மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னால் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா உட்பட 5 பேரை மும்பை  உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அக்டோபர் 14 அன்று விடுதலை செய்தது.

இந்தத் தடையை எதிர்த்து மகாராஷ்டிர அரசாங்கம் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சனிக்கிழமை (அக்டோபர் 15) விடுமுறை நாளாக இருந்த போதிலும் நீதிபதிகள் எம்ஆர் ஷா, பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு இந்த மனுவினை அவசரமானதாக எடுத்துக்கொண்டு காலை 11 மணிக்கு விசாரித்தது.

சாய்பாபா மற்றும் ஐவர் விடுதலைக்கு  இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 390-ல் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகவும், குற்றவாளிகள் சிறையிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் டிசம்பர் 8ம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சாய்பாபா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாசந்த், “சாய்பாபா 90 சதவீதம் உடல் ஊனமுற்றவர்; பல்வேறு நோய்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சக்கர நாற்காலியிலேயே தான் இருக்க வேண்டியவராக இருக்கிறார். அதனால் அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை வீட்டுக்காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

படிக்க : சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகும் பேராசிரியர் சாய்பாபா !

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு மே 2104-ல் பேராசிரியர் சாய்பாபா கைது செய்யப்பட்டார். நக்சல் தலைவர்களுடன் சாய்பாபா தொடர்பு வைத்திருந்தார் என்றும் குறிப்பாக தலைவர் முப்பல்ல லஷ்மண ராவ் என்பவருடன் தொடர்ச்சியாக தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் ஹேம் மிஸ்ராவைக் கைது செய்து விசாரித்த போது சாய்பாபாவுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே தான் தூது சென்றதாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரக்கத்தனமான உபா (UAPA) சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அவருக்கு மார்ச் 2017-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்தே அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

கைதான 6 பேரில் Narote என்பவர் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறையிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சாய்பாபா உள்ளிட்ட 5 பேரும் தற்போது மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அரசை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்றும் மாவோயிஸ்டுகள் என்றும் குற்றம் சாட்டி UAPA சட்டத்தின் கீழ் கைது செய்வதானது தொடர்கதையாகி விட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நிரந்தரமாக சிறையிலேயே அடைக்கப்படுகின்றனர். அரசின் இந்த அடக்குமுறைகளுக்கு நீதிமன்றங்களுக்கு துணை நிற்கின்றன. இந்த பாசிச மோடி அரசால் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க