முகப்புஉலகம்இதர நாடுகள்மியான்மரின் ’ இந்துத்துவா ’ - பௌத்த பேரினவாதத்தின் வெறியாட்டம் - படக்கட்டுரை !

மியான்மரின் ’ இந்துத்துவா ’ – பௌத்த பேரினவாதத்தின் வெறியாட்டம் – படக்கட்டுரை !

-

மியான்மரின் பேரினவாதப் பிடியில் இருந்து தப்பிய நாடற்ற ரோஹிங்கிய சிறுபான்மையினர் – பெண்கள், குழந்தைகள் முதல் 105 வயது மூதாட்டி வரை  சாரை சாரையாக வங்காளதேசத்தில் அடைக்கலம் தேடுகின்றனர். மியான்மர் இராணுவமும் பௌத்த பேரினவாத கும்பலும் கூட்டாக ரோஹிங்கிய இனத்தின் மீது மனித சமூகம் கண்டிராத ஒரு இனவழிப்பை நடத்துகிறார்கள். கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து குறைந்தது 2,70,000 ரோஹிங்கிய சமூகத்தினர் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இத்துடன் 2016, அக்டோபர் மாதத்தில் இருந்து தப்பி வந்தவர்களையும் சேர்த்தால் குறைந்தது 4,50,000 ரோஹிங்கிய மக்கள் இதுவரை அங்கு அடைக்கலம் அடைந்துள்ளனர்.

காடுகள், மலைகளைத் தாண்டி இத்தனை பேரிழப்புகளுக்குப் பிறகும் அவர்களை உயிர்த்திருக்கச் செய்வது எது? காட்டில் உயிர்த்த புதிய உயிரையும் அதன் கருவைச் சுமந்த தாயையும், தலைமுறைகள் பல தாண்டிய 105 வயது மூதாட்டியையும் சுமந்து வர அந்த கால்களுக்கு வலு எங்கிருந்து கிடைத்தது?

கண்ணீரை மட்டுமல்ல உதிரத்தையும் கசிய வைக்கும் அந்த காட்சிகளில் சில.

ஆகஸ்ட் 25 முதல் 2,70,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள் காடுகளையும் மலைகளையும் கடந்து பங்களாதேசிற்கு சென்றுள்ளனர்.

தங்களது உடமைககள் சிலவற்றுடனும், விரைவில் [தாயகத்திற்கு] திரும்ப முடியும் என்று நம்பிக்கையுடனும் ரோஹிங்கிய சமூகதத்தினர் தப்பிச் சென்றுள்ளனர்.

வங்காளதேசத்திற்கு செல்லும் வழியில் ஒரு காட்டில் 22 வயதான தாஹேரா பேகம் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். “இதுவரை நான் செய்த மிகக்கடினமான விஷயம் இதுதான்” என்றார்.

தன்னுடைய கிராமமான கரோடிபில்(Garotibil) தீக்கிரையான பிறகு 25 வயதான கமால் ஹோசைன் தன்னுடைய 105 வயதான பாட்டியை வங்காளதேசத்திற்குத் சுமந்து சென்றார்.

அகதிகள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் – வங்காளதேச நகரமான டெனப்பில்(Teknaf) உள்ள உஞ்சின்ப்ராங் அகதி முகாமிற்கு செல்கின்றனர். தொண்டு நிறுவனங்களின் தகவலின்படி அது ஏற்கனவே நிரம்பிவிட்டது.

தனது கணவர் மற்றும் ஐந்து குழந்தைகளுடன் சல்மா காதுன் வங்காளதேசம் சென்றார். இந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது அவரும் அவரது குழந்தைகளும் குறைந்தது இரண்டு நாட்களுக்கு சாப்பிடவில்லை.

