தென்கொரியாவின் தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ, ஒரிசா மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இரும்பு உருக்காலைக்கு எதிராக கடந்த ஐந்தாண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. ஒரிசா மாநில அரசு பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஏவிவிட்ட பின்னும், அப்போராட்டம் பின்னடைவுக்கு உள்ளாகவில்லை. போஸ்கோவின் திட்டங்களுக்கு உறுதுணையாய் நிற்பதாக நவின் பட்நாயக்கிற்கு உறுதியளித்திருக்கிறார், பிரதமர் மன்மோகன் சிங். இப்படிபட்ட நிலையில் இப்பிரச்சினையில் மைய அரசு திடீர் உத்தமர் வேடம் போடக் கிளம்பியிருக்கிறது.
தென்கொரியாவின் தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ, ஒரிசா மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இரும்புச் சுரங்கம், இரும்பு உருக்காலை மற்றும் இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்வதற்கான துறைமுகம் ஆகியவற்றுக்கு விதிமுறைகளின்படி சுற்றுப்புறச் சூழல் அனுமதி பெற்றுள்ளதா? அந்நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டபொழுது இந்திய வனச் சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா? இத்திட்டத்தால் தங்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதா? அவர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்கள் உள்ளனவா? – ஆகியவை குறித்து ஆராய மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் நான்கு பேர் கொண்ட கமிட்டியொன்றை அமைத்தது.
பழங்குடியின விவகாரங்கள் குறித்த ஆராய்ச்சியாளர் ஊர்மிளா பிங்க்ளே, முன்னாள் இந்திய வன அளவை இயக்குநர் ஜெனரல் தேவேந்திர பாண்டே, சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞரும் மனித உரிமை ஆர்வலருமான வீ.சுரேஷ் ஆகிய மூவரும் இக்கமிட்டியின் உறுப்பினர்களாகவும், மீனா குப்தா என்பவர் இக்கமிட்டியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் போஸ்கோ திட்டத்திற்குத் தேவைப்பட்ட அனுமதிகளை வாரிவழங்கியபொழுது, மீனா குப்தா அத்துறையில் செயலராக இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படிபட்ட பின்னணி கொண்டவரை கமிட்டியின் உறுப்பினராக மட்டுமின்றி, தலைவராகவும் நியமித்ததில் இருந்தே மைய அரசின் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.
மீனா குப்தாவும் மைய அரசை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கவில்லை. அவர் இது தொடர்பாக அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், “போஸ்கோவிற்கு சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனச் சட்டங்களை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை. இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க போஸ்கோவிற்கு கால அவகாசம் அளிப்பதன் மூலமும், சுற்றுப்புறச் சுழல் பாதிப்பு தொடர்பாக இன்னும் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுமாறு போஸ்கோவிற்கு உத்திரவிடுவதன் மூலமும் இத்திட்டத்தைத் தொடர அனுமதிக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபொழுதில் மற்ற மூன்று உறுப்பினர்கள், “உண்மைகளை மூடிமறைத்தும் சட்ட விரோதமான முறையிலும் போஸ்கோ திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக’’த் தமது அறிக்கையில் நிரூபித்துள்ளதோடு, போஸ்கோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
* போஸ்கோ ஒரிசாவில் அமைக்கத் திட்டமிட்டுள்ள உருக்காலை ஆண்டொன்றுக்கு 1.2 கோடி டன் இரும்பை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால், இத்திட்டம் தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள சுற்றுப்புறச் சூழல் ஆய்வறிக்கையோ, போஸ்கோ ஆலையின் முதல் கட்டத்தின் உற்பத்தி இலக்கான 40 இலட்சம் டன் இரும்பு உற்பத்தியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. அதாவது, 1.2 கோடி டன் இரும்பை உற்பத்தி செய்வதால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யாமல், 40 இலட்சம் டன் இரும்பை உற்பத்தி செய்வதால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதன்படி இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* போஸ்கோவின் இரும்பாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1,620 ஹெக்டேர் நிலப்பரப்பில் 1,253 ஹெக்டேர் நிலப்பரப்பு பல்லுயிர்களும், விதவிதமான தாவர வகைகளும் நிறைந்த வனப்பகுதியாகும். இத்திட்டத்தால் ஏறத்தாழ 8 கிராமங்கள் அழிந்துபோகும் வாய்ப்புண்டு. இப்படிபட்ட நிலையில் இத்திட்டம் குறித்து முழுமையான சுற்றுப்புறச் சூழல் ஆய்வு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இத்திட்டத்தால் மழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மேலும், போஸ்கோ அமைக்கவுள்ள இரும்பு உருக்காலை, மின் உற்பத்தி நிலையம், துறைமுகம் ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேரத்து, அவை சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆராயாமல், தனித்தனியாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இப்படி ஆய்வு நடத்துவது சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு குறித்த விதிகளுக்குப் புறம்பானது.
