privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?

மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?

-

அலெக்ஸ் பால் மேனன் கடத்தல்சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்டு கொரில்லாக்களால் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம், அரசு மற்றும் ஆளும் வர்க்க ஊடகங்களிடம் ஆத்திரத்தையும் வெறியையும் கிளப்பியிருக்கிறது. “அரசாங்கம் இனிமேலாவது முதுகெலும்புடன் நடந்து கொள்ளவேண்டும்” என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நரைத்த மீசைகளின் ஊடாக ஆங்கில சானல்களில் உருமுகிறார்கள்.

“தங்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லையென்று மாவோயிஸ்டுகள் நிரூபித்துவிட்டதால், எதிரி நாட்டுப் படையாகக் கருதி மாவோயிஸ்டுகளை ஒடுக்கவேண்டும்” என்று தலையங்கம் தீட்டியிருக்கிறது தினமணி. இத்தகைய வழிமுறையைக் கையாண்டிருப்பதன் மூலம், உன்னதமான இலட்சியத்துக்குப் பாடுபடுபவர்கள் என்று கூறிக்கொள்வதற்கான அருகதையை மாவோயிஸ்டுகள் இழந்துவிட்டதாக கூறுகிறது, இந்து நாளேடு.

இதுகாறும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு காட்டி வந்ததைப் போலவும், இந்தக் கடத்தல் நடவடிக்கை காரணமாக மேற்படி ஆதரவை திரும்பப் பெறுவது போலவும் நடிக்கின்றன ஊடகங்கள். நேற்று வரை மாவோயிஸ்டுகளிடம் அரசு மிகுந்த இரக்கம் காட்டியதைப் போலவும், இனி மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவர்களை ஒடுக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதாகவும் ஒரு பொய்ச்சித்திரம் தீட்டப்படுகிறது.

இந்தக் கடத்தலுக்கான காரணம் விளங்கிக் கொள்ள முடியாததல்ல. பல்வேறு பொய்வழக்குகளின் கீழ் ஆண்டுக் கணக்கில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பழங்குடி மக்களையும் தமது தோழர்களையும் விடுவிக்கவேண்டும் என்பதுதான் மாவோயிஸ்டுகளின் கோரிக்கை. பிணை மனு, வாய்தா, வழக்கு என்று அலைந்து சட்டபூர்வமான வழிகளில் நிவாரணம் பெறவேண்டுமேயன்றி, இப்படி ஆள்கடத்தலில் ஈடுபடுவது ஜனநாயக முறையல்ல என்பது ஊடகங்கள் மாவோயிஸ்டுகளுக்கு கூறும் அறிவுரை.

“அக்யூஸ்டை பிடிக்க முடியாவிட்டால், அவன் பெண்டாட்டியை, பிள்ளையைக் கடத்து” என்பதுதான் போலீசு ஆத்திச்சூடியின் ‘அறம் செய விரும்பு’. ஆள்கடத்தல் என்பது போலீசின் அன்றாடப்பணி. இந்தியாவில் ஆள்கடத்தலே நடக்காத ஒரு போலீசு நிலையத்தைக் ‘கடவுளாலும் ‘ காட்ட முடியாது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட எல்லா புனிதச் சட்டங்களையும், அவற்றை மீறியதற்காக மாண்புமிகு நீதிமன்றங்கள் தெரிவித்துள்ள கடும் கண்டனங்களையும் கால் தூசாகக் கருதி, கடத்தல், சித்திரவதை, வன்புணர்ச்சி, கொலை போன்ற குற்றங்களை போலீசும் இராணுவமும் தொடர்ந்து செய்து வருகின்றன.

ஆள் கடத்தல் என்பதை போலீசின் இயல்பாக அங்கீகரித்து, அத்தகைய கடத்தல் நடவடிக்கைகளுக்குச் சட்டம் போட்டிருக்கும் கடிவாளமல்லவோ ‘ஹேபியஸ் கார்ப்பஸ்’ எனப்படும் ஆட்கொணர்வு மனு. இந்திய உயர் நீதிமன்றங்களின் நாட்குறிப்புகளில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்யப்படாத நாள் ஒன்றை யாரேனும் காட்ட இயலுமா? “இந்த ஜனநாயகத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை, இல்லை, இல்லவே இல்லை” என்று உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ‘தலையில் அடித்து’ சத்தியம் செய்ததே சென்னை போலீசு, அதைத் தொலைக்காட்சிகளில் இந்த நாடே காணவில்லையா?

மக்களுக்கும்கூட இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லைதான். தங்களுக்கு எதிராக அடுக்கடுக்காக அநீதி இழைக்கப்பட்ட போதிலும், இந்த நாட்டின் மக்கள் கலகம் செய்யாமலிருப்பதற்குக் காரணம் சட்டத்தின் காவலர்கள் எனப்படுவோர் மீது அவர்கள் கொண்டிருக்கும் அச்சமேயன்றி, ஜனநாயகத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையல்ல. நீதி பெறுவதற்கு வேறு வழியறியாத காரணத்தினால் அடங்கிப் போகும் மக்களின் முன், இந்த அரசைப் பணிய வைப்பதற்கான வழியை மாவோயிஸ்டுகள் காட்டியிருக்கிறார்கள்.

ஜனநாயகத்தில் மாவோயிஸ்டுகளுக்கு நம்பிக்கை இல்லாததால், அவர்கள் மீது போர் தொடுக்கவேண்டும் என்கிறது தினமணி. ஜார்கண்டு மாநிலச் சிறைகளில் 6000 பழங்குடி மக்கள் விசாரணைக் கைதிகளாக அடைபட்டிருக்கிறார்கள். சட்டீஸ்கரின் ஜகதால்பூர் சிறையில் மட்டும் 612 பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் வேறெந்த கிரிமினல் குற்றத்துக்காகவும் சிறையில் இல்லை. டாடா, ஜின்டால் போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு தங்களது நிலத்தைத் தாரைவார்க்க மறுத்த குற்றத்துக்காகப் பொய் வழக்குகளில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த மக்களெல்லாம் ‘ஜனநாயகத்தின் மீது தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை’ நிரூபிக்க வேண்டுமானால், நிலத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிடவேண்டும். அல்லது ராம் ஜெத்மலானி போன்ற வழக்குரைஞர்களை அமர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வெளியே வந்து, அதன் பின்னர் ‘ஜனநாயக முறைப்படி’ வாய்தாவுக்கு அலைய வேண்டும். காஷ்மீரில் போலீசின் மீது கல்லெறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 20,000 சிறுவர்கள் ஆண்டுக்கணக்கில் வாய்தாவுக்கு அலைவதாக சமீபத்திய பி.பி.சி. செய்தி கூறுகிறது.

கூடங்குளத்தில் அமைதி வழியில் தமது எதிர்ப்பை தெரிவித்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது சுமார் 180 பொய் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஓரிரு வழக்குகளில் மட்டும் கைது செய்யப்பட்ட 200 பேர், ஒரு மாதம் சிறையிலிருந்து, பின்னர் பிணையில் வெளியே வந்து தற்போது அன்றாடம் போலீசு நிலையத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். போராட முனைந்தால் பொய்வழக்குகள் இருநூறும் உயிர்த்தெழும்.

அலெக்ஸ் பால் மேனன் கடத்தல்பொய் வழக்கு என்பது மக்களுடைய நெற்றிப் பொட்டில் அழுத்தப்படும் துப்பாக்கி. ‘சத்தம்போடாமல் நிலத்தைக் கொடு, காட்டைக் கொடு, அணு உலையை ஒப்புக்கொள்’ என்று வாயில் துணி அடைத்துப் பணிய வைக்கும் வன்புணர்ச்சி. இந்த அரசு சொல்கிறது மாவோயிஸ்டுகளின் கடத்தல் என்பது அரசை மிரட்டிப் பணியவைப்பதாம், அது ஜனநாயக வழிமுறை இல்லையாம்!

