நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 12

டுத்த நாளே அவனுக்குக் கடுமையான ஜுரம். பீட்டர்ஸ்பர்க் நகரப் பருவநிலையின் தாராள உதவியின் பயனாக நோய் சாதாரணமாய் எதிர்பார்க்கக் கூடியதைக் காட்டிலும் வெகு விரைவாக முற்றியது. ஆகவே மருத்துவர் வந்துசேர்ந்ததும் அவனுடைய நாடியைப் பிடித்துப் பார்த்து விட்டு, வேறு ஒன்றும் செய்வதற்கின்றி, எதோ ஒத்தடம் கொடுக்கும்படி மட்டும் யோசனை சொன்னார். அதுவும் நோயாளியை மருத்துவத்தின் நன்மை தரும் உதவியில்லாமல் விட்டுவிடக் கூடாதே என்ற ஒரே காரணத்தினால்; அதே கையோடு ஒன்றரை நாள்களில் நோயாளியின் பாடெல்லாம் நிச்சயமாக முடிந்து விடும் என்றும் கருத்துத் தெரிவித்தார். பின்பு வீட்டுச் சொந்தக்காரியைப் பார்த்து, “நீங்கள், அம்மா, நேரத்தை வீணாக்காதீர்கள், இப்போதே இவனுக்காகப் பைன் மரச் சவப் பெட்டிக்குச் சொல்லிவிடுங்கள், ஏனென்றால் ஓக் மரப்பெட்டி இவனுக்குக் கட்டாது, இல்லையா?” என்றார்.

தன் வாழ்வைத் தீர்த்துக்கட்டும் இந்தச் சொற்கள் அக்காக்கியின் காதில் பட்டனவா? பட்டனவென்றால் அவன் உள்ளத்தில் அவற்றால் கிளர்ச்சி உண்டாயிற்றா? தனது அவல வாழ்வைக் குறித்து அவன் வருந்தினானா? இவ்விஷயத்தைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை, ஏனெனில் அவன் ஜன்னிக் காய்ச்சலில் தவித்துக் கொண்டிருந்தான். ஒன்றைவிட ஒன்று விசித்திரமான காட்சிகள் இடைவிடாமல் அவன் மனக்கண்முன் தோன்றிய வண்ணமாயிருந்தன. ஒரு சமயம் பெத்ரோவிச்சைக் கண்டு, திருடர்களை அகப்படுத்தும் கண்ணிகள் வைத்த மேல்கோட்டு தைக்கக் கொடுத்தான்; திருடர்களோ தனது கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருப்பது போல அவனுக்குப் பிரமை உண்டாயிற்று.

எனவே அவர்களை அங்கிருந்து விரட்டும் படி வீட்டுச் சொந்தக்காரியிடம் நொடிக் கொரு தரம் கேட்டுக் கொண்டிருந்தான்; ஒரு முறை, ஒரு திருடனைப் போர்வைக்குள்ளிருந்து கூட விரட்டும்படிச் சொன்னான்; மற்றொரு முறை, தன்னிடம் புதிய மேல்கோட்டு இருக்கையில் பழைய ‘கப்போத்’ சுவரில் என் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று வினவினான்; பின்னொரு சமயம் தான் முக்கிய நபருக்கு முன் நின்றவாறு, அவர் தனக்குச் சரியான படி கொடுத்த கண்டனத்தைக் கேட்பது போல மருள் கொண்டு, “தவறுக்கு வருந்துகிறேன், பெரிய துரை அவர்களே!” என்றான்; அப்புறம் முடிவாக அவன் ஆபாச வசவுகளைப் பொழியத் தொடங்கி, மிக மிகப் பயங்கரமான சொற்களை உரக்கக் கத்தவே, அவன் அம்மாதிரி வார்த்தைகள் பேசி இதற்கு முன் கேட்டிராத வீட்டுச் சொந்தக்காரி, சிலுவைக்குறி இட்ட வண்ணமாயிருந்தாள் – அதுவும் இந்த வசவுச் சொற்கள் “பெரிய துரை அவர்களே” என்ற வார்த்தைகளை உடனடியாகத் தொடர்ந்து வந்தபடியால். பின்பு அவன் தலைகால் புரியாதவாறு எதேதோ அர்த்தமற்ற சொற்களைப் பிதற்றிக் கொண்டே போனான்; ஒன்றே ஒன்று தான் தெளிவாகப் புலப்பட்டது: அவனது தொடர்பற்ற வார்த்தைகளும் கருத்துகளும் மேல்கோட்டைச் சுற்றியே வட்டமிட்டன என்பதுதான் அது. கடைசியில் அக்காக்கிய் காலமானான்.