எல்லையைக் கடக்கும்போது மியான்மர் இராணுவத்தால் 22 வயதான ஹொசேன் ஜோஹத் சுடப்பட்டார். குண்டுகள் தவறவிட்டன ஆனால் அவர் மீது எறியப்பட்ட வெடிகுண்டு ஒன்றின் சிதறிய துண்டுகளால் தாக்கப்பட்டார். இராணுவத்தால் பிடிக்கப்பட்ட அவரை விடுதலை செய்ய அவரது சகோதரி அவர்களுக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. தற்போது காக்ஸின் பஜாரில்(Cox’s Bazar) உள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் காத்திருக்கிறார்.

தன்னுடைய டோலாடூலி (Tolatuli) கிராமத்தில் இராணுவம் படையெடுத்தபோது 17 வயதான மொஹமத் அயாஸ் தனது மொத்த குடும்பத்தையும் இழந்துவிட்டார். வங்காளதேச எல்லைப்பாதுகாப்பு படையினரிடம் பிடிபடும் முன்னர் அவர் குண்டு காயத்துடன் முதுகில் துணியைச் சுமந்தவாறு தப்பிச்சென்றார்.

தன்னுடைய கிராமமான பார்புனாவில் (Barbuna) துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கும்போது 28 வயதான அமானுல்லாஹ் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். தனது குடும்பத்தைப் பார்க்க அவர் முயன்றபோது கையில் சுடப்பட்டார். இறுதியாக வங்காளதேசம் செல்வதற்கு முன்பாக காடுகளில் அவர் இரண்டு நாட்கள் மறைத்திருந்தார்.

வங்காளதேச எல்லை நகரமான டம்ரோ (Tumbro)விலிருந்து பார்க்கும் போது மியான்மரின் ஒரு பகுதியில் இருந்து புகை மேலே வருகிறது.

தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 12 பேருடன் தப்பிய அப்துல் கலேக் தற்போது வங்கதேசத்தில் திறந்த வெளிப்பகுதி ஒன்றில் வசிக்கிறார். இந்த புகைப்படத்தில் தங்குமிடம் உருவாக்க குழிதோண்டிக் கொண்டிருக்கிறார். “நாம் வாழ்வதற்கு ஏதேனும் செய்துக்கொண்டே இருக்கணும். ஏதாச்சும் உங்களுக்கு நடக்கும் என்று நம்பிக்கொண்டு உட்கார்ந்து இருக்க முடியாது” என்று கூறினார்.

வங்கதேசத்திற்கு தப்பிச்செல்லும் போது தனது குழந்தைகள் முன்பாக ஹலிமா ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இந்த படத்தில் குதுபலாங் (Kutupalang) முகாமிற்கு வெளியே; அடுத்து எங்கு செல்ல வேண்டும் என்ற தேடலுடன் மற்றவர்களுடன் அவர் காத்திருக்கிறார். “யார் எங்களுக்கு புகலிடம் கொடுப்பார்கள்?” நம்பிக்கையற்று அவர் கேட்டார்.

காக்ஸின் பஜாரில் உள்ள பாலுகலி முகாமுக்கு அருகே தற்காலிக முகாம்களை எழுப்புகின்றனர் ரோகிங்கிய அகதிகள்.

காக்ஸின் பஜார் அருகே டெக்னஃப் நெல் வயல்கள் வழியாக செல்லும் ஒரு குடும்பத்தாரால் ரோஹிங்கியா சிறுவன் ஒருவன் தொட்டிலில் தூக்கிச் செல்லப்படுகிறான்.

சர்ச்சைக்குரிய (No Man’s Land) பகுதிக்கு அருகில் வங்கதேச எல்லைக்காவலர் (BGB) படையின் உறுப்பினர்கள் நிற்கின்றனர். சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை எல்லைப்பகுதியில் பதிப்பதாக மியன்மரின் பாதுகாப்புப்படைகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

நன்றி : அல்ஜசீரா

_____________

இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளதா!

இனவெறி, மதவெறி ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து எதிர்க்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி