நா. வானமாமலை

ந்திய வரலாறு என்பது வேத – புராண – இதிகாசங்களின் வரலாறு என்று கூக்குரலிட்டு வருகிறது இந்துத்துவக் கும்பல். உண்மை வரலாற்றைத் திரித்து புராண இதிகாச கட்டுக்கதைகளை வரலாறாக மாற்றுவதற்காகவே வரலாறு, கல்வித்துறை துவங்கி கலைத்துறை வரையில் சங்க பரிவாரத்தினரை தலைமைப் பொறுப்பில் அமர வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக.

இத்தகைய காவி இருள் அடர்ந்திருக்கும் இன்றைய சூழலில், இந்த இருளை அகற்ற இன்று நம் கையில் போர்வாளாய் ஏந்த வேண்டிய கருத்தாயுதத்தை அம்பேத்கரும், பெரியாரும் வகுத்துத் தந்துள்ளனர். அவர்கள் மட்டுமின்றி இந்துத்துவவாதிகளின் பொய்யையும் புரட்டையும் அம்பலப்படுத்தும் விதமாக இந்திய சமூகத்தை வரலாற்றுரீதியாக ஆய்ந்து இந்துத்துவவாதிகளின், மனுவாதிகளின் பொய்யையும் புரட்டையும் பல்வேறு ஆய்வாளர்கள் தகர்த்தெறிந்துள்ளனர். அத்தகைய வரலாற்று ஆய்வாளர்களுல் முக்கியமானவர் பேராசிரியர் நா. வானமாமலை.

பண்டைய இந்தியாவின் நாத்திக மரபையும், பார்ப்பனியத்துக்கு எதிராக அது நடத்தி வந்த போரையும் மார்க்சிய ஒளியில் அன்றைய சமூக நிலைமைகளோடு இயைந்து இந்நூலில் விளக்கியுள்ளார், நா. வானமாமலை.

மார்க்சியப் பேரறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் “Indian Atheism” எனும் நூலில் இந்திய நாத்திக மரபு குறித்து அவர் எழுதியுள்ளவற்றில் அவர் விளக்காமல் விடுபட்ட பல்வேறு கூறுகளை மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் கூற்றுக்களை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளதாக இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் வானமாமலை.

பெரியாரின் 46-வது நினைவு நாளான இன்று இந்தத் தொடர் துவங்குவது தற்செயலான நிகழ்வாக இருந்தாலும், இந்துத்துவக் காரிருளை நீக்கவல்ல பேராயுதம் என்ற வகையில் இயல்பாகவே பொருந்தி வந்திருக்கிறது இந்நாள் !

ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களில் இந்தத் தொடர் வெளியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் !

தொடர்ந்து ஆதரவு தாருங்கள் !

நன்றி !

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 01

1. இந்தியத் தத்துவச் சிந்தனை முழுவதும் கடவுள் கொள்கையா?

”இந்தியாவின் தத்துவ சிந்தனை ஆன்மீக வாதத்தை, கடவுள் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது” என்ற நம்பிக்கையை கட்டுப்பாடாகப் பல தத்துவவாதிகளும், ஜகத் குருக்களும், புராணப் பிரசங்கிகளும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். உதாரணமாக எஸ். ராதாகிருஷ்ணன் (1) தமது இந்திய தத்துவம் என்னும் நூலில் கீழ்வருமாறு கூறுகிறார்: “இந்திய தத்துவம் ஆன்மீகவயமானது. அதன் உள்ளார்ந்த ஆன்மீக வலிமைதான், காலத்தை வென்று, வரலாற்றில் தோன்றிய ஆபத்துக்களை மீறி இந்தியா நிலைத்து நிற்பதற்குக் காரணம். ஆன்மீக நோக்கு தான் இந்திய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. இந்திய மனத்தின் திடகாத்திரமான ஆன்மீக சிந்தனைதான் அதன் பண்பாட்டையும், தத்துவத்தையும் வழிப்படுத்துகிறது. ஜீவான்ம, பரமான்ம ஐக்கியத்திற்கான சிந்தனைகளும், முயற்சிகளுமே ஆன்மீக நோக்குகளின் செயல்பாட்டு வெற்றிக்குக் காரணமாகும்.”

