தேசியக் கல்விக் கொள்கை – 2019 : சனநாயக கல்விமுறை நீர்த்துப் போகுமா ?

தேசியக் கல்விக் கொள்கை -2019 (வரைவு), மே மாதம் 30 -ம் தேதியில், புதிதாகப் பதவியேற்ற அரசு வெளியிட்டுள்ள முதல் ஆவணங்களில் ஒன்றாகும். 484 பக்கங்களைக் கொண்ட இந்த வரைவு, 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை முறையே பள்ளிக் கல்வி, உயர்கல்வி, கூடுதல் கவனத்திற்கான முக்கிய பகுதிகள், மற்றும் கல்விமுறையில் மாற்றம் போன்றவற்றை பேசுகின்றன.

ஒரு ‘துடிப்பான அறிவு சமூகத்தை’ உருவாக்க உதவும் ‘இந்தியாவை மையப்படுத்திய கல்விமுறையை’ வென்றெடுப்பது என்பதே இந்த புதிய கல்விக் கொள்கைக்கு வழிகாட்டு நெறியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரைவின் மீது பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினர், ஜூன் 30-ம் தேதிக்குள் தங்களது கருத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மிக குறுகிய காலமே உள்ள நிலையில், இந்த வரைவுக் கொள்கைகள், இதுவரை எந்த ஒரு தீவிரமான விவாதத்திற்கும் எடுத்துக் கொள்ளப்படாதது மிகவும் வேதனையானது.

இவ்வாறு விவாதமின்றி அவசரமாக அமல்படுத்தப்பட்டால், இவை மிக மோசமான விளைவுளை ஏற்படுத்துவதோடு, கடந்த பல வருடங்களாக, இந்திய கல்வி முறையை சனநாயகப்படுத்துவதற்காக எடுத்துக்கொண்டு அனைத்து தீவிர முயற்சிகளையும் நீர்த்துப்போகச் செய்துவிடும்.

வலுவிழக்கும் அரசியலமைப்பு

பொதுவாக, இதுபோன்ற அரசு ஆவணங்கள், சட்டங்கள் மற்றும் கொள்கை வரைவுகள், இந்திய அரசியலமைப்பு கோடிட்டுக் காட்டியுள்ள மதிப்புகளையும், வழிகாட்டிகளையும் மேற்கோள்காட்டி தொடங்குவது வழக்கம்.

ஆனால் தேசியக் கல்விக் கொள்கை-2019 (இனிமேல் தே.க.கொ-2019), இந்த வழக்கத்திலிருந்து மாறுபட்டுள்ளது. இதன் வரைவுக் குழுத் தலைவர் முனைவர். கஸ்தூரி ரங்கன் இதன் முக்கிய நோக்கமாக ‘இந்தியாவின் மரபுகளையும் மதிப்புகளையும் நிலைநிறுத்தும் அதே வேளையில், 21-ம் நூற்றாண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஒரு புதிய முறையை உருவாக்குவது’ என கூறுகிறார்.

ஒருசில இடங்களில் அரசியலமைப்பு குறிப்பிடப்பட்டிருந்தாலும் ( ப.எண்; 83, 289, 303), பொதுவாக அது முதன்மைப்படுத்தப்படவில்லை . இதற்கு பதிலாக ‘அதீத ஊக்குவிப்பு’ (heavy promotion), மேம்பாடு (upliftment), சமுதாயம் (community) போன்ற வார்த்தைகள் அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் இந்திய, வட்டார பாரம்பரியங்கள், மரபுகள் அதீதமாக ஊக்குவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது (ப.எண்.76). ஒரு புதிய வீரியத்துடன் இந்திய மொழிகளை கற்பித்தல் அதீதமாக ஊக்குவிக்கப்படும்(ப.எண்.82). மொழி கற்பித்தலுக்கு உதவியாக இந்திய இலக்கியங்களை வாசிப்பது, ஆராய்வது மேம்படுத்தப்படும்(ப.எண். 85). இதுபோன்ற முயற்சிகள் இந்திய மொழிகளையும் இலக்கியங்கள் மீதான பயிற்சியையும் அறிவையும் வளர்த்தெடுக்க கட்டாயமாக உதவும் என்றாலும், இது ஒரு ஒற்றை கண்ணோட்டத்திலான ஒழுக்கநெறி சார்ந்த போதனைக்கு இட்டுச்செல்லும் என்ற பயமும் மேலோங்குகின்றது.

