ந்துத்துவ காவிக் கூட்டம் ஆட்சியில் அமர்ந்தால், நாடு நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி போய்விடும் என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆளும் மாநிலங்களே சான்று. சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்படும் தாக்குதல், இந்துத்துவ மதவாத கருத்துக்களை கல்வி புலங்களில் புகுத்துதல், அறிவியலை புறக்கணிக்கும் தன்மை, பன்முகத்தன்மையை ஒழித்துக்கட்டுவது,  சாதி – பாலின பேதங்களை பேணுகிற அடிப்படைவாதம் என பா.ஜ.க. ஆட்சி படுகுழியில் மக்களை தள்ளிக் கொண்டிருகிறது. வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. ராஜஸ்தானை ஆண்டு கொண்டிருக்கிறது.

ஒருபக்கம் மிடுக்கான, செல்வம் கொழிக்கும் சில ராஜபுத்திரர்களும் இன்னொரு பக்கம் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்தாடும் ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி செய்த மிகப் பெரிய சாதனை என்ன தெரியுமா? ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பாடப்பு த்தகங்களில் புகுத்தியது. இளம் சிறார்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் விதமாக பா.ஜ.க. செய்திருக்கும் திணிப்பு, கடுமையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் கல்வியாளர்கள்.

’ஆஜ்மீரின் சஹிர்’ என்ற தலைப்பில் மூன்றாம் வகுப்பு இந்தி பாடத்தில் வந்த ஒரு பாடம், ‘ஆஜ்மீர் யாத்திரை’ என பா.ஜ.க. ஆட்சியில் அந்தப் பாடம் திருத்தப்படுகிறது. முந்தைய பாடத்தில் குர்மீத், ரசாக் என்ற இரு நண்பர்கள் இணைந்து ஆஜ்மீரின் புகழ்பெற்ற மொய்னுதீன் சிஷ்டி தர்காவின் ஊர்ஸ் விழா குறித்து கலந்துரையாடுகின்றனர். பின்பு அவர்கள் ஆஜ்மீரின் பிரபலமான மற்ற சுற்றுலா தளங்களுக்குச் சென்று, அந்த இடங்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்வதாக அந்த பாடம் இடம்பெற்றிருந்தது.

பா.ஜ.க. ஆட்சிக்குப் பிறகு 2016-ல் திருத்தப்பட்டு வெளியான பாடத்தில் வரும் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஆஜ்மீரைச் சுற்றிப் பார்க்கின்றனர். ஆனால், ஊர்ஸ் விழா குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும் பிருத்விசிங் சவுகான் என்ற மன்னரை பற்றிய குறிப்பில், ‘பாரதத்தின் மீது படையெடுத்த முகமது கோரியை பலமுறை தோற்கடித்தவர்’ என்கிற வரலாற்று திரிபும் சேர்க்கப்படுகிறது. மேலும், மகாபாரதத்தில் வரும் பஞ்ச பாண்டவர்கள் உருவாக்கிய ‘பஞ்ச குண்டத்தை’யும் ‘உலகப் புகழ்ப் பெற்ற’ பிரம்மாவின் கோயிலையும் இருவருடம் சுற்றிப் பார்ப்பதாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

தேவயானி பரத்வாஜ் என்ற கல்வியாளர், “முசுலீம்களை நேர்மறையான விதத்தில் காட்டிய அந்த ஒரு பாடமும் வெட்டப்பட்டுள்ளது” என்கிறார்.  பாடப்புத்தகங்கள் பெரும்பான்மையினர் பார்வையில் எழுதப்பட்டுள்ளதோடு, சிறுபான்மையினர் அடையாளங்களை முற்றிலுமாக அழித்திருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ராஜஸ்தான் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற சமூகவியல் பேராசிரியர் ராஜீவ் குப்தா, “பெரும்பான்மையான குழந்தைகளுக்கு அரசு இலவசமாக வழங்கும் புத்தகங்கள்தான் அறிவை பெருக்கிக் கொள்ள கிடைத்திருக்கும் ஒரே கருவி. நவீன கால பத்திரிகைகள்கூட அவர்களை இன்னும் சென்று சேரவில்லை”. இத்தகைய சூழலில் பாடப் புத்தகங்களில் செய்யப்படும் திணிப்பு அவர்களை ஆழமாக பாதிக்கும் என்கிறார்.

2005-ஆம் ஆண்டும் மத்திய அரசின் கல்வி ஆலோசனை குழு, மனப்பாடம் செய்யும் கல்வி முறைக்கு பதிலாக, கற்றலின் மூலம் தங்களுடைய அறிவை மாற்றியமைக்கும் விதமான பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது. பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி 2013-ல் அமைந்தவுடன் இந்த சிறப்புக் குழு கலைக்கப்பட்டு, வேறொரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இடம்பெற்றவர்கள் அனைவரும் ஆர்.எஸ். எஸ்.  அமைப்பிலிருந்து வந்தவர்கள்.