ஆயுதப் போராட்டப் பாதையைக் கைவிட்டு நாடாளுமன்ற அரசியல் நீரோட்டத்தில் கலக்குமாறு மாவோயிஸ்டுகளுக்கு வேண்டுகோள் விடுபவர்களும், இந்த ஜனநாயகத்தின் மீது பெருமதிப்பும், ஜனநாயக வழிமுறைகளின் மீது பெரும்பக்தியும் கொண்டவர்களுமான வலது கம்யூனிஸ்டு கட்சியினருக்கு நேர்ந்திருப்பது என்ன? மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சட்டீஸ்கரில் அவர்களும் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சல்வா ஜூடும் என்ற கூலிப்படையினரும் போலீசும் இணைந்து மக்களுக்கு எதிராக நிகழ்த்திய படுகொலைகளையும் வன்முறைகளையும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த கர்தம் ஜோகா என்ற வலது கம்யூனிஸ்டு தலைவர் மீது “மாவோயிஸ்டு கொரில்லாக்களுடன் சேர்ந்து மத்திய ரிசர்வ் போலீசு படையினர் மீது தாக்குதல் தொடுத்ததாக” வழக்கு போட்டுச் சிறை வைத்திருக்கிறது போலீசு.

வலது கம்யூனிஸ்டு தலைவர்களான ஏ.பி.பரதன், டி.ராஜா போன்றோர் ஜனநாயக முறைப்படி பல தடவை கண்டனம் தெரிவித்தும், நீதிமன்றங்களில் மனுச்செய்தும் சட்டீஸ்கர் அரசு இவரை விடுவிக்கவில்லை. தற்போது மாவோயிஸ்டுகள் வெளியிட்டிருக்கும் விடுவிக்கவேண்டியவர்கள் பட்டியலில் கர்தம் ஜோகாவும் வலது கம்யூனிஸ்டு கட்சியினரும் இருக்கின்றனர். ஜனநாயகப் பூர்வமற்ற வழியில் தனக்குக் கிடைக்கக்கூடிய இந்தப் பிணையில் கர்தம் ஜோகா வெளியே வரலாமா, அல்லது ஜனநாயக வழிமுறையின் மீது தான் கொண்டிருக்கும் விசுவாசத்தை நிரூபிப்பதற்காக அவர் சிறையிலேயே காத்திருக்க வேண்டுமா?

“இந்திய மக்களைக் கண்டு அந்நியர்களான பிரிட்டிஷார் அஞ்சியதைக் காட்டிலும் அதிகமாக, சுதந்திர இந்தியாவின் அரசு அஞ்சுகிறது. தங்களது ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டுமென்று போராடிய இந்தியர்கள் மீது, அரசியல் ரீதியான வழக்குகள் அன்றி வேறு பொய் வழக்குகளை பிரிட்டிஷ் அரசாங்கம் கூடப் போட்டதில்லை” என்கிறார் அவுட்லுக் (19.12.2011) கட்டுரையாளர் நீலப் மிஸ்ரா.

போஸ்கோவுக்கு எதிராக அமைதி வழியில் போராடி வரும் வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் அபய் சாஹூவின் மீது பாலியல் வன்முறை, தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை, வரதட்சிணைக் கொலைக்கு தூண்டுதல், திருட்டு முதலான 50 பொய்வழக்குகளைப் போட்டிருக்கிறது ஒடிசா போலீசு. போஸ்கோ எதிர்ப்பு போராட்டத்தின் முன்னணியாளர்கள் 800 பேர் மீது மட்டும் 200 பொய்வழக்குகள் ஒடிசாவில் போடப்பட்டிருக்கின்றன.

சென்ற ஆண்டு சட்டீஸ்கர் சென்ற சுவாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்கு, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சட்டீஸ்கர் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் மீது, சட்டீஸ்கர் துணைப்படை (பெயர் மாற்றப்பட்ட சல்வா ஜுடும்) துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. சுமார் 2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடத்தி மத்திய ரிசர்வ் போலீசு படையினர் தங்கள் உயிரைக் காப்பாற்றியதாகவும், இனிமேல் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் தாங்கள் விசாரணைக்குச் செல்ல இயலாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர் சி.பி.ஐ அதிகாரிகள். (டைம்ஸ் ஆப் இந்தியா, 14.3.2012) ஆயுதப்படைப் பாதுகாப்பு இல்லாமல் சி.பி.ஐ. அதிகாரிகளே நடமாட முடியாத இடத்தில், சாதாரண பழங்குடி மக்களுக்கு கிடைக்கும் நீதி எத்தகையதாக இருக்கும்?

அலெக்ஸ் பால் மேனன் கடத்தல்நிலைமை இவ்வாறிருக்க, இந்தக் கடத்தல் நடவடிக்கையையே அரசுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகச் சித்தரித்திருக்கிறார் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். அலெக்ஸைப் போன்ற இளம் அதிகாரிகளின் அர்ப்பணிப்புமிக்க செயல்பாட்டினால் ஈர்க்கப்படும் மக்கள், தங்களைப் புறக்கணித்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் மாவோயிஸ்டுகள் அவரைக் கடத்தியிருக்கிறார்களாம்! அமைச்சர் சொல்வதுதான் உண்மையென்றால், மாவோயிஸ்டுகள் தம் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விட்டுவிட வேண்டியதுதானே! எதற்காக மீட்பு நடவடிக்கைகள், கண்டனங்கள், வேண்டுகோள்கள்?

“பழங்குடி மக்களுக்காகப் போராடுவதாக கூறிக்கொள்ளும் மாவோயிஸ்டுகள், அவர்களுக்கு வளர்ச்சித்திட்ட உதவி வழங்கச் சென்ற அதிகாரியைக் கடத்தலாமா? ஆயுதம் ஏந்தாத ஒரு ஆட்சியரைக் கடத்தலாமா?”என்று கேள்வி எழுப்புகின்றன ஊடகங்கள். ஏதோ ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை அரசு அங்கீகரித்திருப்பதைப் போலவும், யுத்த தருமம் வழுவி நிராயுதபாணியைக் கடத்தியதுதான் பிரச்சினை என்பது போலவும் வெட்கமே இல்லாமல் பேசுகின்றன. தோழர் ஆசாத், தோழர் கிஷன்ஜி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டு முன்னணியாளர்களையும், சாதாரணப் பழங்குடி மக்களையும், மோதல் என்ற பெயரில் நிராயுதபாணியாக நிற்க வைத்து சுட்டுக் கொன்றிருப்பதுதான் இந்த அரசின் யோக்கியதை. சல்வா ஜுடும் செய்த நூற்றுக்கணக்கான கொலைகள், வழக்குகளாக நீதிமன்றங்களில் உறங்குகின்றன. காஷ்மீரிலோ தோண்டுமிடத்திலெல்லாம் பிணங்கள் ஊற்றெடுக்கின்றன. காஷ்மீர் மாநில அரசே அதிகாரபூர்வமாக ஒப்புக் கொள்ளும் கணக்கின்படி, இராணுவம் அழைத்துச் சென்று அதன்பின் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1200 க்கும் மேல்!

போலீசு நடத்தியிருக்கும் ஆள் கடத்தல்களையும் போலி மோதல் கொலைகளையும் மறுக்க முடியாதென்பதால், “அரசைப் போலவே நீங்களும் நடந்து கொள்ளலாமா?” என்று நைச்சியமாக கேள்வி எழுப்புகிறது இந்து நாளேடு. மாவோயிஸ்டுகள் அப்படி நடந்து கொள்ள எண்ணியிருந்தால் ஆட்சியர் அலெக்ஸை தண்டகாரண்ய காடுகளில் ‘காணாமல் போக‘ச் செய்திருக்கலாம். மாறாக, அவரைப் பிணைக்கைதியாக வைத்துக் கொண்டு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

கைதிகளை விடுவிக்கக் கோரும் அவர்களது கோரிக்கைகளில் நீதி இருக்கிறது. “எனினும் அவ்வாறு விடுவிப்பது சட்டத்துக்கு விரோதமானது” என்கிறார்கள் வல்லுநர்கள். உண்மைதான். ‘நீதி’ சட்டவிரோதமானதாகவும், அநீதிகள் சட்டபூர்வமானவையாகவும் நிலைநாட்டப்பட்டிருக்கும் நாட்டில், சட்டப்படி நீதியைப் பெறுவது கடினம்தான்.