மேலும் 21-ம் நூற்றாண்டின் குழந்தைகளுக்கு, உலக இலக்கியங்கள், கலை வெளிப்பாடுகள் மீதான அறிவு மிக முக்கியமானதாக இருக்கின்றது. எனவே, உலக இலக்கியங்கள் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்தலின் தேவை அவசியமாகிறது. இவ்வகையான அறிவை, பரந்த கண்ணோட்டத்தை குழந்தைகள் பெறுவதற்கு இந்தக் கல்விக் கொள்கை தடையாக இருப்பது வருந்தத்தக்கது.

படிக்க:
♦ புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !
♦ தமிழில் தேசியக் கல்விக் கொள்கை 2019 – பிடிஎஃப் டவுண்லோடு

ஒற்றைச் சமூதாயம்

மேலே குறிப்பிட்டதுபோல், அரசியலமைப்பு முன்னிறுத்தப்பட வேண்டிய இடங்களில், கையாளப்படும் மற்றொரு வார்த்தை ‘சமுதாயம்’ (community) ( ப.எண்.29). இதன்படி, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் ‘சமுதாயத்தின்’ மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படுகிறது.

இது தே.க.கொ-2019 கூறும் ‘சமூதாயம்’ என்பது என்ன என்ற கேள்வியை கேட்கத் தூண்டுகின்றது. சாதி, மதம் மற்றும் வர்க்கம் என்று பிளவுண்டு கிடக்கும் இந்திய சமூகத்தை ஒரு ஒற்றை சமூகமாக கட்டமைப்பது மிகவும் ஆபத்தானது. இது சமூகத்தின் ஆதிக்க சக்திகளின் பிடியில் பொதுக்கல்வி அடிமைப்பட்டுவிடும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

எடுத்துக்காட்டாக, தே.க.கொ-2019 -ன்படி, கல்வித்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் வகையில், பள்ளி நிர்வாக குழுக்களில் (School Complex Management committees) ‘சமுதாயம்’ முக்கியப் பங்கை வகிக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது (ப.எண்.173). இதுமட்டுமல்லாமல், ஆரம்ப குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (Early childhood care and education), கல்வி மற்றும் எண் அறிவு திறமைகளை மேம்படுத்துதல் (ப.எண்.57), கல்விக்கான உரிமையை நடைமுறைபடுத்துதல் (ப.எண்.67) போன்றவற்றிலும் ‘சமூதாயத்தின்’ பங்கு ஊக்குவிக்கப்படுகிறது.

மேலும், 6 -லிருந்து 8 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எந்த வகையான தொழிற்பயிற்சி கொடுக்கப்படவேண்டும் என்று தீர்மானிப்பதில் இந்த ‘சமூதாயம்’தான் பரிந்துரைகளைக் கொடுக்கும் (ப.எண்.95). ஆரம்பக் கல்விபோல், உயர் கல்வித் துறைகளும் ‘சமூதாயத்துடன்’ இணைந்து செயல்படும் (ப.எண்-202). இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், தே.க.கொ-2019 கூறும் ‘சமுதாயம்’ ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், ஆதிவாசிகள், உடல் ஊனமுற்றோர், மற்றும் உழைக்கும் வர்கத்தினரின் பிரதிநிதித்துவத்தை கொண்டிருத்தல் முக்கியம்.

ஆனால் பிரதிநிதித்துவம் குறித்து எவையும் உறுதிபடுத்தப்படவில்லை ஆகையால், தே.க.கொ-2019 ஒரு ஒற்றைப்பார்வை கொண்ட ஆளும் வர்கத்தின் சாதியின் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் ஒரு கல்வி முறையை திணிக்க முற்படும் செயலாகவே அமையும்.

பால் சார்ந்த அடையாளங்கள்

இ.க.கொ-2019 -ல், பால் சார்ந்த அடையாளங்கள் மிகச் சாதாரணமாகவும் கவனக்குறைவுடனும் கையாளப்படுகின்றன. இதில் வரும் Manpower மற்றும் chairman போன்ற வார்தைகள் பொதுவாக பால்-சரிசமமான வார்த்தைகளாகப் பார்க்கப்படுவதில்லை.

