நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 02

முதல் பாகம்

ந்திய நாத்திகர்கள் கடவுள் ஒரு பொய்த் தோற்றம் என தர்க்க ரீதியாக நிரூபிக்கப் பாடுபட்டார்கள். அவர்களுடைய தர்க்க முயற்சிகள் வெற்றி பெற்றன. ஏனெனில் அவர்களுடைய வாதங்களுக்கு பதிலளித்த ஆன்மீகவாதிகள் தர்க்க ரீதியாக விடை கூற முடியவில்லை. ஆயினும் இந்திய நாத்திகவாதிகள் மார்க்ஸுக்கு முந்திய மேலை நாட்டு நாத்திகவாதிகளைப் போலவே கடவுளை சமூக வாழ்க்கையிலிருந்து பிரித்து தனியாக ஆராய்ந்தார்கள்.

மார்க்ஸ் தான் சமூக வாழ்க்கையிலிருந்து சிந்தனை படைக்கப்படுகிறது என்ற மகத்தான உண்மையை விளக்கினார். ஒவ்வொரு சமூகமும் அது நிலைத்திருப்பதற்கான பொருளுற்பத்தியில் ஈடுபடுகிறது. அச்சமூகத்தில் வாழ்கிற மனிதர்கள், இப்பொருளுற்பத்தியில் வகிக்கும் ஸ்தானத்தின் நிலையால் ஒருவருக்கொருவர் உறவு கொள்ளுகிறார்கள். ஆகவே உற்பத்திச் சாதனங்களுக்குச் சொந்தக்காரர்களும், உற்பத்திக்கு உழைப்பை அளிப்பவர்களுமாக சமூகம் பிரிகிறது. இந்த அடிப்படையில் தான் அக உலகம் மனத்தால் படைக்கப்படுகிறது.

காரல் மார்க்ஸ்

சிந்தனைகள் மேற்கோப்பாக, சமூக அடிப்படையின் மீது எழுகின்றன. சமூக விருட்சத்தின் ஆணிவேர் பொருளாதார அடிப்படையும், உறவுகளுமே. தரைக்கு மேல் தெரிகிற மரம், கிளை, இலை போன்றுதான் மனதின் சிந்தனைகள். புற உலக வாழ்க்கைதான் சிந்தனைக்குக் காரணம். கடவுள் கூட ஒரு குறிப்பிட்ட சமுதாய வளர்ச்சி கட்டத்தில் மனிதனால் படைக்கப்பட்ட ஒரு கருத்துத்தான். சிந்தனைகள் கூட சமூக அடிப்படையின் இயக்கத்தை வேகமாக்கவோ , மந்தப்படுத்தவோ செய்யலாம். ஆனால், முற்றிலும் மாற்றிவிட முடியாது. அடிப்படை மாற்றப்பட்டால், சிந்தனைகள் மாறும். இது உடனடியாக நிகழாது. பழைய சமுதாய அடிப்படையில் எழுந்த சிந்தனைகள் பல காலம் மக்கள் மனத்தில் நீடிக்கும். இதனால் தான் சிந்தனைகளை எதிர்த்து நடத்துகிற தர்க்கப் போராட்டம் மட்டும் வெற்றியடைவதில்லை. சிந்தனையின் சமூக அடிப்படையை மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் சிந்தனை மாறும். ‘கடவுளை பற்றி நினைத்து மனிதன் ஏங்குவதைத் தடுக்க, சமூகப் புரட்சி ஒன்றால் தான் முடியும்.’ இது மார்க்ஸின் சிந்தனை.

