தண்டகாரண்யா காடுகளை ஆக்கிரமிக்க இந்திய அரசு நடத்தும் போரில் ஒரு பெரிய வெற்றியை பாதுகாப்புப் படைகள் ஈட்டியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். சத்திஸ்கர் மாநிலத்தின் பிஜபூர் மாவட்டத்தின் கோட்டாகுடா கிராமத்தில் பயங்கரமான நக்சலைட் தீவிரவாதிகள் 20 பேரை பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்று விட்டதாக செய்திகள் வெளியாகின.
24/7 தொலைக்காட்சி சேனல்களில் நீளமாக ஒலித்த வெற்றி முழக்கங்களுக்கு பின்னணியாக, திரும்பத் திரும்ப நான்கைந்து காட்சிகள் காட்டப்பட்டன. மருத்துவமனை ஒன்றில் காயம் பட்ட ஒருவருக்கு டாக்டர் பஞ்சால் மருந்து போடுவது, ஒருவர் ஒருக்களித்து படுத்திருப்பது, ஒருவர் படுக்கையில் படுத்திருப்பது, காவல் நிலையத்தின் பெயர்ப்பலகை ஒரு பக்கம் காட்டப்பட, இன்னொரு பக்கம் வரிசையாக கிடத்தப்பட்டிருக்கும் உடல்களின் கால்கள் மட்டும் காட்டப்படுகின்றன, உடல் பகுதிகள் வீடியோவில் மங்க வைக்கப்பட்டுள்ளன. கிடத்தப்பட்டிருக்கும் உடல்கள் சாதாரண உடை உடுத்தியவை என்று தெரிகிறது, ஒருவர் மட்டும் ராணுவ சீருடை அணிந்திருக்கிறார்.
இந்தக் காட்சிகளை சுற்றிச் சுற்றிக் காட்டி அதன் பின்னணியில் செய்தி வாசிப்பவர்களும், பிஜபூரிலும், தில்லியில் உள்துறை அமைச்சகத்தின் முன்பும் நிற்கும் செய்தியாளர்களும் அரசாங்கத்தால் தரப்பட்ட தகவல்களை ஒப்பித்துக் கொண்டிருந்தார்கள். உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் ‘வெற்றி, வெற்றி’ என்று சிஆர்பிஎப் ஜவான்களின் வீரத்தை புகழ்ந்து பாராட்டி தொலைக்காட்சி நிருபர்களிடம் பேசினார். சத்திஸ்கர் முதல்அமைச்சர் ராமன் சிங், நான்கு நாட்களுக்குப் பிறகு தனது மௌனத்தை கலைத்து, பல வேலைகளுக்கு மத்தியில் தொலைக்காட்சி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கிறார், உள்துறை செயலர் கே என் சிங் கடுகடுப்பாக பேசுகிறார். இவை அனைத்தும் மேலே சொன்ன காட்சிகள் சுற்றிச் சுற்றிக் காட்டப்படும் திரையிலேயே நடக்கின்றன.
மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களின் கூட்டம் ஒன்று நடப்பதாக கேள்விப்பட்டு, 600 பேர் கொண்ட சிஆர்பிஎப் படைக் குழுவினர் மூன்று திசைகளிலிருந்து புறப்பட்டு போனார்களாம். அவர்கள் மீது வழியில் யாரோ சுட்டதில் ஆறு பேர் காயமடைந்தார்களாம் (மருத்துவமனையில் படுத்திருப்பவர்கள்), திருப்பிச் சுட்டதில் 18 கொடிய பயங்கரவாதிகளை கொன்று விட்டார்களாம்.
பொதுவாக மாவோயிஸ்ட் போராளிகள் கொல்லப்பட்ட தமது தோழர்களின் உடல்களை எடுத்துச் சென்று விடுவார்கள் என்றும் இந்த முறை அனைத்து உடல்களையும் அரசுப் படைகள் கைப்பற்றி விட்டன என்றும் சாதனையாக சித்தரித்தார்கள்.
அடுத்த நாள் கிராமத்திலிருந்து நேரடி தகவல்கள் கிடைக்கும் போது மாற்றி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ’20 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், அவர்களில் ஒருவர் 15 வயதான பெண், 4 சிறுமிகள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள், பாதுகாப்புப் படையினர் கூடியிருந்த கிராம மக்களை சுட்டு படுகொலை செய்து விட்டு சம்பவத்திற்குப் பிறகு தமது கதையை ஜோடிக்கிறார்கள்’ என்று மக்கள் சொன்னார்கள். ‘சிஆர்பிஎப் படையினர் சுற்றி வளைத்து சுட்டதில் தமது சக படையினராலேயே காயமடைந்திருக்கலாம்’ என்றும் கிராமத்தினர் தெரிவிக்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட சோட்டு என்ற 14 வயது சிறுவன், தான் பாதுகாப்பு படைகளால் பிடிக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு, காலில் சுடப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்கிறான்.
