ராஜ துரோக சட்டத்தைப் (124-A) பயன்படுத்தி மோடி அரசு கைதுகளை மேற்கொள்ளும்போது, “யாரோ கைது செய்யப்படுகிறார்கள்” என்று வெறும் பார்வையாளனாகக் கடந்து  செல்கின்றவர்களுக்கு இதே சட்டங்களால் தான் இந்த நாட்டு மக்களின் தனிநபர் சுதந்திரம், உரிமைகள் ஆகியனவும்  பறிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை எடுத்துகாட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

150 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் காலனி நாடாக இருந்த இந்தியாவில் சுதந்திரத்திற்காகப் போராடிய மக்களை ஒடுக்கி அடக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் 1870-ல் கொண்டுவரப்பட்டதே இந்திய ராஜ துரோக சட்டம். பிரிட்டிஷ் ஆட்சி முடிவடைந்து 73 ஆண்டுகள் ஆனபிறகும் இன்றளவும் 124-A இந்தியன் தண்டனைச் சட்டத்தில் புனிதமானதாகப் பாதுகாக்கப்படுகிறது.

இதை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிரிட்டிஷ் அரசு 73-வது பிரிவு Coroners and Justice Act 2009-படி ராஜ துரோக செயல் மற்றும் பேச்சு  மற்றும் ராஜ துரோகமான அவதூறுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தனது சட்டத்தில் இருந்து நீக்கிவிட்டது. இது 12 ஜனவரி 2010 முதல் அமுலுக்கு வந்தது. ஆனால் செத்துப்போன சவமான இந்த சட்டத்தை சுதந்திரம் பெற்ற பிறகும் இந்தியா தூக்கிச் சுமக்கிறது.

படிக்க :
♦ சினிமா மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு !
♦ குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவப் போராளிகள் மீது பாயும் ஊபா (UAPA) சட்டம் !

ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாகவே எவற்றுக்கெல்லாம் உரிமை உண்டோ எந்தெந்த உரிமைகள் எல்லாம் பாதுகாப்புக்கு உரியனவோ அவற்றையே மனித உரிமைகள் என்று வரையறுக்கிறோம்.

மனிதப் பிறவி எடுத்ததினாலேயே ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாக உரித்தாகிற இந்த உரிமைகள் உருவாகவும் மாந்தர் அதை அனுபவித்து வருவதற்குமே கூடப் போராட்டங்கள் முக்கியமான காரணிகளாக இருந்தன. இப்போதும் இருந்து வருகின்றன.

124-A  ராஜ துரோக சட்டம் சொல்வது என்ன?

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124(A), ராஜ துரோகம் / தேச துரோகம் பற்றி தாராளமான மற்றும் விரிவான வார்த்தைகள் மூலம் விளக்குகிறது.  யாராக இருந்தாலும் பேச்சிலோ அல்லது எழுத்து வடிவிலோ அல்லது சைகை மூலமோ அல்லது வெளியில் தெரியக்கூடிய வகையில் பிரதிநிதித்துவம் அல்லது வேறு வகையில் வெளிப்படுத்துதல் அல்லது வெறுப்பு பேச்சுகள் அல்லது இழிவுப்படுத்தும் வகையில் வெளிப்படுத்த முயற்சிப்பது அல்லது தூண்டுதல் அல்லது சட்டத்தின்படி அமைக்கப்பட்டிருக்கும் அரசின் மீது விசுவாசமின்மையைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால் ஆயுள்தண்டனை வரை வழங்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களைப் பற்றி விளக்கும் அதே நேரத்தில் ‘sedition’ அதாவது ராஜ துரோகம் என்றால் என்ன என்பது பற்றி திட்டவட்டமான வரையறுப்பு எதனையும் தரவில்லை. (Pranjal Sharma)

அந்த 124-A சட்டப்பிரிவின் பொருளில் இருக்கும் தெளிவற்றத்தனம் அரசியல் செயற்பாட்டாளர்கள் மனித உரிமைப் போராளிகள் மற்றும் தங்களது அரசியல் சட்ட உரிமையைக் கோரும் தனிநபர்கள் மீது தவறான முறையில் பயன்படுத்தச் செய்கிறது.