காடுகள், மலைகள், ஆறுகள் அனைத்தும் சமூகத்தின் பொதுச்சொத்துகள் என்பதே, மனிதகுலம் இதுகாறும் கடைப்பிடித்துவரும் நீதி. அந்த நீதியை இன்று சட்டவிரோதமாக்கி விட்டது தனியார்மயக் கொள்கை. அதனால்தான் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதே சட்டவிரோத நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

அலெக்ஸ் பால் மேனன் கடத்தல்பழங்குடிகளை, அவர்களது பாரம்பரிய வாழ்விடத்திலிருந்து விரட்டியடிப்பதன் மூலம், சொத்து என்ற சொல்லையே கேள்விப்பட்டிராத அம்மக்களின் மீது தனிச் சொத்தின் ஆவி இறக்கப்படுகிறது. வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்துவதன் வாயிலாக கற்பின் மேன்மை அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. நாகரிகத்தின் பொருளையும் நல்லாட்சியையும் (கிராம சுரக்ஷா அபியான்) அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க உலகவங்கி நிதி ஒதுக்குகிறது.

சாலை, மின்சாரம், கல்வி, மருத்துவம் போன்ற பரிசுப் பொதிகளை மோட்டார் சைக்கிளில் சுமந்து கொண்டு முதலில் அலெக்ஸ் பால் மேனன் வருகிறார். அடுத்து தானியங்கித் துப்பாக்கிகளைச் சுமந்தபடி சி.ஆர்.பி.எஃப். விஜயகுமார் வருகிறார். “யாரை முதலில் அனுப்புவது, விஜயகுமாரையா, அலெக்ஸையா? எது முதலில், காட்டு வேட்டையா, வளர்ச்சித் திட்டமா?” என்ற விவாதத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாததால், சில இடங்களுக்கு அவரும், சில இடங்களுக்கு இவரும் முதலில் அனுப்பப்படுகிறார்கள்.

இரண்டையும் அக்கம்பக்கமாகவே பயன்படுத்தி கூடங்குளம் போராட்டத்தை முடக்கிவிட்டதாக டில்லி முதல்வர்கள் மாநாட்டில் பெருமையடித்துக் கொண்டார் ஜெயலலிதா. “500 கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டத்தில் புறங்கையை நக்க வேண்டும். மறுத்தால், 200 பொய் வழக்குகளில் சிறை செல்லத் தயாராக வேண்டும். இரண்டில் எது மக்களின் தெரிவாக இருப்பினும், அணு உலை மட்டும் இயங்கியே தீரும்.” — இதுதான் கூடங்குளம் தந்திரம்.

அலெக்ஸ் பால் மேனனின் சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தில் ஜெ அரசு எதைச் செய்து வருகிறதோ, அதைத்தான் ராமன் சிங் அரசு சட்டீஸ்கரில் செய்கிறது. நலத்திட்டத்தைக் கடை விரித்து அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை உடைக்கின்ற கைக்கூலிகளான ஊராட்சி மன்ற உறுப்பினர்களை இடிந்தகரை மக்கள் தாக்கியிருக்கின்றனர். அங்கே அலெக்ஸ் கடத்தப்பட்டிருக்கிறார்.

அவர் நேர்மையாளர், சேவை மனப்பான்மை கொண்டவர் என்கிறார்கள். இருக்கலாம், அவையெல்லாம் அவரது தனிப்பட்ட விழுமியங்கள். அவ்வளவுதான். நேர்மையற்ற ஒரு அரசமைப்பை அவர் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை, அவருடைய தனிப்பட்ட நேர்மை ரத்து செய்துவிடுவதில்லை. இந்த உண்மை அவர் அறியாததுமல்ல. மக்களை நாற்புறமும் சுட்டெரிக்கும் இந்த அநீதிகளின் மத்தியில், குற்றவுணர்வின்றி ஆட்சியராகப் பணியாற்றும் மனவலிமையை அவருக்கு வழங்கியிருப்பது அவருடைய தனிப்பட்ட நேர்மைதான் என்றால், அந்த நேர்மை ஆபத்தானது.

அவர் இந்தக் கொலைகார அரசின் கோரைப்பற்களை மறைக்கும் மனித முகம். அறம் கொன்று அம்மணமாய் நிற்கும் ஆளும் வர்க்கத்தின் மானத்தை மறைக்கக் கிடைத்த கோவணம். முழு நிர்வாணப் பாசிசமாய் மக்கள் முன் காட்சியளிப்பதற்கு ஆளும் வர்க்கம் இப்போதைக்கு விரும்பவில்லை என்பதால், ‘கோவணம்’ காப்பாற்றப்படும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

வேறொரு கோணத்தில், ஆளும் வர்க்கத்தின் இந்த அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது தினமணியின் தலையங்கம். “ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் கைவிடும் நிலையில், மக்களின் பிரச்சினைக்காகக் குரலெழுப்ப ஒரு மாற்றுக் கட்சியும் இல்லாமல் போனால், அந்த வெற்றிடத்தை நிரப்ப மாவோயிஸ்டுகள் போன்ற தீவிரவாதிகள் நுழைந்து விடுவார்கள் என்கிற ஆபத்து இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே இருக்கிறது”

ஆபத்துதான். என்ன செய்வது? பாரதிய ஜனதாவும் காங்கிரசும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டினால், மாவோயிஸ்டுகளிடமிருந்து பழங்குடிகளை மீட்டுவிடலாம். முதலாளி வர்க்கம் சொத்துடைமையைத் துறந்து விட்டால் கம்யூனிசத்தையே ஒழித்துவிடலாம். நடப்பதில்லையே!

‘குறைகுடம்’ எனும் தன்னுடைய வலைப்பூவில் செப்டம்பர், 4, 2008 அன்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார் அலெக்ஸ் பால் மேனன்.

எம் அடிமைத்தனம் பெரிது ,
எமைப் பிணைத்திருக்கும் விலங்குகளோ வலிது,
பின்
உடைத்தெடுக்கும் அடிகள் மட்டும் ,
எப்படி
மெதுவாய்?
வலிக்காமல் ?

_________________________________________
– புதிய ஜனநாயகம், மே-2012
__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________

_______________________________________

_______________________________________

 1. வலது கம்யூனிஸ்டு தலைவரையும் சேர்த்தே விடுவிக்கக் கோருகிறார்கள் மாவோயிஸ்டுகள். ஆனால் நெல்லை மாவட்ட வலது கம்யூனிஸ்டுகளோ மேனன் கடத்தலை கண்டித்து அரசின் ரொட்டித் துண்டை பொறுக்கித் தின்னும் அமைப்பினருடன் போராடுகிறார்கள். வெட்கமென்றால் இவர்களுக்கு என்னவென்றே தெரிவதில்லை..

 2. Thozhare,

  The Maoists might have genuine causes for which they are fighting against the goverment. Fair enough. But how would you justify the killing of the two body guards who (if I am not wrong) belong to the same social background that the Maoists are supposed to be fighting for?

  You say that the Government exploits the downtrodden people in those areas and I agree that there is some truth to it. But is violence the only solution to it?

  • Dani, Think about this.,

   அரசு தனது வன்முறையை கட்டவிழ்த்துவிட பயன்படுத்தும் கருவிதான் போலீசும் துணை இராணுவப் படையும். அவைகளின் ஒரே பணி மாவோயிஸ்டகளையும், மாவோயிஸ்டுகள் என்று சந்தேகப்படுபவரையும் கொல்வது, இல்லை சிறையிலடைத்து சித்திரவதை செய்வது. ஒரு வேளை மாவோயிஸ்டுகள் அந்த காவலர்களை கொல்லவில்லையெனில், அவர்கள் மாவோயிஸ்டுகளை கொன்றிருப்பார்கள்.

   இந்திய அரசு தனது சொந்த நாட்டு மக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது, அந்த போரை எந்தவிதமான தார்மீக தடுமாற்றமும் , தனது சகோதரர்களை கொல்வதில் துளியும் வருத்தமில்லாமல் செயல்படும் போலீசையும் இராணுவத்தையும் ஏதோ முதுகு சொறிவதற்காக துப்பாக்கியுடன் நிற்கும் அப்பாவிகள் போலல்லவா சித்தரிக்கிறீர்கள்.

   • So you also have fallen into the trap of stereo typing people – “police and para military are all enemies and villains with ulterior motives”. Just like they stereo type all of you as rebels and villainous – both is not right.

    Considering the strength of the Maoists in the scene of the Incident (where the Collector was kidnapped) vs the no of bodyguards ( a mere two) your guys could have easily neutralized them without killing them. Now you have left two families without their bread winners and children without their father. You are not any different than the people who you say are fighting against.