ஜுலை 2016-ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான திருத்தியமைக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன.  இந்தப் பாடப்புத்தகங்களை பகுப்பாய்வு செய்த கல்வியாளர்கள் குழு, பாடத்திட்டம் குழந்தைகள் சிந்திக்கத் தூண்டுகிறதா, பாடங்களில் உள்ள வரலாற்று தகவல்களின் உண்மைத்தன்மை என்ன,  பாலின பாகுபாடுகளை உருவாக்கும் பாடத்திட்டங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராய்ந்தனர்.

படிக்க:
தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு ! மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை !
மோடிக்கு எதிராக பேஸ்புக் பதிவு போட்ட மணிப்பூர் பத்திரிகையாளர் NSA கீழ் கைது !

ஆறாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ’முண்டாமால்’ என்ற பாடத்தில் தடை செய்யப்பட்ட இந்துமத சடங்கான உடன்கட்டை ஏறும் ‘சதி’ குறித்து மிக உயர்வாக எழுதப்பட்டுள்ளது என்கிறார் தேவயானி பரத்வாஜ். இந்தக் கதையில் வரும் சாருவாத் என்ற குறுநில மன்னர், டெல்லியிலிருந்து படையெடுக்கும் பாட்ஷா ஒருவரை எதிர்த்து போருக்குச் செல்கிறார். அவரை வழியனுப்பும் ராணி இப்படிச் சொல்கிறார், “பிராணநாதா, ஒன்றை நீங்கள் நினைவுகொள்ளுங்கள், ஒரு சிறுவன் வானத்தை எட்டிப் பிடிக்கலாம். ஒரு சிறிய சிப்பி, கடலை விழுங்கலாம்; இமயமலையே ஆட்டம் காணலாம். ஆனால், பாரதத்தின் சதி மாதா தன்னுடைய சபதத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டாள்”. மனைவியிடம் விடைபெற்று போர்க்களத்துக்குச் செல்லும் சாருவாத், சில நாட்கள் கழித்து, ‘நம்பிக்கையையும் ஆற்றலையும் பெறுவதற்காக’ தன்னுடைய ஒற்றனை அனுப்புகிறார். அப்போது, அந்த ராணி தன்னுடைய தலையை கொய்து, பளிங்கு தரையை ரத்தத்தால் ’சதி மாதா’வாக நிரப்புகிறாள். ராணியின் தலையை ஒற்றன் எடுத்துச் சென்று அரசரிடம் தருகிறான். அரசர், தன்னுடைய ராணியின் தலையை கழுத்தில் மாலையாக அணிந்து (அதுதான் முண்டாமால்) போரிடுகிறார்.

அண்மையில் பா.ஜ.க. வேட்பாளர் ‘என்னை தேர்ந்தெடுத்தால் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த மாட்டேன்’ என பேசியதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்.  – பா.ஜ.க. எத்தகைய பிற்போக்குத்தனங்களின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது என்பதை அறியலாம். இந்த சர்ச்சை வந்தபோது, தடைசெய்யப்பட்ட உடன்கட்டை ஏறும் சதி பழக்கத்தையும் புழக்கத்துக்கு கொண்டு வருவார்கள் இந்த சனாதானிகள் எனப் பலர் எழுதினர்.  அந்தப் பணியை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஏற்கனவே செய்ய ஆரம்பித்துவிட்டது என்பதைத்தான் மேற்கண்ட ‘முண்டாமால்’ பாடம் சொல்கிறது.

மட்டுமல்லாமல், பல பாடங்களில் ஆண் குழந்தைகள் விளையாட்டில் ஈடுபடுவது போன்ற சித்திரங்களும், பெண்கள் தண்ணீர் சேகரிப்பது, அடுப்படி வேலைகளில் ஈடுபட்டிருப்பது போன்ற சித்திரங்களும் இடம்பெற்றுள்ளதாக கல்வியாளர் அம்பிகா நாக் குற்றம்சாட்டுகிறார்.

ஒன்றாம் வகுப்பு எழுத்து கற்றுத் தரும் பாடத்தில் ரிஷி, ரதம், யாகம், திரிசூலம், ஞானி போன்ற இந்துமதம் தொடபான வார்த்தைகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. ஐந்தாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் பசு புனிதமானத்தை விவரிக்கிறது ஒரு பாடம். ‘செல்வம், வளம், ஆற்றல், ஆரோக்கியம் என அனைத்தையும் வழங்கும் காமதேனு பசுமாதா. அதைக் காப்பது உங்கள் கடமை’ என்கிறது அந்தப் பாடம். எட்டாம் வகுப்பு இந்தி பாடத்தில் ‘பசு பாதுகாப்பும் கிராம வளர்ச்சியும்’ என்கிற தலைப்பில் ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது.

