சாம் இராணுவப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரி தரம்வீர் சிங் மணிப்பூர் உயர்நீதி மன்றத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தில் தனது படையணியைச் சேர்ந்த இராணுவ நுண்ணறிவுப் பிரிவினர் போலி மோதல் படுகொலைகளிலும், சூறையாடல்களிலும், ஆட்கடத்தலிலும் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ’3 படையணி நுண்ணறிவுப் பிரிவினை’ச் சேர்ந்தவர் லெப்டினண்ட் கர்னல் தரம்வீர் சிங். இவரை அவருடன் வேலை பார்க்கும் லெப்டினண்ட் கர்னல் நந்தா, மேஜர் ரத்தோர் ஆகியோர் உள்ளிட்டு ஆயுதமேந்திய இராணுவத்தினர் கடத்தியதாகக் கூறி அவரது மனைவி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி லெப்டினண்ட் கர்னல் தரம்வீர் சிங் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தரம்வீர் சிங்
தனது கணவர் தரம்வீர் சிங்கை இராணுவத்தின் சட்டவிரோத காவலில் இருந்து மீட்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த ரஞ்சு சிங் மற்றும் அவர்களது குழந்தைகள்

தாம் இராணுவத்தினராலேயே கடத்தப்பட்டது குறித்து வாக்குமூலம் ஒன்றை அளித்தார் தரம்வீர் சிங். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் நகல் ஒன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு கிடைத்துள்ளது. அந்த வாக்குமூலத்தில், கடந்த ஜூலை 1, 2018 அன்று காலையில், லெப்டினன்ட் கர்னல் நந்தா, மேஜர் ரத்தோர் ஆகியோருடன் ஆயுதமேந்திய இராணுவத்தினர் சிலரும் சேர்ந்து மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள தமது குடியிருப்பிலிருந்து தம்மைக் கடத்திக் கொண்டு போய் வீட்டுச்சிறை வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம், தரம்வீர் சிங்கை ஆஜர்படுத்த உத்தரவிட்ட பின்னர்தான் அதாவது கடத்தப்பட்டு 5 நாட்களுக்குப் பின்னர்தான் அவரை கோர்ட்டில் நேர்நிலைப்படுத்தியிருக்கின்றனர் அவரைக் கடத்திய இராணுவ அதிகாரிகள்.

தனது வாக்குமூலத்தில், சில மூத்த அதிகாரிகள் செய்த தவறுகளை மேலிடத்திற்கு தாம் புகாரளித்ததற்கு பழி வாங்கும் விதமாக, தமக்கு எதிராக அவர்கள் திட்டமிட்டு நடத்திய பிரச்சாரத்தில் தாம் பாதிப்படைந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார் தரம்வீர் சிங்.

மேலும் தமது வாக்குமூலத்தில், அசாமில் கடந்த 2016-ம் ஆண்டு இராணுவத்தால் நடத்தப்பட்ட போலி மோதல் கொலைகளைப் பற்றியும், கொள்ளைகளைப் பற்றியும் தெரிவித்துள்ளார். நாகலாந்தின் திமாபூர் பகுதியிலிருந்து அப்பாவி இளைஞர்களை கடத்தி வந்து போலி மோதல் மூலம் இராணுவ நுண்ணறிவுப் படையின் ஒரு பிரிவு ரங்கபஹர் கண்டோன்மண்ட் அருகே அவர்களை கொலை செய்ததையும், அவர்கள் நடத்திய சூறையாடல்கள் குறித்தும் கடந்த செப்டெம்பர் 9, 2016 அன்று தாம் புகார் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய கட்டுரைகள்:
சட்டீஸ்கர்: 20 அப்பாவி மக்களை கொலை செய்த இந்திய இராணுவம்!
காஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம்

மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவும், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் காரணமாகவும் தாம் அந்த புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த அதிகாரப் பூர்வமான 13 பக்க புகார் கடிதத்தினை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றத்தில் அனுமதியும் கோரியுள்ளார்.

தரம்வீர் சிங்கின் வாக்குமூலம், கடந்த 2010, 2011 ஆண்டுகளில், இராணுவத்தின் ”3 படையணி நுண்ணறிவுப் பிரிவின்” ஒரு குழுவினர் நடத்திய மூன்று போலி மோதல் கொலைகள் குறித்தும் ஒரு சூறையாடல் சம்பவம் குறித்தும் குற்றம்சாட்டுகிறது.

