டந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் விசித்திரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. நாட்டை பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் தங்களுக்கு பாதுகாப்பில்லை  என்று கூறி அதுவும் ஓரிருவர் அல்ல நூற்றுக்கணக்கில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து வலதுசாரி இணையதளங்கள் முதல் பத்திரிகைகளின் ஓப்பன் எடிட்டோரியல் பத்திகள் இராணுவ வீரர்களுக்காக கதறின.

அப்படி என்ன பிரச்சினை?  ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் வரைமுறையின்றி கொலை செய்த இராணுவத்தினர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நத்தை வேகத்தில் நடந்த விசாரணையை துரிதப்படுத்த கோரி சி.பி.ஐ. இயக்குநரை நேரில் அழைத்து கண்டித்தது. அதன் பிறகு சில போலீசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ. இதைக் கண்டித்து 400 இராணுவ வீரர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.

இப்பின்னணியில் போலி மோதல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரனையில் தெரியவந்த தகவல்களை ஸ்க்ரால் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம்:

“வீர தீர செயல்களுக்கான விருது பெறுவதுதான் நோக்கம்” –
மணிப்பூர் போலீசார் பச்சை படுகொலைகளை செய்துள்ளனர் என சி.பி.ஐ குற்றச்சாட்டு!

ணிப்பூர் காவல் உதவி ஆய்வாளர் தருண்குமார் என்பவருக்கு கடந்த  2012 நவம்பர்-23 அன்று குடியரசுத் தலைவர் வீர தீர செயல்களுக்கான பதக்கம் வழங்கி கவுரவித்திருந்தார். முகம்மது சமீன் கான் என்பவரை சுட்டுக்கொண்ட படைக்கு தலைமை தாங்கியதற்காக  இந்த விருது வழங்கப்பட்டது.

இச்சம்பவத்தில் போலீசரின் முதல் தகவல் அறிக்கையின் படி  “2012 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக  காங்கிரஸ் கட்சித் தொண்டர்களைக் கடத்தி குண்டு வைத்து கொலை செய்ய முகமது சமீன் கான் திட்டமிட்டிருந்தார். போலீசாருக்கு  கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் ஐரில்பம்ங் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லில்லாங் சண்டிபூர் பகுதியில் கண்காணிப்பில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கான் மற்றும் அவனது கூட்டாளிகளை தடுத்த போது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர் மற்றும் கையெறி குண்டுகளை  வீசி போலீசாரைத் தாக்கினர். அப்போது நடந்த மோதலில் கான் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் சிவப்பு பாலீத்தீன் கைப்பற்றப்பட்டன. அவனது கூட்டாளிகள் இருட்டில் தப்பிவிட்டனர்.“

வீர தீர பதக்கத்தோடு தருண்குமார் பதவி உயர்வும் பெற்றார். தற்போது மோரெஹ் என்ற நகரத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். மறுபுறம் கானின் குடும்பமோ கான் ஒரு அப்பாவி என்பதையும் அவர் படுகொலை செய்யப்பட்டார்  என்பதையும்  நிரூபிக்க கடந்த ஆறுவருடமாக போராடிவருகிறார்கள். கான் இறந்த பிறகு ஒரு மாதத்தில் பிறந்த குழந்தையுடன் அவர் மனைவி வாழ்ந்துவருகிறார்.

கான் என்கவுண்டர் குறித்து விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் கானின் குடும்பத்தினர் சொல்வது போல அவர் அப்பாவி என்பதை உறுதி செய்து  கான் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க கடந்த 2014-ஆம் ஆண்டு ஆணையிட்டது. கான் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கிடைத்தது. ஆனால், தருண்குமார் மற்றும் அவரது படையினர் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தால் பாதுகாக்கப்பட்டிருப்பதால் – இச்சட்டப்படி ஆயுதப்படையினர் சந்தேகிக்கும் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், கொலை செய்யலாம் – இப்பிரச்சினை வழக்கு முடியவில்லை.

இந்நிலையில் தான் மணிப்பூரில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட 98 போலி மோதல் வழக்குகளை விசாரிக்க கடந்த 2017 ஜூலை மாதம் சி.பி.ஐ.-க்கு  உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். “சட்டப்புறம்பாக கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கான அமைப்பு” சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில்தான் இவ்வுத்தரவை பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.  1979 – 2012-க்கு இடையில்  1528 போலி மோதல் கொலைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் ஆனால் எந்த ஒரு வழக்கிலும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி உச்சநீதி மன்றத்தை நாடியிருந்தார்கள் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள். வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதோடு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும்  அதீத நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து கூறியது.

அவ்வாறு உச்ச நீதிமன்றம் விசாரிக்க கோரியிருந்த 98 வழக்குகளில் ஒன்று தான் கான் கொலை வழக்கு.  ஒர் ஆண்டுக்கு பிறகு கடந்த ஜூலை 7-ஆம் தேதி சி.பி.ஐ. இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கான் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் கூறியவை உண்மை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவி ஆய்வாளர் தருண்குமார் மற்றும் மேலும் 6 மணிப்பூர் போலீசார் மீது சதி செய்தல், கொலை, ஆதாரத்தை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.

