thiruvannamalai prpc Conferenceகுடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் திருவண்ணாமலையில் 11.01.2020 சனிக்கிழமை அன்று மாலை நடைபெற்ற கருத்தரங்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் ஆற்றிய உரை.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை

னைவருக்கும் வணக்கம்,

எதிரிகளை சரியாகப் புரிந்து கொண்டால்தான் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். அதற்கான கூட்டம்தான் இது. 1965-ல் தொடங்கப்பட்ட ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக் கழகம் (JNU) என்பது இந்தியாவின் ஆக்ஸ்போர்டு. இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி, குறைந்த கட்டணத்தில் கல்வி அளிப்பதால்தான் அங்கு சாதாரண மக்களும் படிக்க முடிகிறது. முற்போக்கு சிந்தனையாளர்களின் குவி மையமாக JNU திகழ்கிறது. JNU-வை ஒழித்துவிட்டால் இந்துத்துவா அமைப்புகளை எதிர்க்கும் சக்திகளை ஒழித்துவிடலாம் என்கிற நோக்கத்தில்தான் 2014 முதல் JNU மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது மோடி – அமித்ஷா கும்பல். அதற்காகவே ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட எம்.ஜெகதீஷ் குமார் என்பவரை JNU துணை வேந்தராக நியமித்தது மோடி அரசு.

கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அவற்றைத் திரும்பப் பெறக்கோரியும், JNU மாணவர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் தேதி பேரணி நடத்தினர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ABVP யைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட குண்டர்கள் போராடிய JNU மாணவர்கள் மீது ஐந்தாம் தேதி தாக்குதல் நடத்தினர். தடுக்க வந்த பேராசிரியர்களையும் தாக்கினர். இதில் JNU மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட பலரது மண்டைகள் உடைக்கப்பட்டன. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறையினரின் கண் முன்னே சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தாக்குதல் நடந்துள்ளது.  நான்காம் தேதி போராடிய மாணவர்கள் மீது வழக்கு தொடுத்த காவல்துறை, ஐந்தாம் தேதி தாக்குதல் நடத்திய ABVP குண்டர்கள் மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. உலகமே இந்தத் தாக்குதலை கண்டித்த போதும், முதல் தகவல் அறிக்கை எதுவும் ABVP குண்டர்கள் மீது பதிவு செய்யப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக தனது ஐம்பத்தாறு இன்ச் மார்பைக் காட்டும் மோடிக்கு இது தெரியாதா? தெரியும். மோடி – அமித்ஷா கும்பலுக்குத் தெரிந்துதான் இது நடக்கிறது.

thiruvannamalai prpc Conference
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

கல்வி, சிந்தனைக்கு வழி காட்டுகிறது. ஆனால், சிந்திக்கக் கூடாது என்கிறது இந்துத்துவா கும்பல். மக்களுக்குக் கல்வியைக் கொடுக்கச் சொல்கிறது பெரியார், காமராசர், அம்பேத்கர், கம்யூனிஸ்டுகளின் அரசியல். ஆனால், கல்வியை மறுக்கச் சொல்கிறது பார்ப்பனிய அரசியல்.

சங்க காலத்தில் கல்வியில் தமிழன் சிறந்து விளங்கியதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சாதாரண மக்களும் கல்வி அறிவு பெற்றிருந்தனர் என்பதை கீழடி பானை எழுத்துக்கள் நிறுவுகின்றன. அதன் பிறகு நமது கல்வி எப்படி பறிபோனது? நமது பாட்டன்களும் முப்பாட்டன்களும் ஏன் படிப்பறிவற்றவர்களாக இருந்தனர்? இவர்கள் ஏன் படிக்கவில்லை? இவர்களது படிப்பை யார் பறித்தது? நமது மூதாதையரின் கல்வியைப் பறித்தது பார்ப்பனியம். அதனால் நமது முன்னோர்கள் சிந்தனையை இழந்தனர். அடிமைகளாக வாழ்ந்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பார்ப்பனர் அல்லாதார் ஒரு சிலர் கல்வி பெற்றனர். கல்வியால் சிந்தனை பெற்ற சிலர், பார்ப்பனியத்துக்கு எதிராகக் கேள்விகளை எழுப்பினர். சாமான்ய மக்களிடம் கல்வி பரவலாக்கப்பட்டால் சாதி – மதக் கொடுங்கோன்மை, ஏழை – பணக்காரன் ஏற்றத் தாழ்வுகள், அதானி – அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டல் – கொள்ளைக்கு எதிராகக் கேள்விகள் எழும். இப்படிக் கேள்விகள் எழுவது ஆபத்து எனக் கருதுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

முஸ்லீம்கள் பற்றி கேள்விகளை எழுப்பும் பா.ஜ.க., சிறு வணிகம் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட சகல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டபோது ஏன் கேள்வி எழுப்பவில்லை?

