தோழர் ஆசாத் படுகொலையும், இந்திய அரசின் அமைதி பேச்சுவார்த்தையின் கோரமுகமும் ! –
சுவாமி.அக்னிவேஷ் கடந்த மே,2010லிருந்து இந்திய அரசிற்கும், மாவோயிசுட்டுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி வருபவர். இது வரை இரண்டு தரப்புகளும் இரண்டு கடிதங்களை இவர் மூலம் அனுப்பி உள்ளனர். சூன் 26 அன்று இவர் அரசு தரப்பிலிருந்து வந்த மூன்றாவது கடிதத்தை மாவோயிசுட்டுகளின் தலைமைக்குழுவில் உள்ள சேருகுரி இராஜ்குமார் என்ற ஆசாத்திடம் கொடுத்து விட்டு, அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார். அக்னிவேஷ் கூறுகையில் “நான் அவர்களிடம் (மாவோயிசுட்டுகளிடம்) இருந்து அமைதி பேச்சு வார்த்தை துவங்குவதற்கான தேதியை எதிர்பார்த்து காத்திருந்தேன்”. ஆனால் அவருக்கு வந்த செய்தியோ வேறு. மாவோயிசுட்டு தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்திவரும் ஆசாத் ஆந்திராவின் காட்டுப் பகுதியில் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதே அந்த செய்தி.
“ஆசாத் அரசின் மூன்றாவது கடித்தை பெற்றதனால் தனது மெய்பாதுகாவலர்களை விலக்கிக் கொண்டிருக்கலாம்”, மேலும் “ஆசாதின் படுகொலை நமக்கு எல்லாம் பேரிழப்பு, ஏனென்றால் ஆசாத் மாவோயிசுட்டுகளால் அமைதி பேச்சு வார்த்தைக்கு நியமிக்கப்பட்டவர். இதனால் அமைதி பேச்சுவார்த்தையில் ஒரு பெரிய தடை ஏற்பட்டுள்ளது” என்றார் அக்னிவேஷ்.
ஆனால் உள்துறை அமைச்சகமோ வேறொரு பார்வையை கொண்டுள்ளது. “இந்த படுகொலை அமைதி பேச்சிவார்த்தையில் எந்த ஒரு தடையையும் ஏற்படுத்தாது. மாவோயிசுட்டுகளிடம் இருந்து அமைதி பேச்சுவார்த்தையை நோக்கி எந்த ஒரு சமிஞையும் எங்களுக்கு வரவில்லை” என்கிறார் உள்துறை செயலர். பிள்ளை.
ஆசாத் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு மாவோயிசுட்டுகள் மத்திய ஆயுதப் பிரிவைச்(CRPF) சேர்ந்த 27 காவலர்களை கொன்றுள்ளனர். இந்த தாக்குதல் மாவோயிசுட்டுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்றும் எடுத்து கொள்ளலாம். அக்னிவேஷ் மூலம் நடைபெற்ற திரைமறைவு பேச்சு வார்த்தை மூலம் நடைபெற்று வரும் வன்முறையை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை தொடங்க ஒரு நாள் குறிப்பிடப்படவேண்டும். அப்படி ஒரு நாள் குறிப்பிடாத பட்சத்தில் இரண்டு தரப்புகளும் தங்களது போரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஆசாத் படுகொலை செய்யப்பட்டு அதே வாரத்தில் லால்கரில் 5 மாவோயிசுட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் மாவோயிசுட்டு ஆதரவாளர்கள் என்று கருதப்பட்ட பலர் கைது செய்யப்பட்டனர். ஆதிவாசி பெண்கள் பாதுகாப்பு படையினரால் கற்பழிக்கப்படும் நிகழ்வுகளும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. மாவோயிசுட்டுகளிம் தாங்கள் கொல்வதை நிறுத்த போவதில்லை.
