‘தமிழகத்தை சுடுகாடாக்கும் முயற்சியுடன்’ விடிந்த (போராட்டத்துடன் விடிந்த) இந்தப் புத்தாண்டில், கடந்த 7 நாட்களில் மட்டும் இரண்டு பிரபலங்களின் மேடைப் பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டன.

முதலாவது பேச்சு, மத்திய அரசின் தமிழக தகவல் தொடர்புச் ‘செயலாளராகவும்’, பா.ஜ.க.-வின் முழுநேர அடிமையாகவும், தமிழகத்தின் முதல்வர் நாற்காலியின் ‘காப்பானாக’ விளங்கும் எடப்பாடி அவர்களின் சிறப்புரையாகும்.

இரண்டாவது பேச்சு, பிளாக்கில் டிக்கெட் ஓட்டி சம்பாதிக்க சுதந்திரம் இருக்கும் நாட்டில், வாடகை கொடுக்காமல் டிமிக்கியடிக்க வாய்ப்பு மறுக்கப்படும் நிலைக்குத் தாழ்ந்து போய்விட்ட ‘சிஸ்டத்தை’ சரி செய்ய களமிறங்கியிருக்கும், உலகின் முதல் ஆன்மிக அரசியல்வியாதி ரஜினிகாந்த் அவர்கள் ‘துகுலகு’ (இப்படித்தான் ரஜினி பேசினார்) பத்திரிகையின் 50-ம் ஆண்டு விழாவில் மேடையில் ஆற்றிய உரையாகும்.

முதலில் எடப்பாடியாரின் பொன்னுரையைப் பார்ப்போம்..

கடந்த ஜனவரி 09, 2020 அன்று தொடங்கிய 43-வது சென்னை புத்தகக் கண்காட்சியின் தொடக்கவிழாவில் எடப்பாடியார் தனது பொன்னான உரையை ஆற்றினார்.

இத்தகைய விழாக்களில் எடப்பாடியார் பார்த்து வாசிப்பதற்கான ‘கண்டெண்ட்’ தயாரித்துத் தருபவருக்கு சம்பளப் பாக்கி வைத்தார்களா, அல்லது எடப்பாடியைப் போன்ற ஒருவரையே அந்தப் பணிக்கு நியமித்தார்களா என்று தெரியவில்லை. எடப்பாடியாருக்கு தயாரித்துக் கொடுத்த உரையில் அவருக்கு வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் அதில் நுழைத்து அவரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டார்.

தனது உரையில் ஆபிரகாம் லிங்கனின் பெயரையும் பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரையும் வாசித்து முடிப்பதற்குள், அய்யோ பாவம்.. எடப்பாடியாருக்கு மூச்சு தள்ளிவிட்டது. காந்தி படித்த நூலின் பெயரைச் சொல்வதற்குள் தொண்டைக் குழி காற்றும் கம்மிவிட்டது. அந்த ‘கண்டெண்ட் மேக்கர்’ எடப்பாடியை அதோடு மட்டும் விட்டுவைக்கவில்லை … சங்கிகளை வாரிவிடும் வகையிலும் கண்டெண்ட்-ஐ சேர்த்துவிட்டிருக்கிறார்.

“தனக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டபோது அழுது புலம்பி மன்னிப்புக் கடிதம் எழுதி உயிர்ப்பிச்சை கேட்காமல் தூக்குமேடை ஏறிய மாவீரன் பகத்சிங்” என்ற ஒரு வாசகத்தை எடப்பாடியின் உரையில் சேர்த்திருக்கிறார் கண்டெண்ட் மேக்கர். இந்தப் பேச்சு வெள்ளைக்காரனின் காலை நக்கி அழுது புலம்பி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலையான சாவர்க்கரைப் பற்றிய நினைவு சங்கிகளுக்கு வந்து உருத்தாதா என்ன ?

எப்படியும் இதற்காக குருமூர்த்தியார் எடப்பாடியாரைக் கூப்பிட்டு, தனது டெம்ப்ளேட்டான ‘ஆண்மைச்’ சந்தேகக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடும். தாம் கேட்ட சந்தேகக் கேள்வியை இன்னும் சில ஆண்டுகளில் ஏதேனும் ஒரு மேடையில் குருமூர்த்தியார் நமக்கு விவரிப்பார் என்று நம்புவோமாக !