ஒப்பீட்டளவில் பிற மாநிலங்களைவிட தமிழ்நாடு கல்வியை பரவலாக்கி உள்ளது. அவர்களால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் நீட், புதிய தேசிய கல்விக் கொள்கை, ஐந்து – எட்டாம் வகுப்புகளுக்கு போதுத் தேர்வு, பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு மறுப்பு உள்ளிட்ட திட்டங்கள் மூலம் சாதாரண மக்களுக்கான கல்வியை மறுக்க முனைகிறது மோடி கும்பல். பிறரது அறிவைக் கண்டு அஞ்சுகிறது பார்ப்பனியம். JNU-வைக் கண்டு அஞ்சுவதற்குக் காரணமும் அறிவுதான்.

தமிழறிஞர் நெல்லை கண்ணன் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மோடி ஒரு முட்டாள். மோடிக்கு மூளை இல்லை எனப் பேசினார். இது பொய்யா? மோடி என்றைக்காவது பத்திரிக்கையாளர்களை சந்தித்தது உண்டா? பேட்டி கொடுத்தது உண்டா? பேட்டி கொடுத்தால் மோடி ஒரு முட்டாள் என்பது தெரிந்து விடும்தானே. சாதாரண அறிவுகூட மோடிக்குக் கிடையாது. மோடி – அமித்ஷாவின் சோலிய முடி என நெல்லை கண்ணன் இயல்பாய்தான் பேசினார். அவர் பேசியதில் என்ன குற்றமிருக்கிறது.

பா.ஜ.க.காரன் ஒருவன் நெல்லை கண்ணன் மீது புகார் கொடுத்திருக்கிறான். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ்தான் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. இது ஒரு சாதாரண, மான நட்ட வழக்குப் பிரச்சினை. இதற்கு எதற்கு கைது? இந்த வயதில் அவர் என்ன ஓடிப் போகப் போகிறாரா? அல்லது சாட்சியங்களை கலைக்கப் போகிறாரா? அவர் பேசியதுதான் ஆதாரம். வேறு சாட்சியங்கள் பெரிதாக இதில் ஒன்றும் தேவைப்படாது. அவர் என்ன பேசினார் என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு எதற்குக் கைது?

தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.-வினருக்கு எதிராகப் பேச அறிவாளிகளை அழைப்பதில்லை. முட்டாள்களைத்தான் அழைக்கின்றனர். என்னை அழைத்தால் கே.டி.ராகவன் போன்றவர்களின் சோலிய முடிச்சிருப்பேன் என்று பேசினார். இதில் என்ன குற்றமிருக்கிறது. சோலிய முடிச்சிருப்பேன் என்றால் அவனை வாதத்தால் வீழ்த்தி இருப்பேன் என்பதுதானே இதன் பொருள். இது ஒரு சாதாரண பாமரனுக்கும் புரிந்ததுதானே?

பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், ஐகோர்ட்டாவது மயிராவது என்றும், போராடுகின்ற மாணவர்கள் உள்ளிருந்து கல் எறிந்தால் நான் வெளியிலிருந்து வெடிகுண்டு வீசுவேன் எனப் பேசிய எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை?

ஆண்டாள் ஒரு தேவதாசி எனக் கட்டுரை எழுதிய கவிஞர் வைரமுத்துவின் தலையை வெட்டி வா என்றும், வைரமுத்துவைக் கொலை செய்ய வேண்டுமா? வேண்டாமா, எனக் கேள்வி எழுப்பி அதற்காக பத்து இலட்சம் ரூபாய் தருவதாகப் பேசிய பா.ஜ.க வைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் மீது வழக்கு உண்டா? கைது உண்டா?

படிக்க:
ப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை
பாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்!

பெண் பத்திரிக்கையாளர்கள் பெரிய மனிதர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டால்தான் உயர முடியும் எனப் பேசிய எஸ்.வி.சேகர் மீது வழக்கு உண்டா? கைது உண்டா?