இங்கே ஆசாதின் மரணத்தை ஏன் நாம் இந்த வன்முறை பிரச்சனையிலிருந்து விலக்கி பார்க்கவேண்டி இருக்கின்றது என்றால் ஆசாத் தான் (மாவோயிசுட்டு)கட்சிக்கு அக்னிவினேசு மூலமாக ப.சிதம்பரத்தின் கடிதங்களை எடுத்துச் செல்பவரும், நம்பதகுந்தவருமாவார். ஆசாத் கட்சிக்குள்ளே அமைதி பேச்சுவார்த்தையின் மேல் ஒரு நம்பிக்கையை கொண்டு வர முயற்சித்தவர். மேலும் கட்சிக்குள்ளே நல்ல மரியாதை உள்ளவருமாவார். ஆனால் அவரை கொன்றதன் மூலம் அரசு தான் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு வரப்போவதே இல்லை என்று தெளிவாக அறிவித்து விட்டது” என்கிறார் மாவோயிசுட்டுகளின் தண்டகாரண்ய பகுதியின் செய்தி தொடர்பாளர் உசென்டி.
முதல் இரண்டு கடிதங்களும் ஊடகங்கள் மூலம் மக்களை சென்றடைந்து விட்டன. ஆனால் மூன்றாவது கடிதம் இன்னும் இரகசியமாகவே உள்ளது. ஆனால் இந்த மூன்றாவது கடித்தை படித்த சிலர் இரண்டு தரப்புகளும் அமைதி பேச்சுவார்த்தை மிக அருகில் வந்திருந்ததாகவும், அதுவே ஆசாத் கொலை செய்யப்பட்டதன் காரணமாகவும் மாறிவிட்டது. இதில் இரண்டு தரப்புகளுக்கும் இடையே உள்ள ஆதிவாசிகளின் நிலை தான் மிகவும் மோசமானது. இந்த(ஆசாதின்) கொலைக்கு மாவோயிசுட்டுகள் கண்டிப்பாக பழிவாங்குவார்கள்.
2004ல் ஆந்திராவில் அரசுக்கும் மாவோயிசுட்டுகளுக்கும் இடையே நடுநிலையாளராக செயல்பட்ட ஹரகோபால் கூறுகையில் “இந்த பாசிச அரசு மக்களை கொல்வதன் மூலம் அமைதி திரும்பி விடும் என்று எண்ணுகிறது”. இது போன்ற நிகழ்வுகள்(ஆசாதின் கொலை) இந்த அரசின் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன. ஆந்திராவின் காட்டு பகுதியில் துப்பாக்கி சண்டையில் ஆசாத் கொல்லப்பட்டது அரசை பொறுத்த வ்ரை ஒரு சாதனை. ஆசாத் மாவோயிசுட்டுகளில் மூன்றாம் இடத்தில் இருப்பவர். கட்சியின் மையக் குழு உறுப்பினர். மேலும் மாவோயிசுட்டுகளின் தலைவர். கணபதிக்கு பக்க பலமாக இருந்தவர்.
ஆசாத் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டதில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு உணவக முதலாளி. ஆசாத்திற்கு தற்போது வயது 55. வாராங்கலில் உள்ள மண்டல பொறியியல் கல்லூரியில் படித்தவர். இரண்டு முதுநிலை பொறியியல்(M.tech) பட்டம் பெற்றவர். புரட்சிகர மாணவர் யூனியனை துவக்கியவர். எமர்ஜென்சி காலகட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்.
ஆதிலாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் பிரமோத் குமார் கூறுகையில் “அதிலாபாத் காட்டு பகுதியில் 25லிருந்து 30 மாவோயிசுட்டுகள் இருப்பதாக உளவுதுறை தகவல் வந்தது. நாங்கள் ஒரு காவல் துறைப் படையை மாவோயிசுட்டுகளுக்கு எதிராக சண்டை போட அனுப்பினோம். “எங்கள் படை அவர்களை சரணடைய சொன்னார்கள் ஆனால் அவர்கள் சண்டையை ஆரம்பித்தனர்”. காவல் துறை கணக்குப்படி இந்த மோதல் சூலை 1 இரவு 11.30 மணிக்கு ஆரம்பித்து சூலை 2 காலை 2 மணி வரை நீடித்தது. மோதல் முடிந்தவுடன் ஆசாதுடன் அடையாளம் தெரியாத ஒரு நபரும் மோதலில் கொல்லப்பட்டதாக காவல் துறை கூறியது.