பேராசிரியர் நா. வானமாமலை

“இந்த ஆன்மீகச் சிந்தனையே, மே நாட்டு விமர்சன அறிவியல், பொருள்முதல்வாதச் சிந்தனைகளுக்கு முரண்பட்டு நிற்கிறது. அந்தராத்மாவின் குரலாக இந்தியச் சிந்தனை இருப்பும், வளர்ச்சியும் அடைந்துள்ளது. மே நாட்டுச் சிந்தனை விஞ்ஞானம், தருக்கம், மனிதாபிமானம் ஆகிய கருத்துக்களில் அழுத்தம் கொடுக்கிறது. இவையாவும் ‘மனத்தின்’ செயல்கள். மனத்தைவிட ஆழ்ந்த ஓருண்மை ‘ஆன்மா’. இதைப் பகுத்தறிவினாலோ, தருக்கங்களாலோ அறிய முடியாது. உள்ளுணர்வினால் தான் உணர முடியும். இந்துக்களுக்கு தத்துவக் கட்டமைப்பு என்பது உள்ளுணர்வு, அந்தராத்மாவின் செயல்களின் விளைவே. பகுத்தறிவினால் ஆன்மாவை அறிய முடியாது. இதனால்தான் இந்து தத்துவங்களைத் ’தரிசனங்கள்’ என்று அழைக்கிறோம். கடவுளை அறிவதென்பது அவராகவே ஆகிவிடுவதுதான். புற உலகிற்கு இச்செயலில் தொடர்பு எதுவும் இல்லை. மே நாட்டு அறிஞர்கள் விமர்சன அறிவைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கிழக்கத்திய ஞானிகள் படைப்பாக்கமுள்ள உள்ளுணர்வையே சார்ந்து நிற்கிறார்கள்.”

இவ்வாறு தருக்க முறைகளையும், அறிவியல் ஆராய்ச்சியையும் முக்கியமற்றவை என்று ஒதுக்கிவிட்டு, நிலையான, உண்மையான வாழ்க்கைக்கு கடவுளை நம்பி அவராகவே ஆகும் முயற்சியை மேற்கொள்ளுமாறு இந்திய தத்துவங்கள் போதிக்கின்றன என்று எஸ். ராதாகிருஷ்ணன் எழுதுகிறார். “இந்தியத் தத்துவங்கள் அனைத்து வாழ்க்கையின் மகத்தான உண்மையான கடவுளை (“One great fact of life God”) அறிவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.” “உபநிஷதங்களில் இலைமறை காயாகக் கூறப்பட்ட இந்த மகத்தான உண்மையை, பின்னர் தோன்றிய தத்துவங்களெல்லாம் விளக்கிக் கூறுவனவே. ஆன்மா கடவுள் பற்றிய சிந்தனையின் விளக்கவுரையாகவே பிற்கால இந்த தத்துவங்கள் விளங்குகின்றன.”

ராதாகிருஷ்ணன் எழுத்துக்களில் இருந்து இவ்வளவு விரிவாக மேற்கோள் கொடுக்க வேண்டியதன் அவசியம், அவர் எல்லா ஆன்மீகவாதிகளின் பிரதிநிதியாக மிக அழுத்தமாக அவருடைய கருத்தைச் சொல்லுகிறார் என்பதனால் தான்.

இக்கருத்து மிகவும் தைரியமாகவே வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ஆன்மீகவாதத்தின் மீது ராதாகிருஷ்ணன் கொண்டுள்ள வலுவான பிடிப்பு அவரைத் தம் கருத்துக்களைப் பயமில்லாமல் சொல்ல வைக்கிறது. ஏனெனில் தைத்திரிய உபநிஷதம் பின்வருமாறு கூறுகிறது:

“பிரம்மத்தின் ஆனந்தத்தை அறிந்தவன் எக்காலத்தும் பயப்பட மாட்டான்.” இதை நம்புகிறவர் அல்லவா ராதாகிருஷ்ணன்?

இக்கூற்றுக்கு இந்திய தத்துவங்களில் ஆதாரம் ஏதாவது ராதாகிருஷ்ணன் தருகிறாரா? இல்லையே!

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.