அ.தி.மு.க. காரன்களெல்லாம் ஆம்பளைங்களா என ஓ.பி.எஸ்.-ஐப் பார்த்து நேருக்கு நேர் கேள்வி கேட்ட ஆடிட்டர் குருமூர்த்தி மீது புகார் உண்டா? வழக்கு உண்டா? கைது உண்டா?

இவர்கள் மீது ஒரு வழக்கும் இல்லை. இவர்களைப் பொருத்தவரை இந்தியன் பீனல் கோடு என்பது இந்தியன் பூணூல் கோடு. அவ்வளவுதான்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது கடுமையான அடக்குமுறை ஏவப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டால் பழி வாங்குவேன் என உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் பேசுகிறார். அங்கு 21 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் தாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என காவல்துறை மறுப்பு தெரிவிக்கிறது. அப்படியானால் துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? துப்பாக்கியால் சுட்டது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான். அதற்காகவே அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காவல் துறையினரே இஸ்லாமியர்களின் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி நகைகளைக் கொள்ளையடிக்கின்றனர். திருமணத்திற்காக வைத்திருந்த பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றை ஒரு வீட்டிலிருந்து காவல்துறை கொள்ளையடித்ததை நாடே பார்த்தது. போராடிய இஸ்லாமியா ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களை நிர்வாணமாக்கி தாக்கி உள்ளது காவல்துறை. இப்படி காவல் துறையும் இந்துத்துவா கும்பலும், போராடும் மக்கள் மீதும் அப்பாவி இஸ்லாமியர்கள் மீதும் இருமுனைத் தாக்குதலை நடத்தி வருகிறது.

நீதி கேட்டு உச்ச நீதிமன்றம் சென்றால் முதலில் வன்முறை நிற்கட்டும் பிறகு பார்க்கலாம் என்கிறது. போராடுபவர்கள் எவரும் வன்முறையில் ஈடுபடவில்லை. ஆனால் காவல்துறைதான் பல இடங்களில் வன்முறையை அரங்கேற்றி உள்ளது.

சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழில் பாடுவதற்குப் போராடிய போது காவல்துறையே கூட்டத்தில் கல்லெறிந்து வன்முறையைத் தூண்ட முயற்சி செய்தது. ஸடெர்லைட் எதிர்ப்பு, மெரினா – ஜல்லிக்கட்டு போராட்டங்களின் போது காவல்துறை எப்படி வன்முறையைத் தூண்டியது என்பதை உலகமே அறியும்.

10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களும் ஐயப்பனை வழிபடத் தடையில்லை என சபரிமலை வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும் சபரிமலைக்குச் சென்ற பெண்கள் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டனர். அப்பொழுதாவது உச்சநீதிமன்றத்திற்குக் கோபம் வந்ததா? சபரிமலை வழக்கில் மிகச் சரியான விளக்கத்தைக் கொடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி நாரிமன் போன்றவர்களை நீக்கிவிட்டு உச்ச புதியதொரு அமர்வை நீதிமன்றம் நியமிக்க வேண்டிய நோக்கம் என்ன?

காஷ்மீருக்கான 370 சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. திருமணம், இறுதிச் சடங்கு உள்ளிட்ட எதையும் நடத்த முடியாத அளவுக்கு அங்கு அடக்குமுறை ஏவப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றால் கைவிரிக்கிறது. இதுதான் இன்றைய நாட்டு நிலைமை.

கோலம் போடுவதும், கடற்கரையில் மணற் சிற்பங்கள் வடிப்பதும் மிகச்சாதாரண நடவடிக்கையே. தமிழ் நாட்டில் கோலம் போட்டது ஒரு குற்றமா? கோலம் போடுவதற்குக்கூடவா அனுமதி வேண்டும்? காவல் சட்டம் 30(2) நடைமுறையில் இருந்தால் மட்டும்தான் நான்கு பேர் கூட, ஊர்வலம் போக, கூட்டம் நடத்த அனுமதி பெற வேண்டும். காவல் சட்டம் 30(2) நடைமுறையில் இல்லாத போது எந்த அனுமதியையும் பெற வேண்டியத் தேவையில்லை. கோலம் போட்டப் பெண்ணுக்கு பாகிஸ்தானோடு தொடர்பு இருப்பதாக ஒரு காவல் ஆணையர் பேட்டி கொடுக்கிறார். இதுதான் கால்துறையின் இலட்சணம்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை வருத்தமளிப்பதாக ரஜினி பேசுகிறார். போராடுகிற மக்களை வன்முறையாளர்களாகச் சித்தரிக்கிறார். ஆனால், இன்று காவல் துறையும், ABVP குண்டர்களும் வன்முறையில் ஈடுபடும் போது அமைதி காக்கிறார். அப்படியானால் இவர் யாருக்கானவர்? குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முதலில் கருத்துச் சொன்ன கமல், குருமூர்த்தியிடம் பேசிய பிறகு ஓடி ஒளிந்து கொள்கிறார்.