படிக்க:
மார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் !
ரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் !

அவனுடைய அறையோ, உடைமைகளோ முத்திரையிடப்படவில்லை, ஏனெனில், முதலாவதாக அவனுக்கு வாரிசுகள் யாருமில்லை, இரண்டாவதாக அவன் விட்டுச் சென்றது மிக மிக அற்பமான உடைமையே; இறகு பேனாக் கட்டு ஒன்று, அலுவலக வெள்ளைத்தாள் ஒரு கட்டு, காலுறைகள் மூன்று ஜோடி, காற்சட்டையிலிருந்து பிய்ந்து வந்துவிட்ட சில பொத்தான்கள், வாசகர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த ‘கப்போத்’ ஆகியவையே அவனுடைய சொத்து. இந்தச் சொத்துக்கெல்லாம் யார் வாரிசானார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்: இந்தக் கதையாசிரியனுக்கு அவ்விஷயத்தைத் தெரிந்துகொள்வதில் அக்கறையும் ஏற்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

அக்காக்கியின் சடலம் இடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பீட்டர்ஸ்பர்க் நகரம், அக்காக்கிய் இல்லாமலே முன்போன்றே நிலவிவந்தது – அப்படி ஒருவன் அங்கு வாழவே இல்லை என்பது போல. போன சுவடு தெரியாமல் மறைந்து போயிற்று ஒரு மனித உயிர், யாராலும் பாதுகாக்கப்படாத, எவருக்கும் அருமையில்லாத, ஒருவரது அக்கறைக்கும் பாத்திரமாகாத உயிர்; சாதாரண ஈயையும் உருப்பெருக்கிக்கு அடியில் இட்டு ஆராய்ச்சி செய்யும் பொருட்டுக் குண்டூசியால் குத்திவைத்துக் கொள்ளும் இயற்கை விஞ்ஞானியின் கவனத்தைக் கூடக் கவராத உயிர்; அலுவலகச் சக ஊழியர்களின் கேலிகளையெல்லாம் பணிவுடன் ஏற்றுக்கொண்ட மனித உயிர்; அசாதாரணச் செயல் எதுவும் ஆற்றாமலே சவக்குழியில் அடக்கமாகி விட்ட போதிலும், தனது அவல வாழ்க்கையில் கணப் பொழுது களி பரப்பிய மேல்கோட்டின் வடிவில் அருட்சுடரின் ஒளிர்வை வாழ்வின் இறுதிக்கு முன்னரேனும் காணப் பெற்ற மனித உயிர்; பின்பு சகித்தற்கரிய கொடுந்துயரால், உலகின் பேரரசர்களையும் மாண்புசால் பெரியோரையும் போலவே தாக்குண்டு வீழ்ந்துபட்ட உயிர்!..

அவன் காலஞ் சென்ற சில நாள்களுக்குப் பிறகு, அவனைக் கையோடு அழைத்து வரும்படி இயக்குநரே பிறப்பித்த கட்டளையுடன் அலுவலகக் கடைநிலை ஊழியன் அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான். அவனோ வெறுங் கையோடு அலுவலகம் திரும்ப வேண்டியதாயிற்று; அக்காக்கிய இனிமேல் அலுவலகத்துக்கு வர இயலாது என்று அறிவித்தான் அவன். “ஏன்?” என்ற கேள்விக்கு, “அப்படித்தான், அவன்தான் செத்துப்போனானே, அடக்கமாகி நாலு நாளாச்சே!” என்ற சொற்களில் விடை பகர்ந்தான். அக்காக்கியின் மரணம் பற்றிய செய்தி இவ்வாறு அலுவலகத்துக்கு எட்டியது. மறுநாளே அவனது இடத்தில் புது எழுத்தன் அமர்ந்து விட்டான்; இவன் அவனைவிட எவ்வளவோ உயரம், இவன் கையெழுத்து அக்காக்கியின் போன்று நேராக இன்றி முன்சாய்ந்தும் கோணலாகவும் இருந்தது.