குழந்தைக் கல்வியில் பெண்கள் மற்றும் தாய்மார்களின் பங்கு முக்கியமாக வலியுறுத்தப்படுகின்றது (ப.எண்.57, 60). பெண் கல்வியின் முக்கியத்துவம் (ப.எண்.116, 146,) பள்ளிக்கல்வி வரை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் கல்விக்கு வரும்போது இதன் முக்கியத்துவம் காணாமல் போகின்றது.

பெண்கல்வியை குறித்து இந்த வரைவு, ‘பெண்கல்வி என்பது, வறுமை ஓழிப்புக்கும், வன்முறைகளை ஒடுக்குவதற்குமான வழி. சமூக ஆரோக்கியத்திற்கும், பொதுமக்கள் உடல் நலத்தையும் பேணும் வழி. அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டிய வளர்ச்சி கூறுகளை வளர்த்தெடுக்க உதவுவது’ என குறிப்பிடுகிறது.

வேறு வார்த்தையில் கூறினால், பெண்களுக்கான கல்வி என்பது அவர்களின் உரிமை என்ற நோக்கில் அணுகாமல், அதன் முக்கியத்துவத்தை பொதுநலன் என்ற பார்வையின் அடிப்படையிலே முன்வைக்கப்படுகின்றது.

கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் பற்றி ஒருசில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன (ப.எண்.66,69). ஆனால் இவற்றில் ஈடுபடுவோர் ஒழுக்கப்படுத்த பட வேண்டும்(ப.எண்.69) என்ற கண்ணோட்டமே உள்ளது. பொதுவாக, ஆண் மாணவர்களுக்கு பால் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு நீண்ட காலத் திட்டமும் இதில் குறிப்பிடப்படவில்லை. பெண்களை மதிப்பது, பாதுகாப்பு, குடும்ப கட்டுப்பாடு, போன்றவற்றை மாணவர்கள் கற்கவேண்டும் (ப.எண்.97).

21-ம் நூற்றாண்டின் பால்சார்ந்த எந்த ஒரு புதுக் கண்ணோட்டத்தையும் இந்த வரைவு கொண்டிருக்கவில்லை. மேலும் பால், பாலியல், மாற்றுபால் நோக்குநிலைகளை பற்றி பேசத்தயங்குவது வெளிப்படையாகத் தெரிகின்றது.

கடந்த சில வருடத்தில், பல்கலைகழகங்களில் women studies போன்ற துறைகள் ஊக்குவிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வந்தாலும், தே.க.கொ-2019 இதைப்பற்றி எதுவும் பேசவில்லை .

ஏழைப் பெற்றோர்

தே.க.கொ -2019 பிரதிநிதித்துவப்படாத குழுக்கள் ( Under Represented Groups) என்ற பதத்தை ஒடுக்கப்பட்டோர், பட்டியல் இனத்தினர், பின்தங்கியோர், போன்றோரை குறிப்பதற்காக பயன்படுத்துகின்றது. குழந்தைகளின் கல்விக்கும் குடும்பத்தின் வருமானத்திற்குமான தொடர்பு பேசப்பட்டிருந்தாலும், இவை ஆழமாக சிந்திக்கப்படவில்லை.

குழந்தைக் கல்வி மற்றும் பராமரிப்பு பற்றிப் பேசும்போது, ஒற்றை பெற்றோர், அமைப்புச்சாரா துறைகளில் வேலை செய்வோர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை (ப.எண். – 48). இவ்வகை பெற்றோர்கள் குழந்தைக் கல்வி செயல்பாடுகளில் எவ்வாறு பங்கேற்பார்கள் என்ற புரிதல் இல்லை.

குழந்தைகளுக்கான வீட்டுப் பாடங்கள் செயல்பாடுகளில் பெற்றோர்களின் பங்கு பேசப்படுகின்றது (ப.எண்.62). இவற்றில் பெரும்பாலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் பெற்றோர்களை கணக்கில் கொள்ளவில்லை.