ஆனால் இந்த மோதலை பற்றி கிடைத்த தகவல்களோ வேறு. மோதல் நடை பெற்றதாக கூறும் சர்கிபாலி கிராம மக்கள் சூலை இரவு எங்களுக்கு எந்த ஒரு துப்பாக்கி சண்டை சத்தமும் கேட்கவில்லை என்று கூறுகின்றனர். மாவோயிசுட்டுகளும் இந்த மோதல் போலியான ஒன்று என கூறுகின்றனர். “ஆசாத் சூலை 1 அன்று நாக்பூரில் இருந்தார். அவர் அதிலாபாத்தில் இல்லை. எங்களது திட்டப்படி அவர் சூலை 1 அன்று எங்கள் ஆள் ஒருவரை அவர் திரையரங்கில் சந்திக்க வேண்டும்” என்கிறார் மாவோயிசுட்டுகளின் செய்தி தொடர்பாளர். உசென்டி.
அடையாளம் தெரியாத அந்த இரண்டாவது உடலே இது போலி மோதல் என உறுதிபடுத்துவதற்கான காரணங்களை கொடுக்கின்றது. இவரின் புகைப்படங்கள் ஆந்திர நாளிதழ்களில் வந்த பின்னர் இவர் மாவோயிசுட்டு இல்லை ஒரு ஊடகவியலர் என்றும் உத்தர்கண்டில் உள்ள இவரது குடும்பம் கூறியது. இவரது பெயர் ஹேம்சந்திர பாண்டே. 2007லிருந்து அவர் டெல்லியில் வசித்து வந்தவர். “எனது கணவர் சூன் 30 அன்று டெல்லியிலிருந்து நாக்பூருக்கு அலுவல் காரணமாக சென்று சூலை 2 அன்று டெல்லி திரும்ப வேண்டியவர்” என்கிறார் பாண்டேவின் மனைவி. அவரது குடும்பத்தார் கூறுகையில் பாண்டே “நை துனியா, இராசிட்ரிய சகாரா, டெய்னிக் ஜக்ரன்” போன்ற தினசரிகளில் வேலை செய்தார் . ஆனால் இந்த தினசரிகளின் ஆசிரியர்களோ அவர் இங்கு வேலை பார்க்கவில்லை என்று கூறினாலும் அவரது பெயரில் மேற்கூறிய தினசரிகளில் வெளிவந்துள்ள பதிவுகள் தெகல்காவிடம்(வார இதழ்) உள்ளன.
2010லிருந்து அவர் சேத்னா என்ற இதழில் வேலை செய்து வந்துள்ளார். இது டெல்லி அசாம் இருப்பு பாதை அலுவலகத்திற்கு(Delhi Assam Railway corporation ltd) சொந்தமானது. அவருடன் சேத்னா அலுவலகத்தில் வேலை செய்து வரும் மற்ற நண்பர்களோ பாண்டே ஒரு அமைதியான, உதவும் எண்ணம் கொண்ட நண்பர் என கூறுகின்றனர். இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால் ஆதிலாபாத்தில் அவர் கொல்லபட்டதாக காவல்துறை கூறும் சூலை 1 அவர் அலுவலகம் வந்ததாகவும் கூறுகின்ரனர். “சேத்னா இதழ் அலுவலக நிர்வாகியான அபிசேக் கூறுகையில் பாண்டே சூலை 1 அன்று மதியம் வரை அலுவலகத்தில் வேலை செய்து விட்டு பின்னர் அரை நாள் விடுப்புக் கேட்டுள்ளார். பாண்டேவின் மேலாளர் அவரது கைபேசியில் உள்ள பாண்டேவின் குறுஞ்செய்தியையும் நமக்கு காட்டினார் “அதாவது சூலை 1 அன்று தாம் அரை நாள் மட்டும் அலுவலகத்தில் இருப்பதாகவும், பின்னர் விடுப்பு எடுப்பதாகவும் கூறியுள்ளார்”.