அடுத்த உரை நமது ஆன்மிக அரசியல்வாதியின் உரை. கடந்த 14-ம் தேதி – துக்ளக் மாத இதழின் 50-ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘சிஸ்டம் எஞ்சினியர்’ ரஜினிகாந்த் அவர்கள் அடுப்பங்கரை அமைச்சரவையில் தமக்கு ஓதப்பட்டவற்றை மேடையில் ஏறி தனக்கே உரிய ‘ஸ்டைலில்’ முழங்கினார்.

பஜனையைத் துவங்கும்போது பிள்ளையார் கீர்த்தனை பாடிவிட்டுத் துவங்குவதுதானே மரபு. தமிழகத்தின் மாஃபியா ராணி ஜெயா மரணத்தில் பிணப்பெட்டிக்கு அருகிலேயே துண்டைப் போட்டு அட்டை போல ஒட்டிக் கொண்ட ‘கண்டெய்னர்’ புகழ் வெங்காய நாயுடுவை – மன்னிக்கவும் வெங்கையா நாயுடுவின் துதி பாடி ஆரம்பித்தார் சூப்பர்ஸ்டார்.

தனது சிறு வயதிலேயே சொற்ப எண்ணிக்கை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியில் சேர்ந்து கட்சியையும் வளர்த்து தானும் உயர்ந்த நிலைக்கு வந்து சேர்ந்துவிட்டாராம் வெங்கையா.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது “எதுக்கெடுத்தாலும் போராட்டம் .. போராட்டம்னா… தமிழ்நாடே சுடுகாடாகிடும்” என்று பொங்கிய ரஜினிகாந்துக்கு, ஒருகாலத்தில் ஏ.பி.வி.பி. என்ற காவிக் குண்டர்கள் அமைப்பில் சேர்வதற்கு முன்பு ஆந்திராவில் மாணவர் சங்கப் போராட்டங்களில் பங்கெடுத்து, ஆந்திராவை ‘சுடுகாடாக்கியவர்’தான் இந்த வெங்கையா என்பது தெரியாமல் போய்விட்டது.

படிக்க :
சங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்
NRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா ? | வாஞ்சிநாதன் உரை

ஒருவேளை தெரிந்திருந்தால், “துணை ஜனாதிபதி வெங்கையா அவர்களே” என்று அழைப்பதற்குப் பதிலாக ஆந்திராவை சுடுகாடாக்கிய வெங்கையா அவர்களே என்று அழைத்திருப்பாரோ என்னவோ?

பின்னர் துணை ஜனாதிபதி இருப்பதால், அவர் இருக்கும் மேடையில்  பேசுவதற்கு தனக்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருப்பதாகக் கூறி அங்கு கூடியிருந்த மாமா மாமிகளிடம் கைதட்டு வாங்கினார். ஒருவேளை ரஜினிக்கு முன்னிருந்த மைக்கிற்கு வாயிருந்தால், “இல்லேன்னாலும் அப்படியே அறுத்துத் தள்ளீருப்பீரு..” எனக் காறியிருக்கலாம். பாவம் மைக்கிற்கு வாயில்லையே…

மூலவர் ‘சோ’-விற்கு பஜனை பாடுவதற்கு முன்னர், இடைதெய்வம் குருமூர்த்தியை பூஜித்தார். சோ பரலோகம் செல்லும் முன்னரே தனது அரும்பெரும் பணியைச் செய்ய சரியான நபராக குருமூர்த்திதான் இருப்பார் என்று கூறியதாகவும் அது உண்மைதான் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

சோ ராமசாமி இருந்தவரையில் அரசியல் தரகு வேலைகளைச் செய்துவந்தார். திராவிட வெறுப்பு, தமிழர் வெறுப்பு, தலித் வெறுப்பு, உழைக்கும் வர்க்கத்தின் மீதான வெறுப்பு ஆகியவற்றையே எழுதி வந்தார். அதிகாரத்தில் இருக்கும் பார்ப்பனக் கூட்டத்தின் தொழில்நிறுவனங்களில் பங்குதாரராகவும் செயல்பட்டுவந்தார்.

அந்த வகையில் ஒட்டுமொத்த நிகழ்ச்சியிலும் ரஜினிகாந்த் முரணின்றி மறுக்கமுடியாதபடி ஆதாரப் பூர்வமாக பேசிய ஒரே பேச்சு இதுதான். ஏனெனில் சோ பகிரங்கமாக பார்த்துவந்த அரசியல் ‘மாமா’ வேலையை, தான் கமுக்கமாகப் பார்த்து வருவதாக அதே மேடையில் குருமூர்த்தியே ஒத்துக் கொண்டுள்ளார். குருமூர்த்திக்கும், சோ-வின் அளவிற்கு திராவிடர், தமிழர், தலித், உழைக்கும் மக்கள் மீதான வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் உண்டு. குருமூர்த்தியும் பார்ப்பனக் கூட்டத்தின் தொழில்நிறுவனங்களில் பங்குதாரராக செயல்பட்டுவருபவர்தான். அந்த வகையில் ‘சோ’விற்கு சரியான வாரிசுதான் குருமூர்த்தி. உண்மையைச் சொன்ன ரஜினிக்கு வாழ்த்துக்கள் !

மூலவர் சோ ராமசாமியின் பஜனையைத் துவங்கினார் ரஜினி.  மூலவர் பஜனை துவங்கப்பட்டதே அபஸ்வரத்தில்தான். முதல் கோணல், முற்றிலும் கோணலாகிப் போய் முடிந்தது.

“சோ ஒரு ஜீனியஸ். ஜீனியஸ்கள் ஜீனியஸ்களாகவே உருவாகி பிறந்து வருகின்றனர்.” என்றார் ரஜினி. கூடியிருந்த மாமா மாமிக்கள் எல்லாம் பெருமிதமாகக் கைதட்டுகின்றனர்.

காலங்காலமாக தங்களைத் தாங்களே பிறவி அறிவாளிகளாகக் காட்டிப் பிழைப்பு நடத்தி வரும் பார்ப்பனக் கூட்டத்தின் பிரச்சாரத்தை தனது ‘சூத்திர’ வாயிலிருந்து உதிர்த்திருக்கிறார் ரஜினிகாந்த். தன்னை சூத்திரனாகப் “பெருமைப்படுத்தும்” பார்ப்பனர்களின் பிறவிப் “பெருமைகளை” எடுத்துக் கூறி புளகாங்கிதமடைந்துள்ளார் நமது ‘சூத்திர’ அடிமை.

அதோடு “துகுலக்கே (துக்ளக்-ஐ) படிக்கிறவங்க எல்லாம் அறிவாளிங்க” என்று கூறி துக்ளக் இதழைப் படிக்கும் மயிலாப்பூர், வெஸ்ட் மாம்பலம் கும்பலையும் துதி பாடிவிட்டு அரசியலுக்குள் தனது பேச்சை நுழைத்தார் ரஜினிகாந்த்.

சோ ராமசாமியை பிரபலப்படுத்தியது இரண்டு பேர்தானாம். ஒருவர் பக்தவத்சலம். மற்றொருவர் கலைஞர். இருவரும் சோ-வை எதிர்த்ததன் காரணமாகத்தான் சோ ராமசாமி பிரபலமடைந்தார் என்று கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.

பக்தவத்சலத்துக்கும் சோ ராமசாமிக்கும் அதிகபட்சமாக ஆவணி அவிட்டத்தில் தெற்கே பார்த்து கழட்டி மாட்ட வேண்டுமா, மேற்கே பார்த்து கழட்டி மாட்ட வேண்டுமா என்பதில் வேண்டுமானால் முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம். சிந்தனையைப் பொருத்தவரையில் இரண்டும் ஒரே செப்டிக் டேங்கில் ஊறவைத்து எடுக்கப்பட்டதுதான்.