1962-ல் கேதார்நாத்சிங் எதிர் பீகார் மாநிலம் என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு தான் 124-A பிரிவில் சில வரையறைகள் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை தருவதாக சட்ட வல்லுநர்கள் அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

2014 மோடி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து விமர்சிப்போர் எதிர்ப்பு தெரிவிப்போர் ஆகியோர் மீது 124-A வழக்குகள் வெள்ளமாகப் பாயத் தொடங்கியது. கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமான அளவுக்கு வருகின்ற குற்றபதிவு ராஜ துரோகம் தான். ஏதோ நாடே ராஜ துரோகத்தில் நிரம்பி இருப்பது போலவும் மற்றும் மக்கள் கிளர்ச்சி மனநிலையில் இருப்பதாகவும் அரசே தோற்றத்தை உருவாக்குகிறது. (ஏ.ஜி.நூரனி-ப்ரண்ட்லைன்)

இதன் மூலம் நிரந்தரமாக மக்கள் மனதில் அச்சத்தை நிலைநிறுத்தி மெத்தப் பணிவுடன் மோடி அரசைப் பின்பற்ற செய்வதே பிரதான நோக்கமாகும். சொந்த நாட்டு மக்களை வேவு பார்க்க காலனிய ஆட்சியின் சட்டத்தைத் தத்தெடுத்து அதைப் பயன்படுத்தி தனது இந்து ராஷ்டிரக் கனவோடு காவி – கார்ப்பரேட் பாசிசத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

காலனியாதிக்க மற்றும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தின் மிச்ச சொச்சமாக விளங்கிய இந்தச் சட்டத்தை உலகின் பல நாடுகளும் தூக்கியெறிந்துவிட்டன. பல நாடுகள் அவற்றைப் பயன்படுத்தவே தயங்குகின்றன.

ஆர்ட்டிகல்-14 இணையதளம் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பதியப்பட்டிருக்கும் 124-A ராஜ துரோக வழக்குகளைப் பகுப்பாய்வு செய்திருக்கிறது. (Article 14’s sedition database). அதிலிருந்து சில விவரங்களை தொகுத்துப் பார்ப்போம் :

ஒரு 11 வயதுச் சிறுமியின் தாயார் மீது ராஜ துரோகக் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காரணம் அந்தச் சிறுமி கர்நாடக மாநிலத்தில் பிதார் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த ஒரு நாடகத்தில் பங்கெடுத்ததுதான். அதேபோல இதே குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசினார் என்பதற்காக சர்ஜில் இமாம் என்ற ஜே.என்.யூ மாணவர் மீது ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்டது. அந்த சர்ஜில் இமாம் வாழ்க என்ற முழக்கமிட்டதற்காக சுமார் 50 மாணவர்கள் மீது ராஜ துரோக சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. (ஹர்ஷவர்தன் ; நேசனல் ஹெரால்டு)

2010-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை சுமார் 11,000 தனிநபர்கள் மீது 816 ராஜ துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் 65 சதவிதத்திறகு மேலான வழக்குகள் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு போடப்பட்டவை. இந்த ராஜ துரோக பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் எதிர்கட்சி அரசியல்வாதிகள், மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் 405 இந்தியர்கள் மீது அரசியல்வாதிகளையும் அரசையும் குறைச் கூறியதற்காக ராஜ துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளன. 2014-க்கு பிறகு 149 பேர் மீது மோடியை விமர்சனம் செய்தது, மோடியை சிறுமைபடுத்தும் விதமாக குறிப்புகள் எழுதியது ஆகியவற்றுக்காகவும், 144 நபர்கள் மீது யோகி ஆதித்யநாத்தை விமர்சித்ததற்காகவும் போடப்பட்டுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் 3,754 பேர் மீது 22 முதல் 25 ராஜ துரோக வழக்குகள் போடப்பட்டன. உ.பி-யில் 2010-ம் ஆண்டிலிருந்து போடப்பட்ட 115 வழக்குகளில் 77 சதவீத வழக்குகள் யோகி ஆதித்யநாத் முதலமைச்சரான பிறகு போடப்பட்டவை. இதில் பாதிக்கு மேலான வழக்குகள் தேசியவாதத்தை சுற்றிய பிரச்சனைகளை ஒட்டியது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தவர்கள் மீது “இந்தியா ஒழிக” என்று கோஷமிட்டதாக வழக்கு, புல்வாமா தாக்குதலைக் கொண்டாடியதாக வழக்கு, 2017-ல் கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதைக் கொண்டாடியதாக வழக்கு போடப்பட்டுள்ளது.

புல்வாமா-வில் மனித வெடிகுண்டு மூலம் 40 ராணுவத்தினர் கொல்லப்பட்டதை அடுத்து 44 சாதாரண இந்திய மக்கள் மீது ராஜ துரோக வழக்கு பாய்ந்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதாகவும் சமூக வலைத்தளங்களில் இந்தியாவுக்கு எதிரானச் செய்திகளைப் பதிவு செய்ததாகவும் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன.