ராதாகிருஷ்ணன் சிலாகித்துப் பேசும் ‘உள்ளுணர்வு’ பற்றி குமரில்லப்பட்டர் எள்ளி நகையாடுகிறார். இவர் ஆதிசங்கரரின் குருவென்று கருதப்படுகிறார். இவரது காலம் 6-ம் நூற்றாண்டு. ராதாகிருஷ்ணனது ‘ஆன்மீகம்’, ‘கடவுள்’, உள்ளுணர்வு’ என்ற கருத்துக்கள் இந்தியத் தத்துவங்களில் ஒரு சிறுபான்மையினரின் கொள்கைகளே. சிந்தனை உலகிலேயே மிகவும் சிறப்பான தருக்கவாதத்தில் ‘கடவுள் இன்மை’க் கொள்கையை இந்திய தத்துவங்களில் பெரும்பாலானவை பேசுகின்றன.

இவ்வாறு நான் சொலவது திகைப்பூட்டுவதாக இருக்கலாம். ஆனால் நான் சொல்வதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. ‘கடவுள் இன்மை’க் கொள்கையைத் தான் தற்காலத்தில் ‘நாத்திகம்’ என்றழைக்கிறோம். இக்கொள்கை இந்தியத் தத்துவ வரலாற்றில் மிகவும் பழமையானது. நடுக்காலத்தில் கூட இக்கொள்கைக்காகப் போராடிய போராளிகள் இருந்தார்கள்.

வேதங்களை நம்பாமல், அவற்றை மறுத்துப் பேசியவர்களைப் பற்றி அந்நூல்களிலேயே சான்றுகள் உள்ளன. இவர்களை நாத்திகர் என வேதங்களை நம்பியவர்கள் அழைத்தார்கள். இவர்களை வேதப்பாடல்களை இயற்றிய கவிகள் ‘விதண்டாவாதிகள்’ என அழைத்தார்கள். ராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்கள் இவர்களைப் பற்றியப் பேசுகின்றன. அவை சாருவாகர், லோகாயதர், பூதவாதிகள் என்று இவர்களைக் குறிப்பிடும். இவர்கள் முரணற்ற நாத்திகவாதக் கொள்கையைக் கடைப்பிடித்தவர்கள். சாங்கியவர்கள் ‘பிரக்ருதி பிரதானம்’ என்ற கொள்கையுடையவர்கள். பிரக்ருதி என்ற பொருளில் இருந்துதான் அதன் இயக்க வளர்ச்சியால் புத்தி, சித்தம் முதலிய மனம் தொடர்பான இயல்புகள் தோன்றின என்று சாங்கியவாதிகள் நம்பினார்கள். அவர்களுடைய பண்டைத் தத்துவத்தில் படைப்பாளி என்ற கடவுளுக்கு இடம் கிடையாது. பொருளின் இயற்கையால் தான் உலகம் இயங்கி பரிணாம மாற்றம் அடைகிறது என்ற கருத்துத்தான் இருந்தது. இக்கொள்கைக்கு கடவுள் இல்லாத சாங்கியம் என்று பிற்கால ‘கடவுள் உண்டு’ என்று கூறிய தத்துவவாதிகள் பெயரிட்டழைத்தனர். அவர்கள் சாங்கியத்தில் கடவுளைப் புகுத்தி யேஸ்வரசாங்கியம் (கடவுளோடு கூடிய சாங்கியம்) என்றவோர் தத்துவத்தைப் படைத்தார்கள். பழமையான (பூர்வ) சாங்கியத்தில் கடவுள் கருத்து இல்லை. ஒரு தற்காலத் தத்துவாசிரியர் கூறுகிறார்: “புற உலகும், அக உலகும், பிரக்ருதி (பொருள்) என்ற வஸ்துவின் பரிணாம வளர்ச்சியின் விளைவுகளாகும், இச்செயல் தொடருக்கு பிரக்ருதிக்கு வெளியேயுள்ள எந்த சக்தியும் தேவை இல்லை.” எனவே சாங்கியம் பொருள் முதல்வாத அடிப்படையில் நாத்திகத்தைக் கொள்கையாகக் கொண்டிருந்தது.