* கடற்கரை ஒழுங்குமுறை விதிகளின்படி, பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ள கடற்கரைப் பகுதிகளில் இரும்பு உருக்காலைகளை அமைக்க முடியாது. போஸ்கோவின் இரும்பு உருக்காலை இப்படிபட்ட கடற்கரைப் பகுதியில்தான் அமையவுள்ளது என நன்கு தெரிந்திருந்தும், விதிமுறைகளுக்கு முரணாக அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* போஸ்கோ இரும்பாலை அமையவுள்ள பகுதி பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்களையும் உள்ளடக்கியிருப்பதால், ஆலை அமைவதற்கான தடையில்லாச் சான்றிதழை கிராமப் பஞ்சாயத்திடமிருந்துதான் பெற வேண்டும். ஆனால், ஒரிசா மாநில அரசோ இப்பகுதிகளில் பழங்குடியின மக்கள் வாழ்ந்துவருவதை மறைத்துவிட்டதோடு, தடையில்லாச் சான்றிதழையும் கிராமப் பஞ்சாயத்திற்குப் பதிலாக ஜகத்சிங்பூர் மாவட்ட நீதிபதியிடமிருந்து பெற்றுள்ளது.
* இத்திட்டத்தால் தமது வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும் பழங்குடியின மக்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தட்டு மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து எந்தவொரு திட்டமும் போஸ்கோவிடமும் இல்லை என்பது மட்டுமல்ல, மறுவாழ்வு அளிப்பது குறித்த சிந்தனையே போஸ்கோவிடம் இல்லை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை உள்ளிட்டு பல்வேறு முறைகேடுகளைச் சுட்டி காட்டியுள்ள அம்மூவரும், “சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் போஸ்கோவிற்கு அனுமதி அளித்துள்ள விவகாரத்தில் தனது விதிகளைத் தானே பின்பற்றவில்லை” என்றும் அம்பலப்படுத்தியுள்ளனர். “வளர்ச்சி என்ற பெயரில் சட்டம் ஓரங்கட்டப்படுவதற்கு போஸ்கோ நல்ல உதாரணமாகும்; இத்தகைய முயற்சிகள் வெற்றி அடையுமானால், அதனால் கொள்ளை இலாபப் பேர்வழிகள்தான் பலனடைவார்களே தவிர, நாட்டின் வளர்ச்சியையும் சாதிக்க முடியாது; சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்க முடியாது” என இம்மூவரும் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்த மூவர் அளித்த அறிக்கை ஒருபுறமிருக்க, வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் நடத்தப்படும் சுரங்கப் பகுதி மக்கள் ஒற்றுமை இயக்கம் போஸ்கோ திட்டத்தால் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள், வரி வருமானம் ஆகியவற்றை ஆராய்ந்து, இத்திட்டத்தால் இந்தியாவுக்குக் கிடைக்கும் இலாபங்களைவிட நட்டமே அதிகம் என அம்பலப்படுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
போஸ்கோ திட்டத்தால் கிடைக்கும் சமூக நலன்களை ஆராய்ந்த பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் என்ற அமைப்பு, இது தொடர்பாக 2007-ஆம் ஆண்டு அளித்த அறிக்கையில், “இத்திட்டத்தால் 8,70,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் 2017 ஆம் ஆண்டில் ஒரிசா மாநிலத்தின் மொத்த வருவாயில் போஸ்கோவின் பங்கு 11.5 சதவீதமாக இருக்கும் என்றும்” கூறி, இத்திட்டத்தைப் புகழ்ந்து தள்ளியது. ஒரிசா மாநில அரசும் இப்புள்ளிவிவரங்களைக் காட்டிதான் இந்தத் திட்டத்தின் அவசியத்தைத் தூக்கிப் பிடித்து வந்தது.