வசதியற்ற பெற்றோர்கள், தங்களின் தலைவிதிக்கு தாங்களே பொறுப்பு என்பது போன்ற செய்தியே மறைவாக முன்வைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, தே.க.கொ-2019 -ல் வரும் ஒரு பத்தியை பார்போம்; பால்ய திருமணம், குழந்தைத் தொழில், இளம் வயதிலேயே வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம், சாதித் தொழிலை பின்பற்ற வேண்டிய நிலை, போன்ற காரணங்களால் சில குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை பள்ளிக்கு அனுப்புவதில்லை.

தம்பி தங்கைகளை வளர்கவேண்டிய சூழ்நிலை வளர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடையாக இருக்கின்றது. சுகாதாரமற்ற வாழ்விடங்கள், துப்பரவு வசதிகள் இன்மை, தூய்மையற்ற உணவு போன்றவற்றால் குழந்தைகள் நீண்டகால நோய்களுக்கு ஆளாவது போன்றவை குழந்தைகளின் கல்விக்கு தடையாகக் காரணம் காட்டப்படுள்ளது. ஆனால் தே.க.கொ-2019 இதற்கான தீர்வுகளைப் பற்றி ஆழமாக சிந்திக்கவில்லை .

குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்விமூலம் காலங் காலமாக சமூகத்தில் பின்தேங்கி நிற்கும் நிலையிலிருந்து விடுபட நினைக்கும் பெற்றோர்களுக்கு தே.க.கொ-2019 ஆதரவானது அல்ல. இது இவ்வகை எதிர்பார்ப்பை இயற்கைக்கு புறம்பானது என்பதோடு மட்டுமல்லாமல் ஆங்கிலம் மேட்டுக்குடியினருக்கான மொழியென வரையறுக்கின்றது. இருந்தபோதிலும், ஏழை குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பற்றி பேசுவதன் மூலம் (ப.எண்.245) தே.க.கொ-2019 வசதியற்றோரை முழுவதுமாக கைவிட்டுவிடவில்லை எனக் கூறலாம்.

படிக்க:
♦ கழிப்பறைக்காக கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள்!
♦ பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் மோடி அரசின் இலட்சணம் !

இட ஒதுக்கீடு

மிக முக்கியமாக தே.க.கொ-2019 சாதியைப்பற்றி குறிப்பிடுவதில் லாவகமாக தவிர்த்து மௌனம் சாதிக்கிறது. ஆணாதிக்கம், நிறவெறி போன்றவைகூட ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும் (ப.எண்.101), சாதி ஒரு சமூக பிரச்சினையாக பார்க்கப்படவில்லை.

பக்கம் எண் 138-ல் குழந்தைகள் எதிர்காலத்தில் வளர்ந்தபின் ஒரு சமத்துவமான உள்ளடக்கிய சமூகத்தில் அங்கமாக இருப்பார்கள். எனவே இது அமைதிக்கும் தேசிய ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றது. ஆனால் தற்போது புறந்தள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் மாணவர்களின் உரிமையைப் பற்றி பேசவில்லை.

குறிப்பாக, இந்த வரைவு, கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான அல்லது ஆசிரியர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. கடந்த சில வருடங்களாக, இட ஒதுக்கீடு சமூக ஏற்றத் தாழ்வை குறைக்கும் ஆயுதமாக இருந்துள்ளது. தே.க.கொ-2019, இதுவரை இட ஒதுக்கீடு சம்பந்தமாக எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளையும் மறுதலிப்பதாக உள்ளது.

இத்துடன், பக்கம் எண் 334 -ல், தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கொள்கைகளை கடைபிடிக்க வேண்டிய தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பக்கம் எண்கள் 148 – 49-ன் படி, பட்டியல் இனம், பின்தங்கிய இனம் இவற்றில் இருந்து வரும் மாணவர்கள் இவ்வினத்திலிருந்து வரும் ஆசிரியர்கள் மூலமே கற்பிக்கப்பட வேண்டும். ஏனென்றால், இவ்வாசிரியர்கள் இம்மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள். இஸ்லாமிய மாணவர்கள், உருது தெரிந்த ஆசிரியர்கள் மூலம் கற்பிக்க வேண்டும். இங்கு உருது தெரியாத இஸ்லாமிய மாணவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இட ஒதுக்கீடு பேசப்படாத நிலையில், ‘மெரிட் சிஸ்டம்’ பேசப்படுகின்றது. கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை முதல் ஆசிரியர் நியமனம்வரை ஒரு கடுமையான ‘மெரிட் சிஸ்டம்’ கடைபிடிக்கப்படும் (ப.எண்கள்; 114, 116, 119) என கூறப்பட்டுள்ளது..