இந்திய நாத்திகவாதிகள் மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள். மனிதன் இயற்கையை அறிந்து அதனை மாற்றும் அறிவியல் முயற்சிகள் துவக்க நிலையில் தான் அப்போது இருந்தன. எனவே அறிவியல் இயக்க விதிகளை அவர்கள் பயன்படுத்தித் தங்கள் நாத்திக வாதங்களை உருவாக்க இயலவில்லை. பிற்கால பிரெஞ்சு நாத்திகவாதிகளுக்கு அறிவியல் அறிவு கைகொடுத்தது. அவர்களுடைய வாதங்கள் செல் அமைப்பு, டார்வினது பரிணாமம், புதிய அணுக்கொள்கை, ரசாயன மாறுதல்கள் குறித்த அறிவு இவற்றையெல்லாம் சான்றுகளாகக் கொண்டிருந்தது. ஆயினும் விஞ்ஞான சோஷலிஸக் கொள்கையின் முதல்வர்களுக்கு, பிற்கால நாத்திகவாதிகளின் கொள்கைகள் கூட திருப்தியளிக்கவில்லை. அவர்கள் இயக்கவியல் பொருள்முதல்வாதம் வரலாற்றியல் பொருள் முதல்வாதம் ஆகிய முரணற்ற தத்துவச் சித்தனையை உருவாக்கி பொருள் இயக்கம் பற்றியும், சமூக இயக்கம் பற்றியும் முழுமையான விளக்கம் கொடுத்த பின்னர் தான், நாத்திகம் சித்தனைப் போக்கில் அதன் ஸ்தானத்தில் அமர்த்தப்பட்டது.

அனெக்ஸ கோராஸ்.

இக்குறைபாடு இந்திய நாத்திகத்தில் இருந்தபோதிலும் கூட, தத்துவ வரலாற்றின் சிந்தனைப்போக்கில் மிக முக்கியமான தர்க்க வாதங்களை அவர்கள் படைத்துள்ளார்கள். ‘கடவுளை’, இந்திய தத்துவ சிந்தனையில் இருந்து அகற்றுவதற்கு அவர்களுடைய சிந்தனை முயற்சிகள், அவர்களுடைய தர்க்கவாதங்கள், பல நூற்றாண்டுகளாகத் தோற்கடிக்க முடியாமலே இருந்தது.

இக்கட்டுரையில் ’நாத்திகம்’ என்ற சொல்லை எந்தப் பொருளில் பயன்படுத்துகிறோம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலை நாட்டுத் தத்துவத்தில், ஆதிக்கத்தில் இருக்கும் கொள்கைக்கு விரோதமான புதிய கொள்கையைச் சொல்லுபவர் நாத்திகர் என்று ஏசப்பட்டார்கள். ‘சூரியனை ஒரு தெய்வம்’ என்று கருதி வந்த காலத்தில் அனெக்ஸ கோராஸ் என்னும் தத்துவஞானி, ‘அது பொருளால் ஆக்கப்பட்ட ஒரு வஸ்து’ என்று கூறினார். அவரை நாத்திகர் என்று குற்றம் சாட்டி , கிரேக்கர்கள் நாடு கடத்தினார்கள். ஸாக்ரடீஸ் தமது புதிய தத்துவத்தை விளக்கியபோது அவர் நாத்திகர் என்ற பட்டம் சூட்டப் பட்டார். ‘மறு உலகம் இல்லை’ என்று வாதித்த எபிக்யூரஸ், நாத்திகர் என்று அழைக்கப்பட்டார்.

மேற்குறிப்பிட்ட தத்துவ ஆசிரியர்களெல்லாம் கடவுள் இல்லை என்றா வாதித்தார்கள்? அவர்களுடைய ‘கடவுள்’ ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கிற கடவுளாக இல்லை. எனவே அரசை ஆதரிக்கிற, பாதுகாக்கக்கூடிய சிந்தனைகளை உருவாக்கிப் பரப்பிய சிசரோ, புளூடார்க் ஆகிய தத்துவ ஞானிகள், தங்களுக்கு உதவாத அனெக்ஸ கோராஸ் முதலிய தத்துவ ஞானிகளின் தத்துவங்களை நாத்திகம் என்று அழைத்தார்கள்.

ஸாக்ரடீஸ்.

