ணிப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர்சந்திரா வாங்கெம் கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நவம்பர் 27 முதல் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு எதிராக அவர் செயற்படாதவாறு தடுப்பதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கைது ஆணையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையை ஸ்க்ரோல் பத்திரிகை பார்த்ததாக குறிப்பிட்டிருக்கிறது. மேற்கு இம்பாலின் மாவட்ட ஆட்சியரால் இந்த கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் கிஷோர்சந்திரா வாங்கெம்.

தேசிய பாதுகாப்பிற்கு ஏதேனும் ஊறு விளைவிக்கக் கூடும் என்று ஒருவரை சந்தேகித்தாலே போதும் அவரை கைது செய்யும் அதிகாரத்தை கடுமையான இந்த தேசிய பாதுகாப்பு சட்டம் ஆட்சியாளர்களுக்கு வழங்குகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தின் முன்னால் தனது வாதத்தை வைப்பதற்கும், வக்கீல் வைத்துக் கொள்வதற்குமான உரிமையையும் இச்சட்டம் மறுக்கிறது.

சிறையில் அடைக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக நவம்பர் 21-ம் தேதி பிரதமர் மோடியையும் முதலமைச்சர் என்.பிரேன் சிங்கையும் விமர்சித்து ஒரு காணொளியை பேஸ்புக்கில் பதிவிட்டதற்காக மணிப்பூர் போலீசால் வாங்கம் கைது செய்யப்பட்டார்.

பேஸ்புக் பதிவு:

மணிப்பூரில் நவம்பர் 19-ம் தேதி ஜான்சிராணி இலக்குமி பாயின் பிறந்த நாள் விழாவை நடத்தியதற்காக முதல்வர் பிரேன்சிங்கை, “மோடி மற்றும் இந்துத்துவாவின் கைப்பாவை” என்று அந்தக் காணொளியில் வாங்கிம் கடுமையாக கண்டித்துள்ளார். “ஜான்சி இராணிக்கும் மணிப்பூருக்கும் ஒரு தொடர்பும் இல்லை” என்றும் “மணிப்பூரின் தேசியத்தைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் அறிவு இருக்கிறதா?” என்றும் அந்த காணொளியில் அவர் கேட்டிருந்தார். “உங்களுக்கு அதைப்பற்றி தெரியவில்லை என்றால் உளறாதீர்கள்” என்றும் கூறினார். மேலும், காணொளியில் பல இடங்களில் மோடியையும் சிங்கையும் கடுமையாக விமரிசித்தும் பேசியிருக்கிறார் . “வந்து என்னை கைது செய்யுங்கள்” என்றும் கூறியுள்ளார்.

அவதூறு பரப்பியதாகவும் வெறுப்பைத் தூண்டியதாகவும் கூறி தேச துரோக குற்றச்சாட்டில் போலீசு அவரைக் கைது செய்திருந்தது. ஆனால் நவம்பர் 25 -ம் தேதி அவர் மீது தொடுக்கப்பட்ட தேச துரோக வழக்கை நீக்கியும் மற்ற வழக்குகளுக்கு பிணை கொடுத்தும் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் நடத்தைக் குறைவாக பேசியிருக்கிறார் தான் ஆனால் அது தேச துரோகமாகாது” என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும் குடிமக்களின் விமர்சன கருத்துக்கள் கடுமையாகவோ அல்லது நளினமாகவோ எதுவானாலும் அதற்காக பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் உறுப்புகள் அதன் மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு உணர்ச்சி வசப்படத் தேவையில்லை என்று மேலும் கூறியிருக்கிறது.

மாற்று தடுப்பு நடவடிக்கை

எனினும் வாங்கிம் ‘ஒரு வாடிக்கையான குற்றவாளி என்பதால் அவரை பிணையில் விட்டால் நாட்டின் பாதுகாப்பிற்கும் பொது அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபடக்கூடும்’ என்று மாவட்ட ஆணையரின் ஆணை கூறுகிறது. எனவே, அதைத் தடுப்பதற்கு ‘மாற்று தடுப்பு நடவடிக்கை’ தேவைப்படுவதாகவும் கூறியிருக்கிறது. அதுதான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழான கைது நடவடிக்கை.

