சென்னையில் குடியுரிமை திருத்தச்சட்டம், குடிமக்கள் பதிவேடு, மக்கள்தொகை பதிவேடு ஆகிய பாசிச சட்டங்களுக்குக் கோலம் போட்டு எதிர்ப்புத் தெரிவித்த எட்டு பெண்களையும், அவர்களைப் பார்க்கச் சென்ற மூன்று வழக்குரைஞர்களையும் கைது செய்த காவல்துறையின் செயல் மிக மிகக் கீழ்த்தரமான அராஜகச்செயல் மட்டுமல்ல, அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயல். இதனை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழகத்தில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியல்ல, முழுக்க முழுக்கப் போலீசு ஆட்சி என்பதே உண்மை. கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக குடியுரிமைத் திருத்தச்சட்டம், குடிமக்கள் பதிவேடு, மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு அமைதியாக எதிர்ப்புத் தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் மீது பல பத்தாயிரக்கணக்கான வழக்குகள் போடப்படுகின்றன. அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமையை அராஜகமாகவும், சட்டவிரோதமாகவும் முடக்குகிறது தமிழகக் காவல் துறை. அரங்க உரிமையாளர்களை மிரட்டி கூட்டங்கள் நடத்துவதைத் தடுக்கிறது. காவல் துறையின் இத்தகைய போக்குகளுக்கு எதிராக பல உச்ச நீதிமன்ற, உயர்நீதி மன்றத் தீர்ப்புகள் இருக்கும்போது, அவற்றைக் கிஞ்சித்தும் மதிக்காமல் செயல்படுகின்றனர்.
கடந்த 13-ம் தேதி அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய அதிகாரிகள் கருத்துரிமையை மதித்து நடக்க வேண்டுமெனவும், அமைதியாகப் போராடுபவர்கள் மீது எவ்வித வன்முறையையும் ஏவக்கூடாது எனவும் மனித உரிமை சாசனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதை சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளது.
படிக்க :
♦ வீதிதோறும் என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டக் கோலங்கள் !
♦ உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் ?
எனவே, தமிழகக்காவல் துறை இத்தகைய சட்டவிரோத அடக்குமுறை நடவடிக்கைகளை உடனே கைவிட வேண்டுமெனவும், போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். தமிழகக் காவல்துறையின் இந்த அத்துமீறல்கள் குறித்து உயர்நீதி மன்றம் தானே முன் வந்து வழக்குப் பதிந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து கருத்துரிமையை நிலைநாட்டவேண்டும். அனைத்து அரசியல் அமைப்புகளும் கருத்துரிமை காக்க இணைந்து போராடவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
இவண்,
காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.