உ.பி-யில் ஹத்ராஸில் ஒரு 19 வயது தலித் பெண்ணைக் கொடூரமாகக் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கற்பழித்து கொலைச் செய்யப்பட்ட நிகழ்வுக்கு நீதிகேட்டு நடத்தப்பட்டப் போராட்டங்கள் அதைத் தொடர்ந்து போலீசு மூலம் அந்த பெண்ணின் பிணத்தைப் பெற்றவர்களின் ஒப்புதலின்றி அர்த்த ராத்திரியில் எரித்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியவர்கள் 18 அடையாளம் தெரியாதவர்கள் மற்றும் அடையாளம் தெரிந்த 5 பேர் ஆகியோர் மீது  22 ராஜ துரோக வழக்குகள் பாய்ந்தன.

தங்களது நிலம் வாழ்க்கை கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கப் போராடிய 3000 பழங்குடியினர் மீது இதே பிரிவில் வழக்குப் பதியப்பட்டது.

மேலே உள்ள பகுப்பாய்வின் விவரங்களிலிருந்து தெரிய வருவதென்ன?

124-A ராஜ துரோக பிரிவு பயன்படுத்தப்பட்டதைப் பற்றி  ஆராயும்போது மோடி அரசின் சட்டங்களை எதிர்த்துக் கருத்து சொல்வது, போராட்டம் நடத்துவது என்று நிராயுதபாணியாக மக்கள் செய்வது எல்லாவற்றையும் 124-A ராஜ துரோக பிரிவு அல்லது ஊபா UAPA-வுக்குள் குற்றமாக்குகிறது.  “போஸ்டர் வைத்திருத்தல் சமூக வலைத்தளங்களில் போடப்படும் பதிவுகள் முழக்கங்களை எழுப்புதல் மற்றும் தனிப்பட்ட செய்தி தொடர்புகள்” போன்ற ‘தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய சாதாரண முறைகளையும் கூட ‘ராஜ துரோகக்’ குற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது மோடி அரசு.

மோடி ஆட்சியில் இந்த பிரிவு வழக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தனி நபர்களைக் குறிவைத்துப் பதியப்படுவதாகத் தெரிகிறது. ஏதாவது ஒரு இயக்கத்தை பிரதிநிதித்துவபடுத்தும் சில தனிநபர்கள் மீதே கவனம் முழுதும் செல்கிறது. மிகப்பெரிய இயக்கங்கள் நடந்து முடிந்த பிறகும் தொடர்புடையவர்கள் தொடர்பில்லாதவர்கள் என தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடக் கூடிய சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் எதையாவது தொடர்புப்படுத்தி இந்த பிரிவு வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் பீமா கொரேகன் – தலித் மக்களின் விழாவில் திட்டமிட்டு தலித் மக்களைத் தாக்கி வன்முறையைத் தூண்டி விட்டனர் என்று இரண்டு இந்துத்வா தலைவர்கள் சாம்பாஜி பிடே மற்றும் மிலிந்த் ஏக்போடே ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது. ஆனால் அவர்கள் மேல் நடவடிக்கை எதுவும் இல்லை. ஆனால் அதே சமயம் சுரேந்திரா காட்லிங்க், சுதிர் தவாலே, ரோனா வில்சன், ஷோமாசென், மகேஸ் ராட், ஆகியோரும் அக்டோபர் 2018-ம் ஆண்டில் வரவர ராவ், சுதா பரத்வாஜ், அருண்பெரிரா, கௌதம் நவல்கா மற்றும் வெர்னான் கான்சால்வேஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எழுத்தாளர்கள், கவிஞர், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள். இவர்கள் அனைவருக்குள்ளும் இருக்கும் ஒற்றுமை மோடி அரசைக் கடுமையாக விமர்சிப்பதுதான். இன்று வரை சிறையிலிருக்கும் இவர்களுக்கு ‘விசாரணை நடைபெறுகிறது’ என்ற அரசு தரப்பின் ஒற்றை வார்த்தையை ஏற்றுக் கொண்டு பிணை தர மறுக்கின்றன நீதிமன்றங்கள்.

அரசை கேள்வி கேட்பது தேச துரோகமாகி விடுமா?

UAPA – ஊபா இப்போது அமுலில் இருக்கும் போது 124-A பிரிவு தொடர்ந்து இருப்பது தேவை தானா? என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில் UAPA – ஊபாவும் அரசுக்கு எதிரான குற்றங்களை அதே மொழியில்தான் பதிவு செய்கிறது.