‘‘இந்த அறிக்கை சுதந்திரமாகத் தயாரிக்கப்பட்டதல்ல; போஸ்கோ நிறுவனத்திடம் காசு வாங்கிக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை” என்ற உண்மையை சுரங்கப் பகுதி மக்கள் ஒற்றுமை இயக்கம் அம்பலப்படுத்தியிருக்கிறது. பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் போஸ்கோ குறித்த அறிக்கையைத் தயாரிப்பதில் அரசனை விஞ்சிய விசுவாசியாக நடந்து கொண்டுள்ளது. போஸ்கோ நிறுவனம் தனது இணைய தளத்தில் ஒரிசாவில் அமையவுள்ள தனது ஆலைகளின் மூலம் அடுத்த 30 ஆண்டுகளில் 4,67,000 பேருக்கு வேலை கிடைக்கும் எனக் குறிப்பிட்டிருக்கும்பொழுது, பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலின் அறிக்கையோ போஸ்கோ திட்டத்தின் மூலம் 8,70,000 பேருக்கு வேலை கிடைக்கும் என ஊதிப் பெருக்கியுள்ளது.
இவ்விரண்டு புள்ளிவிவரங்களுமே மோசடியானவை எனக் குறிப்பிட்டுள்ள சுரங்கப் பகுதி மக்கள் ஒற்றுமை இயக்கம், “போஸ்கோ திட்டத்தின் மூலம் 48,000 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்; அதுவும் கட்டுமான வேலைகள் நடக்கும்பொழுது மட்டும்தான் இவ்வளவு பேருக்கும் வேலை கிடைக்கும்; போஸ்கோ திட்டத்தால் ஜகத்சிங்பூர் பகுதியில் நடந்து வரும் பணப் பயிர் விவசாயம் உள்ளிட்ட உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை போஸ்கோ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை; போஸ்கோ திட்டத்தின் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் எனக் காட்டுவதற்காக, உற்பத்திச் செலவு குறைத்துக் காட்டப்பட்டுள்ளது” எனத் தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியிருக்கிறது.