எதிரிகளை அறிந்து கொள்ள இந்த அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?

ஊடகங்கள் மோடி ஷூவை நக்கிப் பிழைக்கின்றன என்கிறார் கண்ணையா குமார். எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதை BJP சிந்தனைக் குழாமே தீர்மானிக்கிறது. முதல் செய்தி மோடியைப் பற்றி என்றால் அதைச் செய்துவிட்டுத்தான் மற்றவற்றை செய்கின்றன ஊடகங்கள்.

இந்தச் சூழலில்தான் குடியுரிமைச் சட்டம் 1955 இல் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது மோடி அரசு. சட்டவிரோதக் குடியேறிகள் யார் என்பதை இச்சட்டப் பிரிவு 2 வரையறை செய்கிறது. கடவுச் சீட்டு மற்றும் விசா அனுமதி இல்லாமல் இந்தியாவிற்கு வந்தவர்கள், விசா காலம் முடிந்த பிறகும் இந்தியாவில் தங்கி உள்ளவர்களைத்தான் சட்ட விரோதக் குடியேறிகள் என்கிறது சட்டம்.

சட்ட விரோதக் குடியேறிகள் பற்றி வரையறுக்க அகதிகள் சட்டம் கை கொடுக்காததால் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதுதான் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019. இச்சட்டப்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து 2014, டிசம்பர் 31-க்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், பார்சிக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் மற்றும் கிருத்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதி உள்ளவர்கள். மாறாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ள இஸ்லாமியர்கள் குடியுரிமை பெற முடியாது.

பூட்டான் நாட்டிலிருந்து வந்துள்ள கிருத்தவர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது. இலங்கையிலிருந்து வந்துள்ள ஈழத்தமிழர்கள் அவர்கள் இந்துக்களே ஆனாலும் அவர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது. நேபாளத்திலிருந்து வந்துள்ள இந்துக்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது. திபெத்திலிருந்து வந்துள்ள பௌத்தர்களுக்குப் பொருந்தாது. இது மத அடிப்படையில் குடியேறிகளிடம் பாகுபாடு பார்ப்பதாகாதா?

படிக்க:
பாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்!
கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !

இந்தியாவில் உள்ள அனைவருக்கும், அவர்கள் வெளிநாட்டினராக இருந்தாலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, 17, 21 ஆகியவை பொருந்தும். இந்திய எல்லைக்குட்பட்ட எவரையும் (any person) சாதி-மத-இன அடிப்படையில் பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறு. எந்த ஒரு புதிய சட்டமும் அரசமைப்புச் சட்டம் பிரிவு 14, 17, 21-ஐ மீறுகிறதா என்கிற கோணத்தில்தான் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.

பிரிவு 14-ன் படி ஒருவருக்கு சம பாதுகாப்பு அளிக்கப்படுகிறதா, சம உரிமை தரப்படுகிறதா என்றுதான் பார்க்க வேண்டும். மூன்று நாடுகளிலிருந்து மட்டும் குடியேறி உள்ள ஆறு மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை திருத்தச் சட்டம் பொருந்தும், மற்றவர்களுக்குப் பொருந்தாது என்பது சரியா? இது பிரிவு 14-ஐ அதாவது அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை மீறுகிறதா? இல்லையா?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில்தான் மதச் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதாகச் சொல்கிறது பா.ஜ.க. இலங்கையில் என்ன நடந்தது? பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்களப் பேரினவாதத்தால் சிறுபான்மை ஈழத் தமிழர்கள் துன்புறுத்தப்பட்டு கொன்று குவிக்கப்படவில்லையா? பௌத்த நாடான பூட்டானில் கிருத்தவர்கள் துன்புறுத்தப்படவில்லையா? மியான்மர் ஆட்சியாளர்களால் ரோஹிங்கியா முஸ்லீம்கள் துன்புறுத்தப்படுவதில் பௌத்தத்திற்கு பங்கில்லையா? அகதிகளைக் கையாள்வதில் மத – இன அடிப்படையில் பாகுபாடு பார்க்கிறது மோடி அரசு என்பதைத்தானே இது காட்டுகிறது.