    “Indian Govt has staged a war against its own people” – might be partially true, but it is actually a chicken vs egg issue as to who started it. Both parties have their own points (for and against – fair enouogh). But in this case the collector was there as a part of addressing the villagers needs. So why are you trying to jeopardize thse kind of activities when a Govt. Servant tries to help the villagers. Do you claim monopoly that only you should help the villagers or since you are against the Govt you would not care about individuals who might be sincere and are genuinely interested in helping the people who need it?

    • Dani,

     தமிழ்ல எழுதுங்க, அப்பத்தானே எல்லாருக்கும் புரியும்.

     நீங்க எழுப்பியிருக்குற பல கேள்விகளுக்கு இந்த பதிவிலேயே பதிலிருக்கு.

     //So you also have fallen into the trap of stereo typing people// இதுல என்ன முத்திரை குத்துதல் இருக்கு. அவன் என்ன குருவி சுடவா துப்பாக்கி வச்சிருக்கான். இல்லேன்னா ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கடத்திக்கொண்டு போய் ஜெயில்ல வச்சிருப்பதா அவனே ஒத்துக்கொள்வதும் பொய்யா?.

     முழங்காலுக்கு கீழே சுடுவதெல்லாம் சரிதான் ஆனா போலி மோதல் கொலைகளில் பல மாவோயிஸ்டு தலைவர்களையும், அணிகளையும், அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வரும் போலீசு அந்த கரிசனமெல்லாம் காட்டும் நிலையில் இருப்பதாக மாவோயிஸ்டுகள் கருதாமல் விட்டால் அவர்களை நான் குற்றம் சொல்ல மாட்டேன்.

     //ight be partially true, but it is actually a chicken vs egg issue as to who started it//

     இதிலென்ன சந்தேகம், இந்திய அரசு பழங்குடி மக்களை அவர்கள் வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. பழங்குடி மக்கள் மறுக்கிறார்கள்,எதிர்க்கிறார்கள், ஆதலால் அவர்களை கடத்தியும் கொன்றும் வருகிறது, பழங்குடி மக்களுடன் மாவோயிஸ்டுகளும் இணைந்து பதில் தாக்குதல் தொடுக்கிறார்கள். இதை விரிவாக விளக்கி பலர் தேசிய ஊடகங்களில் எழுதிய கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு, இக்கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்புடைய பதிவுகள் தலைப்பின் கீழ் உள்ளது. படித்துக்கொள்ளவும்.

     இங்கே மாவோயிஸ்டுகளுக்கு கலெக்டரை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. மாறாக அவரை பணயம் வைத்து சிறையில் இருக்கும் அப்பாவிகளை மீட்கத்தான் முயற்சித்தனர். மற்றபடி அரசு மிரட்டலுக்கு பணியாத மக்கள் மருத்துவர் பிநாயக் சென்னை அரசு இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்ததை மறந்துவிடாதீர்கள்.

     இது, சில முதலாளிகளின் நலனுக்காக மக்கள் மீது அரசு வலிய திணிக்கும் போர். அதை நேர்மை கொண்ட யாரும் தட்டிக்கேட்கலாம், கேட்டும் இருக்கிறார்கள். மாவோயிஸ்டுகள்தான் அதை செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் இந்த அரசுதான் அப்படி கேட்கும் யாரையும் மாவோயிஸ்டு என்று முத்திரை குத்துகிறது. அது பினாயக் சென்னானாலும் சரி, அருந்ததி ராயானாலும் சரி.

     • Mani,
      En Thamizh pinnotathin tharathin mel enakke sandeham irundhadhal Englishil ezhudhinen mannikkavum.

      Pazhangudi makkalin urimaikkaga neengal pangu perum porattathil nyayam ulladhu. Aanal neengal poradum murai – vanmurai adhil enakku udanpaadu illai. Ungalukku edhiraaha vanmuraiyai prayohikkum arasaangam seiyvadhum thavaru dhan. Idhil maatru karuthu illai.

      Ovvoru Indhiya kudimahanukkum nyayamaana muraiyil thanadhu vaazhvaadharaithai amaithu kolla urimai undu. Oru poruppana arasaangathin mukkiyamaana kadamai adhu. Indhiya arasaangam idhai thavaraamal seiyya vendum. Idhilum maatru karuthu illai.Avvaru seiyyum patchathil, maoisthalum vanmuraiyai kaividuvaarhalaaha endru nambuvom. Vaazhga Indhiya..

     • ////ight be partially true, but it is actually a chicken vs egg issue as to who started it//

      இதிலென்ன சந்தேகம், இந்திய அரசு பழங்குடி மக்களை அவர்கள் வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. பழங்குடி மக்கள் மறுக்கிறார்கள்,எதிர்க்கிறார்கள், ஆதலால் அவர்களை கடத்தியும் கொன்றும் வருகிறது, பழங்குடி மக்களுடன் மாவோயிஸ்டுகளும் இணைந்து பதில் தாக்குதல் தொடுக்கிறார்கள். //

      ஆனால் மாவோயிசம் எனப்பது நக்சலிசம் இந்தியாவில் 60களில் இறுதியிலேயே தோன்றுவிட்டது. அன்று இந்த தாராளமயமாக்கல், பழங்குடிகளின் நிலங்களை அரசு அபகரித்து தனியார்களுக்கு அளிப்பது எல்லாம் கிடையாது. (இன்று அரசு செய்வது பெரும் தவறு / குற்றம் என்பது வேறு விசியம்).

      மாவோயிஸ்டுகளின் நோக்கம் இந்திய அரசை அழித்து, அதிகாரத்தை கைபற்றி, ஒரு பாட்டாளி வர்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவது தான். பழங்குடிகளின் நிலங்களை அரசு பிடுங்கினாலும் அல்லது இல்லாவிட்டாலும் மாவோயிஸ்டுகளின் ‘போராட்டங்கள்’ ஓயப்போவதில்லை. ஆனால் மாவோயிஸ்டுகள் அதிகாரத்தை கைபற்றினால், அதெ பழங்குடிகளின் நிலங்களில் உள்ள கனிம வளங்களை எடுக்க, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற முயலமாட்டார்கள் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. ‘நியாயமான’ முறையில் அதை செய்வார்கள் என்று விளக்கம் தான் வரும்.

  • எம் அடிமைத்தனம் பெரிது ,
   எமைப் பிணைத்திருக்கும் விலங்குகளோ வலிது,
   பின்
   உடைத்தெடுக்கும் அடிகள் மட்டும் ,
   எப்படி
   மெதுவாய்?
   வலிக்காமல் ?

 3. தவறான சித்தாந்தத்தை சரியென்பது போல சாமர்த்தியமாக முன்வைக்கும் கட்டுரை. மனதிற்கு பெரும் அழுத்தமும் வருத்தமும் தரும் வார்த்தைகள். கற்பழித்தவன் தங்கையைக் கற்பழிப்பதுதான் சரியான தண்டனை என்ற காட்டுமிராண்டித்தனத்திற்கு சித்தாந்த முலாம் பூசியிருக்கிறார் கட்டுரையாளர்.

  கடத்துதல், என் கவுண்டர், சித்திரவதை செய்தல், ஆயுதம் காட்டி மிரட்டல் எல்லாமே குற்றங்கள்தான் – யார் செய்தாலும். அலெக்ஸ் பாலுக்கும், பினாயக் சென்னிற்கும் நடுநிலையாளர்கள் அலை அலையாகப் பொழிந்த ஆதரவுதான் பழங்குடி மக்கள் போராட்டத்திற்கும், அதே நேரத்தில் நாணயமான அரசு அதிகாரிகளுக்கும் இந்த நாடு செய்யும் சம மரியாதை. அந்த நாணயத்தை எந்தத் தரப்பு மதிக்காமல் போகிறதோ அந்தத் தரப்பு தோல்வி அடையப் போவது உறுதி – அது அரசு சார்ந்த காட்டு மிராண்டிகளாக இருந்தாலும் சரி; மாவோயிஸ தீவிரவாதிகளாக இருந்தாலும் சரி.

  • மாவோயிஸ்டுகள் பக்கம் நாணயம் இருக்கிறது. அரசு தரப்பு போலிமோதலில் படுகொலை செய்வது போல மாவோயிஸ்டுகள் செய்வதில்லை.

  • இவர்கள் கடத்தியதும் போலீஸ் கடத்துவதும் ஒன்றா?