ஆனால் பாண்டேவின் குடும்பத்தார் பாண்டே சூன் 30 அன்று டெல்லியை விட்டு தொடர்வண்டியில் சென்றதாகவே கூறுகின்றனர். டெல்லியில் மதியம் 2 மணி வரை இருந்து விட்டு அதே நாள் இரவு ஆந்திராவின் தொலைதூர காட்டுப் பகுதியில் கொரில்லா போரில் ஈடுபடுவது என்பது நம்பதகுந்ததல்ல.
சூலை 1 அன்று என்ன நடந்ததற்கு தாமும் ஒரு வகையில் காரணமாகி விட்டோமோ என்றும் எண்ணுகிறார் அக்னிவேஷ். மே 6 லிருந்து 8 வரை அக்னிவேசும் மற்றும் சிலரும் இராய்பூர் மற்றும் தாண்டிவாடா சென்று நடைபெற்று வரும் வன்முறையை நிறுத்த கோரினார்கள். மே 11 அன்று சிதம்பரம் அரசின் நிலையை விளக்கி கூறி அக்னிவேசிற்க்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் மாவோயிசுட்டுகள் வன்முறையை நிறுத்திக் கொள்ள ஒரு நாளை குறிப்பிடச் சொல்லியிருந்தார். “நாங்கள் அந்த குறிப்பிட்ட நாளில் மாவோயிசுட்டுகள் வன்முறையை நிறுத்தி விடுவார்கள் என்று இருந்தோம்” மேலும் சிதம்பரம் “நாங்கள் அந்த குறிப்பிட்ட நாளில் இருந்து 72 மணி நேரங்களுக்கு மாவோயிசுட்டுகள் எந்த ஒரு வன்முறையிலாவது ஈடுபடுகின்றார்களா என்று கூர்ந்து கவனிப்போம். மேலும் இந்த 72 மணி நேரத்தில் அரச படைகளும் எந்த ஒரு சண்டையிலும் ஈடுபடாது. அந்த நேரத்தில் நாம் அமைதி பேச்சு வார்த்தையை தொடங்கலாம் என்றும் கூறியிருந்தார்”.
இந்த கடிதம் மிக முக்கியமான ஒன்றாகும் ஏனென்றால் இதில் தான் அரசு முதன்முறையாக மாவோயிசுட்டுகளுடன் பேச்சு வார்த்தை நடத்த சம்மதித்துள்ளது. இதற்கு பதில் தரும் வகையில் மே 31 அன்று ஆசாத் ஒரு கடிதம் அனுப்பினார். அதில் “எங்களது கட்சி அமைதி பேச்சு வார்த்தைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனை மிக மோசமாக பாதிக்கப்படும் இலட்சக்கணக்கான ஆதிவாசிகளை கருத்தில் கொண்டே நாங்கள் எடுத்துள்ளோம்.அமைதி பேச்சு வார்த்தையில் அரசு மிக ஆர்வமாக உள்ளதென்றால் அரசு நீண்ட கால சண்டை நிறுத்தத்திற்க்கு ஒப்புக் கொள்ள வேண்டும். 72 மணி நேர சண்டை நிறுத்தம் என்பது நகைச்சுவையாக உள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விடுவிக்கவும், எங்கள் மீதுள்ள தடையையும் அரசு நீக்க வேண்டும். மேலும் அரசு தற்போது சண்டையில் ஈடுபட்டுள்ள படையை திருப்பி பெற வேண்டும்” என்றும் ஆசாத் கூறியுள்ளார்.
அக்னிவேஷ் இந்த கடிதத்தை ப.சிதம்பரத்திடம் சேர்த்துள்ளார். மேலும் மாவோயிசுட்டுகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விடை கூறும் வகையில் மூன்றாவது கடிதத்தை ப.சிதம்பரத்தை சந்தித்த பின்னர் ஆசாதிற்க்கு அனுப்பி உள்ளார். அதில் சண்டை நிறுத்தம் வெறும் 3 நாட்கள் மட்டுமல்ல அது நீண்ட கால நோக்கிலே இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த மூன்றாவது கடிதத்திற்கு மாவோயிசுட்டுகளின் தரப்பில் இருந்து சண்டை நிறுத்தத்தை அறிவிக்கும் அந்த நாளை குறிப்பிட வேண்டும். இந்த நிலையில் தான் ஆசாத் போலி மோதலில் அரசினால் கொல்லப்பட்டார்.