நாட்டையும் அரசையும் இரு கூறுகளாக வேறுபடுத்தி பார்ப்பதில்தான் இதற்கான பதில் இருக்கிறது.

படிக்க :
♦ ஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு !
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா ?

124-A பிரிவு அரசுக்கு எதிரான விமர்சனங்களை அதன் செயல்பாட்டுக்கு எதிரான போராட்டங்களைக் குற்றமாக்குகிறது. ஆனால் மக்கள் மனதில் ‘ராஜ துரோகம்’ என்பது ‘தேசத்திற்கு எதிரான’ அல்லது ‘தேச துரோகி’ என்று மாற்றி மொழியாக்கம் செய்யப்பட்டு பதிய வைக்கப்படுகிறது. இதன் உண்மையான அர்த்தம் “அரசுக்கு எதிராக” என்பதுதான். இந்த மொழியாக்கம் இந்திய மக்களிடையே ஒரு உணர்வுப் பூர்வமான இடத்தை குறிவைத்து தாக்குவதால் அரசுக்கு எதிர்ப்புகளையும் எதிர்த்து குரல் கொடுப்பவர்களையும் சட்ட விரோதமாக நடத்துவது எளிமையாக இருக்கிறது. அதனால்தான் 2019-ம் ஆண்டில் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராஜ துரோக சட்டத்தை இன்னும் கடினமாக்கி தேச விரோத நடவடிக்கைகளை கட்டுபடுத்துவோம்’ என்று சொன்னபோது கூட்டம் கூச்சலிட்டு ஆரவாரித்தது. (ஹர்ஷவர்தன் : நேசனல் ஹெரால்டு)

ராஜ துரோக சட்டம் அரிதாகவே விசாரணைகளுக்கு இட்டுச் செல்கிறது. தண்டனைகளை விட்டு விடுங்கள், குறிப்பாக, கைதுகள் பற்றி பொது மக்களிடையே உருவாக்கப்படும் பொது கருத்துகள்தான் முக்கியமாகிறது. காலனிய ஆட்சியில் ராஜ துரோகக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ‘தேசிய வாதம்’ ஒரு தற்காப்பாக செயல்பட்ட அதேவேளையில் சமகால இந்தியாவில் அதே ‘தேசிய வாதம்’ தனி மனிதர்களைத் தேசத் துரோக குற்றம் சாட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாட்டின் இந்த வேண்டுதல் இந்த வழக்குகளில் ஒரு தார்மீக அம்சத்தை சேர்க்கிறது, மற்றும் ஒரு விசாரணை இல்லாமல் தீர்ப்பு வழங்க வழிவகுக்கிறது. சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்தும் சமூகத்தின் பிற உறுப்பினர்கள் ஆகியோரை குறிப்பிட ‘தேச விரோதிகள்’ என்ற சொற்கள் படிப்படியாக பொதுவானதாக மாறிவிடுகின்றன. ராஜ துரோக சட்டம் இதில் ஒரு தீர்மானகரமானப் பங்கை ஆற்றுகிறது.

மோடியின் அரசுக்கேற்றவாறு பொது கருத்தை ஒழுங்கமைக்கும் பணியை செய்யும் கருவிதான் ராஜ துரோக சட்டம் :

ஒவ்வொரு குடிமகனும் விசாலாமான பரந்த சுதந்திரத்திற்கு உத்திரவாதம் பெற்றிருக்கும் உயர்வான சுதந்திர குடியரசில் அரசு என்பது வரையறுக்கப்பட்ட பிரிவுகள் மூலமே தனது குடிமக்களைக் கட்டுபடுத்த முடியும். பேச்சு மற்றும் ஊடக சுதந்திரத்திற்கானச் சட்டப் பிரிவுகள் தணிக்கைத் துறையை கட்டுப்படுத்துகின்றன. கண்காணிப்பு என்பது அந்தரங்க உரிமையால் (Right to privacy) வரையறுக்கப்பட்டுள்ளது.

பன்முகத்தன்மையுள்ள இந்தியாவில் கொள்கையளவில் குடியரசின் பாத்திரம் என்பது தனிப்பட்ட விருப்பம் உள்ள கும்பல்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசும் அதன் நிறுவனங்களும் தம்மளவில் குறைந்த அளவே அதிகாரத்தை வைத்திருப்பவை. இன்றைய இந்தியாவை பாதிக்கக் கூடிய உண்மையான நிலை இதுவல்ல.