   இவர்கள் கடத்தினாலும் என்ன சித்ரவதை செய்தார்கள்?
   கடத்திருந்தாலும் அதில் நேர்மைதான் உள்ளது…

   சரி நண்பரே மாவோயிஸ்டு செய்தது தவறாகவே இருக்கட்டம் அவர்கள் தரப்பு நியாத்தை தெரிவிக்க, தன் தோழர்களை காப்பாத்த, உயிர்வாழ வேறு என்ன செய்யலாம் (matruvazhi) என்று சொல்லுங்களே?

   அவர்கள் கேட்ட கோரிக்கை என்ன ‘எங்களை உயிர் வாழ விடுங்கள்’ என்பது தானே….

  • கற்பழித்தவன் தங்கையை கற்பழிப்பது என்றெல்லாம் கட்டுரை எந்த இடத்திலும் நியாயப்படுத்தவில்லை. அலெக்ஸ் பால் மேனனை மாவோயிஸ்டுகள் நடத்தியதற்கும், பேச்சுவார்த்தைக்கு வந்த ஆசாத் ஐ அரசு நடத்தியதையும் பார்த்த பிறகும் எப்படி உங்களால் இப்படி பேச முடிகிறது வித்தகன்.

  • ///தவறான சித்தாந்தத்தை சரியென்பது போல சாமர்த்தியமாக முன்வைக்கும் கட்டுரை.///

   எது தவறு வித்தகன் ? தவறான எதற்காகவும் இந்த கட்டுரை வாதாடவில்லை, சரியான ஒன்றை மேலும் எவ்வளவு சரியானது என்று தான் விளக்குகிறது. உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் நீங்களும் சாமர்த்தியமாக மறுத்து வாதிடுங்கள் இதை தவறு என்று.

   ///மனதிற்கு பெரும் அழுத்தமும் வருத்தமும் தரும் வார்த்தைகள்///

   இந்த கட்டுரை உங்களை மக்களின் பால் நின்று பேசத்தூண்டுவதற்கு பதிலாக,
   உங்களுடைய மென்மையான மனதை புன்படுத்துகிறது என்றால் நீங்கள் பழங்குடி மக்களையோ, அவர்கள் மீது அரசு நடத்தும் பயங்கரவாத தாக்குதல்களையோ, அதன் வலியையோ உணராதவராக இருக்கிறீர்கள் அவ்வாறு இருந்து கொண்டு அவர்களைப் பற்றி நியாயம் பேசுகிறீர்கள். இது தவறு. முதலில் அவர்களைப் பற்றியும் அரசின் பயங்கரவாதத்தையும் தெரிந்து கொண்டு பிறகு பேசுங்கள்.

   ஒரிசா, சட்டிஸ்கர், ஜார்கண்ட் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் திடீர் திடீர் என்று காணாமல் போகிறார்கள் அதன் பிறகு அவர்கள் தமது வீட்டிற்கு திரும்புவதே இல்லை, ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள், சின்னஞ்சிறு குழந்தைகளின் உடல் உறுப்புகள் கூட வெட்டி எறியப்படுகின்றன, அவர்களுடைய ஆயிரக்கணக்கான குடிசைகளை குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை போல கொழுத்தி எரிக்கிறார்கள், அனைவர் மீது வழக்குகள், அனைவரும் அகதிகள், அவர்கள் மீது இந்த அரசு ஒரு போரை திணித்து நடத்திக்கொண்டிருக்கிறது.

   இந்த நடவடிக்கைகளை எல்லாம் அப்படியே உங்களுடைய குடும்பத்திற்கு பொருத்திப் பருங்கள் வித்தகன். உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் திடீரென்று ஒரு நாள் காணாமல் போகிறார் பிறகு அவர் ஆண்டுக்கணக்கில் திரும்பி வரவே இல்லை. அவரை கடத்தியது போலீசு தான் என்பதை அறியும் போது நீங்கள் என்ன செய்வீர்கள் ? உங்களுடைய செல்ல குழந்தையின் விரல்கள் வெட்டி எறியப்பட்டால், அதை செய்தது அரசின் கூலிப்படையான சல்வா ஜீடும் தான் என்பதையும் அறியும் போது உங்கள் மென்மையான மனது என்ன பாடுபடும் ? உங்களுடைய வீடு தீக்கிரையாக்கப்படுகிறது அதை செய்தது அரசு தான் என்பதை அறியும் போது நீங்கள் என்ன செய்வீர்கள் ?

   இரண்டு வன்முறையும் தவறு என்று பேசிக்கொண்டிருப்பீர்களா ?

   நீங்கள் மென்மையான மனதை உடையவரா ? உங்களைவிட மென்மையான மனம் கொண்டவர்கள் பழங்குடிகள். எனவே தான் அவர்கள் தமக்காக மட்டுமல்லாமல் தமது சமூகத்திற்காகவும் போராடுகிறார்கள். சொல்லப்போனால் மென்மையான மனம் கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள் தான் கொடிய கல் மனம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தான் வெறித்தனமாக நேரடியாகவும், மறைமுகமாகவும், ’நடுநிலை’ யுடன் பேசுவதாக கூறிக்கொண்டு அரச பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்கள். அவர்கள் தான் ஆளும்வர்க்கத்தின் மானத்தை மறைக்கும் கோவணத்துணிக்காக அழுகிறார்கள், ஆதங்கப்படுகிறார்கள், ஆத்திரப்படுகிறார்கள், நடுநிலை வகிக்கிறார்கள்.

   • நீங்கள் சொல்வதன் சாராம்சம் இதுதான்: உன் மனைவியையோ மகளையோ பலாத்காரம் செய்தால் நீ சும்மா இருப்பாயா?
    என் பதில்: சும்மா இருக்க மாட்டேன். ஆனால் சம்பந்தம் இல்லாத ஒருவரை, அதிலும் நாணயமான ஒரு அதிகாரியை தண்டித்து, அதை நியாயப் படுத்த மாட்டேன். கொம்பேரி மூக்கன் கணக்கில் இந்தப் பழிக்குப் பழி கண்றாவியைப் பெரிதாகப் பீற்றிக் கொள்ளாதீர்கள்.

    பொது மக்கள் ஆதரவு இல்லாத எந்த ஒரு போராட்டமும் தோல்வியில் தான் முடியும். பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களை முதலாளிகள் சுரண்ட முயற்சிப்பதற்கு இடம் கொடுக்கவே கூடாது. அதே போல் அப்பாவிப் பழங்குடிகளைத் துன்புறுத்தும் விலங்கு மனம் கொண்ட மனிதர்களுடன் மாவோயிஸ்டுகள் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால் அலெக்ஸ் பால் போன்ற அத்தி பூத்தாற்போல இருக்கும் நாணயஸ்தர்களைத் துன்புறுத்தி வெளியுலக ஆதரவை கெடுத்துக் கொள்ளக் கூடவே கூடாது.

    “அவர் நேர்மையாளர், சேவை மனப்பான்மை கொண்டவர் என்கிறார்கள். இருக்கலாம், அவையெல்லாம் அவரது தனிப்பட்ட விழுமியங்கள். அவ்வளவுதான். நேர்மையற்ற ஒரு அரசமைப்பை அவர் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை, அவருடைய தனிப்பட்ட நேர்மை ரத்து செய்துவிடுவதில்லை.” என்ற வரிகள்தான் மிகவும் சஞ்சலப் படுத்துகின்றன. அப்படியானால் அலெக்ஸுக்கும் சிதம்பரத்துக்கும் எந்த வேறு பாடும் இல்லை இருவருக்கும் ஒரே கவனிப்புதான் என்கிறீர்கள்? இதனால் துப்பாக்கி தூக்கிய மாவோயிஸ்டயும் காட்டில் சுள்ளி பொறுக்கும் கிழவனையும் போலீஸ் ஒரே மாதிரி சுடுவதும் நியாயமாகி விடுமே?