அக்காலத் தத்துவாசிரியர்களில் சிலர் ஆளும் வர்க்கத்தின் அரசுக்குப் பயன்படாத தத்துவங்களைப் போதித்ததால், நாத்திகவாதிகள் என்று அரசுக்கு ஆதரவான தத்துவவாதிகளால் பழிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள். ‘கடவுள் வெறி’ பிடித்த ஸ்பைனோஸா, நாத்திகர் என்ற பட்டத் தோடு சமய விலக்கு செய்யப்பட்டார். பைபிளில் காணப் படும் “அர்ச்.ஜானின் காட்சி” (Revelation) என்ற வருங்காலம் பற்றிய வாக்குகளை ஆதரித்து எழுதிய ஃபிட்ஷே (Fitche) என்ற தத்துவவாதி, அரசை ஆதரிக்காததால், தம்முடைய பேராசிரியர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார்.

இதிலிருந்து ஆதிக்கத்திலுள்ள தத்துவக் கொள்கைகளுக்கு முரணான எந்தக் கொள்கையும் நாத்திகம் எனக் கருதப்பட்டது என்று பொருள்படுகிறது.

இத்தகைய கொள்கைக் குழப்பம் இந்தியாவில் இருந்ததில்லை. இவ்வாறு கூறுவதனால் சமய விரோதங்களும், போராட்டங்களும் இருந்ததில்லை என்று நான் சொல்லுவதாக எண்ண வேண்டாம். பல சமய முரண்பாடுகளும், சமய விரோதங்களும் பண்டைக்காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்துள்ளன. ஆனால் அவை நாத்திகம், ஆதிக்கம் என்ற கருத்துக்களில் இருந்து பிரித்துத்தான் எண்ணப்பட்டு வந்துள்ளன. ஒவ்வொரு காலத்திலும் ‘ ஆத்திகம்’, ‘நாத்திகம்’ என்ற சொற்கள் பொருள் தெளிவோடு பயன்படுத்தப்பட்டு வந்தன. உதாரணமாக வேத யக்ஞங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் ‘ஆத்திகர்’ என்றும், அவற்றை எதிர்ப்பவர்கள் ‘ நாத்திகர்’ என்றும் பண்டைக் காலத்தில் கருதப்பட்டனர். ‘கடவுள்’ நம்பிக்கை என்பது வேறோர் பிரச்சினையாக இருந்தது.

எபிக்யூரஸ்.

உதாரணமாக வேத யக்ஞங்களை நம்பிய மீமாம்சகர்கள் ஆஸ்திகர்கள் தான். ஆனால் இவர்கள் தான் கடவுள் மறுப்பில் மிக முனைப்பாக இருந்தவர்கள். சைவர்களும், பாசுபதர்களும் சிவன் ஒருவனே சகல சக்திகளும் வாய்ந்த கடவுள் என்ற நம்பிக்கையுடையவர்கள். இவர்கள் வேதங்களைப் பிரமாணம் என்றோ, முக்கியத்துவம் கொண்டவையென்றோ கருதவில்லை. அதனால் கடவுள் நம்பிக்கை கொண்ட இவர்கள் நாத்திகர்கள் என்று வேதவாதிகளால் கருதப்பட்டார்கள். சமூக ஒடுக்குமுறையை நியாயப்படுத்தி, அரசின் பாதுகாப்புக்கு ஏற்ற நீதி – ஒழுக்க முறைகளை வகுத்த, மனு முதலிய நீதி நூலார், சைவர், பாசுபதர் முதலியோரைத் தீண்டத்தகாதவர் என வருணித்தார்கள். அவர்களைத் தீண்டிவிட்டால் உடனே குளிக்க வேண்டும் என்று எழுதி வைத்தார்கள். சமயவெறியும், பகைமையும் இந்தியாவிலும் இருந்துள்ளது என்பதற்கு நீதி நூல்களே சான்று கூறுகின்றன.

