அவன் மேல் விட்டது. அவன் அப்பால் விலக முயன்றான். ஆனால், அவனுடைய உடல் வெண்பனியில் ஒட்டிக்கொண்டு விட்டதுபோல் இருந்தது. தெளிவாக விளங்காத அச்சத்தால் உலப்புற்று அவன் வெடுக்கென்று துள்ளி எழுந்தான். உடனேயே தன் நுரையீரலில் பாயும் குளிர் காற்றையும் கன்னங்களில் வெண்பனியின் குளிரையும் உணர்ந்தான். இப்போது அவன் மேனி முழுதிலும் அல்ல, கால்களில் மட்டுமே கடுமையான வலி ஏற்பட்டது.

“உயிரோடு இருக்கிறோம்!” என்ற எண்ணம் அவன் உணர்வில் பளிச்சிட்டது. எழுந்து நிற்பதற்காக அங்கங்களை அசைத்தவன், யாருடைய பாதங்களுக்கோ அடியில் வெண்பனி பாளம் நொறுங்குவதையும் இரைச்சலும் கம்மலும் கொண்ட மூச்சையும் கேட்டான். “ஜெர்மனியர்கள்!” என்று உடனே அனுமானித்தான். கண்களைத் திறக்கவும் தற்காத்துக் கொண்டு துள்ளி எழவும் உண்டான விருப்பத்தை அடக்கிக் கொண்டான்.” சிறைப்பட்டுவிட்டேன், எவ்வளவோ முயன்றுங்கூடப் போர்க் கைதி ஆகிவிட்டேன்! “…இனி என்ன செய்வது?” என்று எண்ணமிட்டான் !

கண்களைத் திறக்கவும் தற்காத்துக் கொண்டு துள்ளி எழவும் உண்டான விருப்பத்தை அடக்கிக் கொண்டான்.” சிறைப்பட்டுவிட்டேன், எவ்வளவோ முயன்றுங்கூடப் போர்க் கைதி ஆகிவிட்டேன்! “…இனி என்ன செய்வது?” என்று எண்ணமிட்டான் !

எல்லாத் தொழிலிலும் வல்லவனான தனது மெக்கானிக் யூரா, கைத்துப்பாக்கி உறையின் அறுந்த வாரைத் தைப்பதாக ஏற்றுக்கொண்டவன் தைக்காமலேயே இருந்து விட்டதும், எனவே பறக்கும் போது ரிவால்வாரை விமானி தனது உடையின் தொடைப்பையில் வைத்துக்கொள்ள நேர்ந்ததும் அவனது நினைவுக்கு வந்தன. இப்போது அதை எடுப்பதற்கு விலாப்புறம் புரண்டு படுக்க வேண்டியிருந்தது. பகைவன் கணிக்காதபடி அவ்வாறு செய்வதோ இயலாதிருந்தது. அலெக்ஸேய் முகங்குப் புறக் கிடந்தான். ரிவால்வரின் கூரிய பட்டைகள் தொடையில் அழுத்துவதை அவன் உணர்ந்தான். ஆயினும் அசையாது கிடந்தான். பகைவன் தன்னை இறந்தவன் என ஒருவேளை நினைத்து அப்பால் போய்விடுவான் என்று நினைத்தான்.

ஜெர்மனியன் பக்கத்தில் தொப்புத்தொப்பென அடிவைத்து நடந்தான், விந்தையான முறையில் பெருமூச்சுவிட்டான், மறுபடி மெரேஸ்யெவின் பக்கத்தில் வந்தான், வெண்பனிப் புறணியை நொறுக்கினான், குனிந்தான். ஜெர்மானியன் தனியாள் என்பதை மெரேஸ்யெவ் இப்போது கண்டுகொண்டான். தான் தப்புவதற்கு வாய்ப்பு எனக் கருதினான், திடீரெனத் துள்ளி எழுந்து அவன் குரல்வளையை இறுக்கி, துப்பாக்கி சுட இடம் கொடுக்காமல் சமப்போராட்டம் நடத்தினால்…… ஆனால், இதை நிதானமாகக் கணக்கிட்டுத் துல்லியமாகச் செய்து முடிக்க வேண்டியிருந்தது.

தனது கிடையை மாற்றிக் கொள்ளாமலேயே மெதுவாக, மிக மெதுவாக அலெக்ஸேய் ஒரு கண்ணைச் சிறிது திறந்தவன், தன் முன்னே ஜெர்மனியனுக்குப் பதிலாகப் பழுப்பு நிறமான சடை அடர்ந்த வேறு ஒன்றைத் தாழ்த்திய இமை மயிர்களின் ஊடாகக் கண்டான். விழியை இன்னும் கொஞ்சம் அகலத்திறந்தவன், அக்கணமே அவற்றை இறுக மூடிக் கொண்டுவிட்டான், அவனுக்கு எதிரே பின் கால்களில் குந்தியிருந்தது பெரிய மெலிந்த, பறட்டைச் சடைக்கரடி.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:

பாகம் – 1 : உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க