மாற்றுத் திறனாளிகள்

தே.க.கொ – 2019, CwSN (children with special needs) என்ற பதத்தை பயன்படுத்துகின்றது. இவை பெரும்பாலும், இவ்வரைவின் தொடக்கப் பக்கங்களில், ஆரம்பக் கல்வியைப் பற்றி பேசும்போது குறிப்பிடப்படுகின்றன. ஆனால், உயர்கல்வி பற்றி பேசும் பக்கங்களில் இவை காணப்படவில்லை.

பக்கங்கள் 154 மற்றும் 155 மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேவைகளைப் பற்றி பேசுகின்றன. ஆனால் மாற்றுத் திறனாளி ஆசிரியர்களை நியமனம் செய்வது குறித்த வழிமுறைகளைப் பற்றியோ அல்லது அவர்களுக்கான சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்வது பற்றியோ எந்தவித குறிப்பும் இல்லை.

மேலும், ஒவ்வொரு கொள்கைக்கும், அவற்றை அமல்படுத்துவதற்கான ஒரு காலக்கெடுவை முன்வைக்கும் தே.க.கொ-2019, மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு தேவைகள் பற்றி குறிப்பிடும்போது மட்டும் எந்த காலக்கெடுவையும் கொடுக்கவில்லை.

மொழிக் கொள்கை

கடந்த சில தினங்களாக, தே.க.கொ-2019-ன் மொழிக் கொள்கைக்கான எதிர்வினைகள் பல்வேறு தரப்பினரிடமிருந்து வெளிவருகின்றன. இதன் பயனாக கட்டாய ஹிந்தி என்ற நிலையிலிருந்து அரசு பின்வாங்கியுள்ளது.

தே.க.கொ-2019-ல் 86-வது பக்கத்தில் ஒரு புதிய, ‘இந்தியாவின் மொழிகள்’ என்ற பாடம் 6 முதல் 8-ம் வகுப்புவரை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ‘புதிய’ பாடத்தில், இந்தியாவின் முக்கியமான மொழிகளுக்கிடையே குறிப்பிடும்படியான ஒற்றுமைகளை மாணவர்கள் கற்பார்கள். இவற்றிற்கிடையேயான பொதுவான உச்சரிப்பு, அறிவியல்பூர்வமாக அமைந்துள்ள எழுத்து வரிசை, எழுத்துருக்கள், இவற்றின் இலக்கண அமைப்புகள், சமஸ்கிருதம் மற்றும் ஏனைய செம்மொழிகளிருந்து இவற்றின் தொடக்கம், மற்றும் இவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் போன்றவற்றை பயில்வார்கள் என்கிறது.

ஏற்கெனவே, பல்வேறு பாடத் திட்டங்களாலும் புத்தகப் பளுவாலும் துயரில் உழலும் மாணவர்களுக்கு இதுபோன்றதொரு பாடத்தை புகுத்தி அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துவதற்கான காரணத்தை நம்மால் அவதானிக்க முடியவில்லை.

பக்கம் எண் 87-ல், 6-லிருந்து 8-ம் வகுப்பு வரை தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஒரு இந்திய செம்மொழியை பயில்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த செம்மொழிகளின் வரிசையில், சமஸ்கிருத்துடன், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பாலி, பாரசீகம், மற்றும் பிராகிருதம் போன்ற மொழிகள் இருந்தாலும், பயன்பாட்டில் சமஸ்கிருதம் கற்றல் வலியுறுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.