சமகால அரசு என்பது “சர்வ அதிகாரம் படைத்த கடவுள் போல” இருப்பதை நமது ‘விரிவான அரசியல் சட்ட அமைப்புகள்’ மௌனமான பார்வையாளனாக இருப்பதுதான். இதற்கு விளக்கம் என்பது “அரசு நிறுவனங்கள் மற்றும் சட்டங்கள் ஆகியவற்றை அனுபவரீதியாக உணராமல் அதன் அறிக்கைகள் மற்றும் அச்சில் இருக்கும் சட்ட நூல்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் மட்டுமே அரசு எனபதைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானது” என்ற உணமையில் அடங்கியுள்ளது. அதற்குப் பதிலாக இந்தியாவின் ராஜ துரோக சட்டப் பிரிவை ஆராய்ந்து பார்த்தால் அரசு எவ்வாறு இந்த ஜனநாயக நாட்டின் ‘ஆக உயர்ந்த இறுதியான அரசியல் கருவியை’ கட்டுபடுத்தி வைப்பதன் மூலம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்த முடியும். அதன் பெயர்தான் “பொதுk கருத்து”.

காலனிய அரசு எந்த சட்டத்தைக் கொண்டு அன்று மக்களுக்காக போராடியவர்களை சிறையில் தள்ளி வாட்டியதோ அதே காலனியச் சட்டத்தைக் கொண்டு மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களை ஓடுக்குகிறது மோடி அரசு. ஒரு சுதந்திர ஜனநாயகக் குடியரசு நாட்டில் காலனிய ஒடுக்குமுறைச் சட்டத்துக்கு என்ன தேவை இருக்கிறது?

1950-களில் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் இந்த சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என்றே குறிப்பிட்டுள்ளதை பார்க்கலாம். அதன் ஒருபடியாகவே 1962-ம் ஆண்டில் கேதார்நாத்சிங் எதிர் பீகார் மாநிலம் என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு அமைகிறது. சட்டத்தின் படி அமைந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை என்பதும் அரசின் செயல்பாடுகள் அல்லது நடவடிக்கைகள் மீது அல்லது அதன் நிறுவனங்கள் மீது மக்களின் வாழ்நிலையை உயர்த்தும் நோக்கத்தோடு அரசின் செயல்பாடுகளை நீக்கச் செய்வது அல்லது மாறுதல் செய்ய தூண்டுவது அல்லது சட்டப்படியான நடவடிக்கைகளை கையாள்வது என்பதற்காகக் கடுமையான மொழிகளில் கருத்துக்களை சொல்வது எல்லாம் ஒன்றாகப் பார்க்க முடியாது. அரசைத் தூக்கியெறிவதற்கான நோக்கத்தோடு செயலில் ஈடுபட்டால் குற்றம். அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது குற்றமல்ல. அரசுக்கு எதிராகத் திட்டமிட்டு வன்முறையைத் தூண்டினால் குற்றம்.

சொல்லப்படும் கருத்துக்களால் வன்முறை ஏற்படாது என்றால் அது குற்றமில்லை. எவரொருவரின் பேச்சால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உறுதி செய்தால் மட்டுமே கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்கு நிபந்தனைகளும் தடைகளும் ஏற்புடையதாகும். இந்த தீர்ப்பின் வரையறைகளும் வழிகாட்டுதல்களும் நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களால் மதிக்கப்பட்டதே இல்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக இந்த நாட்டில் பதியப்பட்டிருக்கும் இந்த பிரிவின் கீழான வழக்குகள் இதற்கு உதாரணங்களாக இருக்கின்றன.

124-A ராஜ துரோக சட்டம் இன்னமும் நீடித்திருப்பது. இன்றைய  அரசின் நிர்வாக எந்திரங்களைப் பயன்படுத்திக் கொண்டு காலனியாட்சியே நீடிக்கிறதோ என்று மக்கள் மனதில் கேள்விகள் எழுவதோ அதை எதிர்த்து கருத்துகள் தெரிவிப்பதோ தேசத்துரோக குற்றமாகுமா?

இந்த வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு வருவது என்பதே மிக அரிதாக இருக்கிறது என்பதற்கு உதாரணம், 2014 முதல் 2016 வரை 179 பேர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தாலும் 2 பேர் மட்டுமே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

சமகாலத்திய இந்தப் பிரிவு வழக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்களைக் குறிவைத்துப் பதியப்படுவதாகத் தெரிகிறது. ஏதாவது ஒரு இயக்கத்தை பிரதிநிதித்தவபடுத்தும் சில தனிநபர்கள் மீதே கவனம் முழுதும் செல்கிறது. 2016-ஆம் ஆண்டில் ஜே.என்.யூ மாணவர் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய கன்னையாகுமார் கைது செய்யப்பட்டது ஒரு சிறந்த உதாரணம். அவரின் குறிப்பிட்ட செயல்பாடுகள் நாட்டின் உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மிக தந்திரத்தோடு அவர்கள் மீது வழக்கு பின்னப்படுகிறது.

