ரசு மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக பேசியதற்காக மட்டும் கடந்த பத்து ஆண்டுகளில் 405 தேச துரோக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் 96 விழுக்காடு வழக்குகள் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் பதிவு செய்யப்பட்டவை என்கிறது Article14 என்ற சட்ட செய்தி இணையதளம்.

கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2020-ம் ஆண்டு டிசம்பர் 31 வரையான அனைத்து தேச துரோக வழக்குகள் குறித்த ஆய்வை செய்த இந்த இணையதளம் இவ்விவரங்களை வெளியிட்டுள்ளது. அரசையோ ஆள்பவர்களையோ விமர்சிப்பது தேச துரோகமாகாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பின்னரும் இத்தகைய வழக்குகள் அதிகரித்தபடியே உள்ளன என்பது இந்த ஆய்விலிருந்து அறிய முடிகிறது.

பதாகைகளை ஏந்துவது, முழக்கங்களை எழுப்புவது, சமூக ஊடகங்களில் பதிவு எழுதுவது, தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்கள் கூட தேச துரோகம் எனக் குற்றம்சாட்டப்பட்டிருக்கின்றன என்பதை Article14 இணையதளம் தனது பகுப்பாய்வில் தெரிவித்துள்ளது.

படிக்க :
♦ ஊபா – என்.எஸ்.ஏ தேச துரோக சட்டங்களை நீக்கு ! வலுக்கும் எதிர்ப்புகள் !!
♦ ஜே.என்.யூ தேச துரோக வழக்கு : ஏ.பி.வி.பி.யின் திட்டமிட்ட சதி அம்பலம் !

ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறை பதவியில் இருந்த கால கட்டத்தைக் காட்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது தேசதுரோக வழக்குகள் 28%  அதிகரித்துள்ளன. பெருவாரியான வழக்குகள் சி ஏ ஏ என் ஆர் சி போராட்டங்களின் போதும் ஹத்ராஸ் பாலியல் வன்கொலை வழக்குக்கு பிறகும் பதியப்பட்டன.

மோடி அரசின் முதல் ஆறு ஆண்டுகளில் 519 தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஐ.மு.கூ ஆட்சியின் 2010-2014 மே வரையிலான காலகட்டத்தில் 279 வழக்குகள் பதியப்பட்டன. இதில் 39 விழுக்காடு வழக்குகள் தமிழகத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் போதும் நாட்டின் சில பகுதிகளில் மாவோயிசம் தொடர்பாகவும் பதியப்பட்டவை. இந்த காலக்கட்டத்தில் பதியப்பட்ட 18 வழக்குகளில் போதிய தகவல் இன்மையால் என்ன காரணத்துக்காக வழக்கு பதியப்பட்டது என அறிய முடியவில்லை என்கிறது இந்த இணையதள பகுப்பாய்வு.

மோடி ஆட்சிகாலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹத்ராஸ் பாலியல் வன்கொலை தொடர்பாக 22 வழக்குகளும், சி.ஏ.ஏ என். ஆர். சி. தொடர்பில் 25 தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 25 வழக்குகளில் 22 வழக்குகள் பாஜக ஆளும் மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டவை. புல்வாமா தாக்குதல் தொடர்பாக பதியப்பட்ட 27 வழக்குகளில் 26 வழக்குகள் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள காவி அரசுகளால் பதியப்பட்டவை.

பீகார், கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 65 விழுக்காடு தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . இவற்றில் பெரும்பாலானவை பாஜகவின் ஆட்சியின் கீழ் உள்ளவை; பாஜகவோடு கூட்டணியில் உள்ளவை. கடந்த 10 ஆண்டுகளில் தேசதுரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10,938 பேரில் 65% பேர் மீது மோடி ஆட்சிக்கு வந்த பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டது என பகுப்பாய்வு கூறுகிறது.

இந்த வழக்குகளில் 30%, பேர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளுடன் சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம், பொது சொத்துக்களுக்கு சேதம் (தடுப்பு) சட்டம், நாட்டின் மரியாதை மற்றும் ஆர்வத்துக்கு சேதம் ஏற்படுவதைத் தடுப்பது போன்றவையும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விமர்சனம் மற்றும் எதிர்ப்பைக் கையாள்வதற்கு அரசாங்கங்களுக்கு பிடித்த கருவியாக தேசத்துரோக சட்டம் உள்ளது. ஐமுகூ, தேஜகூ இரண்டு அரசுகளும் தேச துரோக வழக்கைப் பொறுத்தவரையில் வெளிப்படையானதாகவோ அல்லது பொறுப்பு கூறவோ விரும்புவதில்லை. ஐமுகூ அரசாங்கத்தாலும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் போடப்பட்டதற்கு அசீம் திரிவேதி, அருந்ததி ராய் ஆகியோரே எடுத்துக்காட்டுகள்.

தற்போது, காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர், இந்தியா டுடேயின் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் காங்கிரஸின் பத்திரிகையான நேஷனல் ஹெரால்டின் மூத்த ஆலோசகர் ஆசிரியர் மிருணால் பாண்டே ஆகியோர் மீது குடியரசு தினத்தில் வெடித்த வன்முறைக்கு பிறகு தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களுடன், நேஷனல் ஹெரால்டின் ஆசிரியர் ஜாபர் ஆகா, தி கேரவனின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் பரேஷ் நாத் மற்றும் அனந்த் நாத், மற்றும் நிர்வாக ஆசிரியர் வினோத் கே ஜோஸ் ஆகியோர் மீதும் தவறான செய்திகளை பதிந்ததாகக் கூறி தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளன.

படிக்க :
♦ 6ஜி தொழில்நுட்பம் : உலக மேலாதிக்கத்திற்கான தொழில்நுட்ப போட்டி !
♦ எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு

பிரதமர் மோடிக்கு எதிராக ‘பொருத்தமற்ற’ அல்லது ‘அவமானகரமான’ சொற்களைப் பேசியதற்காக 149 தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்தும் தன்னை சங்க பரிவாரத்தின் அடுத்த மோடியாக நிறுவும்விதமாக தன்னைப் பற்றி விமர்சித்ததற்காக 144 தேசதுரோக வழக்குகளை பதிவு செய்துள்ளார்.

மக்களிடம் மாற்றுக் கருத்துக்கள் சென்று சேர்வதை என்றுமே பாசிஸ்ட்டுகள் விரும்புவதில்லை. ஏனெனில் அவர்களைப் பொருத்தவரையில் மக்கள் என்றுமே அறியாமையில் இருக்கவேண்டும்; மேலும் அரசு கூறும் கருத்துக்களை  அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே பாசிஸ்ட்டுகள் என்றுமே மாற்றுக் கருத்துக்களை அனுமதிப்பதில்லை.

மாற்றுக் கருத்து கூறினால் தேச துரோக வழக்கு, அரசை கேள்விக்குட்படுத்தினால் ஊபா சட்டம் என ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்க பரிவாரக் கும்பல் வரைமுறையின்றி சட்டத்தை தனக்குச் சாதகமாக வளைத்துக் கொண்டுள்ளது என்பதையே இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.


கலைமதி
நன்றி
: கவுரி லங்கேஷ் நியூஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க