‘மாவோயிஸ்டுகள் பொதுமக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள், அதனால் யாராவது பொது மக்கள் இறந்திருந்தால் அதற்கு பொறுப்பு நாங்கள் அல்ல, மாவோயிஸ்டுகள்தான்’ என்று கொடுங்கோலர்களால் சொல்லிச் சொல்லி புளித்துப் போன சாக்கைச் சொன்னார் சத்திஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங். ஈழத்தில் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி தாக்கிய சிங்கள இனவெறி ராணுவமும் அரசியல் தலைவர்களும் சொன்ன அதே காரணத்தைச் சொல்லி கொலைகார படைகளின் செயலை நியாயப்படுத்துகிறார்.
உள்துறை செயலர் ஆர் கே சிங் கடுகடுப்பாக தொலைக்காட்சி நிருபரிடம் பேசுகிறார்.
- ‘ஆறு ஜவான்கள் காயமடைந்திருக்கிறார்கள், அதிலிருந்தே தெரியவில்லையா இது உண்மையான என்கவுண்டர்தான்’
- ‘இரவு 12 மணிக்கு கூட்டம் போட்டிருக்கிறார்கள், இதிலிருந்தே தெரியவில்லையா அவர்கள் நக்சலைட்டுகள்தான்’
- ‘நக்சலைட்டுகளில் பெண் போராளிகளும் உண்டுதானே, அதனால் ஒரு 15 வயது சிறுமி கொல்லப்பட்டிருப்பது சரி என்று புரியவில்லையா’
என்று பாடம் எடுக்கிறார்.
தங்கள் பகுதிகளில் நடமாடும் சிஆர்பிஎப் ஜவான்கள் காயமடைந்தால், அவை எப்படி ஏற்பட்டிருந்தாலும், புல் தடுக்கி விழுந்ததால் ஏற்பட்டிருந்தாலும், பொது மக்கள் தாக்கப்படுவதை நியாயப்படுத்தலாம் என்பதுதான் அவர் சொல்வதன் பொருள். மேலும், இரவு நேரத்தில் தமது கிராமத்தில் கூடி பேசுபவர்கள் அரசு படைகளின் துப்பாக்கிகளை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மாவோயிஸ்டு போராளிகளாக பெண் தோழர்கள் செயல்படுவதால் எந்த பெண்ணையும் தாக்கி கொல்வதற்கு பாதுகாப்புப் படைகளுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.
‘தாக்குதலின் போது பக்க விளைவாக (collateral damage) பொதுமக்கள் உயிரிழப்பதை கையாளும் சட்டங்கள் இல்லாததால், காவல் படைகள் தம்மால் கொல்லப்பட்ட ஒவ்வொருவரையும் பயங்கரவாதிகள்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது என்று அலுத்துக் கொள்கிறார் ஒரு உயர் போலீஸ் அதிகாரி. அத்தகையை சட்டங்கள் நாடாளுமன்றத்தின் மூலமாகவோ அல்லது எளிமையான ஜனாதிபதியின் ஆணையாகவோ அவருக்குக் விரைவில் கிடைத்து விடக் கூடும்.
தேடுதல் வேட்டைக்குச் செல்லும் பாதுகாப்புப் படைகள் கையோடு மாவோயிஸ்ட் போராளிகள் அணியும் சீருடைகள் சிலவற்றை எடுத்துச் செல்வது வழக்கமாம். தம்மால் கொல்லப்பட்டவர்களின் உடலுக்கு அவற்றை அணிவித்து நிரூபணம் தயாரிப்பதற்கு அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தாமே எடுத்துச் சென்ற ஆயுதங்களையும் கைப்பற்றப்பட்டதாக கணக்கு காட்டுவதும் போலீஸ் படையினரின் வழக்கமான நடைமுறை.
துணை ராணுவப் படைகளுக்கு வந்து சேரும் உளவு விபரங்கள் நம்பகம் அற்றவை என்று பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு அதிகாரி, ‘கற்பனைகள் உளவு தகவல்கள் என்று அனுப்பி வைக்கப்படுகின்றன’ என்கிறார். ‘சுக்மா மாவட்டத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக சொல்லப்பட்ட மாவோயிஸ்ட் படையணியை தகர்க்க சென்ற பாதுகாப்பு படைகள் சுடப்பட்டதாக சொல்லப்படுவது அதற்கு 3 கிலோ மீட்டருக்கு முன்னதான இடம்’ என்கிறார் அவர்.