ஆனால் ‘கடவுள்’ என்ற சொல்லுக்குத் தெளிவான பொருளை இந்தியத் தத்துவம் வழங்கியுள்ளது. கடவுள் என்பவர் “அனைத்தையும் படைத்து அளித்துக் துடைப்பவர். உலக ஒழுங்கு, நியதிகளுக்கெல்லாம் காரணம் ஆனவர் (moral governor). அவனன்றி ஓரணுவும் அசையாது.” இத்தகைய தன்மைகள் கொண்டவர் கடவுள். இக்கருத்தை ஏற்றுக் கொள்பவர்கள் ஆத்திகர்கள். இதனை மறுப்பவர்கள். நாத்திகர்கள்.

ஃபிட்ஷே.

இத்தெளிவான பொருளில் மிகப் பெரும்பாலான இந்தியத் தத்துவவாதிகள் நாத்திகர்களே. ‘கடவுள்’ என்ற மாயக்கருத்து ஒரு மூட நம்பிக்கை, பொய்யான ஒன்றை உண்மை என்று நம்புவது தவறாக மதிப்புச் செலுத்தப்படும் ஓர் கற்பனை என்றே நாத்திகவாதிகள் கருதினர்.

மிகப் பல நாத்திகவாதிகள் ‘கடவுளை’ ஆழ்ந்த அங்கத உணர்ச்சியோடு கேலி செய்தார்கள். ஒரே ஒரு உதாரணம் தருவோம். ஆத்திகர்கள் கடவுளுக்குப் பல இயல்புகளைக் கற்பனையில் படைத்தார்கள். சர்வ வல்லமை, சர்வ ஞானம், எவ்விடத்தும் இருத்தல் ஆகிய இயல்புகளை அவருக்கு அளித்தார்கள். கடவுளை பரிபூரணானந்தம் என்று கருதி உள்ளமுருகிப் பாடினார்கள்.

இவை குறித்து குணரத்னா என்னும் ஜைனத் துறவி கீழ்வருமாறு எழுதினார்:

“இக்குணங்களையெல்லாம் இல்லாத ஒன்றிற்குப் படைப்பது வீணானது. ஒரு அழகிய இளம்பெண்ணை, வீரியமற்றவனுக்கு அளிப்பது போன்றது இது. பாலுணர்ச்சி இல்லாதவனுக்கு, அழகிய இளம்பெண் எப்படிப் பயனற்றவளோ, அதுபோலவே இல்லாத கடவுளுக்கு இந்த இயல்புகளும் பயன்படாது.”

இது, ‘கடவுள்’ மூடநம்பிக்கையின் சிகரம் என்று காட்ட ஜைனர்களின் உவமை. இவ்வாறு உவமைகளால் மட்டும் இந்திய நாத்திகர்கள் மக்களை வசப்படுத்த முயலவில்லை. கடவுள் என்ற கருத்துப்பற்றி தத்துவரீதியான வாதங்களை அவர்கள் முன் வைத்தார்கள். கடவுள் என்ற நம்பிக்கையின் முரண்பாடுகளைத் தர்க்கரீதியாகச் சுட்டிக் காட்டினார்கள். ஆனால் நாத்திகர்கள் வேறு நம்பிக்கைகளுக்கும், தங்கள் கடவுள் இன்மைக் கொள்கைக்கும் முரண்பாடுகள் இருப்பினும், கடவுளை மறுக்கும் வாதங்களில் முரண்பாடு எதுவும் இல்லாமலேயே தர்க்கரீதியாக வாதித்தார்கள். நாத்திகர்களது பிற நம்பிக்கைகளில் உள்ள முரண்பாடுகளை ஆத்திகர்கள் தர்க்கரீதியாகத் தாக்க முடியவில்லை. ஏனெனில் அவை போன்ற பல நம்பிக்கைகளையே அவர்கள் கொண்டிருந்தார்கள். உதாரணமாக விதி, கர்மம், நரகம், சுவர்க்கம் போன்ற ஆத்திகர்களின் நம்பிக்கைகள், நாத்திகர்கள் நம்பிக்கைகளோடு ஒன்றுபட்டது.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க