நான்காண்டுகளுக்கு முன் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்வொன்றில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என முழக்கமிட்டதாகக் கூறி, நிகழ்வில் பங்கேற்ற இடதுசாரி மாணவர் அமைப்பினர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன் பேரில், கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்ட மாணவர் சங்க பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மோடி அரசின் அடக்குமுறையைக் கண்டித்து நாடு முழுவதும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன.

நான்காண்டுகளாக அந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் தேர்தல் வரவிருப்பதையொட்டி, அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியமாக மாணவர்கள் ‘பாகிஸ்தான் வாழ்க’என முழக்கமிடும் வீடியாவை சமர்பித்துள்ளது போலீசு.
ஆனால், ஏவிபிவி அமைப்பின் முன்னாள் துணை தலைவர் ஜதின் கொரையாவும் முன்னாள் இணை செயலாளரான பிரதீப் நார்வாலும் இந்த வீடியோவில் முழக்கமிடுபவர்கள் பாஜக-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. -ஐச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள்.
படிக்க:
♦ தேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப் பின் குற்றப்பத்திரிகை தாக்கல் !
♦ பேராசிரியரை காலில் விழவைத்த ஏ.பி.வி.பி. குண்டர்கள் !
தற்கொலைக்கு தள்ளப்பட்ட ஆய்வு மாணவர் ரோஹித் வெமூலா குறித்த கவனத்தை மட்டுப்படுத்தவே, இத்தகைய சர்ச்சைக்கு ஏபிவிபி அமைப்பினர் திட்டமிட்டதாக கடந்த வாரம் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்கள் தெரிவித்தனர்.
பிப்ரவரி 2016-ம் ஆண்டு ஏ.பி.வி.பி. அமைப்பிலிருந்து இவர்கள் வெளியேறிவிட்டனர். “வெமூலாவின் தற்கொலைக்குப் பிறகு, தலித்துகளாக இருந்த நானும் ஜதீனும் தொலைக்காட்சி பேட்டிகளில் ஏபிவிபி அமைப்பை ஆதரித்து பேச தொடர்ந்து வலியுறுத்தப்பட்டோம். நாங்கள் அதற்கு மறுத்தபோது, அவரை தீவிரவாதி என சொல்ல ஆரம்பித்தார்கள். பிப்ரவரி 9-ம் தேதி நிகழ்வை வெமூலா விவகாரத்தை திசை திருப்ப கிடைத்த சந்தர்ப்பமாகவே பார்த்தார்கள்” என்கிறார் நார்வால். ஏபிவிபி அமைப்பினர் வாட்சப் குழு மூலம் எப்படி இந்த விவகாரத்தை திசை திருப்பலாம் என பிப்ரவரி 9-ஆம் தேதி விவாதித்ததாக தெரிவிக்கிறார் ஜதீன்.

டெல்லி போலீசு சாட்சியமாக சொல்லும் வீடியோவை முன்னாள் மற்றும் இன்னாள் ஏபிவிபி உறுப்பினர்களிடமிருந்து பெற்றிருக்கிறது. இதை ஒளிபரப்பு செய்ய மோடி ஆதரவு தொலைக்காட்சியான ஜீ நியூஸிலிருந்தும் பெறப்பட்டிருக்கிறது.
புதிய பிரச்சினைகளை உருவாக்குவது, அதன் வழி பிரச்சினைகளை திசை திருப்புவது, அதில் ஆதாயம் தேடுவதை பிழைப்பாக வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல், தங்களை விமர்சிக்கும் மாணவர் இயக்கங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. ஆர்.எஸ். எஸ். கும்பலின் ஐந்தாண்டு கால ஆட்சியின் கல்வி சாதனை கல்வி வளாக கொலைகளும் ஒடுக்குமுறையும்தான். தற்போது அம்பலமாகி இருக்கும் இவ்விவகாரம் இது ஒரு சான்று.
கலைமதி
செய்தி ஆதாரம்:
♦ JNU sedition case: Ex-ABVP members claim outfit planned row
♦ JNU sedition chargesheet: Police relying on footage from 6 phones, including 3 from ABVP members and cop