பாபர் மசூதி இடிப்பு வழக்கு : மறுக்கப்படும் நீதி !

பாபர் மசூதி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கக்கூடிய சட்டமீறல்”என நீதிபதிகள் ஒருமனதாகக் குறிப்பிட்டதையடுத்து, அக்குற்றச் செயலும், அது தொடர்பான வழக்கும் மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 1980- பிறகு பிறந்த இளம் தலைமுறையினருக்கு பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவரம் தெரிந்திருந்தாலும், அம்மசூதி சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது தொடர்பாக யார் யார் மீதெல்லாம் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது, தற்பொழுது அவ்வழக்கின் நிலை என்ன என்பதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அவ்வழக்கு ஏறத்தாழ மறக்கடிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்றே கூறலாம்.

இட்லரின் நாஜி கும்பல் நடத்திய குற்றச் செயல்களுக்கு இணையான பாபர் மசூதி இடிப்புக் குற்றத்தின் மூளையாகவும் தளபதியாகவும் செயல்பட்டவர் எல்.கே.அத்வானி. அவர் இக்குற்றத்திற்காக நீதிமன்றக் கூண்டில்கூட நிறுத்தப்பட்டதில்லை என்பது ஒருபுறமிருக்க, அக்குற்றச் செயலை நடத்தி முடித்த ஒரு சில ஆண்டுகளிலேயே உள்துறை அமைச்சராகவும் இந்தியத் துணைப் பிரதமராகவும் அமர்ந்தார்.

அவர் மட்டுமல்ல, இக்குற்றச் செயலின் துணைத் தளபதிகளாகச் செயல்பட்ட முரளி மனோகர் ஜோஷியும் உமா பாரதியும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மைய அமைச்சர்களாகப் பதவி வகித்தனர்.

முதல்வருக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ். குண்டர் படை மசூதியை இடித்துத் தள்ளுவதற்கு முழுப் பாதுகாப்பு கொடுத்த கல்யாண்சிங், மோடியின் ஆட்சியில் இராஜஸ்தான் மாநில ஆளுநராகக் கௌரவிக்கப்பட்டார்.

பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த பஜ்ரங் தள் தலைவரான வினய் கத்தியார் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மற்றும் பெண் சாமியார் ரிதம்பரா, விஷ்ணு ஹரி டால்மியா, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், ராம்விலாஸ் வேதாந்தி, சதீஷ் பிரதான், பைகுந்த் லால் ஷர்மா, சம்பத் ராய் பன்ஸால், நிருத்யா கோபால் தாஸ் ஆகியோர் சங்கப் பரிவார அமைப்பிலும் பொதுவெளியிலும் கௌரவமிக்க தலைவர்களாக வலம் வந்தனர், வந்து கொண்டுள்ளனர்.

பாபர் மசூதி இடிப்புக் குற்றத்திற்குத் தண்டனை அளிப்பது என்றால், அச்சமயத்தில் சங்கப் பரிவாரம் மற்றும் பா.ஜ.க.வில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த அனைவரையுமே தண்டிக்க வேண்டியிருக்கும். மேலும், சங்கப் பரிவார அமைப்புகள் அனைத்தையுமே தடை செய்ய வேண்டியிருக்கும். அப்பொழுது இந்தியப் பிரதமராக இருந்த நரசிம்மராவிற்கும்கூட இக்குற்றத்தில் குறிப்பிடத்தக்க, மறைமுகமான பங்கிருந்தது.

எனினும், அத்வானி உள்ளிட்ட இப்பதினான்கு பேரும் அக்குற்றத்தில் நேரடியாகப் பங்குகொண்ட முதன்மையான சதிகாரர்கள் என்பதற்கு அசைக்கமுடியாத நிரூபணங்களும் சாட்சிகளும் இன்றும்கூட பொதுவெளியில் காணக் கிடைக்கின்றன.

1989- பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவிலைக் கட்டும் திட்டத்தை முன்வைத்து ரத யாத்திரை நடத்திய அத்வானி, நான் அமைதி யாத்திரை நடத்தவில்லை” என வெளிப்படையாகவே பிரகடனம் செய்தார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங், மசூதி இடிக்கப்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக பத்திரிக்கையாளர் களிடம், கோவிலைக் கட்டுவதற்குத்தான் தடை உள்ளது, மசூதியை இடிப்பதற்கு அல்ல” என வெளிப்படையாகவே கூறினார்.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டு இவர்கள் அனைவரும் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, மசூதிக்குச் சற்றுத் தொலைவில் மேடை போட்டு அமர்ந்துகொண்டு, மசூதி இடிக்கப்படுவதை அணுஅணுவாக ரசித்துக் கொண்டாடினார்கள். குறிப்பாக, உமா பாரதி அச்சமயத்தில், இன்னும் ஒரு போடு போடு” என வெறித்தனமாகக் கூச்சல் போட்டு, கடப்பாரையால் மசூதியை இடித்துக் கொண்டிருந்த வானரப் பட்டாளங்களுக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார்.