ராஜ துரோக சட்டமும் மற்றும் தேசிய வாதத்தைச் சுற்றி இது உருவாக்கும் கருத்துருவாக்கமும் நேரடியாக மனித உரிமைகள் பற்றிய மொழியியல் மற்றும் இந்த நாட்டின் குடியுரிமைக்கும் எதிராக ஆபத்தானதாகிறது. பிணை கோரும் மனுக்களும் பத்திரிக்கைக் கட்டுரைகளும் ராஜ துரோக சட்டம் ‘சுதந்திரமாக இருத்தல் மற்றும் வெளிப்படுத்தும் உரிமைகளை’ அப்பட்டமாக மீறுகிறது என்று விளக்குகின்றன. ராஜ துரோக சட்டம் அடிக்கடி மனித உரிமை ஆர்வலர்களை குறிவைப்பதை பார்க்க முடிகிறது.

பினாயக்சென் சட்டிஸ்கர் அரசு 2011 வழக்கில் தொடங்கி நக்சலைட் இயக்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தி பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். உபேந்திரா நாயக் என்பவர் ஒடிசா ஆதிவாசி மக்களுக்கு எதிராக மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகப் பின்னப்பட்ட பொய் வழக்குகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பவரை 2018-ஆம் ஆண்டில் இதே குற்றத்தை சுமத்தி ராஜ துரோக சட்டத்தின் கீழ் கைது செய்தது. நக்சலைட் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பதையே – வன்முறை இயக்கங்களில் பங்கெடுக்கவில்லை என்றாலும் – குற்றம் சுமத்தி ராஜ துரோக சட்டம் பாய்ச்சப்படுகிறது. தத்துவார்த்த ரீதியாக ஒத்துப்போனால் கூட அவர்களால் நாட்டுக்கு ஆபத்து என்று குற்றம் சாட்டப்படுகிறது. பினாயக்சென் வழக்கில் அவர் நக்சல் இலக்கியங்களை வைத்திருந்தார் என்பதே ராஜ துரோக வழக்குக்கானக் குற்றச்சாட்டாக இருந்தது.

சிந்திப்பதையே குற்றமாக்கிய மோடி அரசு :

குடிமகன் மற்றும் நாடு ஆகியவற்றிற்கிடையே இருக் கூறாகப் பிரித்துப் பார்க்கும் போது குடிமகனின் உரிமைகள் நாட்டின் கௌரவத்தையும் நேர்மையையும் சமரசபடுத்தி விடும் என்றக் கருத்தை சுட்டிக் காட்டுவதால் இது மிக முக்கியமானது. இந்திய ராஜ துரோக சட்டம் பயங்கரவாதத்தின் வன்முறைச் செயல்கள் அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் மட்டுமல்ல இதில், ‘அரசின் மீதான அதிருப்தி தூண்டப்படுவது சாட்சியமாக சக குடிமக்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் அமைந்துள்ளதால் இது முதன்மையாக “சிந்தனை – குற்றங்கள்” சட்டமாகிறது என்பதுதான் உண்மை. ஏனெனில் இந்த ராஜ துரோக சட்டம் ஒரு உரையின் உள்ளடக்கத்தை மட்டும் அல்ல, மாறாக அது மற்ற குடிமக்களின் சிந்தனைகளைத் தூண்டக் கூடிய வகையில்  பொதுவெளியில் வெளிப்படுத்தப்படுவதால் குறிவைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