    என் வழிதான் சரி; மற்ற எல்லோரும் எதிரிகள் என்று மாவோயிஸ்டுகள் நினைத்து அது போல் நடந்து கொண்டால் அவர்களுக்குத் தோல்வி நிச்சயம். ஊழலை ஒழிப்பதாக பிரச்சாரம் செய்யும் அவர்கள் ஊழல் மூலமாகத்தான் ஆயுதங்களும், தகவல்களும் பெறுகிறார்கள். பிற நாடுகளில் தீவிரவாதம் ஒடுக்கப் படுவது போல் இந்தியாவிலும் அரசு இயந்திரத்திலும், காவல்துறையிலும் களையெடுக்கத் தொடங்கினால் மாவோயிஸ்டுகளைப் படிப் படியாக நசுக்கி விட முடியும். அதற்கு முன் அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய நினைதால் இது போன்ற அடாவடித் தனங்களை விட்டு விட வேண்டும்.

    • //என்ற வரிகள்தான் மிகவும் சஞ்சலப் படுத்துகின்றன. அப்படியானால் அலெக்ஸுக்கும் சிதம்பரத்துக்கும் எந்த வேறு பாடும் இல்லை இருவருக்கும் ஒரே கவனிப்புதான் என்கிறீர்கள்?//

     //ஆனால் அலெக்ஸ் பால் போன்ற அத்தி பூத்தாற்போல இருக்கும் நாணயஸ்தர்களைத் துன்புறுத்தி வெளியுலக ஆதரவை கெடுத்துக் கொள்ளக் கூடவே கூடாது.//

     ஆகா.. அருமை. நல்லது வித்தகன், அலெக்ஸ்பால் நல்லவர் என்பது உண்மையாகவே இருக்கட்டும். நீங்கள் நல்லவர் தானே, உங்களை சத்தீஸ்கர் மாநில சி.ஆர்.பி.எஃப் தலைவராக நியமித்தால் நல்லவரான நீங்கள் என்ன செய்வீர்கள்? துப்பாக்கியைத் திருப்பிப் பிடிப்பீர்களா? நல்லவரான நீங்கள் ஆதிவாசி மக்களின் நிலத்தைக் காக்க, ஜின்டாலின் நெற்றியில் துப்பாக்கியைப் பதிப்பீர்களா?

     முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், நல்லவன் / கெட்டவன் என்பது ஒருவர் சமூகத்தோடு கொண்டுள்ள உறவையும் அதில் அவர் ஆற்றும் பங்கையும் பொருத்து தீர்மானிக்கப்படும் விசயங்கள்.

     தனிப்பட்ட முறையில் காந்தி கூடத்தானே நல்லவரு? தண்ணி தம்மு அடிக்க மாட்டார், பான்பராக் போட மாட்டார், பொண்ணுங்களை சைட் அடிக்க மாட்டார். யோக்கியர் சத்தியசீலர் – உண்மையே பேசுவார். ஆனால், அவரது இந்தக் குணங்களை மட்டும் வைத்துக் கொண்டா அவரை மதிப்பிடுவீர்கள்?

     அலெக்ஸ் நல்லவர் தான். அதற்காக அவருக்குப் பாராட்டுக்கள். ஆனால், அவர் ஆளும் வர்க்கத்தின் அங்கம் தானே? இத்தனை நல்லவர், ஆதிவாசிகளிடம் நிலத்தைப் பிடுங்கும் அரசிடமிருந்து கைநீட்டி காசு வாங்கமாட்டேன் என்று முடிவெடுத்திருந்தால் கூட பரவாயில்லை. ஏகாதிபத்தியங்களின் காலை நக்கும் பிரதமருக்கு சல்யூட் அடிக்க முடியாது என்று கலகம் செய்திருக்கிறாரா?

     சரி, இப்படிப் பார்க்கலாம். அந்த அமைப்பின் அத்தனை விதிகளையும் ஏற்றுக் கொண்டு உள்ளே இருந்து கொண்டே எதாவது செய்ய முடிகிறதா என்று முயற்சி செய்தவர் என்று வைத்துக் கொள்வோம். அது சாத்தியப்படக் கூடியது என்று நம்புகிறீர்களா? ஒரு கம்பெனியின் சி.இ.ஓவாக இருக்கும் ‘நல்லவர்’ அதன் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆதரிக்க முடியுமா? அது போலத் தான் இதுவும்.

     மாவோயிஸ்டுகள் மேல் அரசியல் ரீதியில் வேறு விமர்சனங்கள் இருக்கலாம் – அது ஏற்றுக் கொள்ளக் கூடியதும் தான் – ஆனால், இப்படி மனிதாபிமான செண்டிமென்ட் அடிப்படையிலான விமர்சனங்களை எந்த வகையில் சேர்ப்பது?

  • “கற்பழித்தவன் தங்கையைக் கற்பழிப்பதுதான் சரியான தண்டனை”

   உங்கள் உவமானமே தவறு. அவர்கள் கற்பழிப்பிற்கு நியாயம் கேட்கின்றார்கள்.

 4. pongada neengalum un democracyum!!!!! I got job in USA. I am going there!!! Bye india !!!! Bye maoists!!!!!

  PS: Maoists take care because soon u will be crushed by my indian armed forces!!! ahahaha hahahaha

  • I got job in USA. Bye india !!!! –

   நீங்கள் எல்லாம் திரும்பி எங்க இந்தியா வுக்கு வராதீங்கடே.. அவன் போடுற பிச்சை காசுக்கு தான நீ அமெரிக்கா போற.. உனக்கு எங்க மக்களின் வலி எப்டி தெரியும். அங்க போய் இருந்து கர்த்து மட்டும் அனுப்பு..

   my indian armed forces!!! — வெக்கமே படமாட்டியப்பா?

   • hehehe just while typing this, i heard 4 mao terroroorist are gunned down by indian army. Jai hind… I got the tickets Im leaving this stupid tamilnadu and going to pursue my dream nation aliving paradise.. Long live USA… Long live India!!! crush maoists and anti-india tamils

 5. இந்த கேடுகெட்ட இந்திய நாட்டில் ஒருவன் உண்மையாக இருக்க நினைத்தால் ஆயுதம் ஏந்தித்தான் ஆக வேண்டும் போராட்டாம் செய்துத்தான் ஆக வேண்டும்,

  மாமா வேலை செய்பவன், ஏமாற்றத் தெரிந்தவன், adjust பண்ணிக்க தெரிந்தவனுக்கு எந்த கவலையும் எப்பொழுதும் இருக்காது… USA poga vaaipu kooda irukalam…
  (pothuvaa sonnen)

 6. our question is why maoist target for small ppl like this collector, police etc etc who are govt servents.. try aim for big ones.. may be not Sonia/Chidambaram/Manmohan etc why not ambani or TATA who are the root cause for these issues.. govt servents are just arrow.. the shooter is policy makers and real politicians..if u cant abduct chidambaram try for karthick chidambaram who is also poruki.. if not alagiri try his son.. if not sonia or rahul try that vadera..

  • அண்ணன் என்ன சொல்றாருன்னா.. அப்டியே காட்டுக்குள்ள இருந்து ஒரு ஸ்குவாடு கெளம்பி 10 ஜன்பத் ரோடுக்கு போயி, போலீசுக்காரங்கள கொல்லாம இரும்புக்கை மாயவிய அனுப்பி சோனியாவயும் முடிஞ்சா ராகுலயும் லவட்டி காட்டுக்கு கொண்டு போயிரணும். வில்ல உடைத்துவிட்டால் அம்புகள் எல்லாம் காத்துல பறக்காது இல்லியா.. இல்லன்னா தற்காலிக வில் ரெடி பண்ண முடியாதுல்லா.. வல்லரசு !? என்ன பண்றது?
   பின்ன என்னங்க தூண உடைக்கிறது அறிவாளித்தனமாங்க• மேல ஏறி சீலிங் அ உடைக்கிறதுதான புத்திசாலித்தனம்

  • Excellent what he is saying is correct. Let moasit take time plan it kidnop like karthik chithambaram,azakiri son,sonio’s vadaro..etc. They won’t do because if they touch this big fish government will crush them. So there is mutual understanding that i will not cross ur line you should not cross my line. In between honest,innocent people should get killed both side. Is this you want to communicate. If you notice why all dirty politician, officials they are doing all such correption either they are doing it for their generation or they are unable to stop becuase they have to survey. If we remove their generation who ever does this (Except the good guys) they will also get scared and there is no generation available for them to enjoy all corrupted money.

 7. கடத்தல் சரியா?தவறா? என்கிற குழப்பத்தில் இருக்கிறவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தும் மிகச்சிறந்த பதிவு.

  பொதுவான மனிதாபிமானம், பொதுவான நீதி என்று எதுவும் கிடையாது. வர்க்கச் சார்புடையதே மனிதாபிமானமும் நீதியும்.