“இந்தியாவின் அமைதி பேச்சு வார்த்தையின் கோரமுகம் இவ்வாறு இருக்கின்றது. இதைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்திய பிரதமரே ஒப்புக்கொண்ட ஆதிவாசிகளின் தற்போதைய நிலை பற்றியும், அதை மேம்படுத்துவது தொடர்பாகவும் பஞ்சாயத் இராஜ் அமைச்சகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை இதே அரசால் குப்பை தொட்டியில் போடப்பட்டுள்ளது. இதை பற்றிய மொழிபெயர்ப்பை விரைவில் நீங்கள் எதிர்பார்க்கலாம்”
________________________________________________________________________
மூலப்பதிவு…. http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne170710thirdletter.asp
நன்றி— தெகல்கா வார இதழ். தமிழாக்கம் : ப.நற்றமிழன்
________________________________________________________________________
தோழர் ஆசாத் படுகொலையும், இந்திய அரசின் கோரமுகமும் !…
ஆசாதின் படுகொலையை வன்முறை பிரச்சனையிலிருந்து விலக்கி பார்க்கவேண்டி இருக்கின்றது ஏனெனில் அவர்தான் மாவோயிஸ்டுகளுக்கு ப.சிதம்பரத்தின் கடிதங்களை எடுத்துச் செல்லும் நம்பத்தகுந்தவர்…
அமைதி பேச்சுவார்த்தை லட்சணம் இது தான் போல இந்தியா ஜனநாயக நாடாம்
முட்டாள்தனமான முதலாளித்துவ கொள்கைகளை கொண்டது இந்த தேசம்.. ஆனால் இவர்களின் கொள்கைகளை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் வாங்கும் சக்தியை இழக்கும் நாளில் இவர்களை மிகவும் மோசமாக தூக்கி எறிவர்.. ஆனால் இவர்களுக்கு மாற்றாக எந்த ஆள்பவர்களை கொண்டு வருவது?
//இவர்களின் கொள்கைகளை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் வாங்கும் சக்தியை இழக்கும் நாளில் இவர்களை மிகவும் மோசமாக தூக்கி எறிவர்.. //
மக்கள் தமக்கான சரியான அரசியல் தலைமையை உருவாக்காமல் இவ்வாறு தூக்கியெறிவது சாத்தியமில்லை. உதாரணாம் ஆப்பிரிக்க நாடுகள். அங்கெல்லாம் இன்னேரம் புரட்சி இன்னும் வரவில்லை. காரணம் புரட்சிகர கட்சியோ, அரசியல் தலைமையோ இல்லை அல்லது அழிக்கப்பட்டுவிட்டன.
ஈழத்தமிழர்களையும், போராளிகளையும் படுகொலை செய்ய பாசிச ராஜபக்ஷே தலைமையிலான இலங்கை அரசு எந்த வழிமுறையை கையாண்டதோ – எந்த வழிமுறையை கையாளும்படி இந்திய ஆளும்வர்க்கம் சொன்னதோ – அந்த வழிமுறையைத்தான் தோழர் ஆசாத் மரணத்திலும் இந்திய ஆளும் வர்க்கம் கையாண்டிருக்கிறது.
தமிழ்ச்செல்வன், நடேசன் ஆகிய அரசியல் துறை பொறுப்பாளர்களை படுகொலை செய்ததன் மூலம் இன அழிவுக்கு ஈழத்தில் வித்திடப்பட்டது.
அதேபோல் இந்திய மாவோயிஸ்ட் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளரான தோழர் ஆசாத்தை படுகொலை செய்ததன் மூலம், பழங்குடியின மக்களை அழிக்க இந்திய ஆளும் வர்க்கம் வித்திட்டிருக்கிறது.
தெற்காசிய நாடுகளில் சிறியதும், பெரியதுமான மாவோயிஸ்ட் அமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு ஐக்கியம் உருவாக்கப்பட்டிருப்பதில் தோழர் ஆசாத்துக்கு முக்கிய பங்குண்டு.
இவரது தாய் வழி தாத்தா, தெலுங்கானா, ஸ்ரீகாகுளம் ஆகிய பகுதிகளில் தீரத்துடன் எழுந்த உழவர் எழுச்சியில் முக்கிய பங்காற்றியவர்.
‘Revolutionary Engineering College’ என்று ஆளும் வர்க்கத்தால் அழைக்கப்படும் வாரங்கல் ‘Regional Engineering College’ல் படித்துக் கொண்டிருந்தபோது தோழர் ஆசாத்துக்கு புரட்சிகர இயக்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
மாணவர்கள் கிராமங்களை நோக்கி செல்ல வேண்டும் என்ற அழைப்பை ஏற்று தோழர் ஆசாத்தும் கிராமத்துக்கு சென்றார். அக்காலகட்டத்தில் நக்சல்பாரி எழுச்சியை தொடர்ந்து உருவான இந்திய கம்யூனிஸ்ட் (மா – லெ) கட்சியின் முன்னணி தலைவர்களும், மையக் குழு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு அல்லது படுகொலை செய்யப்பட்டு கட்சியே நிலைகுலைந்து போயிருந்த நிலையில், ஆந்திர மாநில குழு தோழர்களை ஒன்றிணைத்ததில் தோழர் ஆசாத்துக்கும் பங்குண்டு.
இதனையடுத்து தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநில புரட்சிகர தோழர்களையும், ஆதரவாளர்களையும் திரட்டி கட்சியை வழிநடத்தியதில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்திருக்கிறார்.
இவருக்கு தமிழ் பேச தெரியும். அதனாலேயே தமிழகத்தில் 80களின் தொடக்கத்தில் நடைபெற்ற சாதியும், வர்க்கமும் தொடர்பான அரங்கக் கூட்டத்தை இவரால் முன்னின்று நடத்த முடிந்தது.
பார்வை குறைபாட்டை பொருட்படுத்தாமல் என்கவுண்டரில் தான் படுகொலை செய்யப்படும் வரை விடாமல் படித்தவர். சர்வதேச அளவில் நடைபெறும் சித்தாந்த உரையாடல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொண்டவர். பின்நவீனத்துவம் முதல் அனைத்து இஸங்களையும் மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆராய்ந்தவர். தன்னால் படிக்க முடியாவிட்டாலும் சக தோழர்களை வாசிக்கச் சொல்லி அதை உள்வாங்கியவர். அதனாலேயே 95ம் ஆண்டு வெளியான கட்சியின் ஆவணத்தில் தலித், பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்ட விளிம்புநிலை மனிதர்களுக்கான உரிமைகளையும் இவரால் சேர்க்க முடிந்தது. இந்திய மா – லெ அமைப்பில் இப்படியொரு அஜண்டா சேர்க்கப்பட்டது வரலாற்று ரீதியாக முக்கியமான விஷயம். பார்வை குறைபாடு காரணமாகவே பெரும்பாலும் இரவில் நடமாடுவதை தவிர்த்தார். இதனாலேயே கட்சியின் இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்க்காமல், அரசியல்துறை பொறுப்பாளராக செயல்பட்டார்.
கட்சியிலுள்ள அமைப்பு தோழர்களிடத்தில் எழும் முரண்பாடுகளை, கறார் தன்மையில்லாமல் நெகிழ்வுத்தன்மையுடன் அணுவதில் தோழர் ஆசாத் புகழ்பெற்றவர். அதனாலேயே முரண்பட்டிருந்த கதிப் அன்சாரியின் (இப்போது திகார் சிறையில் இருக்கும் கோபட் காண்டியின் அமைப்பு) அமைப்பை மக்கள் யுத்தக் குழுவுடன் இவரால் இணைக்க முடிந்தது. இதனையடுத்து பார்ட்டி யூனிட்டி இணைந்தது.