போஸ்கோ திட்டம் நமது நாட்டின் இரும்புக் கனிம வளத்தைக் கொள்ளையடிப்பதற்கான திட்டம்தான் என்பது மேலும்மேலும் அம்பலமாகி வருகிறது. இப்படிபட்ட நிலையில் இத்திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்து, போஸ்கோவை நாட்டைவிட்டுத் துரத்துவதுதான் நாணயமிக்க செயலாக இருக்க முடியும். ஆனால், சுற்றுப்புறச் சூழல் அமைச்சகமோ இப்பிரச்சினையில் பாம்பும் சாகக் கூடாது, தடியும் நோகக்கூடாது என்ற நிலையில் உள்ளது. இதற்கு, போஸ்கோ திட்டம் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட கமிட்டியின் நான்காவது உறுப்பினர் அளித்த அறிக்கையைப் பயன்படுத்திக் கொள்ள முயலுகிறார், சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
போஸ்கோ திட்டம் குறித்து சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்திடம் எதிரும் புதிருமான இரண்டு அறிக்கைகள் உள்ள நிலையில், அத்துறையின் அமைச்சர் ஜய்ெராம் ரமேஷ், “இந்த இரண்டு அறிக்கைகளும் அடிப்படையில் வேறுபடவில்லை; விளக்கம் அளிப்பதில்தான் வேறுபட்டுள்ளன” எனப் புளுகியிருப்பதோடு, போஸ்கோவிற்கு அளிக்கப்பட்ட அனுமதியை, கிழக்காசிய நாடுகளோடு பொருளாதார உறவு கொள்ளும் இந்திய அரசின் கொள்கையோடு இணைத்துப் பார்க்க வேண்டும் எனக் கூறி இந்த சட்டவிரோதமான அனுமதியை நியாயப்படுத்த முயன்றுள்ளார். இந்த இரண்டு அறிக்கைகள் பற்றியும் ஒரிசா மாநில அரசிடமும் கலந்து ஆலோசித்துவிட்டுத்தான் இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்திருப்பதன் மூலம் போஸ்கோ திட்டம் பற்றி அரசின் உள்ளக்கிடக்கையைச் சூசகமாக விளங்க வைத்துவிட்டார், அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
பி.டி. கத்திரிக்காய்க்கு அனுமதி அளிப்பதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபொழுது, கருத்துக் கேட்பு நாடகங்களை நடத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், போஸ்கோ பிரச்சினையிலும் அதே தந்திரத்தைக் கையாளுகிறார். போஸ்கோவிற்கு எதிராகப் போராடிவரும் மக்கள் மத்தியில் அத்திட்டத்திற்கு எதிராக ஏதோ செய்யப்போவது போலக் காட்டிக் கொள்ளவும், அதேசமயம், நைச்சியமான வழியில் போஸ்கோவிற்கு வழங்கப்பட்டுள்ள சட்டவிரோதமான அனுமதியைத் தொடரவும்தான் இந்தக் கமிட்டியை அமைத்திருக்கிறது சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம்.
நியம்கிரி மலையில் பாக்சைட்டைத் தோண்டுவதற்கு மட்டும் வேதாந்தாவிற்குத் தடை விதித்து கோந்த் பழங்குடி இன மக்களின் சிப்பாயாக ராகுலுக்கு முடிசுட்டியதைப் போல, போஸ்கோ பிரச்சினையையும் தனது ஓட்டு வேட்டைக்குப் பயன்படுத்திக் கொள்ள முயலுகிறது, காங்கிரசு கும்பல். போஸ்கோவிற்கு எதிராகப் போராடி வரும் ஒரிசா மாநில மக்கள் காங்கிரசின் இந்த நயவஞ்சகத்திற்கு எதிராகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
__________________________________
– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
__________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்:
- மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!
- பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்
- இங்கே கடல், நிலம், மலை….மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் !!
- கொள்ளை போகும் இந்திய வளங்கள்
போஸ்கோ ஒப்பந்தம்: காங்கிரசின் கபடத்தனம்…
போஸ்கோ திட்டம் நமது நாட்டின் இரும்புக் கனிம வளத்தைக் கொள்ளையடிப்பதற்கான திட்டம் போஸ்கோவை நாட்டைவிட்டுத் துரத்துவதுதான் நாணயமிக்க செயலாக இருக்க முடியும்….
[…] This post was mentioned on Twitter by வினவு, Prakash and sandanamullai, Kirubakaran S. Kirubakaran S said: போஸ்கோ ஒப்பந்தம்: காங்கிரசின் கபடத்தனம் http://bit.ly/e2tuS9 […]
இது தொடர்பான தெஹல்கா பதிவு http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne111210whose_steel.asp
அயொக்கிய அரசியல்வாதிகளின் இதுபோன்ற செயல்களே,நக்சலைட்டுகள் உருவாக காரணமாகின்றன!