டந்த பிப்ரவரி 2016-ல் நடந்த ஜே.என்.யூ பிரச்சினை தொடர்பாக மூன்றாண்டுகளுக்குப் பிறகு 2019, பிப்ரவரியில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது டில்லி போலீசு. இதன் மூலம், “குடிமக்களின் சுதந்திரத்தை ஒடுக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் அரசியல் பிரிவுகளின் இளவரசன்” என காந்தியால் அழைக்கப்பட்ட காலனிய காலத்திய சட்டமான “தேச துரோகப் பிரிவு” மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது. ஜே.என்.யூ பல்கலையில் நடந்த ஒரு கூட்டத்தில் தேச விரோத முழக்கங்கள் எழுப்பியதாக 10 மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட இவ்வழக்கு இச்சட்டத்தை துடைத்தெறிவதற்கான விவாதத்தை மீண்டும் துவங்கியுள்ளது.

இவ்வழக்கில், டில்லி அரசாங்கத்திடம் அனுமதி பெறாமல், 1200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததற்காக நீதிமன்றம் டில்லி போலீசை கடிந்து கொண்டது. அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பின் தலைவர் ஆகாஷ் படேல், இதுகுறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில், சமூகச் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் உரிமைப் போராளிகள் மீது அடிக்கடி பாய்ச்சப்படும் இந்த ஒடுக்குமுறைச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர கிடைத்த வாய்ப்பை தவறவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 JNU மாணவர்களின் போராட்டம்.
டில்லியில் தேசத்துரோக சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட JNU மாணவர்களின் போராட்டம்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்படும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பெங்களூருவில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வை ஒட்டி அம்னெஸ்டி இண்டெர்னேசனல் அமைப்பின் மீதும் தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. சமீபத்தில் உள்ளூர் நீதிமன்றம் சட்டப்படி அவ்வழக்கை முடித்து விட்டாலும், அந்த அமைப்பு தேச விரோதமானதாகவும், குற்றப் பின்னணியுடையதாகவுமே கடந்த இரண்டு ஆண்டுகளாக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது, என்கிறார் ஆகாஷ் படேல்.

“காலனிய ஆதிக்கத்தின் மிச்ச சொச்சமாக இருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 124A பிரிவுக்கு, சட்டத்தின் ஆட்சியால் கண்காணிக்கப்படும் ஒரு சமூகத்தில் இடமில்லை. அளவுக்கதிகமாக விரிவாகவும், பொதுவானதாகவும் இப்பிரிவு இருப்பதால், மாற்றுக் கருத்துக்களையும் விவாதங்களையும் நெறிப்பதற்கு அரசு இதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறது. உடனடியாக ஒரு வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து வெளிப்பாடு இருக்கும் பட்சத்தில் மட்டுமே தேச துரோக வழக்கு போட முடியும் என நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக கூறிவந்தாலும், இப்பிரிவு தொடர்ச்சியாக விமர்சனக் கருத்துக்களைப் பேசுபவர்கள் மீதே தொடர்ச்சியாக பாய்ச்சப்படுகிறது” என்கிறார் படேல்.

தேச துரோக வழக்கு
ஹிரேன் கோஹைன், அகில் கோகாய் மற்றும் பத்திரிகையாளர் மஞ்சித் மஹந்தா

கடந்த 1962-ம் ஆண்டு கேதர்நாத் சிங் வழக்குத் தீர்ப்பில் தேச துரோக வழக்குக்கான முகாந்திரத்தைக் குறுக்கியுள்ளது. இந்த அரசைத் தூக்கி எறிய நடவடிக்கைகளை செய்து கொண்டே அதற்குத் தூண்டும் வகையில் பேசினால்தான் தேச துரோக வழக்கில் சிறையில் அடைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் போலீசு இதனை உதாசீனப்படுத்திவிட்டு, அரசுக்கு எதிராக கருத்துக்களைப் பேசும் அரசியல் எதிராளிகள் மற்றும் குடிமக்களுக்கு எதிராகவே இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது என்று வழக்கறிஞர்களும் செயற்பாட்டாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர். சமீபத்தில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை விமர்சித்ததற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற அசாமிய எழுத்தாளர் ஹிரேன் கோஹைன், க்ரிஷக் முக்தி, சங்கரம் சமீதியின் தலைவர் அகில் கோகாய், பத்திரிகையாளர் மஞ்சித் மஹந்தா ஆகியோரின் மீது தேச துரோக சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.

டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் விரிந்தா க்ரோவர், இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்கிறார். மேலும், “இந்தச் சட்டம் அடிக்கடி அமல் படுத்தப்படுகிறது. விசாரணை நீதிமன்றத்திலோ அல்லது உயர்நீதி மன்றத்திலோ நீதி விசாரணை நடக்கும் சமயத்தில், குறிவைக்கப்பட்ட நபர் அதிகமாக பாதிக்கபட்டிருப்பார். இச்சட்டம் ஒட்டு மொத்தமாக நீக்கப்படவேண்டும் அல்லது, கறாரான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

“மனித உரிமைச் சட்ட வலைப் பின்னல்” அமைப்பின் காலின் கான்சால்வேஸ் இதனை ஏற்றுக் கொள்கிறார். பிரிவு 377 விவகாரத்தில் செய்ததைப் போலவே, உச்சநீதிமன்றம் தேசவிரோத சட்டத்தின் சட்டரீதியான தன்மை குறித்து எந்த ஒரு குழப்பமும் இல்லாத வகையில் அதை அரசியல்சாசன விரோதமானது என அறிவிக்க வேண்டும். இதில் மறுவரையறை என்னும் பேச்சுக்கே இடமில்லை. உலகம் முழுவதிலும் இந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சசி தரூர், தேசத் துரோக சட்டத்தின் அம்சங்களை மறுவரையறை செய்யக் கோரி தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

விசாரணையின்றி நீண்டகாலம் சிறையிலடைக்க அனுமதிக்கும் ஊபா என்ற ஒரு சட்டம் இருக்கிறது. அது அரசியல் நர வேட்டைக்கு பயன்படுத்தப்படுவதற்காக பல உரிமைகள் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பைப் பெற்றது. கடந்த ஜனவரி 1, 2018 அன்று பீமா கொரேகான் கிராமத்தில் வன்முறைகளை தூண்டிவிட்டதாகவும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் கூறி சமூகச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் 9 பேர் புனே போலீசால் கைது செய்யப்பட்ட பின்னர், இந்த சட்டத்தின் கடுமையான வரைமுறைகள் பேசுபொருளாகின. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கல்வியாளர் ஆனந்த் தெல்தும்ப்டே, மும்பை உயர்நீதிமன்றத்திலிருந்து தற்காலிக பாதுகாப்பைப் பெற்றுள்ளார்.

ஊபா சட்டம்
கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள்

செயற்பாட்டாளர்களின் மீதான வழக்குகள் அனைத்தும் அரசியல் நோக்கங்கள் மற்றும் பழிவாங்கும் நோக்கத்திற்காகவே போடப்படுகின்றன என்கிறார், தெல்தும்ப்டே-யின் வழக்கறிஞர் மிஹிர் தேசாய். பியூசிஎல் அமைப்பின் மராட்டிய மாநிலத் தலைவராக இருக்கிறார் தேசாய். தேசவிரோத சட்டம் (124A), ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்கிறார் தேசாய். “இவ்வகையான கூடுதல் சட்டங்களுக்கு அவசியமில்லை. இந்திய தண்டனைச் சட்டங்களில் ஏற்கெனவே உள்ள குற்றவியல் சட்டங்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளப் போதுமானவை. ஊபா போன்ற சட்டங்களில் உள்ள அசாதாரணமான வரைமுறைகள், கருத்துச் சுதந்திரத்தை நெறிக்கவே பயன்படுகின்றன.” என்கிறார் தேசாய். மேலும், தடா, பொடா உள்ளிட்ட முந்தைய கருப்புச் சட்டங்களை நீக்கியது போல இச்சட்டங்களையும் பாராளுமன்றத்தால் நீக்க முடியும் என்கிறார்.