என்கவுண்டர்  நடந்த பகுதியில் தீவிரவாதிகளின் எவ்வித இரகசிய செயல்பாடுகளும் இல்லை எனவும் ஆயுதங்களை போலீசாரே அப்பகுதியில் சோடித்தனர் என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  “ இந்த என்கவுண்டரின் நோக்கமே அரசிடமிருந்து விருது பெறுவது தான். அதற்காக போலி என்கவுண்டரை நடத்தி அதனை உண்மையாக சோடித்துள்ளனர்.” என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தவிர போலி மோதல் தொடர்பாக மேலும் 5 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அனைத்து மோதல்களும் ஒரே முறையை பின்பற்றி நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

உதாரணமாக ஜனவரி 18, 2012-இல் மணிப்பூர் போலீசாரால் முகம்மது இசாக் மற்றும் முகம்மது முஸ்தகிம் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கை எடுத்துக் கொள்ளலாம். தலைமறைவு உறுப்பினர்கள் குறித்து கிடைத்த “இரகசிய தகவலின் அடிப்படையில்”  செயல்பட்டபோது “இசாக் மற்றும் முஸ்தாகிம் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தப்பியோட முயன்றதால்”  அவ்விருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆனால், இது என்கவுண்டர் அல்ல பச்சைப்படுகொலை என சி.பி.ஐ.-யின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இருவரும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் இல்லை எனவும் இவர்களுக்கும் மணிப்பூர் தலைமறைவு போராளிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுல்ளது. மேலும்  ஆயுதங்கள் வெடிபொருட்கள் போலீசாரால் சோடிக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 8 கமாண்டோ போலீசார் மீது கொலை, தடயங்களை அழித்தல், குற்றச்சதி, பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல லாய்ஷ்ராம் ரன்பீர் சிங் வழக்கில் – கங்கலெபக் கம்யூனிஸ்ட் கட்சி (Kangleipak Communist Party) உறுப்பினர் என சொல்லப்பட்டு 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று கொல்லப்பட்டார் –  நான்கு மணிப்பூர் போலீஸ் அதிகாரிகள் மீது கொலை மற்றும் தடங்களை அழித்தல் ஆகிய பிரிவிகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. முன்னர் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின்படி முந்தைய இரு சம்பவங்களைப்போலவே, இருசக்கர வாகனத்தில் வந்த சிங் மற்றும் கூட்டாளிகளை போலீசார் தடுத்தபோது சிங் துப்பாக்கியால் சுட்டார். அப்போது நடந்த  மோதலில் சிங் கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் சிங் துப்பாக்கியால் சுட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவரது துப்பாக்கி என்று சொல்லப்படுவதில் சிங்கில் கைரேகை கூட இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ கொல்லப்பட்ட லாய்ஷ்ராம் ரன்பீர் சிங்  போராளி குழுவினரிடமும் தொடர்பில் இருந்ததாக எந்த ஆதரமும் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்.

அடுத்ததாக லாய்ஷ்ராம் லிங்கன். இவர் 2011-ஆம் ஆண்டு ஜுன் 28 என்று அவரது வீட்டின் முன்பு மணிப்பூர் போலீஸ் கமாண்டோ படையினரால் கொல்லப்பட்டார். அவரது உடலில் 20 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது பிணக்கூறாய்வில் கண்டறியப்பட்டது. போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின்படி லிங்கனின் வீட்டை சோதனையிடும் போது லிங்கன் துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றதாக அப்போது நடந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் சி.பி.ஐ விசாரணையில் இதுவும் பச்சப்படுகொலை என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு மணிப்பூர் போலீஸ் அதிகாரிகள் மீது கொலை, தடயங்களை அழித்தல், சதி திட்டம் ஆகிய பிரிவுகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இவைகள் போல லாக் அப் கொலை தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.  மேலும் சட்டப்புறமாக சிறைவைத்தது தொடர்பாக  பத்து போலீசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றப்பத்திரிகையை வரவேற்றுள்ளார்கள். “குற்றப்பத்திரிகையின் தரம் குறித்து மகிழ்ச்சி” என இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்துவரும் மனித உரிமை ஆர்வலர் பப்ளூ லோய்ட்ங்பம் தெரிவித்துள்ளார். “ஆனாலும் கீழ் நிலை அதிகாரிகள் தான் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்கள். உயர் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை வரம்புக்குள் வரவவில்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

சட்டபுறம்பாக படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் தலைவர் ரேனு தக்ஹெலம்பம் கூறுகையில் “மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது. இதற்காகத்தான் தாங்கள் பல காலம் காத்திருந்தேன்.” என்கிறார். இவரின் கணவரும் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். மேலும் அவர் கூறுகையில் ” போலிமோதல் கொலைகளை செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும். அவர்கள் அனைவரும் ஜெயிலுக்கு செல்ல வேண்டும். அப்போது தான் மணிப்பூர் மக்களுக்கு நீதி கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

மூலக் கட்டுரை: ‘Motive was to get gallantry medal’: CBI indicts Manipur police for ‘cold blooded murder

மேலும்:

தமிழாக்கம்:
– வினவு செய்திப்பிரிவு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க