தீண்டாமையை எந்த வடிவத்திலும் (in any form) கடைபிடிக்கக் கூடாது என்கிறது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21. இது பட்டியலின மக்களைப் பற்றி மட்டுமா பேசுகிறது? ஒருவரை பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதும் தீண்டாமைதான். புனிதம்-தீட்டு (purity-pollution) என்று சொல்லி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என ஒதுக்கி வைப்பது தீண்டாமைதான் என உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அவர்கள் சபரிமலைத் தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளார்.

மூன்று நாடுகளிலிருந்து மட்டும் வந்துள்ள ஆறு மதப்பிரிவினருக்கு மட்டும் குடியுரிமை திருத்தச் சட்டம் பொருந்தும், மற்றவர்களுக்குப் பொருந்தாது என்பது ஒரு சாராரை ஒதுக்கி வைப்பதாகாதா?

பிராமணாள் ஓட்டல் என்று பெயர் வைத்திருந்தால், அங்கே மற்றவர்கள் நுழையக் கூடாது என்று பொருள். அன்று அப்படித்தான் இருந்தது. இது தமிழர்களையும், திராவிடர்களையும் கீழானவர்கள் என்று சொல்லவில்லையா? ஒரு தெருவில் பிராமணர்கள், செட்டியார்கள் மட்டும் நடந்து செல்லலாம் என்றால் அது மற்ற சாதியினரை ஒதுக்கி வைப்பதாகாதா? இந்தியர்களுக்கும், நாய்களுக்கும் அனுமதி இல்லை என்று வெள்ளைக்காரன் எழுதி வைத்திருந்தானே, அது ஒதுக்கி வைத்தல் இல்லையா? இழிவு இல்லையா?

பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் மேல்சாதி இந்துக்கள். அவர்களுக்கு குடியுரிமை உண்டு. ஆனால், இலங்கையிலிருந்து வந்தவர்கள் இந்துக்களாக இருந்த போதிலும் அவர்கள் தமிழர்கள், திராவிடர்கள், சூத்திர இந்துக்கள். பார்ப்பனர்களின் பார்வையில் கீழானவர்கள். அதனால்தானே ஈழத் தமிழர்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டது. எனவே மோடி – அமித்ஷா கும்பலை தீண்டாமை குற்றத்திற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

குடியுரிமை என்பது அனைத்து உரிமைகளுக்கும் தாய். குடியுரிமை இல்லை என்றால் வாக்குரிமை, கல்வி, அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட வேறு எந்த உரிமைகளையும் சலுகைகளையும் பெற முடியாது. ஆப்பிரிக்க அடிமைகளைப் போல முகாம்களில்தான் வாழ நேரிடும். மோடி அமைக்கும் தடுப்பு முகாம்கள் தீண்டாமைச் சேரிகளாகவே இருக்கும். அங்கே கண்ணியமாக வாழ முடியுமா?

மன்னர் ஆட்சிக் காலத்தில் குடியுரிமை இல்லையா? ஆங்கிலேயர் காலத்தில் குடியுரிமை இல்லையா? அந்தக் காலத்தில்கூட அகதி முகாம்கள் அமைக்கப்பட வில்லையே? காட்டைத் திருத்தி, நாட்டைத் திருத்தி, இம்மண்ணை வளப்படுத்திய பூர்வகுடி மக்களாகிய நம்மிடம் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு மாடுகள் மேய்த்துக் கொண்டு இந்தியாவிற்கு வந்த ஆரியப் பார்ப்பனக் கூட்டம் குடியுரிமைக்கான ஆதாரத்தைக் கேட்கிறது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்குத்தானே இச்சட்டம் பொருந்தும் என்கின்றனர் ஒரு சிலர். யாராய் இருந்தால் என்ன? யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதானே நமது மரபு. ஆப்ரிக்காவிலே, பாலஸ்தீனத்திலே, டெல்லியிலே, தூத்துக்குடியிலே என பாதிப்பு, எங்கே, யாருக்கு என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பதுதானே மனித மாண்பு.

அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம் சமத்துவ சமுதாயம். இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு. அனைவரையும் கண்ணியமாக நடத்த வேண்டும். இதுதான் அரசமைப்புச் சட்டத்தின் அறநெறி (constitution morality). சபரிமலை வழக்கில் நீதிபதி சந்திரசூட் இதை வலியறுத்துகிறார். ஒருசிலர் பாகிஸ்தானோடு இந்தியாவை ஒப்பிடுகின்றனர். பாகிஸ்தானில் அரசு மதம் இஸ்லாம். அதனோடு மதச்சார்பற்ற இந்தியாவை ஒப்பிடுவது தவறானது. மதச்சார்பற்ற  அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளோடு ஒப்பிடுவதுதானே சரியாக இருக்க முடியும். அதை விடுத்து பாகிஸ்தானோடு ஒப்பிடுவது இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உருவாக்க மட்டுமே உதவும்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் தன்னை ஒரு இஸ்லாமிய நாடாக அறிவித்துக் கொண்டது. ஆனால் இந்தியா மதச் சாற்பற்ற நாடாக அறிவித்தது. இங்கு அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்பதால்தான் பெரும் எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் இந்தியாவையே தேர்வு செய்தனர். அன்று மதச்சார்பின்மை என்ற சர்க்கரையைக் காட்டிவிட்டு இன்று இந்து ராஷ்டிரம் என்ற நஞ்சைக் கக்குகிறார்கள். அன்றே நஞ்சைக் காட்டி இருந்தால் அவர்கள் தனியாகச் சென்றிருப்பார்களே?

காஷ்மீரிகளுக்கு கொடுத்த வாக்ககுறுதி என்னவாயிற்று என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே!

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு இவற்றுக்கிடையே தொடர்பு கிடையாது. இவை தனித்தனியானவை என்கிறது பா.ஜ.க. கும்பல். இது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பாகும். குடியுரிமைச் சட்டப் பிரிவு 3, 4-ன் படி மாவட்ட, மாநில, தேசிய அளவில் குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்படும். முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR). பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC). இந்தப் பட்டியலில் உள்ள நபர்கள் மீது சந்தேகம் எழுந்தால் அதற்கான பட்டியல் ஒன்றை தயாரித்து வெளியிடுவார்கள். அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தாங்கள் இந்தியக் குடிமக்கள்தான் என்பதை ஆவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும். தவறினால் குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி(CAA) அவர்கள் குடியுரிமையற்றவர்களாக அறிவிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்படுவார்கள்.

முஸ்லிம்கள், கிருத்தவர்கள், முற்போக்காளர்கள், கம்யூனிஸ்டுகள் இவர்களில் எவர் ஒருவரையும் ஆவணங்கள் சரி இல்லை என்று கூறி சந்தேகத்திற்குரிய நபராக அறிவிக்க முடியும்.

இங்கே இருக்கிற உங்களில் எத்தனை பேருக்கு பிறப்புச் சான்றிதழ் இருக்கிறது? கையை உயர்த்துங்கள். நான்கு பேருக்கு மட்டுமே இருக்கிறது. இந்த நான்கு பேருடைய தாய் – தந்தையருக்குப் பிறப்புச் சான்றிதழ் இருக்கிறதா? இல்லை. உங்களது தாய் – தந்தையருக்கே இல்லை என்றால் உங்களது தாத்தா – பாட்டிகளுக்கு மட்டும் எப்படி இருக்கும்? எனவே உரிய ஆவணங்கள் உங்களிடம் இல்லை எனக்கூறி உங்களை சந்தேகத்திற்குரிய நபராக அறிவிப்பார்கள். 90 நாட்களுக்குள் உரிய ஆவணங்களைக் கொண்டு நீங்கள் நிரூபிக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் நிரூபித்தாலும் பா.ஜ.க. வினர் யாரேனும் ஆட்சேபனை தெரிவித்தால் 30 நாட்களில் மறு விசாரைணக்கு உட்படுத்தப்படுவீர்கள். அதன் பிறகு நீங்கள் மாவட்டப் பதிவாளர், ஆணையம், நீதிமன்றம் என இங்கும் அங்கும் ஓட வேண்டும். இப்படி ஓடி ஓடியே உங்களது வாழ்க்கையும் முடிந்து விடும். பிறகு நீங்கள் எங்கே வாழ முடியும்? உங்களது வாரிசுகள்தான் எங்கே செல்ல முடியும்?