பொதுவாக, இந்த வரைவு சமஸ்கிருதத்தின் முக்கியத்துவத்தை முன்வைக்கின்றது. எடுத்துக்காட்டாக, பக்கம் எண் 86 -ல், “ஒரு நவீன கால மொழியாக இருந்தபோதிலும், தன்னிடம் லத்தின் மற்றும் கிரேக்க மொழிகளில் உள்ள அனைத்து இலக்கியங்களையும் ஒன்று சேர்த்து தொகுத்தாலும், அம்மொழிகளில் உள்ள இலக்கியங்களை விட அதிகமான தொன்மை இலக்கியங்களை சமஸ்கிருதம் கொண்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. ‘இவை பல்லாயிரம் வருடங்களாக, வெவ்வேறு சமூக சூழ்நிலையிருந்து வந்த மதம் சார்ந்த மற்றும் மதம் சாராத ஆசிரியர்களால் எழுதப்பட்டவை’. இது ஒரு உண்மையை திரித்து கூறிய கருத்தாக பார்க்க வேண்டியுள்ளது. மேலும் முக்கியமாக, இவ்வகை ஒப்பீட்டு மொழி கற்றலிலிருந்து அரபு மற்றும் சீனம் போன்ற மொழிகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளன.

படிக்க:
♦ இராஜஸ்தான் : பண்டாரம் பரதேசிகள் உருவாக்கிய பள்ளி பாடத்திட்டம் ! என்ன எழவு நாடிது ?
♦ இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !

தொன்மை, பாரம்பரியம், பண்பாடு

தே.க.கொ-2019 வரைவு முழுவதும் ஒரே விடயங்கள் திரும்பத்திரும்ப சொல்லப்பட்டு, பிழைகள் மலிந்தும், பல்வேறு கருத்துகளுக்கு ஆதாரங்கள் சுட்டிக் காட்டப்படாமலும் இருப்பதையும் எளிதாகக் காண முடியும்.

மேலும், பழைய பண்பாடு, புராதனம், மரபுகள் போன்றவற்றை கற்றல் கற்பித்தலில் வலியுறுத்தும் போக்கு எங்கும் வியாபித்துள்ளது. இந்தியாவின் மரபுகளையும், மதிப்புகளையும் பேணுதல் என்பது தே.க.கொ-2019-ன் முக்கிய அம்சமாக ஆங்காங்கு பேசப்படுகின்றது.

குறிப்பாக ஆசிரியர் பயிற்சியை திடப்படுத்துவது, இவற்றை வென்றடைவதற்கான ஒரு வழியாக முன்வைக்கப்படுகின்றது. இதன்படி ‘ஆசிரியர்கள் தற்போதைய நவீன கல்வி மற்றும் கற்பித்தலில் முழுத் திறமையோடு இருக்கும் அதே வேளையில், இந்திய மதிப்புகள், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் அறிவு போன்றவற்றில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்’.

மேலும், பல்வேறு கொள்கைகளுக்கான விளக்கங்கள் சமஸ்கிருத இலக்கியங்களிருந்தும், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற காப்பியங்களிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இக்குறிப்புகள்கூட பிழைகள் மலிந்து தவறாகவும் உள்ளன. தக்ஷிலா மற்றும் நலந்தா போன்ற பண்டைய பல்கலைக் கழகங்கள் முக்கிய உதாரணங்களாக காட்டப்பட்டுள்ளன.

இந்திய வரலாறு என்பதை சமஸ்கிருத மொழியை சார்ந்த வரலாறாக காட்டும் உந்துதல் அதிகமாக உள்ளது. அண்மைக் காலங்களில் வரலாற்று ஆய்வுகள் மேட்டுக்குடி மக்களின் வரலாற்றை எழுதுவதிலிருந்து விலகி, சாமானிய மக்களின் வரலாற்றை வாசிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளன. உழைக்கும் மக்கள், பெண்கள், ஒதுக்கப்பட்ட நிலப்பரப்புக்கள் அதன் குடிகள், ஒடுக்கப்பட்ட சாதி சமூகங்கள், என இவர்களின் வரலாறுகள் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கியிருக்கிறது. ஆனால், தே.க.கொ-2019-ல் இதுபோன்ற புது தகவல்களை, சிந்தனைகளை உள்வாங்கும் தாராளப் போக்கு காணப்படவில்லை.