கன்னையா குமார், அசீம் திரிவேதி, உபேந்திர நாயக் மற்றும் பலர் மீது போடப்பட்ட ராஜ துரோக வழக்குகள் எல்லாம் இயல்பில் ஒன்றுதான். அதாவது, நாட்டை பற்றி ஒரு தோற்றத்தை மக்கள் சிந்தனையில் திணித்தார்கள் என்பதுதான். இதில் “நாட்டின் அடையாளம் அல்லது கட்டுமானம் ஆகியவற்றை குறிப்பிடுவதும் ; அரசின் போக்குகளை எதிர்க்கும் பெரிய இயக்கங்களின் ஒரு பகுதியாக இருப்பது எல்லா தனிநபருக்கும் பெரிய சமூக அரசியல் பொருளடக்கத்தை அரசு கற்பிக்கிறது. என்பதும் நாட்டு குடிமக்களுக்கல்ல நாட்டுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கே நீதி உரைகள் என்பதும்  ராஜதுரோகம் மற்றும் நாடு இவற்றின் இயல்பை சுற்றி உருவாக்கப்படும் பிரபலமான கருத்துருவாக்கங்கள்; தனிநபர் மொழி மற்றும் மனித உரிமைகளுக்கு சவாலாக இருக்கும் ராஜ துரோக சட்டம்” என்பதும் அடங்கியுள்ளது. தெளிவாக இல்லையென்றாலும் இந்த குற்றச்சாட்டுகள் மூலமாக வாழுகின்ற மனிதர்களை விட ஒன்றுப்பட்ட நாடு அதன் நலன்கள் மேலானது என்ற கற்பனையான கருத்துருவாக்கத்தை உருவாக்குவது தெளிவாக தெரிகிறது

பறிக்கப்படுகின்றன தனிநபர் சுதந்திரம்:

ஏற்கனவே ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை கண்காணிப்பதற்கான ஒரு கருவியாக இந்த சட்டம் மோடி அரசால் புத்துருவாக்கம் செய்யபட்டிருக்கிறது.இங்கு கண்காணிப்புக்குள்ளாக்கப்படும் இலக்கு   என்பது வெறும் குறிப்பிட்;ட இயக்கங்களோ அல்லது பேச்சுகளுக்களோ அல்ல.மாறாக அலெக்சீஸ் டி டொக்யுவில்லி குறிப்பிட்டதை போல ஒரு ஜனநாயகத்தின் மிக ஆபத்தான கருவியான “எல்லாம்வல்ல சக்திவாய்ந்த ஆயுதமான பொதுமக்களின் கருத்துகள்தான்.”

எவ்வித எதிர்ப்புகளையும் தாங்கிகொள்ள முடியாத அதி உயர் உணர்ச்சிவசப்படக்கூடிய அரசின் கருவியாக இந்த ராஜ துரோக சட்டத்தை பார்ப்பதைவிட இந்த நாட்டு மக்களின் சிந்தனையிலேயே அரசுக்கு மிக பணிவான தன்மையை தேசிய கருத்துருவாக்கத்தின் மூலம் கட்டியமைக்கக் கூடிய ஒரு கருவியாகத்தான் பார்க்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படுத்தக் கூடிய மிக முக்கியமான பிரச்சனைகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டிய இந்தச் சட்டத்தை திரும்ப திரும்ப பயன்படுத்தும் விதம் இது  சாதாரண பேச்சுக்களையும் மற்றும் உணர்வுகளை வெளிபடுத்தும் தன்மையையும் கட்டுப்படுத்த தீவிரம் காட்டுவதாகவே எடுத்தக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பாஜக அரசின் தேசியம் பற்றிய கொள்கை பன்முகத்தன்மை உள்ள இந்திய மக்களிடம் எடுபடவில்லை என்பதால் இந்நாட்டின் மக்களை தங்களது சுதந்திரங்களை தாங்களே கட்டுபடுத்திக் கொள்ளும் வகையில் இந்த நாட்டைப் பற்றியப் போலியானக் கருத்துக்களை  உருவாக்குவதற்கானக் கருவியாகத்தான் இந்த ராஜ துரோகம், ஊபா போன்ற சட்டங்கள் பாஜக அரசின் கைகளில் செயல்படுகின்றன.

சமூக ஊடகங்கள் இந்தக் கைதுகளை நியாயப்படுத்துவதிலும் மற்றும் செயற்பாட்டாளர்களை “அர்பன் நக்சல்கள்” என்று அடையாளப்படுத்தி அவதூறுகளைப் பரப்புவதில் முக்கியக் கருவியாக மாறியிருக்கிறது. ராஜ துரோக சட்டத்திற்கான நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் சட்டப்பூர்வ சாட்சியங்கள் அவசியமில்லாத ஒன்றாக மாறிவிட்டன. சமூக ஊடகங்கள் இந்த அரசின் செயல்பாட்டிற்கேற்றவாறுக் கருத்துக்களை பொதுமக்களின் சிந்தனைகளில்  வடிவமைப்பதில் அரசின் மேடையாகவே வேலை செய்கிறது. இந்த நாட்டு மக்களின் தனிப்பட்ட உரிமைகளை – சுதந்திரங்களைக் கண்காணிக்கவும், எதிர்ப்பை – கருத்து வேறுபாட்டைக் கட்டுப்படுத்தவும், இந்த ராஜ துரோக சட்டம் அவர்களுக்கு ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அரசுக்குப் பயன்படுகிறது.