கைது செய்யப்பட பத்திரிக்கியாளர் கிஷோரேசந்திரா வாங்கெமின் மனைவி ரஞ்சிதா எல்நன்பம்.

பா.ஜ.க-வை விமர்சித்து பேஸ்புக்கில் எழுதியதற்காக இதற்கு முன்னதாக ஆகஸ்டில் வாங்கெம் கைது செய்யப்பட்டார். தன்னுடைய பதிவு ஒன்றில் பா.ஜ.க.விற்கு ’புத்து’ ஜோக்கர் கட்சி (Budhu Joker Party) என்று விளக்கம் கொடுத்திருந்தார். ’புத்து’ என்ற இந்தி சொல்லுக்கு முட்டாள் என்று பொருள்.

வாங்கெம் மீதான சமீபத்திய கைது நடவடிக்கை குறித்து கூடுதலாக தகவல் எதுவும் தர மாவட்ட ஆணையர் மறுத்துவிட்டார்.” தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி ஐந்து நாட்களுக்குள் கைதுக்கான காரணங்களை முன் வைக்க வேண்டும். தற்போது அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். மேற்கொண்டு எதுவும் கூற முடியாது.” என்று மாவட்ட ஆணையர் கூறினார்.

கைது நடவடிக்கையின் தற்போதைய நிலைமை குறித்து எதுவும் தெரியாது என்று மாநிலத்தின் தலைமை செயலாளர் ஜே.சுரேஷ் பாபு கூறினார். இம்பாலின் காவல்துறை ஆணையர் ஜோகேஷ்சந்திரா ஹௌபிஜாம் இது குறித்து கருத்துரைக்க மறுத்து விட்டார்.

பத்திரிகையாளர்களின் மவுனம்

வாங்கிமின் விடுதலையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இம்பாலில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. எனினும் மாநிலத்தின் ஊடகவியலாளர் சமூகம் இதிலிருந்து பெரும்பாலும் விலகியே இருந்தது. சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் அறிவுபூர்வமற்ற சொந்த கருத்துக்களுக்காக பத்திரிக்கையாளரோ அல்லது வேறு நபர்களோ கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்று சமீபத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டதாக அனைத்து மணிப்பூர் பத்திரிகையாளர் (All Manipur Working Journalists) சங்கத்தின் தலைவர் புரோசெந்திரா நிங்கோம்பா கூறினார். நிங்கோம்பா ஆசிரியராக பணியாற்றி வந்த ISTV தொலைக்காட்சியில் சமீப காலம் வரை வாங்கெம் துணை ஆசிரியராகவும், நிகழ்ச்சி நடத்துபவராகவும் பணியாற்றி வந்தார். பேஸ்புக்கில் காணொளி வெளியிடப்படும் முன்பாகவே பணியிலிருந்து நின்று விட்டார்.

இம்பாலின் ஊடகங்களில் ஒரு பெரும்பகுதியும் இப்பிரச்சினையை வெளியிடுவதிலிருந்து ஒதுங்கி கொண்டது. “எப்படியோ ஒட்டுமொத்த ஊடக சகோதரத்துவத்தையும் “இந்த அரசாங்கம் திறமையாக கையாண்டு இருக்கிறது. உள்ளூர் ஊடகங்களும் இதுப்பற்றி எதுவும் கூறவில்லை” என்று இசையமைப்பாளரும் செயற்பாட்டாளரும் மற்றும் போராட்டத்தில் பங்கு பெற்றவருமான ஆகு சிங்கங்பம் கூறினார். மேலும் “ இப்படித்தான் மொத்த நகரத்தையும் அவர்களது கட்டுப்பாட்டினில் வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் கிஷோர்சந்திரா வாங்கெமை விடுதலை செய்ய சொல்லி போராட்டக்காரர்கள் வலியுறுத்துகிறார்கள்.