மராட்டியத்தில் செயல்படும் ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பு கமிட்டியைச் (CPDR) சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், இந்தச் சட்டங்கள் அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகின்றன என்கிறார். “அவர்களை எவ்வளவு அதிகமாக சிறையில் அடைக்க முடியுமோ அவ்வளவு காலமும் அவர்களை சிறையிலடைப்பதுதான் இச்சட்டங்களின் நோக்கம்” என்றார் பெயர் வெளியிடவிரும்பாத செயற்பாட்டாளர்.

AFSPA
இந்திய இராணுவ சட்டம் AFSPA க்கு எதிராக போராட்டம் நடத்திய மணிப்பூர் பெண்கள்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் யாவும் ”பதட்டமான பகுதி” என அரசால் கருதப்படுவதோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இம்மாநிலம் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் (AFSPA) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ”மனித உரிமைகள் எச்சரிக்கை” என்ற அமைப்பைச் சேர்ந்த பப்லூ லொய்டங்க்பாம், இந்திய மக்கள் தொகையில் வெறும் 0.4% மட்டுமே மணிப்பூர் பங்களிப்பு செய்கிறது. ஆனால் இந்தியா முழுவதும் ஊபா சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட கைதுகளில் 60% கைதுகள் மணிப்பூரில் நிகழ்ந்துள்ளன என்கிறார். “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், ஆயுதப் பிரிவுப் படையணியினரின் அடாவடிக்கு அரணாக உள்ளது. அரசு யாரையெல்லாம் தொல்லை கொடுப்பவர்களாகக் கருதுகிறதோ அவர்கள்தான் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்கிறார் அவர்.

மேலும், “ கொலை செய்யப் படுவதும், காணாமல் போவதும் அதிக எண்ணிக்கையில் நடப்பதற்கு உகந்த சூழலை இச்சட்டம் உருவாக்குகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட வகையிலும், மொத்தமாகவும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு, அனைவரையும் ஒன்றிணைப்பதன் மூலம் இதனை நாங்கள் எதிர்த்து வருகிறோம். மனநல நிபுணர்களின் உதவியுடன் அவர்களுக்காக பட்டறை முகாம்கள் நடத்தி வருகிறோம்.” என்றார்.

”தேசியப் பாதுகாப்பைக் காரணம்காட்டி உருவாக்கப்படும் மனப்பிரமையின்” காரணமாக பிரச்சினைக்குரிய பகுதிகளான காஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக லொய்டங்பாம் கூறுகிறார்.  சமீபத்தில், முகநூலில் பதிவிட்ட காரணத்தால் ஒரு மணிப்பூர் பத்திரிகையாளருக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டது. பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர் ஆசாத்-ன் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான வழக்கை நடத்தியவர் வழக்கறிஞர் ஸ்ரீஜி பவ்சர். எச்.ஆர்.எல்.என் என்ற அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீஜி பவ்சர் கூறுகையில், தேசத்திற்கு ஆபத்தானவர்கள் என நபர்களை முலாம் பூசுவதற்காகவே இத்தகைய சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சந்திர சேகர் ஆசாத்தின் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக ரத்து செய்தது உத்தரப்பிரதேச அரசு.

“பயங்கரவாத குற்றச்சாட்டோடு இதை இணைக்கும்போது பிணை பெறுவது மிகவும் சிரமமானது. அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே ஒருவருக்கு விசாரணை நீதிமன்றத்தில் பிணை கிடைக்கும். நபர்களின் மீது இந்தப் பிரிவைப் பாய்ச்சும் அரசின் குறிக்கோள், அவர்களைத் தண்டிப்பது அல்ல, மாறாக அவர்களை எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு சிறையில் அடைப்பதுதான்” என்கிறார் பவ்சர்.

  • கட்டுரையாளர் : பிரீதா நாயர்
    தமிழாக்கம் : நந்தன்
                  நன்றி  : Outlook

1 மறுமொழி

  1. ஆமாம் அப்ப தானே பாகிஸ்தான் சீனாவிற்கு ஆதரவாக இந்திய விரோத செயல்களை வெளிப்படையாக செய்ய முடியும், அப்ப தானே இந்தியாவிற்கு எதிரான வெறுப்பையும் வளர்க்க முடியும். இந்த மாதிரியான சட்டங்கள் இருந்தால் எப்படி communist கூட்டங்கள் செயல்பட முடியும்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க