அக்காக்கியின் விஷயம் இத்துடன் தீர்ந்து விடாது, எவராலும் பொருட்படுத்தப்படாத வாழ்வுக்குப் பரிசு போல மரணத்துக்குப் பின்பும் நகரத்தின் சர்ச்சைக்கு ஆளாகி இன்னும் சில நாள்கள் வாழ்ந்திருப்பது அவனுக்கு விதிக்கப்பட்டிருந்தது என்று யார்தான் கற்பனை செய்திருக்க முடியும்? ஆனால், நடந்ததென்னவோ அப்படித்தான். விளைவாக, நமது எளிய கதையின் முடிவு எதிர்பாரா வகையில் அதிசய நிகழ்ச்சிகள் கொண்டதாக அமைந்து விட்டது.

எழுத்தனது உருவமுள்ள பேய் ஒன்று கலீன்கின் பாலத்தருகிலும் அதற்கு வெகு தொலைக்கு அப்பாலுங்கூட இரவு வேளைகளில் தென்படுவதாகவும், பறிபோன மேல்கோட்டு ஒன்றை அது தேடுவதாகவும், இழந்த கோட்டை மீட்கும் பொருட்டு பதவியையும் அந்தஸ்தையும் பாராமல் எல்லாரது மேல்கோட்டுக்களையும் – பூனைத் தோல் வைத்தவை, நீர்நாய்த் தோல் வைத்தவை, பஞ்சு வைத்தவை, ராக்கூன் தோல், நரித்தோல், கரடித் தோல் ஆகியவற்றால் ஆனவை, மனிதர்கள் தங்கள் தோல்களை மூடிப் போர்க்கும் பொருட்டு உபயோகிக்கும் எல்லாவித மிருகங்களின் மென்மயிர்த் தோல்களுங் கொண்ட மேல்கோட்டுக்கள் அனைத்தையும் இந்தப் பேய் உருவிக்கொண்டு விட்டு விடுவதாகவும் திடீரென்று பீட்டர்ஸ்பர்க் நகரில் வதந்தி பரவியது.

துறை எழுத்தர்களில் ஒருவன் அந்தப் பேயைத் தன் கண்களாலேயே கண்டு அது அக்காக்கிய் தான் என்று அடையாளம் தெரிந்து கொண்டானாம்; அதனால் ஒரேயடியாகக் கிலிபிடித்துப் போய்க் குதிகால் பிட்டத்தில் பட விழுந்தடித்து ஓடிவிட்டதாகவும், எனவே பேயை நன்றாகப் பார்க்க முடியவில்லை என்றும், தூரத்திலிருந்து அது விரலை ஆட்டிப் பயமுறுத்தியதை மட்டுமே பார்த்ததாகவும் அவன் சொன்னான். இவ்வாறு மேல்கோட்டுகள் அடிக்கடி பறிக்கப்படுவதன் விளைவாகப் பட்டம் பெற்ற ஆலோசகர்கள் மாத்திரமே அல்லர், அந்தரங்க ஆலோசகர்கள் கூடத் தோள்களிலும் முதுகுகளிலும் குளிர் தாக்கும் அபாயத்துக்கு உள்ளாயிருப்பதாக நாற்புறமிருந்தும் இடைவிடாத முறையீடுகள் வரலாயின. இந்தப் பேயை உயிரின்றியோ உயிருடனோ பிடித்து, மற்றப் பேய்களுக்கு உதாரணமாயிருக்கும்படி, கொஞ்சங் கூடத் தயவு இன்றித் தண்டிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது; போலீஸார் அதை அநேகமாகப் பிடித்தும் விட்டார்கள்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க