குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த டிச-29 அன்று சென்னை பெசன்ட் நகரில் NO CAA, NO NRC, NO NPR என்ற வாசகங்களுடன் கோலம் போட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவரான காயத்ரி கந்தாதே என்பவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கொளுத்திப் போட்டிருக்கிறார், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.

ஹெச்.ராஜா, அர்ஜூன் சம்பத், கோலாகல சீனிவாசன் போன்றவர்கள் இவ்வாறு கொளுத்தி போட்டிருந்தால் கூட, சங்கிகளோட வேலையே இதுதானே என்று சட்டை செய்யாமல் கடந்து போயிருக்கலாம். போலீசு தரப்பில் வழங்கப்படும் வழக்கமான அறிக்கையாகக்கூட இல்லாமல், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி போலீஸ் கமிசனரே நேரில் தோன்றி பேசியிருக்கிறார். காயத்ரி கந்தாதேவின் முகநூல் பக்கத்தில் அவரே பதிவிட்டிருந்த ஆதாரங்களைக் காட்டியும், சில வீடியோ காட்சிகளை போட்டுக்காட்டியும் பத்திரிகையாளர்களிடம் விளக்கியிருக்கிறார் கமிஷனர்.

ஹெச்.ராஜாவும், ராகவன்களும் பேச வேண்டிய டயலாக்குகளை பிபின் ராவத்தும், விஸ்வநாதன்களும் பேச தொடங்கிவிட்டார்களோ..? என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது !

பத்திரிகையாளர்களிடம் அவர் கொடுத்த விளக்கத்தில், “அவர்களுக்கு பாகிஸ்தான் அமைப்புகளோடு தொடர்பு இருக்கிறது; அவர்கள் பொது இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கோலம் போட்டார்கள்; ஒரு வீட்டின் முன் ஏற்கெனவே போடப்பட்டிருந்த கோலத்தின் அருகே NO CAA, NO NRC, NO NPR போன்ற வாசகங்களை இவர்கள் எழுதியுள்ளார்கள்; இதனை தட்டிக்கேட்ட அந்த வீட்டின் உரிமையாளருடன் இவர்கள் சண்டையிட்டார்கள்… இது தொடர்பான புகாரின் பேரில்தான் அந்த 8 பேர் கைது செய்யப்பட்டார்கள்” என்கிறார் அவர். மிக முக்கியமாக, கோலம் போட்டதற்காக போலீசு கைது செய்தது என பேசுவது சரியல்ல என்பதை அழுத்தம் கொடுத்து பேசி, அதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

படிக்க:
பாபர் மசூதி இடிப்பு வழக்கு : மறுக்கப்படும் நீதி !
♦ CAA எதிர்ப்புக் கோலம் : கருத்துரிமையை காலில் போட்டு மிதிக்கும் தமிழகப் போலீசு !

பெசன்ட் நகரில் கோலம் போட்ட காயத்ரிக்கு, பாகிஸ்தான் ‘கனெக்சன்’ இருப்பதாக ஏ.கே.விஸ்வநாதன் குறிப்பிடும் அமைப்பான “Bytes for all” என்பது, இணைய சுதந்திரத்துக்கான அமைப்பு. பாகிஸ்தானில் இருப்பவன் எல்லாம் தீவிரவாதிகள் என்று ராம ரவிக்குமார் போன்றோர் நேற்றுவரை தொலைக்காட்சி விவாதங்களில் பேசி வந்ததைத்தான், இன்று போலீசாரே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி பேசத்தொடங்கியிருக்கின்றனர்.

இதே விவகாரம் தொடர்பாக ஜன-1 அன்று வெளியான தமிழ் இந்து நாளிதழ், கோலம் போடுவது தொடர்பாகக் கைது செய்யப்பட்டது தொடர்பான போலீசு விளக்கத்தை செய்தியாக  வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தியின் தலைப்பாக, “திமுக-வினர் வீட்டில் கோலம் போட எந்தத் தடையும் இல்லை – காவல் துறை அதிகாரிகள் தகவல்” என்று விஷமத்தனமான வகையில் தலைப்பிட்டிருந்தது. போலீசு பொதுவாகக் கொடுத்த விளக்கத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில்  இந்தத் தலைப்பை வைத்துள்ளது தமிழ் இந்து.