‘துப்பாக்கிச் சூடு இருட்டில் நடந்ததால் யாரை சுடுகிறோம் என்று படையினருக்கு தெரியவில்லை’ என்கிறார் பிஜபூர் மாவட்ட காவல் துறை தலைவர் பிரசாந்த் அகர்வால்.
கொவாசி லக்மா என்ற உள்ளூர் காங்கிரஸ் எம்எல்ஏ தலைமையில் சென்ற 11 பேர் கொண்ட உண்மை அறியும் குழு கொல்லப்பட்டவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்றும் மாநில அரசு மக்கள் மீது பயங்கரவாதத்தை அவிழ்த்து விட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது. மத்திய விவசாய துணை அமைச்சர் சரண்தாஸ் மகந்த் ‘மத்திய உள்துறை அமைச்சருக்கு தவறாக தகவல்கள் தரப்பட்டுள்ளன’ என்று குற்றம் சாட்டுகிறார்.
கொடூரமான ஒரு படுகொலைக்குப் பிறகு, ஆளும் அதிகார வர்க்கத்தின் பல்வேறு மட்டங்களில் வெளியாகும் முரணான தகவல்களும் அறிவிப்புகளும் அவர்களது பொய் வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. என்கவுண்டர் என்று இவர்கள் அறிவிக்கும் பல நடவடிக்கைகளின் உண்மை வெளிவராமலேயே போய் விடுகின்றன.
இந்திய ராணுவம் தனது சொந்த மக்கள் மீதும் அண்டை நாட்டு மக்கள் மீதும் நடத்தும் ஆக்கிரமிப்பு போர்களின் நடைமுறைகளும் ஈவுஇரக்கமில்லாத படுகொலைகளும் ஈழத்திலும், காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், பஞ்சாபிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தன்னுடைய ஆதிக்கத்தை எதிர்க்கும் அல்லது மறுக்கும் எந்த ஒரு மக்களுக்கும் ஜனநாயக உரிமை அனைத்தையும் மறுக்கும் கொடுங்கோல் அமைப்புதான் இந்திய அரசு.
தண்டகாரண்ய காட்டுப்பகுதிகளில் அரசு செயல்படுவதில்லை, அதனால் காவல் நிலையங்கள் இல்லை, நீதிமன்றங்கள் இல்லை, அங்கு போய் வரும் பத்திரிகையாளர்கள் மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இந்திய ஆளும் வர்க்கம் இன்னும் ஒரு மக்கள் படுகொலைக்கு ஆயத்தம் செய்து கொண்டு நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறது. பொதுமக்கள் உயிரிழப்பு எத்தனை லட்சம் ஆனாலும் சரி, அந்தக் காடுகளை ‘மொய்த்துக்’ கொண்டிருக்கும், அல்லது ‘பீடித்திருக்கும்’ பழங்குடி மக்களை அச்சுறுத்தி அல்லது கொன்று அப்புறப்படுத்தி விட்டு தனது ஆட்சியை அமைப்பதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை இந்திய அரசு. இந்தப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படைகளின் தலைமை இயக்குனராக பொறுப்பேற்றிருப்பவர் நமக்கெல்லாம் பழக்கமான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜயகுமார்தான். அவர் ‘எங்களுடைய டிஎன்ஏவிலேயே சித்திரவதை, பொதுமக்களை கொல்லுதல் இல்லை’ என்று அறிவித்திருக்கிறார்.
டாடாவின் உருக்கு ஆலைகளுக்கு இரும்புத் தாதும், ஸ்டெர்லைட்டின் அலுமினிய ஆலைகளுக்கும் அலுமினிய தாதும் சுரங்கம் தோண்டி எடுக்கப்பட வேண்டும். அதற்கு நடுவே யார் நின்றாலும் அது 15 வயது சிறுமியாக இருந்தாலும் சரி, நள்ளிரவு ஒன்று சேர்ந்து விதைப்பு திருவிழாவுக்குத் திட்டமிடும் கிராம மக்களானாலும் சரி அவர்கள் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல்தான்.
___________________________________________________
– செழியன்.
___________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- இந்திய அரசின் போர்க்குற்றங்கள் !
- சத்தீஸ்கர்:கழிப்பறைக் காகிதமானது சட்டத்தின் ஆட்சி!
- பழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை!
- நீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் ?
- ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் !
- சல்வா ஜூடும் கலைப்பு: உச்ச நீதிமன்றத்தின் கோணல் பார்வை!
_______________________________________
- பதிலிப் போர் தொடுப்பதற்கான பகிரங்க முயற்சி !! எம்.ஜி.தேவசகாயம், IAS (Retd.)
- திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி
- இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி- ஹிமான்சு குமார்.
- இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்
- இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !
- இந்தியாவை எதிர்நோக்கும் அபாயம் ?- ஜி.எஸ்.வாசு
_______________________________________
- வீரவணக்கம், தோழர் ஆசாத்! – மருதையன்
- தியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம்!
- தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!
- தோழர் ஆசாத் படுகொலையும், இந்திய அரசின் கோரமுகமும் !
- பினாயக்சென் விடுதலை: அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்!!
_______________________________________
தலைப்பில் ‘இராணுவம்’ என்று இருப்பது ‘துணை இராணுவப் படை’ என்று இருக்க வேண்டும். சி.ஆர்.பி.எஃப். ஒரு துணை இராணுவப் படைதானே தவிர இராணுவம் அல்ல. இதுவரையில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இராணுவத்தை ஈடுபடுத்தும் கொள்கை நடுவண் அரசுக்கு இல்லை.
நடுவண் அரசு ராணுவத்தை எந்த கொள்கை மயிருக்குத்தான் பயன்படுத்தியிருக்கிறதோ! ‘இந்திய’ மீனவர்கள் ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், சித்திரவதை செய்யப்பட்டபோதும் நடுவன் அரசு ராணுவத்தை ஏன் களமிறக்கவில்லை??
சிங்கள ராணுவம் நடுவண் அரசுடன் போர் புரிந்தால்தானே பதிலுக்குத் தாக்குவதற்கு? அவர்கள் தாக்குவது இந்திய மீனவர்களைத்தானே!! அப்படியா??
சரவணன் கேள்விக்கும், உங்க பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? சொல்லுங்க…
//மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இராணுவத்தை ஈடுபடுத்தும் கொள்கை நடுவண் அரசுக்கு இல்லை.//
என்று பதில் கூறும் சரவணனிடம் நான் பின் வருமாறு கேள்விதான் கேட்டிருக்கிறேன் \\‘இந்திய’ மீனவர்கள் ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், சித்திரவதை செய்யப்பட்டபோதும் நடுவன் அரசு ராணுவத்தை ஏன் களமிறக்கவில்லை??//
ராணுவம் எதற்காக இருக்கிறது? தம் நாட்டு மக்களைக் காப்பதற்குத்தானே? அவ்வாறென்றால் அண்டைநாட்டு ராணுவத்தால் நம் மக்கள் சாகடிக்கப்படும்போது ஏன் நம் ராணுவம் சும்மாயிருக்கிறது?
சரவணன் தகவல் பிழையை மட்டுமே சுட்டிக்காட்டியிருப்பதாக நீங்க நினைக்கிறீங்க. நான் அவரது கருதுகோளே பிழை என்கிறேன். துணை ராணுவப்படையின் பணிப் பொறுப்புகளுக்கும், ராணுவத்தின் பணிப் பொறுப்புகளுக்கும் சரியான வித்தியாசத்தை தாங்கள் தெரிவித்து விட்டால் அவரது கருத்தை ஏற்றுக்கொள்கிறென்.
தாமதமாக வந்துள்ளது. செட்டிநாட்டின் புளுகினி தனத்தை கலையரசன் அம்பலப்படுத்தி வெளியிட்டுள்ளார்.
சத்திஸ்கர் – பிஜபூர் – கோட்டாகுடா கிராமத்தில் 20 ‘நக்சலைட்’ அழித்தொழிப்பு.
ஆண்டுத்தோறும் நடக்கும் விதைப்பு திருவிழா கொண்டாட்டத்திற்க்கு வழக்கமாக ஒன்றுகூடிய அவ்வாட்டார பழங்குடிகளை, 600க்கும் மேற்ப்பட்ட (கோப்ரா) துணை இராணுவப் படை, நடு இரவில் சுற்றி வளைத்து அழித்தது. இப்படுகொலைக்கு தலைமை தாங்கியவன், சி.ஆர்.பி.எப். தலைவன் தமிழகத்தின் போலிசு அதிகாரியாக இருந்த விஜயகுமார். பசுமை வேட்டை என்ற பெயரில் அங்கு நடக்கும், கைது, சித்ரவதை, வன்புணர்ச்சி, கொத்தடிக்கொலைகள், போலிமோதல் இவற்றின் தொடர்ச்சிதான் இந்த படுகொலை. அரசு இலட்சினை அணியாத அரசு நிறுவனங்களான கார்பரேட் ஊடகங்கள், பழங்குடிகளின் பச்சை இரத்தத்தை பூசிக்கொண்டு ”இராணுவத்தின் வெற்றி” என்று வெறியாட்டமிடுகின்றன. இப்படுகொலை பற்றிய மேலதிக விவரங்களுக்கு, http://thenextfront.com.
if they are common people why they need a guns?