மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிலிருந்ததாக கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என். சாய்பாபா உட்பட ஆறு பேரை  கடந்த வெள்ளிக்கிழமை 14-ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால் அதற்கு மறுநாளே (அக்டோபர் 15)  உச்ச நீதிமன்றம் அவர்களின் விடுதலையை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

சாய்பாபாவின் மேல் முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையைச் சேர்ந்த நீதிபதிகள் ரோஹித் தியோ மற்றும் அனில் பன்சாரே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. ‘தேசபாதுகாப்பிற்கு ஆபத்து என்ற பலிபீடத்தில் சட்டத்தின் சரியான செயல்முறைகளை பலியிட முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பாதுகாப்பும், எவ்வளவு சிறிதாக இருப்பினும் அது கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்’ என கூறி உடனடியாக ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு பலரிடத்தில் வரவேற்பைப் பெற்று வந்தது, குறிப்பாக சாய்பாபாவின் மனைவி ‘இது ஒரு நீண்ட இழுபறியான போராட்டம்; ஆனால் இறுதியாக நீதி கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று  கூறினார். வழக்கறிஞர் ரத்தோட் என்பவர், “இது ஒரு வரலாற்று தீர்ப்பு மற்றும் இதேபோன்று துன்பங்களை அனுபவித்து வரும் பல நபர்களுக்கு இது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார். ஆனால் இவர்களின் மகிழிச்சி ஒரு நாள் கூட முழுமையாக நீடிக்கவில்லை.

மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சில மணி நேரங்களில் மகராஷ்டிர மாநில அரசு ஆறு பேரின் விடுதலை உத்தரவை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது நியாயமற்றது, இதனை உடனே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டது.


படிக்க: முன்னால் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது!


உச்ச நீதிமன்றமும்  இதை  ஏற்று விடுமுறை நாளான சனிக்கிழமையன்று விசாரணையை மேற்கொண்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர் ஷா மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. இரண்டு மணிநேரம் நடந்த விசாரணையில் ‘மும்பை உயர்நீதிமன்றம் குற்றத்தின் தீவிரத்தை புரிந்துக் கொள்ளமால், தகுதிகளை பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளது’ என கூறி விடுதலையை ரத்து செய்தது.

குறைந்தபட்சம் போலியோவால் பாதிக்கப்பட்டு 90 சதவிதம் உடல் செயலிழந்துள்ள சாய்பாபாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இதை எதிர்த்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா என்பவர், ‘இப்போதெல்லாம், நகர்ப்புற நக்சல்கள் வீட்டுக் காவல் கேட்கும் போக்கு அதிகமாகியுள்ளது. தற்போது அவர்கள் எல்லாவற்றையும் தொலைபேசியின் மூலம்  வீட்டிலிருந்தே செய்யலாம். அதனால் வீட்டுக் காவல் ஒரு தேர்வாக இருக்க முடியாது’ என வாதிட்டார்.

இதனை ஏற்ற அமர்வு ‘நாங்கள் இந்த வழக்கிற்காக சொல்லவில்லை; பொதுவாக மூளை மிகவும் ஆபத்தான விஷயம். பயங்கரவாதிகள் அல்லது மாவோயிஸ்டுகளுக்கு, மூளைதான் எல்லாமே’ என்று கூறி மனதாபிமானமற்ற முறையில் வீட்டுக் காவல் கோரிக்கையை நிராகரித்தது.

அரசுக்கட்டமைப்பு முழுவதும் எப்படி பாசிசமயமாகியுள்ளது என்பதை  சாய்பாபாவின் விடுதலையை ரத்து செய்ததிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.


படிக்க: சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !


எட்டு ஆண்டுகளாக சித்திரவதையை அனுபவித்து வருகிறார்கள்!

2017-ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிலிருந்ததாக கூறி சாய்பாபா, மகேஷ் திர்கி, ஹெம் கேஸ்வதத்தா மிஸ்ரா, பிரசாந்த் ராஹி , விஜய் நன் திர்கி, பாண்டு போரோ நரோட் ஆகியோருக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA)-கீழ் மகாராஷ்டிரா நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. இதில் தண்டனை அனுபவித்து வந்த பாண்டு போரோ நரோட் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால், உடல்நிலை மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

2020-ஆம் ஆண்டிலிருந்து சாய்பாபாவின் உடல் நிலையும் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அவருக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதில்லை. அவர் விண்ணபித்த மருத்துவ ஜாமீன் மனுவையும் மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மரணத்தின் மூலம் மட்டுமே அவரால் சிறையில் இருந்து விடுபட முடியும், மற்றபடி ஒரு நாள் கூட அவர் வெளியில் இருப்பதை இந்த பாசிச அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சாய்பாபா மட்டுமல்ல மோடி அரசை எதிர்த்து சிறுபான்மையினருக்கு ஆதரவாக போராடும் அறிவுத்துறையினரின் நிலை இதுவாக தான் உள்ளது. இதற்காகவே தான் உபா என்ற கருப்பு சட்டம் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் மீது பொய்யாக குற்றம்சாட்டி சிறையில் அடைத்து, பிணை கொடுக்கமால், அவர்கள் முழுமையாக மனம் நொந்து செயலிழந்து போகும் வரை சித்தரவதை செய்கிறது.

இப்படி தான் பீமா கோரேகான் வழக்கில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்களை மோடி அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதில் கைது செய்யப்பட்ட 84 வயதான ஸ்டான் சுவாமிக்கு மருத்துவ சிகிச்சையும் கொடுக்காமல்  பிணையும் கொடுக்காமல் சிறையிலேயே கொன்றுவிட்டது.

சமீபத்தில் சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் (PUCL) அறிக்கை வெளியானது. அதில், நாடு முழுவதும் UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்களில் 97.2% பேர் குற்றமற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 2015 – 2020 காலகட்டத்தில் UAPA சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 8,371 பேரில் வெறும் 235 பேர் மீதான குற்றங்கள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளன. அதே போல மோடி அரசாங்கம்தான் 80 சதவிகிதம் அளவிற்கு இந்த சட்டத்தை பயன்படுத்தியிருக்கிறது. பாசிசிட்டுகளின் தாக்குதலை புரிந்துக்கொள்ள இந்த புள்ளி விவரமே போதுமானது.

பீமா கோரேகான் வழக்கில் ரோன வில்சன் கணினியில் இருந்து எடுக்கப்பட்ட கோப்புகள் புனே போலீசாரால் தான் நடப்பட்டது என்பதை அமெரிக்க ஆய்வு நிறுவனம் நிருபித்துள்ளது. சாய்பாபாவின் மீதான வழக்கு புனையப்பட்ட ஒன்று என்பதும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் எந்த வெகுஜன ஊடகங்களும் இதை பேசு பொருளாக்கவில்லை. ஏனென்றால் மோடியை எந்த அளவுக்கு விமர்சிக்க வேண்டும் என்பதும் மோடியால் தான் தீர்மானிக்கப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கையில் இன்னமும் சட்டத்தின் மூலம் விடுதலையை பெற முடியும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனத்தின் உச்சமாகத்தான் இருக்கும்.


இளமதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க