தேசத்தின் பெருமைக்குரியவர்கள் என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் அறிவியல் பாடநூலில் வந்துள்ள ஒரு பாடத்தில் 15 தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒருவர்கூட முசுலீம் மதத்தைச் சேர்ந்தவர் இல்லை. 6, 7, 8 வது பாட நூல்களில் பழங்குடிகளும் பட்டியலினத்தாரும் செல்வந்தர்களுக்காகவும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்காகவும் தங்கள் உயிரை தியாகம் செய்யக்கூடியவர்கள் என எழுதப்பட்டுள்ளது.

ஆறாம் வகுப்பு பாடத்தில் இருந்த சாதி அமைப்பு குறித்த கட்டுரை முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆரம்ப காலத்தில்(வேத காலத்தில்) இருந்த சாதி அமைப்பில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை; தீண்டாமை இல்லை; எல்லோரும் ஒன்றாக பழகினார்கள் என எழுதப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு பாடநூலில் உள்ள 15 பாடங்களில் ஏழு பாடங்கள், பெண் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றன. தவறான பாதைக்குச் சென்றால், அடித்து திருத்தி சரியான பாதைக்கு கொண்டு வரவேண்டும் என்கிற மனுநீதி இந்தப் பாடங்களில் சொல்லித் தரப்பட்டுள்ளது.

மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஒவ்வொரு பாடநூலிலும் ‘பாரத்மாதா’வின் படமும் ‘தேசபக்தி’ பாடலும் இடம்பெற்றுள்ளன. மேலும் அனைத்து நூல்களிலும் மோடியின்  மன் கி பாத் நிகழ்ச்சி குறித்தும் மத்திய பா.ஜ.க. அரசின் ஸ்வச் பாரத், பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ் போன்ற திட்டங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசு எப்படி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக,  மக்கள் எப்படி அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகத்தான் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்கிறார் குப்தா.  கலாச்சார ஏகாதிபத்தியத்தை திணிக்கும் முயற்சியாகவே இந்தப் பாடநூல்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன என்கிறார் இவர்.

இல்லாத சரஸ்வதி நதி ராஜஸ்தானிலும் ஹரியானாவில் பாய்ந்தோடியதாக எழுதியிருப்பது, இந்து புராண அரசர்கள் இந்தந்த ஏரியாவை ஆண்டார்கள் என புராணத்தை வரலாறாக எழுதியிருப்பது, வேத கணிதத்தை எட்டாம் வகுப்பு வரை பாடநூலில் சேர்த்திருப்பது, முகலாய அரசர்கள் குறித்த வரலாற்றை திரித்தி எழுதியிருப்பது, தேசப்பற்று என்பது ரத்தத்தை சிந்துவது என ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு, தனது இந்துத்துவத் திணிப்பை திட்டமிட்டு செய்திருக்கிறது.

இந்த நூல்களைப் படிக்கும் குழந்தைகள் சிந்தித்து செயலாற்றும் அறிவியல் தன்மையுடன் இல்லாமல், மூடநம்பிக்கையை நம்பும், பேய்களின் மீது பயம் கொள்ளும் குழந்தைகளாக உருவாகக்கூடும் என்கிறார் கோமல் ஸ்ரீவத்சவா என்கிற சமூக செயல்பாட்டாளர்.

ராஜஸ்தானில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வசுந்தராவிடம் ஒரு சாதாரண பெண், காவல் கட்டுப்பாடுகளையும் மீறி, “படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள், உனக்கு எப்படி ஓட்டுப்போட முடியும்” என கேட்கிறார். அதை எதிர்கொள்ள முடியாத பா.ஜ.க. முதல்வர் முகத்தை திருப்பிக்கொண்டு செல்கிறார்.

வேலையில்லாத் திண்டாட்டத்தில் ராஜஸ்தான் மூன்றாவது இடத்தில்  இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தையோ, விவசாயிகளின் பிரச்சினையையோ தீர்க்க முடியாத பா.ஜ.க.வின் வெற்று இந்துத்துவ முழக்கத்தை மக்களே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.  அகண்ட இந்து ராஷ்டிர ஆட்சி மக்களை எப்படி வாட்டி வதைக்கும் என்பதை மக்கள் அனுபவித்து விட்டார்கள்.  அதனால்தான் அவர்களை மதவாதத்தில் மூழ்கடிக்கும் விதமாக இப்படி புரட்டுக்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பது துவங்கி அயோத்தி ராமன் கோவில் வரை பல சதித்திட்டங்களை முன்னெடுக்கிறது.

மக்கள் இதற்கு பலியாகாமல் இந்துமதவெறியர்களை தூக்கி எறிவது நாடு முழுவதும் தேவைப்படும் ஒரு அவசியமா போராட்டம் என்பதை ராஜஸ்தான் பகர்கிறது. இல்லையேல் இந்நாட்டில் குறைந்தபட்ச ஜனநாயகமோ, அறிவோ கூட இருக்காது.

கலைமதி

செய்தி ஆதாரங்கள்:
BJP’s major achievement in Rajasthan: Rewriting school textbooks to reflect RSS worldview
Joblessness, Not Mob-Lynching, Is What Could Spell the End for BJP in Rajasthan

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க