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வந்த போது இதுதானே நடந்தது. அசாமில் வாழுகின்ற மூன்று கோடியே முப்பது இலட்சம் பேரில் பத்தொன்பது இலட்சம் பேர் குடியுரிமை அற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். அதில் 12 இலட்சம் பேர் இந்துக்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி இந்த 12 இலட்சம் பேர் குடியுரிமை பெற்று விடுவார்கள். இந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஒரு முக்கிய நோக்கம். மீதி 7 இலட்சம் பேர் எங்கே செல்வார்கள்? அரசு பதவி வகித்தவர்கள்கூட இதில் இருக்கிறார்களே. இவர்கள் இப்பொழுது இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க.

படிக்க:
சீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்
பீமா கொரேகான் : செயல்பாட்டாளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல் !

மக்கள் மிகப்பெரிய பேராபத்தில் உள்ளனர். இதற்குப் பின்னால் ஓடினால் வேறு எதையும் நாம் செய்ய முடியாது. வேலை வாய்ப்பு, கல்வி, விவசாயம் உள்ளிட்ட நமது வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் குறித்து எதுவும் பேச முடியாது. காவிகளின் நோக்கம் இந்து ராஷ்டிரம். முஸ்லீம்களுக்கு நாடு இருப்பது போல நமக்கு ஒரு நாடு வேண்டாமா என்கிறது ஆா்.எஸ்.எஸ். கும்பல். பிரான்சிலே இருப்பவன் பிரெஞ்சுக்காரன். அமெரிக்காவிலே இருப்பவன் அமெரிக்கன். ரசியாவிலே இருப்பவன் ரசியன் என்பது போல இந்தியாவிலே இருக்கும் நாம் இந்தியர்கள்தானே. ஆனால், இந்துக்கள் என்கிறது ஆா்.எஸ்.எஸ். கும்பல்.

வருணாசிரம – சனாதன தருமமே இந்து தருமம் என்கிறார் கோல்வாக்கர்.

மோடி – அமித்ஷா கொண்டு வந்திருக்கும் இந்தச் சட்டத்திருத்தம் முஸ்லீம்களுக்கு மட்டும் எதிரானதா? எல்லோருக்கும் எதிரானதா? பணமதிப்பிழப்பு கொண்டு வந்தபோது அது பணக்காரர்களுக்கு எதிரானது என்றார்கள். சாதாரண மக்களுக்கானது என்றார்கள். ஆனால், என்ன நடந்தது? அப்பாவி மக்கள்தான் வங்கி வாசலிலே வரிசையில் நின்றார்கள். உயிரிழந்தார்கள். அம்பானி, அதானி, ரஜினி, சசிகலா, ஓ.பி.எஸ். இவர்களா வரிசையில் நின்றார்கள்? அல்லது கார்ப்பரேட்டுகளின் தொழில்தான் இதனால் பாதிக்கப்பட்டதா? சிறு தொழில்கள்தானே முடங்கின. அதனால் நாம்தானே வேலை இழந்தோம்.

ஜி.எஸ்.டி.-யால் இந்து வணிகர்கள் பாதிக்கப்படவில்லையா? இந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லையா? நீட் தேர்வால் இந்து மாணவர்களுக்கு பாதிப்பில்லையா? அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற கோரிக்கையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர் மாணவர்களுக்கு அர்ச்சகர் வேலை மறுக்கப்படுவதால் இந்துக்கள் பாதிக்கப்படவில்லையா?  குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு என்பவை பணமதிப்பிழப்பு போன்றதுதான். இது மனித மதிப்பிழப்பு நடவடிக்கை. இதனால் முஸ்லீம்கள் மட்டுமல்ல சகல பிரிவினரும் பாதிக்கப்படுவார்கள்.

இஸ்லாமியர்களும், கிருத்தவர்களும் இந்த நாட்டிற்கு வேண்டாம் என்றால் அரபு பெட்ரோலை தவிர்த்து விட்டு நாம் மாட்டு வண்டியில்தான் போக வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட அயல் நாட்டினரின் செருப்பு, மைக், பைக், கார், போன் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தக் கூடாது. இட்லி தோசைதான் சுட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த அரசு சிறுபான்மையினருக்கு எதிரானது மட்டுமல்ல பெரும்பான்மையினருக்கும் எதிரானது. வருணாசிரமம் மீண்டும் கோலோச்சினால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மதுரை நீதிமன்றத்தில் பார்ப்பனர்களுக்கு என தனி குடிநீர் பானையும், மற்றவர்களுக்கு தனிப்பானையும் இருந்த காலம் மீண்டும் வரும்.