அடுத்ததாக, 1971-ல் சேலத்தில் இராமன் – சீதா சிலையை உடை நீக்கி, செருப்புமாலை போட்டு பெரியார் ஊர்வலம் கொண்டு சென்றதாகவும், அதனை எந்த பத்திரிகையும் எழுத தைரியமின்றி இருந்தபோது, சோ ராமசாமி மட்டும் அதனை எதிர்த்து அட்டைப்படம் வரைந்ததாகவும் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

இது எப்படி ஒரு அப்பட்டமான பொய் என்பதை பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தனது முகநூல் பதிவில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். அச்சமயம் துக்ளக் மட்டுமல்லாமல் தி இந்து, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகளும் இதனை அவதூறாக எழுதின என்பதையும், உண்மையாக அங்கு நடந்த சம்பவம் என்ன என்பதையும் விரிவாக விளக்கியிருக்கிறார், சுபவீ.

மேலும் கலைஞர் அரசு அந்த துக்ளக் இதழ்களை தடை செய்ததாகவும், சோ ராமசாமி அதையும் தாண்டி ”ப்ளாக்கில்” பத்திரிகையைக் கொண்டுவந்து விற்றதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். சோ ராமசாமி ”பிளாக்கில்” விற்றார் என்று சொல்லும் போது ரஜினியின் முகத்தில் இயல்பாகவே பெருமிதம் பொங்கியது. அந்தக் காலத்திலேயே பிளாக்கில் விற்பதற்கு முன்னோடியாக ‘அறிவாளி’ சோ இருந்ததை தனது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கப்படுவதற்கான அங்கீகாரமாக எடுத்துக் கொண்டார் போலும். மேலும் ரஜினிகாந்தின் சிஸ்டம் பிரச்சினைக்குள் பிளாக்கில் விற்பனை செய்வது கணக்கில் வராது போலத் தெரிகிறது.

ஒரு விசயத்தைப் பற்றி பேசுவதற்கு முன்னர் அதில் என்ன உண்மை, அது குறித்த வரலாறு தனக்கு மயிரளவிற்காவது தெரியுமா என்பது குறித்து எந்தக் கவலையும் படாமல், தனது அடுப்பங்கரை அமைச்சகத்தின் வாந்தியை அப்படியே துக்ளக் மேடையில் எடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

இறுதியில் பாஜக – ஆர்.எஸ்.எஸ். பெருமையை மறைமுகமாகப் பாடத் தொடங்கினார் ரஜினிகாந்த். “எமர்ஜென்சி காலத்தில் அதை தைரியமாக எதிர்த்தவர் சோ ராமசாமி. இங்கே சோ, வடக்கே அத்வானி, வாஜ்பாய் ஆகியோரெல்லாம் எமர்ஜென்சியை எதிர்த்தனர்” என்று ஆர்.எஸ்.எஸ். கோழைக் கும்பலுக்கு வீர வேசம் போட்டு அழகு பார்க்கிறார் ரஜினி. எமெர்ஜென்சி காலத்தில் வாஜ்பாயும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் இந்திராகாந்திக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி, தம்மை விடுவிக்குமாறு கெஞ்சிக் கூத்தாடியதை சுப்பிரமணிய சாமியே போட்டு உடைத்துள்ளார்.

அரசியல் முக்கியத்துவமுடைய எந்தப் பிரச்சினையைப் பற்றிக் கேட்டாலும், “நான் இன்னும் அரசியலுக்குள்ள வரலே.” என்று கூறி எஸ்கேப்பாகி ஓடும் ரஜினிகாந்த் எனும் இந்தப் பல்லி, இந்நிகழ்வில் மட்டும் பாஜகவுக்கு ஆதரவாக அரசியல் கெவுளி அடிக்கிறது.

தனது சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜக – ஆர்.எஸ்.எஸ். குய்ம்பலுக்கு அடிமையாகத் திரியும் அதிமுக கும்பலை விட மிகவும் ஆபத்தானவர்தான், பார்ப்பனிய மலக்குட்டையில் ஊறிப் போய் அதையே சிறந்ததாக வெட்கமின்றிப் பேசித்திரியும் பார்ப்பனிய அடிமை ரஜினிகாந்த். எடப்பாடிக்கே அல்லோல்படும் தமிழகம், ரஜினிகாந்த் என்ற பார்ப்பனிய அடிமையைத் தாங்குமா ?

நந்தன்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்