ஆதி சங்கரர்

பண்டைய மீமாம்சகர்கள் இந்திய ஆன்மீகவாதத்தின் பரம விரோதிகள். பூர்வ மீமாம்சகர்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ள யக்ஞங்களை ஆதரிப்பவர்கள். இவை இனக்குழு சமுதாயத்தில் தோன்றிய மந்திர , மதச் சடங்குகள். மதச் சடங்குகளில் பல்வேறு தேவர்களை அவர்கள் வழிபட்டார்கள். ஒவ்வொரு யக்ஞத்திற்கும் ஒரு அதி தேவதை உண்டு. அவர்கள் அக்னி, வருணன், இந்திரன், வசுக்கள், வாயு முதலிய இயற்கைச் சக்திகள். இச்சக்திகளை மனித உருவம் கொடுத்து, படிமங்கள் இன்றியே அவர்கள் வழிபட்டார்கள். ‘ஒருவனே தேவன்’ என்ற கடவுள் கொள்கை அவர்களுடைய சிந்தனையில் இல்லை. பிற்காலத்தில் இனக்குழுக்கள் அழிக்கப்பட்டு, அரசுகள் தோற்றம் கொள்கிற காலத்தில் அரசர்களுக்காக யாகங்கள் செய்து, அரசர்களது புகழை வளர்க்க இவர்கள் புரோகிதர்களாக மாறினார்கள். அப்பொழுதும் பல தெய்வ வணக்கத்தை மேற்கொண்டு கடவுளை எதிர்த்தார்கள். இவர்களே பூர்வ மீமாம்சகர்கள். இவர்களுடைய கருத்துக்கள் வளர்ச்சியடைந்த நாத்திக சிந்தனையாகும்.

நியாய வைசேஷிகர்களுடைய நிலை சந்தேகத்துக்கு இடம் தருவது.

பௌத்தம் கடவுளையும் ஆன்மாவையும் மறுத்தது. ஜைனர்களுடைய கொள்கை சந்தேகமானது. எனினும் அவர்கள் தங்கள் சமயத்தைப் போதித்த 23 தீர்த்தங்கரர்களின் அறிவையே தெய்வமாகக் கருதினார்கள்.

படிக்க:
தயாராகிவிட்டது ‘சட்டவிரோத’ குடியேறிகளுக்கான தடுப்பு மையம் !
சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!

எனவே இந்திய நாத்திகம் பல்வேறு கொள்கைகளையுடைய பலவிதமான சமயக் கொள்கைகளை உடையவர்களோடு நேச உறவு கொண்டிருந்தது. இதிலிருந்துதான் அதன் பலவீனம் தோன்றுகிறது.

ஆனால் இந்திய நாத்திகர்களது பொதுவான தருக்கம் இதுதான். தவறான தருக்க முறைகளால் தான் ‘கடவுள்’ என்ற கருத்தையடைய முடியும். கடவுள் என்ற கொள்கை பொய்யான ஒரு நம்பிக்கையை நிஜம் என்று கருதுவது தான். இந்தப் பொய்யை, பொய் என்று நிரூபிப்பதே இந்திய நாத்திகத்தின் கடமையாக இருந்தது.

கடவுள் இல்லையென்றால், கடவுள் என்ற பேரின் மீது தோன்றி வளர்ந்துள்ள, அடிமரம், கிளைகள் போன்ற வேறு நம்பிக்கைகளையும் உதறித்தள்ளியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கடவுள் என்ற ஒரே ஒரு நம்பிக்கையைப் பொய் என்று நிரூபிப்பதிலேயே அவர்களது சிந்தனை முயற்சி யெல்லாம் குவிக்கப்பட்டிருந்தது. வேறு நம்பிக்கைகளான, நரகம், சுவர்க்கம், விதி என்பனவற்றை அவர்கள் மறுக்கவில்லை. இதற்கு ஒரு உதாரணம், கடவுளை மறுத்த மஹாயான பௌத்த விகாரைகளின் (பௌத்த மடங்களில்) சுவர்களில் பற்பல பேய்கள், பிசாசுகள், ஆவிகள், சிறு தெய்வங்கள், புத்தர்கள் ஆகியவற்றின் சிலைகளைக் காணலாம். இந்த மடங்களில் வாழ்ந்த பௌத்த பிட்சுக்கள் தாம், கடவுளை மறுக்கிற மிகவும் சிக்கலான தருக்க வாதங்களை உருவாக்கினார்கள்.