மக்களுக்கு அச்ச உணர்வை தூண்டும் எச்சரிக்கைகளே ராஜ துரோக சட்டங்கள் :

நாட்டையும் அதிலிருக்கும் மக்களையும் வெவ்வேறு கூறுகளாகப் பிரித்து பார்க்கும் போதுதான் மக்களாட்சியில் அரசு முழுஅதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு வரம்புக்குட்பட்ட வழிகளைக் கொண்டிருக்கும் ஜனநாயக இந்தியாவில் குடிமகன்களின் தனிப்பட்ட சுதந்திரமே ஒரு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது என்பது தெளிவாகும். ராஜ துரோக சட்டம் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளை எதிர் கொள்ள வடிவமைக்கப்பட்ட சட்டங்கள், அதற்கு பதிலாக அரச அதிகாரத்தைச் சுற்றி ஒரு விவரிப்பை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ராஜ துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் தனிநபர்களின் வன்முறை அல்லாத அல்லது நேரடியாக சேதத்தை உருவாக்காத செயல்பாடுகள் கூட ராஜ துரோகமாகக் கருதப்பட்டு அரசின் நடவடிக்கைக்கு உள்ளாகும் என்பதை நாட்டின் குடிமக்களுக்குக் காட்டுவதற்கான எச்சரிக்கைளாகப் பயன்படுத்தப்படுகிறது.

தேசியம் என்ற இந்த விவரிப்புகளை, குடிமக்களின் உரிமைகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது என்று புரிந்துக் கொள்வதன் மூலம், நாட்டில் எழுச்சி பெற்றுவரும் கருத்தேயில்லாத எல்லோரையும் கவரும் வண்ணம் பேசப்பட்டு வரும் தேசியவாதம்  இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதை புரிந்துக் கொள்வது முக்கியமாகும். கருத்து வேறுபாட்டின் வெளிப்பாடுகள் ஜனநாயக உரிமைகளின் ஒரு பயிற்சியாக இனி புரிந்துக் கொள்ளப்படவில்லை, மாறாக அவை நாட்டிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன. மக்களை “நகர்ப்புற நக்சல்கள்” அல்லது “தேச விரோத” என்று முத்திரையிடுவது, மற்றும் அவர்கள் கண்ணுக்குப் புலப்படாத நக்சல் – அறிவுஜீவிகள் – ஊடகம் – அகாடமி – என்.ஜி.ஓ – ஆர்வலர் ஆகியோருடன் தொடர்பு கொண்டவர்கள் என்றக் கருத்தைப் பரப்புவது, நாட்டை அச்சுறுத்துவதன் மூலம் மற்ற மக்களை அமைதியாக்க செய்யும் ஒரு கருவியாகும்.

படிக்க :
♦ மோடி – ஆதித்யநாத் பற்றி பேசிய 293 பேர் மீது தேச துரோக வழக்கு !
♦ CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !

இந்தியாவில் தேச விரோதக் குடிமக்கள் என்ற கருத்து முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், தேசியம் என்பது பல்வேறு வகையான எதிர்ப்புகளை வெறும் சட்டத்தினால் அல்ல பொது மக்களின் கருத்து வலிமையினால் முடக்கப் பயன்படுவது குறித்து ஆய்வுகள் செய்து பொது வெளியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது அவசிய அவசர தேவையாகும்.

பயத்திலிருந்து விடுதலை என்பது சர்வதேச மனித உரிமையாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலகில், குடிமக்களின் முதுகெலும்பைக் கீழே இறக்கி வைக்க முயலும் தேசத் துரோகம் போன்ற ஒரு சட்டத்தின் தேவையை கேள்வி கேட்க வேண்டும். அதற்கான போராட்டங்களை அனைத்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து முன்னெடுப்பது புரட்சியாளர்களின் கடமையாகும்.


தமிழாக்கம் மற்றும் கட்டுரையாக்கம் : மணிவேல்

உதவிய கட்டுரைகள் :

  • Long Read : The art of dissolving dissent: India’s sedition law as an instrument to regulate public opinion. – ஆயிசா பட்நாய்க். South Asia @ LSEblog, the London School of Economics.
  • Article 14’s sedition database – KUNAL PUROHIT.
  • NATIONAL HERALD சித்ரன்சுல் சின்கா எழுதியிருக்கும் The Great Repression: The Story of Sedition in India என்ற நூலின் அறிமுகம் – Harshvardhan

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க