பார்ப்பனர் – பார்ப்னரல்லாதார் பிரச்சனையாக அது பரிணமிக்கும்.

வெளிநாட்டுத் தூதுவர்களில் 140 பேர், மாநில ஆளுநர்களில் 81% பேர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 90% பேர், உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 90% பேர் மற்றும் IB, RAW உள்ளிட்ட மிக முக்கியப் பதவிகளில் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். நாட்டின் மொத்த சொத்தில் பெரும் பகுதி குஜராத் பார்ப்பன – பனியா கும்பல் கையில்தான் உள்ளது. மோடி ஆட்சிக்காலத்தில் அம்பானியின் சொத்து பல மடங்கு உயர்ந்தது. சாமான்யர்களின் வாழ்நிலையோ தாழ்ந்து போனது. இது தொடர்ந்தால் இனி வரும் காலங்களில் குலத்தொழிலை செய்துதான் நாம் பிழைப்பு நடத்த வேண்டி வரும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும் போது குடியுரிமையற்றவர்களை அடைத்து வைக்க முகாம்கள் அமைக்க வேண்டும். இலட்சம் பேரை அடைத்து வைக்க முகாம்கள் அமைக்கவே ஒரு இலட்சத்து இருபத்து நாலாயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். அதன் பிறகு உணவு, பராமரிப்புச் செலவு. ஆணையங்கள் அமைக்க, நீதிமன்றங்கள் அமைக்க, அதற்கான கட்டடம், ஊழியர் சம்பளம் என ஒரு பெரும் தொகையை செலவழிக்க வேண்டும். தோராயமாக 15 இலட்சம் கோடி ரூபாய் தேவைப்படுமாம். இதற்கெல்லாம் என்ன செயயப்போகிறது அரசு? இதையும் சேர்த்துதான் நாம் சுமக்க வேண்டிவரும். நமது வாழ்க்கை மேலும் மோசமாகும்.

“ஈழத் தமிழர்கள் அந்நியர்களே” பாஜக-வின் பச்சை துரோகம்.

சட்டத்தைக் கொண்டு வந்ததும் அவர்கள்தான். நம்மைப் போராட வைத்ததும் அவர்கள்தான். அவர்களே நம்மைப் போராட வைத்து விட்டு இன்று நாம் போராடுவது குற்றம் என்கிறார்கள்.

மனித இடப்பெயர்வு உலகம் முழுதும் நடக்கிறது. ஆப்ரிக்காவிலிருந்துதான் மனித இனமே பல நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இடம் பெயர்ந்தவர்களை வெளியேற்றுவது என்று முடிவெடுத்து செயல்பட்டால் எல்லோரும் ஆப்ரிக்காவுக்குத்தான் செல்ல வேண்டும்.

குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு இவை மக்களுக்கு எதிரானவை. பணமதிப்பிழப்பின் போது அவர்களுக்குப் பின்னால் நாம் சென்றது போல் அல்லாமல் பெரியார் வழியில் ஒரு தாக்குதல் அரசியலை நாம் மேற்கொள்ள வேண்டும்.

2002-ல் குஜராத்தில் 3000 இஸ்லாமியர்களைப் படுகொலை செய்தார்கள். மௌனமாக இருந்தோம். கல்புர்கி, கௌரி லங்கேஷ், தபோல்கர், பன்சாரே போன்ற முற்போக்காளர்களைப் படுகொலை செய்தார்கள் வேடிக்கை பார்த்தோம். அடுத்து பொது சிவில் சட்டம், 2021-ல் இந்து ராஷ்டிரம் என எதிரி அடுத்தடுத்த தாக்குதலுக்குத் தயாராகிவிட்டான். நாமும் எதிரிகளுக்கு எதிராக குறிப்பாக சிறுபான்மையினர், பகுத்தறிவாளர்கள், முற்போக்காளர்கள் கம்யூனிஸ்டுகள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என அனைவரும் ஒன்றிணைவோம். ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட எதிரிகளை வீழ்த்தவில்லை என்றால் அவர்கள் அமைக்கப் போகும் இந்து ராஷ்டிரத்தில் நாம் இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் வாழ நேரிடும். எனவே இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக அணி திரள்வோம்! முன்னேறுவோம்!

நன்றி, வணக்கம்!


உரை : சே.வாஞ்சிநாதன்.

தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க