மசூதி இடிக்கப்பட்ட குற்றச் செயல் குறித்து சி.பி.ஐ. மற்றும் லிபரான் கமிசன் நடத்திய விசாரணைகளில், மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் வினய் கத்தியார் வீட்டில் நடந்த இரகசியக் கூட்டத்தில்தான் மசூதியை இடிக்கும் சதித் திட்டம் தீட்டப்பட்டது; அக்கூட்டத்தில் அத்வானி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்ற உண்மைகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

பாபர் மசூதி இடிப்பு : திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட வன்முறை.

மசூதி இடிக்கப்பட்டபோது உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங், மசூதியை இடிக்கும் கரசேவகர்கள் மீது போலீசும் துணை இராணுவப் படையும் தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டு எவ்விதமான பலப் பிரயோகத்தையும் பயன்படுத்திவிடாதபடித் தடுத்து, மசூதி இடிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்தினார் என்பதும் லிபரான் கமிசனின் விசாரணையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கைப்புண் போல, இவ்வளவு தெளிவான ஆதாரங்களும் சாட்சியங்களும் இருந்தும் மசூதி இடிக்கப்பட்ட குற்ற வழக்கு இன்னும் விசாரணை நீதிமன்றத்தில்கூட (trial court) முடிவடையாமல், 27 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, கடந்த 27 ஆண்டுகளில், அத்வானி உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளைக் கடுமையான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கும் சதித்தனங்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. இதற்கு அரசு, சி.பி.ஐ., உள்ளிட்ட அதிகார அமைப்புகள் மட்டுமல்ல, நீதித்துறையும் உடந்தையாகச் செயல்பட்டிருக்கிறது என்பதுதான் கவனம் கொள்ளத்தக்கது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடனேயே, அக்குற்றம் தொடர்பாக ராம ஜென்மபூமி போலீசு நிலையத்தில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. முதல் தகவல் அறிக்கை பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக, முகம் தெரியாத இலட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது சதிக் குற்றச்சாட்டை சுமத்தியது. இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில் அத்வானி, ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், அசோக் சிங்கால் உள்ளிட்டோர் மீது கலவரத்தைத் தூண்டிவிடும்படி பேசினார்கள் என்ற மொன்னையான குற்றச்சாட்டு மட்டுமே சுமத்தப்பட்டது.

இடிக்கப்படும் பாபர் மசூதி. (கோப்புப் படம்)

இவ்விரண்டு வழக்குகளில், முகந்தெரியாத கரசேவகர்கள் மீது சுமத்தப்பட்ட சதிக் குற்றச்சாட்டு வழக்கு சி.பி.ஐ. வசமும், அத்வானி உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட வழக்கு உ.பி. மாநிலக் குற்றப்பிரிவு போலீசிடமும் ஒப்படைக்கப்பட்டன. இந்த இரண்டு வழக்குகளுக்கு அப்பால் மேலும் 47 வழக்குகள் பதியப்பட்டன.

முதலிரண்டு வழக்குகளை விசாரிக்க, லக்னோவிலும், ரேபரேலியிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இதன் பின்னர் அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கும் சி.பி.ஐ.-யிடம் ஒப்படைக்கப்பட்டு, அவ்வழக்கு விசாரணையும் ரேபரேலி நீதிமன்றத்திலிருந்து லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. லக்னோ நீதிமன்றத்தில்தான் அத்வானி உள்ளிட்டோர் மீது சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அத்வானியும் அவரது கூட்டாளிகளும், தம் மீதான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் இன்றி, லக்னோ நீதிமன்றத்திற்கு மாற்றியது சட்ட விரோதமானது” என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க, உயர் நீதிமன்றமும் அந்த ஓட்டையை ஏற்றுக்கொண்டு லக்னோ நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டதை ரத்து செய்தது. அதேசமயம், உ.பி. மாநில அரசு புதிதாக ஒரு நிர்வாக ஆணையை வெளியிட்டு வழக்கை லக்னோ நீதிமன்றத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் கூறியது.