  அலெக்ஸ் பால் மேனன் மீது மனிதாபிமானம் காட்டுவோர், அவருக்காக நீதி வேண்டுவோர் கட்டுரையில் சுட்டிக்காட்டியதைப் போல வஞ்சிக்கப்படும் பழங்குடியின மக்கள் மீது காட்டுவார்களா? ஆளும் வர்க்கச் சிந்தனையுடையோர் காட்ட மாட்டார்கள் என்பதைத்தான் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் விவகாரம் நிரூபித்துள்ளது.

 8. கடத்தல் ‘மாவோயிஸ்டுகளை’ மக்களிடமிருந்து மேலும் தனிமைப்ப்டுத்திவிட்டது என்பதுதான் உண்மை.

 9. நல்ல கட்டுரை, நல்ல பதிவு.பு.ஜ ஆசிரியர் குழு,வினவு தோழர்களுக்கு பாராட்டுக்கள்.மாவோயிஸ்டு கொரில்லா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மாவோயிஸ்டு புரட்சியாளர்கள் எனக் குறிப்பிட்டுருக்கலாமே!

 10. அநியாயமான அமைப்பில் நியாயமான ஊழியன் எப்படி இருக்க முடியும் ஐயா. அந்த நியாயம் எந்த மக்களுக்கான நியாயம் அய்யா.

 11. நொந்துபோனவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கப்பு.. கலெக்டர், குமாஸ்தா இவங்கள கடத்தறத்துக்கு பதில் டாடா, அம்பானி, சோனியா இவங்யள கடத்த தில் இருக்கா உங்காளுங்களுக்கு? கடத்தினா ஒரு பய மாவோயிஸ்டுனு சொல்லிகினு ஊருக்குள்ள நடமாட முடியுமா? ஏதோ கைக்கு கெடச்ச கைப்புள்ளய கடத்திட்டு கட்டதொறய கடத்தினமாதிரி எதுக்கு இந்த பில்ட் அப்பு?

  • அலெக்ஸ் நல்லவர் வல்லவர்னு எல்லாரும் பேசிக்கிறாங்க.. கட்டுரையும் அதைதான் சொல்லுது.. நீர் என்னோவோ கைப்புள்ளனு சொல்றீரு. அலெக்ஸ் அப்டீங்குற பேரு உமக்கு உறுத்துதோ.. அய்யர்வாள் RSS ல இருக்கீறோ?

 12. இந்த கடத்தலை திரு அலெக்ஸ் பால் மேனனும் அவர் நியாயஸ்தராக இருக்கும் பட்சத்தில் அங்கீகரிக்கவே செய்திருப்பார். அவர் விடுவிக்கப் பட்டமைக்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அழுகிய அமைப்பின் உள்ளிருந்து இதை திருத்தவோ சரி செய்யவோ இயலாத காரியம். இந்த அமைப்பை தூக்கியெறிவதே நீதியை நிலைநாட்டும். போராட்டத்தில் வென்ற தோழர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

 13. யார் அரசாங்கம் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு பதிவு சில நாதளுக்கு முன் வினவில் பதிந்திருந்தார்கள். படித்துத் தெளியவும்.

  https://www.vinavu.com/2012/04/27/mafia-rules/

 14. அலெக்ஸ் பால் மேனன் விடுதலை – எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.. மகிழ்ச்சி… ஆனால்….

  கலெக்டர் கலெக்டர் என்று பதருகிறீர்களே… அவரை காப்பாற்ற போராடியபோது சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பாதுகாவலர்களை யாருமே பொருட்படுத்தவில்லையே… கால் காசு பதக்கத்தை குடியரசின் விழா போது விதவை மனைவிகளிடம் கொடுத்து முடித்துக்கொள்வார்கள்… உயிர்களின் மதிப்பு கூட வரதாஸ் சொல்லிய “அறிவினை பயன்படுத்தி பெற்ற பதவியை” (ஐ ஏ எஸ் படித்தவன் எல்லாம் அறிவாளி?) பொறுத்து தான் நிர்ணயிக்கப்படுகிறதா?

 15. அக்யூஸ்டை பிடிக்க முடியாவிட்டால், அவன் பெண்டாட்டியை, பிள்ளையைக் கடத்து” என்பதுதான் போலீசு ஆத்திச்சூடியின் ‘அறம் செய விரும்பு’. ஆள்கடத்தல் என்பது போலீசின் அன்றாடப்பணி. இந்தியாவில் ஆள்கடத்தலே நடக்காத ஒரு போலீசு நிலையத்தைக் ‘கடவுளாலும் ‘ காட்ட முடியாது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட எல்லா புனிதச் சட்டங்களையும், அவற்றை மீறியதற்காக மாண்புமிகு நீதிமன்றங்கள் தெரிவித்துள்ள கடும் கண்டனங்களையும் கால் தூசாகக் கருதி, கடத்தல், சித்திரவதை, வன்புணர்ச்சி, கொலை போன்ற குற்றங்களை போலீசும் இராணுவமும் தொடர்ந்து செய்து வருகின்றன.—
  இவைகள் இந்து.தினமணியன்களுக்கு தெரியாமலா இருக்கும். திருட்டுப்பயல்க.

 16. கடத்தல் ஒரு கோழைத்தனம். இதற்க்கு வக்காலத்து வாங்குவது காட்டுமிராண்டித்தனம்.
  ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் செய்யும் கொடுமை. ஒரு நாடு என்பது பெரிய நிலப்பரைபையும் மக்களையும் கொண்டது. இந்திய சுதந்தரமடைந்து 65 ஆண்டுகள்தான் ஆகிறது. இதற்கு முன் ஆண்ட ஆங்கிலேயர்கள் சுரண்டுவதிலேயே குறிக்கோளாக இருந்தனர். இப்போதுதான் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது. சோனியா அரசியலில் நுழைந்த பிறகுதான் வளர்ச்சி குன்றிவிட்டது. மாவோஷ்ட்டுகள் நேர்மையானவர்கலானால் மக்கள் மனதில் இடம் பிடித்து அரசியலில் நுழைந்து வெற்றிபெற்று மக்களுக்கு தேவையானவைகளை செய்யவேண்டும். மக்கள் நம்மை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்ற அச்சத்தால் மக்களையும் அரசையும் நடுங்க வைக்கப்பார்க்கிரார்கள். முன்னேற்றம் என்பது மெதுவாகத்தான் நடக்கும். அனைவருக்கும் மாட மாளிகைகள் உடனடியாக கட்டிக்கொடுக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாதது.
  நம்மைக் காட்டிலும் உலகில் ஆப்பிரிக்கா உள்பட பல நாடுகள் எந்த வளச்சியும் பெறாமல் மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதை ஒப்பிடும்போது நாம் எவ்வளவோ மேல். சுதந்திரம் அடைந்ததிலிருந்து அரசு நலத்திட்ட நடவடிக்கைகள் எடுத்துத்தான் வருகின்றது. இல்லவிட்டால் இந்த அளவிற்கு முன்னேரிருக்க முடியாது. ஜனநாயகத்தை சீர்குலைக்க முயலும் இதுபோன்ற சக்திகளை மூலையிலேயே கிள்ளியெறிய வேண்டும். புரச்சி என்ற பெயரில் நாட்டை சீற்குளைத்துவிடுவார்கள். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • கடத்தல் செய்வதே அரசாங்கமும் போலீசும் தான். அதுக்கு பதில் சொல்லாம.. கோழைத்தனம் காட்டுமிராண்டிதனம் னு பிதற்ற வேண்டியதுங்க நீங்க..

   என்னையா நாடு வளர்ந்துருச்சி.. முன்னேறிருச்சு… ஜனநாயகம் தழைசிருச்சு…. ஹூம்..

   இந்த பொருக்கி தின்னி நாய்கள் கிட்ட யாருய்யா மாட மாளிகை கேட்டா? அவனுடைய பூர்விக இடத்தை விட்டு வெளிய போய் பொருக்கி தின்னுங்கடா நாய்களான்னு சொல்றது தான்யா இந்த போராட்டமே.. முதலில் அதை புரிஞ்சுக்குங்க அப்புறம் கர்த்து சொல்லுங்க..

