தேசத்துரோக வழக்குகள் அதிகம் பதிவு செய்யும் மாநிலங்கள்: முதலிடத்தில் அசாம்!

மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் போராடுபவர்களை அர்பன் நக்சல்கள், திவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி தேசத் துரோக வழக்கில் கைது செய்து வருகிறது மத்திய, மாநில அரசுகள்.

0

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையின்படி, தேசத்துரோக குற்றச்சாட்டுகள் உட்பட ‘மாநிலத்திற்கு எதிரான குற்றங்கள்’ பிரிவின்கீழ் வழக்குகளை பதிவு செய்யும் மாநிலங்களின் பட்டியலில் அசாம் முதலிடத்தில் உள்ளது.

என்சிஆர்பி அறிக்கையின்படி, அசாம் 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 35 ‘அரசுக்கு எதிரான குற்றங்கள்’ வழக்குகளை பதிவு செய்துள்ளது. ‘மாநிலத்திற்கு எதிரான குற்றங்கள்’ பிரிவில், என்சிஆர்பி ஐந்து இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அவை 124A, 121, 121A, 122 மற்றும் 123. இந்த ஆண்டு 2022 மே மாதம், ஐபிசியின் 124ஏ பிரிவின் கீழ் தண்டனைச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த எட்டு ஆண்டுகளில் ஆறில் ஒரு பகுதி தேசத்துரோக வழக்குகள் அசாமில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் பதியப்பட்ட 69 தேசத்துரோக வழக்குகளில், 2021-ல் மூன்று, 2020-ல் 12, 2019-ல் 17 மற்றும் 2018-ல், 19, 2017-ல் 19, 2014-ல் ஒன்று, 2015 மற்றும் 2016-ல் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

படிக்க: காலனிய சட்டங்களுக்கு தடை – தேசத் துரோக சட்டங்கள் இனி நடைமுறை !

என்சிஆர்பி தரவுகளுக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் டெபப்ரதா சைகியா, எளிய குற்றங்களுக்காக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டதற்கு மாநிலத்தில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என்று கூறினார். “இதுபோன்ற வழக்குகளை பதிவு செய்வதில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை அசாம் அரசு பின்பற்றவில்லை. அசாமில் உள்ள பாஜக அரசு மாநிலத்தில் போலீஸ் ராஜ்ஜியத்தை கட்டவிழ்த்துவிட்டு மக்களை தேவையில்லாமல் துன்புறுத்தியுள்ளது” என்று கூறினார்.

ரைஜோர் தளத்தின் தலைவரும் எம்எல்ஏவுமான அகில் கோகோய், ‘அரசுக்கு எதிரான குற்றங்களுக்காக’ பதிவு செய்யப்படும் பெரும்பாலான வழக்குகள் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பொதுக் கருத்துகள் தொடர்பானவை” என்றார்.

கடந்த எட்டு ஆண்டு காலப்பகுதியில், நாடு முழுவதும் பதிவான மொத்த 475 வழக்குகளில் பாதிக்கும் மேல் – 250 வழக்குகள் ஆறு மாநிலங்களில் பதிவாகியுள்ளன. அசாமைத் தொடர்ந்து அரியானா (42), ஜார்கண்ட் (40), கர்நாடகா (38), ஆந்திரப் பிரதேசம் (32), ஜம்மு காஷ்மீர் (29) ஆகிய மாநிலங்கள் உள்ளன. மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் லட்சத்தீவுகளில் தலா ஒரு தேசத்துரோக வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசத்துரோக வழக்குகள் இரட்டை இலக்கத்தில் காணப்படுகின்றன – மணிப்பூர் (28), உத்தரப் பிரதேசம் (27), பீகார் (25), கேரளா (25), நாகாலாந்து (17), டெல்லி (13), இமாச்சலப் பிரதேசம் (12), ராஜஸ்தான் (12) மற்றும் மேற்கு வங்கம் (12).

மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் போராடுபவர்களை அர்பன் நக்சல்கள், திவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி தேசத் துரோக வழக்கில் கைது செய்து வருகிறது மத்திய, மாநில அரசுகள். தமிழகத்தில் தூத்துக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தேசத்துரோக வழக்கு, முகநூலில் அரசுக்கு எதிராக பதிவிட்டவர்கள் மீது தேசத்துரோக வழக்கு, எட்டுவழிச்சாலையை எதிர்த்தவர்கள் மீது தேசத்துரோக வழக்கும், ஓவியம் வரைந்தவர்கள் மீது தேசத்துரோக வழக்கு என கைதுகள், வழக்குகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

உழைக்கும் மக்களுக்காக போராடும் முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகள், புரட்சியாளர்கள் மீது தேசத்துரோக வழக்குகளை போட்டு ஒடுக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை ஓரணியில் திரண்டு வீழ்த்துவது மிகவும் அவசியம்.

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க