”இம்பால் ஃப்ரீ ப்ரெஸ்” (Imphal Free Press) மட்டுமே இக்கைது நடவடிக்கையை பற்றி எழுதிய ஒரே பத்திரிக்கை. வாங்கெமிற்கு மணிப்பூர் பத்திரிக்கையாளர்களிடம் ஆதரவு இல்லை என்று அதன் ஆசிரியரான பிரதிப் பஞ்சாபின் கூறினார். “ஏறக்குறைய ஒருவர் கூட இந்த பிரச்சினையை குறித்து எதுவும் பேசவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது” என்று அவர் கூறினார்.

அனைவரது வாயையும் மூடுவதற்கு பா.ஜ.க.  அரசு முயல்கிறது என்று காங்கிரசு கட்சியின் குமுக்சம் ஜாய்கிசன் (Khumukcham Joykisan) குற்றம் சாட்டினார். பத்திரிக்கையாளர்களும் கூட எதையும் பேசுவதற்கு அஞ்சுகிறார்கள் என்று அவர் கூறினார்.

படிக்க:
மணிப்பூர் பிணங்களின் முறையீடு : பீதியில் இந்திய இராணுவம்
மணிப்பூர் : 64 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்பு !

“ஒரு ஜனநாயக நாட்டில் எங்களுக்கு கருத்துக் கூற கூட உரிமையில்லையா?” என்று வாங்கெமின் மனைவி ரஞ்சிதா எல்நன்பம் கேட்கிறார். “இந்த அரசுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை போல தெரிகிறது அதனால்தான் எங்களது வாயை மூட முயற்சி செய்கிறது” என்று கூறினார்.

வினவு செய்திப் பிரிவு
நன்றி: scroll.in
தமிழாக்கம்: சுகுமார்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

2 மறுமொழிகள்

 1. இவரின் மத பின்னணியை ஆராய்ந்தாலே போதும் இவர்கள் ஏன் இப்படி வெறுப்பை கக்கி கொண்டு இருக்கிறார்கள் என்பது புரியும்.

 2. அறிவுபூர்வமற்ற சொந்த கருத்துக்களுக்காக பத்திரிக்கையாளரோ அல்லது வேறு நபர்களோ கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்று சமீபத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டதாக அனைத்து மணிப்பூர் பத்திரிகையாளர் (All Manipur Working Journalists) சங்கத்தின் தலைவர் புரோசெந்திரா நிங்கோம்பா கூறினார்

  ஆகா எப்பேர்ப்பட்ட உறுதிமொழி .. அறிவுபூர்வமற்ற கருத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் மோடி & கம்பெனியாக மட்டுமே இருக்கமுடியும்.. வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
  இருந்துவிட்டுப் போகட்டும் … ஆனால் அதை நிருக்கத் தராசும் அவர்கள் கையில் தானோ.

  அறிவுபூர்வமிருக்கட்டும் ஐயா, அறிவுநாணயமற்ற குப்பைகளைத்தானே பத்திரிகைகள் என்ற பெயரில் காலைக்கடன் கழிப்பதுபோல நித்தமும் வாங்கிக் கிழிக்கிறோம்.

  பத்திரிகை முதலாளிகள்தான் அயோக்கியர்கள் என்றால் – விதிவிலக்குகளைப்பற்றி பேசவில்லை – கிட்டத்தட்ட அத்தனை பத்திரிகைக்காரர்களும் சோரம்போயிருக்கிறார்களே.. கொடுமையய்யா.

  நித்தமும் நாட்டு நடப்புகளைப் பார்க்கும் போது பொங்கத்தான் செய்கிறது…
  ஆனால் கருத்துக்களை பவானி ஜமக்காளத்தில் வடிகட்டித்தான் வெளிப்படுத்துகிறோம்.
  பாரம் தாங்காமல் வடிகட்டி கிழிந்துவிட்டதுபோலும். இதற்கு வேண்டுமானால் வடிகட்டிப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க