அவரது வாக்குமூலத்தில், கடந்த மார்ச் 10, 2010-ல் பிஜம் நவோபி, ஆர்.கே.ரோனெல், ப்ரேம் ஆகிய 3 மணிப்பூர் இளைஞர்கள், நாகலாந்தில் உள்ள திமாபூரில் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து இராணுவத்தின் ”3 படையணி நுண்ணறிவுப் பிரிவினால்” கடத்தப்பட்டு, இராணுவ உணவு விடுதிக்குப் பின்புறத்தில் வைத்து கொல்லப்பட்டனர் என்பதை விரிவாக பதிவு செய்துள்ளார். அச்சமயத்தில் வந்த ஊடகங்களின் தகவல்களின்படி, மார்ச் 17, 2010 அன்று அசாமின் கார்பி அங்லாங் காவல் நிலையத்துக்கு உட்பட்ட லக்கிஜன் பகுதியில் அம்மூவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இது தொடர்பாக ஒரு வழக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேஜர் டி. ரவி கிரண் என்பவர்தான் இது குறித்து முதன்முதலில் கடந்த மார்ச் 12, 2010 அன்று பொது ஆணை அலுவலருக்கு கடிதம் எழுதியவர். அவர் எழுதிய கடிதத்தில் மூன்று மணிப்பூர் இளைஞர்கள், இராணுவத்தின் நுண்ணறிவு கண்காணிப்புப் பிரிவினரால் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தரம்வீர் சிங்
மனைவி குழந்தைகளுடன் தரம்வீர் சிங்

தமது வாக்குமூலத்தில் இதைப் போன்ற மற்றுமொரு சம்பவத்தை விவரிக்கிறார் தரம்வீர் சிங். மணிப்பூரைச் சேர்ந்த புனித டாமினிக் கல்லூரி மாணவர் சதீஷ் மற்றும் அவரது நண்பரும் அதே குழுவினரால் பிப்ரவரி 5, 2010 அன்று ஷில்லாங்கிலிருந்து கடத்தப்பட்டு மசிம்பூர் காடுகளில் வைத்து கொல்லப்பட்டனர். பிப்ரவரி 23 அன்று சதீஷின் பெற்றோர் தமது மகன் காணாமல் போனது குறித்து மணிப்பூர் டிஜிபியிடம் புகார் அளித்திருக்கிறார். ஆனால் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை

திமாபூரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்த மக்கள் விடுதலைப் படையின் போராளி ஜித்தேஷ்வர் சர்மா என்ற ஜிப்சி மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் இழுத்துச் சென்று படுகொலை செய்துள்ளது இதே பிரிவு. அவர்களது உடல்களை அப்பிரிவின் உணவு விடுதிக்குப் பின்னால் புதைத்துள்ளனர். அப்பிரிவைச் சேர்ந்த சிலருக்கு புதைக்கப்பட்ட சரியான இடம் தெரியும் என்றும் அந்த வாக்குமூலத்தில் தரம்வீர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நுண்ணறிவுக் குழுவைச் சேர்ந்தவர்களே, ஒரு பெண்ணையும் அவரது குழந்தையையும் திமாபூரிலிருந்து கடத்தி ஒரு கோடி வரை அவரது குடும்பத்தாருடன் பேரம் பேசி பிணையத் தொகையாகப் பெற்றுள்ளனர் என்பதையும் அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தாரின் உயிருக்கும் ஆபத்து உள்ள்ளதாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தரம்வீர் சிங் கடத்தப்பட்டதாகக் கூறுவதை ஆதரமற்றதாகக் கூறி இராணுவம் மறுத்துள்ளது. அவர் பணிக்காக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறியிருக்கிறது இராணுவம். தரம்வீர் சிங்கோ விடுமுறையில் குடும்பத்தோடு மணிப்பூரின் இம்பாலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை கொள்ளை ஆட்கடத்தல் குறித்து உள்ளூர் இராணுவ செய்தித் தொடர்பாளரிடம் கருத்துக் கேட்கப்பட்ட போது, நீதிமன்ற விசாரணையில் இவ்வழக்கு இருப்பதனால், இது குறித்து கருத்து தெரிவிக்க தமக்கு அதிகாரம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் கொலைகளையும், கடத்தி பணம் பறிக்கும் இழிவையும், கொள்ளைகளையும் இராணுவத்திலிருந்தபடியே சட்ட வரைமுறைக்கு உட்பட்டு புகாரளித்த ஒரு இராணுவ அதிகாரியையே இவ்வளவு உளவியல்ரீதியாக சித்திரவதை செய்துள்ளனர். அவரைக் கடத்திச் சென்று அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது இராணுவம். ஒரு லெப்டினண்ட் கர்னல் பதவியிலுள்ள இராணுவ அதிகாரிக்கே இதுதான் கதியென்றால், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சாதாரண மக்களின் நிலை என்னவென்பதை புரிந்து கொள்ள முடியும்.

– வினவு செய்திப் பிரிவு

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளிவந்த செய்திப் பதிவின் தமிழாக்கம்.

1 மறுமொழி

  1. இந்தியா ராணுவத்தின் யோக்கியதை பலமுறை வெளிவந்துள்ளது. இந்த யோக்கியசிகாமணிகள் ஈழத்தில் நடத்திய நரவேட்டயையும்,ஈழப்பெண்களை சூரையாடியதையும் நாம் என்றுமே மறக்க இயலாது.இந்தியராணுவம் தனது சொந்த உறுப்பையே தின்னும் நவீனமிருகமாக இந்த மறுகாலணியம் தயாரித்து விட்டது.வாழ்க ‘தேஷபக்த்தி’!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க