‘இந்த இரண்டு அமைப்புகளும் ஒன்று சேர வாய்ப்பில்லை. அந்தளவுக்கு இருவருக்குள்ளும் பகை’ என ஆளும் வர்க்கம் கொக்கரித்த எம்.பி.சி. அமைப்பையும், மக்கள் யுத்தக் குழுவையும் இணைத்து ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)’ என்ற அமைப்பை உருவாக்கியதில் தோழர் ஆசாத்துக்கு முக்கிய இடம் உண்டு.
ஆந்திராவில் மக்கள் யுத்த கட்சியின் சார்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய குழுவில் தோழர் ஆசாத்தும் இருந்தார். அதனாலேயே அரசுடன் எப்படி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், பேச்சு வார்த்தை என்ற பெயரில் அரசு என்னவெல்லாம் அராஜகம் செய்யும் என்று தோழர் ஆசாத்துக்கு நன்றாகவே தெரியும். இதன் காரணமாகவே திட்டமிட்டு ஆளும் வர்க்கம் இவரை இப்போது படுகொலை செய்திருக்கிறது. இதன் மூலம் மாவோயிஸ்ட் அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் தயாராக இல்லை என்பதை ஆளும் வர்க்கம் அறிவித்திருக்கிறது.
மனித உரிமை அமைப்பில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு செயலாற்றிய வர்க்கீஸ், அவுட்லுக் இதழில் மாவோயிஸ்ட் அமைப்பை விமர்சித்து சமீபத்தில் கட்டுரை ஒன்றை எழுதினார். இந்தியா முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கட்டுரை அது. காரணம், ஆளும் வர்க்கத்துக்கு எதிராக மனித உரிமைக்காக குரல் கொடுத்தவர்களில் வர்க்கீஸ் முக்கியமானவர். அப்படிப்பட்டவரிடமிருந்து இப்படியொரு அலட்சியமான – வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்கும் – கட்டுரையை யாரும் எதிர்பார்க்கவில்லை.
சிவில் உரிமைப் போராளிகளாக அறியப்படும் பலர், ஒரு கட்டத்தில் ஏகாதிபத்திய அடிவருடிகளாக மாறுகிறார்கள் என்பதற்கு வர்க்கீஸ் ஒரு உதாரணம்.
இதற்கு தோழர் ஆசாத் பாயிண்ட் பை பாயிண்ட்டாக அவுட்லுக்கின் அடுத்த இதழில் பதில் அளித்தார். இந்தக் கட்டுரைதான் தோழர் ஆசாத் எழுதிய கடைசி கட்டுரை.
மாவோயிஸ்ட் அமைப்புடன் எனக்கு சில விஷயங்களில், அணுகுமுறைகளில், முரண்பாடுகள் உண்டு. அதேநேரம் நக்சல்பாரி எழுச்சியை தொடர்ந்து உருவான 2ம் தலைமுறை புரட்சியாளர்களில் தோழர் ஆசாத், முக்கியமானவர் என்பதை மறுப்பதற்கில்லை. முரண்படும் தோழர்களை எப்படி நெகிழ்வுடன் அணுக வேண்டும் என்பது உட்பட பல விஷயங்களை இவரிடமிருந்து கற்க வேண்டும்.
அரசியல்துறை பொறுப்பாளரை படுகொலை செய்ததன் மூலம், அமைப்புக்கும் மக்களுக்கும் இடையில் இருந்த பாலத்தை ஆளும் வர்க்கம் தகர்த்திருக்கிறது. இதன் மூலம் மாவோயிஸ்ட் அமைப்பையும், க்ரீன் ஹண்ட் என்ற பெயரில் பழங்குடியின மக்களையும் அழிக்க இந்திய ஆளும் வர்க்கம் தயாராகிவருகிறது.
இச்செயலை கண்டிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
தோழர் ஆசாத்தை படுகொலை செய்த இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான எனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
அருமையான கருத்து பைத்தியக்காரன். நன்றி
அமைதிக்கான யுத்தம்.. பழங்குடிகளை அமைதியாக்கிக் கொண்டிருக்கிறது
http://inioru.com/?p=15525
*Let’s legalise fake encounters:*
http://blogs.timesofindia.indiatimes.com/On-the-bounce/entry/let-s-legalise-fake-encounters
its a black-comedy type article, worth reading…
For this incident…This article too late from ‘vinavu’.