மாணவ, ஆசிரியர் சங்கங்கள்

தே.க.கொ-2019-ல், மாணவ சங்கங்கள் பற்றிய எந்த குறிப்பும் இல்லாததோடு, இச்சங்கங்களை அங்கீகரிப்பது சம்பந்தமான எந்த வழிமுறைகள் பற்றியும் பேசப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கும், விமர்சனத்திற்கும், போராட்டத்திற்கும், எதிர்வினையாற்றுவதற்குமான எந்ததொரு வாய்ப்பையும் தே.க.கொ-2019 கொடுக்கவில்லை.

வரைவின் 292-ம் பக்கத்தின்படி, ஆசிரியர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவர்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் செய்ய முடியும் அல்லது பிரதம மந்திரி தலைமை தாங்கும் RSA அமைப்பிடம் தெரிவிக்கவேண்டும் (ப.எண்.292).

தே.க.கொ-2019-ஐ அமல்படுத்துவது வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்பதனால், இக்கொள்கைகளின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது பற்றிய ஒரு தெளிவான ஆழமான விவாதம் மிகமுக்கியமானதாகும். இந்த வரைவுதிட்டம் சமூகபொருளாதார-பண்பாட்டு வேறுபாடுகளை மதிப்பது ஏற்றுக்கொள்வது என்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் கல்வி கொள்கைகளை வடிவமைப்பதன் சாத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுபோல் தெரிகின்றது.

ஆழ்ந்து வாசிக்கும்போது, இவை சமூக, பொருளாதார வேறுபாடுகளை கலைவதற்கு பதிலாக அவை மறுகட்டமைப்பு செய்யப்படுவதற்கான ஆபத்துகள் அதிகமாக தெரிகின்றன. கல்விக் கொள்கைகள் அரசியலமைப்பு கூறுகின்ற வழிகாட்டுதலை அடிப்படையாக கொண்டு வரையப்பட வேண்டும். கல்விக் கொள்கைகளை அரசியலமைப்பின் பிடியிலிருந்து நீக்கி ‘சமுதாயத்தின்’ ஆளுகைக்கு மாற்றுவது பேராபத்தை விளைவிக்கும்.

கப் பஞ்சாயத்து - வெறிபிடித்தவர்களின் சாதிமன்றம்
காப் பஞ்சாயத்து – வெறிபிடித்தவர்களின் சாதிமன்றம்

ஒருகணம் காப்-பஞ்சாயத்தின் கீழ் பள்ளிகூடங்கள் வருகின்றன என்ற நினைத்து பாருங்கள், இதன் விளைவுகள் என்னவாக இருக்கும். ஒடுக்கப்பட்ட சாதியினர், பழங்குடியினர், பெண்கள், உழைக்கும் வர்க்கத்தினர், உடல் ஊனமுற்றோர், சிறுபான்மையினர் இவர்களின் உணர்வுகளை உரிமைகளை மதிப்பதாக கல்விதிட்டங்கள் அமைய வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு சமூக மாற்றத்திற்கான தொடக்கப் புள்ளியாக இருந்துள்ளது, இதை அழிக்க விழையும் எந்த கொள்கையையும் உடனே நீக்க வேண்டும். இந்த வரைவு திட்டத்தை எழுதியோர், கல்வி என்பது மக்களின் உரிமை, மக்களுக்கான சேவை அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு மொழியும் முக்கியமானது என்றபோதிலும், சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி இவற்றை முதன்மைபடுத்துவதன் மூலம் மற்ற மொழிகளை பின்னுக்குத்தள்ளவது ஏற்றுக்கொள்ள முடியாது. பழைய பண்பாட்டின் பெருமைகளை பண்டைய ஆட்சியாளர்களின் சாதனைகளைப் பட்டியலிடுவதைவிட, 21 -ம் நூற்றாண்டு மாணவர்கள் சதாரண மக்களின் வரலாற்றை, போராட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாக உள்ளது.

சௌ. குணசேகரன்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்,
புதுதில்லி.

(சக பேராசிரயர், முனைவர் கும்கும்ராய் அவர்கள் வரைவு குழுவிற்கு எழுதிய நீண்ட எதிர்வினையைத் தழுவி எழுதப்பட்டது)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க