நாத்திகத்தை ஒப்புக்கொள்கிற தத்துவவாதிகளின் நோக்கங்கள் வெவ்வேறாயிருக்கலாம். ஆனால் ‘கடவுள் இல்லை’ என்பதற்கு அவர்கள் காட்டும் தருக்கவாதங்களில் ஒற்றுமை இருந்தது. பல கோணங்களில் தத்துவ சிந்தனையில் வேற்றுமை வெளிப்பட்ட போதிலும் நாத்திகம் மிகவும் திருப்தியளிக்கும் கருத்தாக இந்திய தத்துவவாதிகளுக்குத் தெரிந்திருக்கிறது. மூன்று கேள்விகளுக்கு நாத்திகமே சரியான விளக்கம் தருவதாக இந்தியத் தத்துவவாதிகள் கருதினர்.

1) ஒப்புக்கொள்ளப்பட்ட தருக்க முறைகள் பெற்றாலாவது கடவுள் உண்டு என்று நிரூபிக்க முடியுமா?

2) புற உலகின் தோற்றத்தை விளக்க கடவுள் உண்டு என்ற கொள்கை அவசியந்தானா?

3) மனித கதியை விளக்கவும், மனிதச் செயல்களை அறியவும், உலகை நெறிப்படுத்தும் ஓர் சக்தியை அவதானிப்பது அவசியமா?

இக்கேள்விகளுக்கு விடையளிக்க முயன்ற தத்துவவாதிகள் கடவுள் என்னும் கருத்தை நிராகரிக்கும்படியான நிலைமைக்குச் சென்றார்கள். இந்தியத் தத்துவங்களில் பல இக்கேள்விகளை வேறு பிரச்சினைகளோடு குழப்பாமல், தெளிவாகத் தருக்க முறைகளாலேயே விடைகாண முயன்றன. தங்கள் வேறு கொள்கைகளோடு தொடர்புபடுத்தாமல் இக்கேள்விகளுக்கு தருக்க ரீதியாக விடைகாண முயன்றார்கள். கடவுள் நம்பிக்கையை அதன் சுயமான மதிப்பில் அவர்கள் ஆராய்ந்தார்கள். இக்கேள்விகளுக்கு பதில்களைத் தருக்க இயலிலேயே கண்டார்கள்.

பௌத்தம்.

பலவகை முரண்பாடுகள் வாய்ந்த இந்திய தத்துவங்களில், மேலே சொன்ன கவனத்தில் தான் ஒரு ஒருங்கமைப்பும், ஒரே விதமான சிந்தனைப் போக்கும் தோன்றியது. உலக கண்ணோட்டத்தில் வேறுபட்ட பல தத்துவங்கள், கடவுள் என்ற கருத்தை மட்டும் தருக்க ரீதியாக ஆராய்ந்ததால் தான், கடவுள் என்ற கருத்துக்கு எதிரான வாதங்கள் கூட ஒரே விதமாக உள்ளன.

இந்தியத் தத்துவவாதிகளில் மிகப் பலர் நாத்திகக் கொள்கையைக் கொண்டவர்கள். அவர்களுடைய தத்துவத் திறன் உலகிலேயே மிகச் சிறந்தது. உலக நாத்திக இலக்கியத்தில் இந்திய தத்துவத்தின் பங்கு மிக முக்கியமானது. இன்று கூட இந்திய நாத்திகவாதிகளின் தருக்க ரீதியான வாதங்களுக்கு கடவுள்வாதிகள் பதில் சொல்லுவது மிகவும் கடினம்.

அப்படியானால் மிகச் சிறந்த தத்துவவாதிகளும், தருக்க நிபுணர்களும் நாத்திகவாதிகளாயிருந்தும், இந்தியாவில் நாத்திகம் பரவவில்லையே, ஏன்? வேதகாலம் முதல் பெரியார் காலம் வரை தொடர்ச்சியான நாத்திகவாதம் இந்தியாவில் வழங்கி வந்திருந்தும் இங்கு மக்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருப்பது ஏன்?

இதன் காரணத்தை தத்துவ வேலிக்கு அப்பால் சென்று காணவேண்டும். கடவுள் நம்பிக்கைக்கு உணவு அளிக்கும் அடிப்படை எது? இக்கேள்விக்குப் பதிலளிக்க மார்க்ஸின் சிந்தனை உதவுகிறது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

1. இந்தியாவின் இரண்டாவது குடியரசுத்தலைவராக இருந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணனை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

……………………………………………………………………………………………….. அடுத்த பாகம் »

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க