இது ஏதோ, கோலம் போடுவது தொடர்பான பிரச்சினை என்பதாகவும், இந்தப் போராட்டம் தி.மு.க.-வினரால் மட்டுமே நடத்தப்படும் போராட்டம் என்பதாகவும் பொருள்படும் வண்ணம் தலைப்பைப் போட்டு பாஜகவின் தமிழக நிகழ்ச்சிநிரலுக்கு ஜிங்ஞ்சா போட்டிருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், அதனைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு என்ற மோடி – அமித்ஷா கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நாடெங்கிலும் நடைபெற்றுவரும் போராட்டத்தின் தொடர்ச்சிதான் பெசன்ட்நகரில் மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் தொடங்கிவைத்த கோலம் போடும் போராட்டம். தீவிரவாதிகளைப் போல, மாணவர்களை போலீசு நடத்திய விதத்தை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சியினரும், ஜனநாயக சக்திகளும் கண்டித்த பின்னரே அவர்களை போலீசு நிலையத்தோடு, விடுவித்தது போலீசு.

8 மாணவர்களோடு, பெசண்ட் நகரோடு முடிந்திருக்க வேண்டிய விவகாரம் இன்று தமிழகமெங்கும் மக்கள் போராட்டமாக மாறியிருப்பதை கண்டுதான் இவர்கள் அலறுகிறார்கள். அந்த செய்தியாளர் சந்திப்பில் ஆதாரம் என்று சம்பந்தப்பட்ட நபர்கள் யாரும் இல்லாத ஒரு காணொளியைக் காட்டியும், பாகிஸ்தான் பூச்சாண்டியைக் காட்டியும் பிறரை பயமுறுத்த எண்ணுகிறார்கள்.

படிக்க:
வீதி தோறும் என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டக் கோலங்கள் !
♦ அமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா ?

மார்கழி மாதம் கோலம் போடுவது ஐ.பி.சி.க்குள் அடங்குமா? கோலத்தை தெருவில் போட்டார்களா? வீட்டில் போட்டார்களா? என்பதா பிரச்சினை?

அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பான வகையில், மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாமானிய மக்கள் தங்களது எதிர்ப்பை – மாற்றுக்கருத்தை முன்வைக்கும் உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதுதானே இங்கே பிரச்சினை.

பாகிஸ்தான் கணெக்சன் எல்லாம் ஒருபக்கம் கிடக்கட்டும்; தமிழக மக்கள் தங்கள் சொந்தக் கைக்காசை போட்டு … தமது வீட்டுக்கு எதிரிலேயே இருக்கக்கூடிய ஒரு அண்ணாச்சி கடையில் கோலமாவை வாங்கி வந்து … ஏதோ தமக்கு தெரிந்த நாலு புள்ளி கோலத்தை, தன் வீட்டு வாசலில் போட்டு … கோலத்துக்கு நடுவில் ”NO CAA, NO NRC, NO NPR ” என்று எழுதுகிறார்கள் எனில் போலீசார் அமைதியாக இருந்துவிடுவார்களா? கோலம் போட்ட பத்தே நிமிடத்தில் ஏட்டய்யாவுக்கு போட்டியா ஏ.சி., டி.சி. ஐயாக்கள் அவர்கள் வீட்டு கதவை தட்ட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? அப்படிச் செய்வோம் என்று கூறி மிரட்டவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பு !

மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டமாகட்டும்; அடுத்தடுத்து அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ள என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற நடவடிக்கைகளாகட்டும் இவையனைத்தும் அரசியல் சாசனத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குபவை; இட்லரின் இனவழிப்பு நடவடிக்கைக்கு சற்றும் குறைவில்லாதவை என்று அறிவுத்துறையினரும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

சாமான்யனின் வாழ்வுரிமையை பறித்து நாடற்றவனாக மாற்றப்படும் அபாயத்தை எதிர்த்து நிற்கும் உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதுதானே இங்கே எழுப்பப்படும் கேள்வி.

இங்கே அரசியல் சாசனத்தை குப்பையில் வீசிவிட்டு, தமது இந்துராஷ்டிர செயல் தந்திரத்தை கையில் வைத்துக்கொண்டு செயல்படும் அமித்ஷா – மோடி கும்பலின் நடவடிக்கைகள்தானே சட்டவிரோதமானவை. நாட்டின் அமைதியை குலைத்து மக்களை போராடத் தூண்டிவிடும் குற்றவாளிகளும் அவர்கள்தானே?

நாட்டின் குடிமகனுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளைப் பயன்படுத்தித்தான், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மாற்றுக் கருத்தை முன்வைத்தாலே தேசவிரோதியென்று முத்திரைகுத்தி கைது செய்து வருகிறது, மோடி – அமித்ஷா கும்பல். இக்கும்பலின் விசுவாசமிக்க அடிமை எடப்பாடி அரசு, தன் பங்கிற்கு தமிழகத்தில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு மக்கள் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது.

”அடிமை எடப்பாடி அரசு” என்ற வார்த்தைக்கும் கீழான தமிழ்ச்சொல்லைத் தேடவைத்துவிட்டார், ஏ.கே.விஸ்வநாதன்.


இளங்கதிர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க