இத்தீர்ப்பு வெளிவந்தபோது (2001) அத்வானி மைய அரசில் உள்துறை அமைச்சராக இருந்தார். சி.பி.ஐ., பிரதமர் வாஜ்பாயியின் வசமிருந்தது. உ.பி.யிலோ பா.ஜ.க.-  பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் ராஜ்நாத் சிங் முதல்வராக இருந்தார். இக்கூட்டணி அரசு புதிய நிர்வாக ஆணையை வெளியிட மறுக்க, லக்னோ சிறப்பு நீதிமன்றம் அத்வானி உள்ளிட்டோர் மீது போடப்பட்டிருந்த சதிக் குற்றச்சாட்டை ரத்து செய்தது. ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி உள்ளிட்டோர் மீது கலவரத்தைத் தூண்டியதாகப் போடப்பட்டிருந்த வழக்கிற்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டது. எனினும், அந்நீதிமன்றம் 2003- அத்வானியை மட்டும் வழக்கிலிருந்து விடுவித்தது.

இடிக்கப்படும் பாபர் மசூதி. (கோப்புப் படம்)

இந்நிலையில் இவ்வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்கள், அலகாபாத் உயர் நீதிமன்றம் என அலைக்கழிக்கப்பட்டு, இறுதியாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், அனைத்துக் குற்றவாளிகளுக்கும் சதியில் பங்கிருப்பதால், இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே குற்றப்பத்திரிகையின் கீழ் கொண்டுவந்து, லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிடக் கோரி” 2012- உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வழக்குத் தொடுத்தது.

இந்த முக்கியமான வழக்கைக்கூட விரைவாக விசாரிக்காமல், ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான், அத்வானி உள்ளிட்டோர் மீது மீண்டும் சதிக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரிக்கவும்; அடுத்த இரண்டாண்டுகளில் இவ்வழக்கை முடிக்க வேண்டுமென்றும் ஏப்.2017 உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஏப்ரல், 2019 இவ்வழக்கு முடிவுக்கு வரவில்லை. காரணம், குற்றவாளிகளுள் ஒருவரான கல்யாண் சிங் இராஜஸ்தான் மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்ததால், அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை. அவரது பதவிக்காலம் முடிந்த பிறகுதான் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இத்தாமதம் காரணமாக, விசாரணையை முடித்துத் தீர்ப்பு வழங்குவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

1992- நடந்த ஒரு அசாதாரணமான குற்றச்செயலுக்கு 25 ஆண்டுகள் கழித்து, ஏப்ரல் 2017- குற்றப்பத்திரிக்கையையும் விசாரணை நீதிமன்றத்தையும் இறுதியாக முடிவு செய்ய முடிகிறதென்றால், இந்த இழுத்தடிப்பை நீதி பரிபாலண முறையின் தோல்வி என்று மட்டும் பார்க்க முடியாது. பார்ப்பன பாசிஸ்டுகளின் அல்லக்கையாக நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவதையும் இந்த இழுத்தடிப்பு எடுத்துக் காட்டுகிறது.

அத்வானியின் ‘ரத்த யாத்திரை!

ஒரு தொன்மை வாய்ந்த மசூதியைச் சட்டவிரோதமாக இடித்துவிட்டதாக மட்டும் இவ்வழக்கைச் சுருக்கிவிட முடியாது. மசூதியை இடிப்பதற்கு முன்பாக அத்வானி நடத்திய ரத யாத்திரையின்போதும், மசூதி இடிக்கப்பட்ட பிறகு நடந்த மும்பய்க் கலவரத்தின்போதும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள், குறிப்பாக முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டன. ராம ஜென்மபூமி என்ற இந்து மதவெறி பாசிச அரசியலை முன்வைத்துத்தான் மைய, மாநில ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது, பா.ஜ.க. மேலும், மசூதி இடிப்புதான் மும்பய்க் குண்டுவெடிப்பு உள்ளிட்ட முஸ்லிம் தீவிரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாக அமைந்தது. இப்படிபட்டதொரு பின்னணி கொண்ட வழக்கை 27 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதும் மன்னிக்கமுடியாத கிரிமினல் குற்றம்தான்.

படிக்க:
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்
இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்

நீதி வழங்க தாமதிப்பது, நீதி மறுக்கப்படுவதற்குச் சமமானது எனக் கூறப்படுவதன்படி, இவ்வழக்கை இருபத்தேழு ஆண்டுகள் இழுத்தடித்ததன் மூலம் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்றே கொள்ளலாம்.

இப்படிப்பட்ட நிலையிலும்கூட, மசூதி இடிப்பு வழக்கிலாவது நீதி கிடைக்காதா என முஸ்லிம்கள் உள்ளிட்டுப் பலரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். அந்நம்பிக்கைக்குச் சிறப்பு நீதிமன்றம் நியாயம் செய்யுமா அல்லது பாபர் மசூதி நில உரிமை வழக்கில் முஸ்லிம்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்குமாறு உத்தரவிட்டு, உச்ச நீதிமன்றம் ஒரு மோசடியை நடத்தியிருப்பது போல, இந்த வழக்கிலும் இந்திய முஸ்லிம்களுக்குத் துரோகம் இழைக்கப்படுமா?

அழகு

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க