 17. வினவு இப்படி எழுதுவது மிகுந்த வருத்தமளிக்கிறது…
  போலிசும் ரானுவமும் முழங்காலுக்கு கீழ் சுட வேண்டும் என்று எதிர்பார்க்கும் தோழர்கள் மவோயிஸ்டுகள் இரண்டு காவலர்களை முழங்காலுக்கு கீழ் சுட வேண்டுமென்று எதிர்பார்ப்பதில்லை…

  அரசாங்கம் செய்வது அராஜகம் என்று கூறுகிறீர்கள்..அப்போது இது என்ன?

 18. ஒவ்வொருவருக்கும் தங்களின் எத்தகைய செயல்களுக்கும் நியாயம் கற்பிக்க முடியும் என்பது மீண்டும் ஒருமுறை இங்கு நிரூபிக்கப் பட்டுள்ளது!

 19. எப்போதும் வினவு உரத்த குரலில் அழுத்தமாய் முன்வைக்கும் விசயங்களில் கோபமும் ,ஆவேசமும் இருப்பது இயல்பு .ஆனால் அதை விட அதில் மனித நேயம் இருப்பது எல்லோரும் அறிந்த உண்மை .

 20. எனக்கு ஒரு பல் ஈறுக்குள் முளைத்து வெளிவராமல் உள்ளுக்குள்ளேயே வீணாகிப்போய்விட்டது. அதுவும் கடா பல் என்று சொல்வோமே அந்த பெரிய பல்லுக்கு அடுத்து அடியில் இருந்தது. எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அதை எடுத்துவிட வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். ஆனால் அதை எடுப்பதற்கு, அதன் மேல் இருக்கும் பற்களில் நல்ல பற்கள் நான்கையும் எடுத்தால் தான் அந்த வீணாய்ப்போன ஒரு பல்லை எடுக்க முடியும் என்று சொல்லி அதன்படியே நல்ல பற்களை எடுத்துவிட்டு தொந்தரவு தரும் பல்லை எடுத்தார். பிறகு செயற்கையான பல்லை பொருத்தித் தந்தார். (நான் திரு. அலெக்ஸை வீணாய்ப்போன பல் என்று சொல்லவில்லை)

  • மிஸ்டர் தமிழ்,

   ஒரே ஒரு சொத்தை பல்லை எடுக்க நாலு நல்ல பல்லை பிடுங்கறவன் எல்லாம் நல்ல டெண்டிஸ்ட் இல்லங்காணும். பழனி வைத்தியர் காளிமுத்து கிட்டே போய் பல் வைத்தியம் பண்ணிக்காதேள்.(நானும் மாவோயிஸ்டுகள் எல்லாம் பழனி வைத்தியர் காளிமுத்துன்னு சொல்ல வரலே)

   • பழனி வைத்தியர் காளிமுத்துவிடம் போகும் அளவுக்கு உம்மைப்போல் எனக்கு அடியில் உள்ளது ஒன்றும் வீணாகப்போகவில்லை. ஈறின் அடியில் முளைத்த பல் தான் வீணாகியிருந்தது. எனக்கு பல்லை எடுத்ததும் விசயம் அறிந்த (மாவோயிஸ்டுகளைப் போல்) படித்த மெடிக்கல் காலேஜில் பட்டம் வாங்கிய டென்டிஸ்ட் தான். இனிமேலாவது காளிமுத்துகளுக்கு (மக்கள் விரோதப் போக்கிற்கு) சப்போர்ட் செய்யாதீர்கள்.

 21. மாவோயிஸ்ட்களின் கடத்தல் நடவடிக்கை அமெச்சூரிஸ்ட் தன்மையோடு உள்ளது என்பதே என் எண்ணம். அரசு இன்னும் மூர்க்கமாக திட்டங்களை வகுக்க போகிறது. செல்போன் டவர்கள் அமைத்து இன்னும் தீவிரமாக மாவோயிஸ்ட்களை கண்காணித்து ஒடுக்கப் போகிறார்கள் என்பதே கசப்பான உண்மை.

  அலெக்ஸ் பால் மேனனுக்கு தமிழகத்தில் எழுந்த ஆதரவு அலை பாசாங்கும், போலியுமானது. அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே ஒரு நாகரிக மனிதனின் பிரார்த்தனையாக இருக்க முடியும். அதே வேளை, இங்கு, சாதி உணர்வையே போஸ்டர்களிலும், ஊர்வலங்களிலும் காண முடிந்தது. புதிய தலைமுறை மற்றும் சன் டி.விக்கள் பரபரப்பூட்டி லாபம் சம்பாதிக்க முடிந்த வரை முயன்றன. மாவோயிஸ்ட்கள் தாம் கடத்தியவர்களை எவ்வித ஊறும் ஏற்படுத்தாமலே இது வரை அனுப்பியுள்ளனர். கடத்தப்பட்டவர்களும் இதனை மெய்சிலிர்க்க விளக்கியுள்ளனர். எனினும் இங்கு வானத்துக்கும், பூமிக்குமாக குதித்துக்கொண்டிருன்தனர் சிலர். ஊடகங்கள் மாவோயிஸ்ட்களின் இந்த உயர் பண்பிற்கு போதிய முக்கியத்துவமளித்து செய்தி வெளியிடவில்லை.

 22. ஓடு அண்ணன்.. நான் ஆர்.எஸ்.எஸ்ல இருக்கேனா சிமில இருக்கேனானு ஆராய்ச்சி பண்றத விட்டுட்டு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.. சோனியாவயோ டாடாவயோ இல்ல உங்க so called பார்ப்பன முதலாளி நாராயண மூர்த்தியயோ கடத்தறத்துக்கு தில் இருக்கா உங்க மாவோயிஸ்ட் கூட்டத்துக்கு?

  • அவங்களுக்கு தைரியம் இருந்தா ரெண்டு போலீசோட வர சொல்லுங்க..

   தில்லை விடுங்க.. அவங்களையெல்லாம் கடத்தினா அப்புறம் உயிரோட விடுற கருணை மாவோயிஸ்ட் கிட்ட இருக்காது அப்படீங்குறது என்னோட எண்ணம்.. நீங்க என்ன சொல்றீங்க ?

 23. ஆடு நனைகிறதே என ஓநாய் அழுததைப் போல் அலெக்சு பால்மேனன் கடத்தல். 13நாள் சத்திசுகர் மாவட்ட மாவோ போராளிகளின் துணையுடன் இருந்தவருக்கு ஊடகங்கள் இலவயமாக விளம்பரம் தந்தன. அணு உலை போராளிகளின் உண்மை போராட்டத்தை மட்டும் அதே ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்கின்றன.

 24. Welcome back Alex paul menon… get a posting somehwre in mumbai or bangalore.. never go toimrove that lletrate maoists areas or TN your talents will go unnoticed…

  • என்னப்பா இது.. மாவோயிஸ்ட் கடத்தினதுக்கு அப்புறம் இந்தியாவே அவர note பண்ணுச்சு.

   நீ இன்னும் USA போகல.. சரி நீ முதலில் உன் பேரை மாற்று..

 25. இந்தியாவில் ஜனநாயக அமைப்பே சிறந்தது. மாவோயிஸ்ட் என்ற வார்த்தையே இந்தியாவில் இருக்கக்கூடாது. அதனை தூக்கி எறிய கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த கூட்டம் அரசியலில் நுழைந்தால் இந்தியாவில் “பாலும் தேனும்” ஓடுமாம். அதனால்தான் இவர்களை மக்கள் தேர்ந்தெடுக்காமல் இருக்கிறார்கள்!!!!!! விந்தையிலும் விந்தை!!!!

  இளைங்கர் களை மூளை சலவைசெய்து போராட்டம் என்ற பெயரில் நாட்டை சீர்குலைக்கப் பார்கிறார்கள்!! ஒரு ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடுமை!

 26. “கைதிகளை விடுவிக்கக் கோரும் அவர்களது கோரிக்கைகளில் நீதி இருக்கிறது. “எனினும் அவ்வாறு விடுவிப்பது சட்டத்துக்கு விரோதமானது” என்கிறார்கள் வல்லுநர்கள். உண்மைதான். ‘நீதி’ சட்டவிரோதமானதாகவும், அநீதிகள் சட்டபூர்வமானவையாகவும் நிலைநாட்டப்பட்டிருக்கும் நாட்டில், சட்டப்படி நீதியைப் பெறுவது கடினம்தான்.”

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க