லகின் பல்வேறு நாடுகளில் இனிமேல்தான் 5ஜி (5G) தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரவிருக்கிறது. ஆனால் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டமான 6ஜி (6G)-யை கைகொள்ளும் போட்டியில் சீனாவும் அமெரிக்காவும் கடுமையாக ஈடுபட்டுள்ளன. 6ஜி தொழில்நுட்பத்தை முதலில் தயாரித்து அறிமுகப்படுத்தும் நாடுதான் அடுத்த தொழிற்புரட்சி என்று சொல்லப்படும் 4.0ல் வெற்றியாளராக இருக்கமுடியும்.

5ஜி-யின் உச்சபட்ச வேகத்தைவிட 6ஜி தொழில்நுட்பத்தின் வேகம், 100 மடங்கு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. 6ஜி தொழில்நுட்பம் இன்னும் கோட்பாட்டு அளவிலானதாக இருந்தாலும், அதுசார்ந்து படிப்படியான வளர்ச்சிகள் ஏற்பட்டு வருகின்றன. 6ஜி-யை நடைமுறைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர இன்னும் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் ஆகும். 6ஜி-யை கொண்டு இதுவரை அறிவியல் புனைகதைகளில் கூறப்பட்டு வந்த தொழில்நுட்பங்களையும் கூட நடைமுறைக்கு கொண்டுவர முடியுமென்பதால் அதற்கான போட்டியில் தற்போதே அமெரிக்காவும் சீனாவும் அதிக கவனம் செலுத்துகின்றன.

ஏற்கெனவே இருந்த 5ஜி தொழில்நுட்பத்தில் அமெரிக்கா – சீனா இடையிலான போட்டி உலகமறிந்ததே. 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னேறி உலகளாவிய சந்தையை முதலில் கைப்பற்றிய சீனாவை ஓரம்கட்ட அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை எடுத்தது.

படிக்க :
♦ எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு
♦ கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை !

சீன நிறுவனங்களின் செயல்பாடுகளை அமெரிக்காவால் முடக்க முடியும் என்பதற்குச் சான்றாக, ZTE என்னும் தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை கடந்த 2018-ம் ஆண்டில் தடை செய்ததன் மூலம் நிரூபித்தது. இந்தத் தடை ZTE நிறுவனம் ஏறக்குறைய சந்தையிலிருந்து காணாமல் போகும் அளவுக்குத் தீவிரமாக இருந்தது. இதுபோல Huawei நிறுவனத்தின் தொலைதொடர்புச் சாதனங்களால் வேவு பார்க்கப்படும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அமெரிக்கா, ஜப்பான், ஸ்விடன், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்த நிறுவனத்தின் 5ஜி வலைப்பின்னல் கருவிகளை தடை செய்தன. டிரம்ப் ஆட்சியில் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்திருந்தாலும், அவையெதுவும் சீன நிறுவனங்களை 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னணியாளராக வளர்வதை தடுக்கமுடியவில்லை.

உலகளவில் சீனாவின் Huawei தொழில்நுட்ப நிறுவனம்தான் 5ஜி தொழில்நுட்பத்தில் மிகப் பெரியதாக இருக்கிறது. இதனால், 6ஜி தொழில்நுட்பத்தை கைக்கொள்வதன் மூலம், அமெரிக்கா கம்பியில்லா (wireless) தொழில்நுட்பத்தில் தான் தவறவிட்ட இடத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளமுடியும் என்று நினைக்கிறது.

6ஜி தொழில்நுட்பம் சீனா, அமெரிக்கா நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களின் செயல்திட்டத்தில் பல ஆண்டுகளாகவே இருந்திருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் 2019-ம் ஆண்டிலே, 6ஜி விரைவில் கொண்டு வரப்படவேண்டும் என்று டிவீட் செய்துள்ளார். 6ஜி தொழில்நுட்பத்தில், சீனா ஏற்கனவே முன்னணியில் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம், 6ஜி அலைகளை அனுப்புவதில் அலைக்கற்றைகளின் திறனை சோதனை செய்யும் விதமாக ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. மேலும் ஹுவாவெய் நிறுவனம் கனடாவில் 6ஜி ஆய்வுக்கூடத்தை அமைத்திருக்கிறது.

6ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டுவர, மிக உயர்ந்த அதிர்வெண் கொண்ட அலைகள் உருவாக்கும் தொழில்நுட்பம் வேண்டும். அந்த அலைகளில் கடத்திவரப்படும் மிக அதிக அளவிலான தரவுகளை சேர்த்துவைத்து கையாளும் மின்னணு கருவி(Chip) இன்னும் உருவாக்கப்படவில்லை. மேலும், இந்த மிக உயர்ந்த அதிர்வெண் கொண்ட அலைகளால் மிகக்குறுகிய தூரம்தான் செல்லமுடியும் என்பதால், ஒவ்வொரு தெருவிலும் நிறைய டவர்கள் அல்லது நிலையங்கள் தேவைப்படுவதோடு, ஒவ்வொரு கட்டிடத்திலும் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டிய தேவை ஏற்படலாம். இதன் உப விளைவுகள் நகர்புற மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, தனி மனிதர்களின் அந்தரங்க உரிமைகளையும் பாதிக்கும்.

5ஜி , 6ஜி தொழில்நுட்ப மேலாதிக்கத்துக்கான போட்டி வெறுமனே இரு நாடுகளோடு முடிந்துவிடவில்லை. அறிவியலின் அடுத்தகட்டத்தை யார் கைக்கொள்வது என்பதில் முதலாளித்துவம் இரு முகாம்களாக அணி சேர்ந்திருக்க்கிறது. ஏற்கெனவே, அமெரிக்காவின் “Alliance for Telecommunication Industry Solutions” (ATIS) எனும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த கூட்டமைப்பு, Next G Alliance என்ற ஒரு கூட்டமைப்பை அமைத்துள்ளது. அதில், Apple, Google, Qualcomm Inc, AT&T Inc, Samsung Electronics போன்ற தொழில்நுட்பப் பெரு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதிலும் சீன நிறுவனமான ஹுவாவெய் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆனால், ரசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ஹுவாவெய் (Huawei) நிறுவனத்தை ஏற்றுக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணி திட்டம் 5ஜி தொழில்நுட்ப விவகாரத்தில், உலகம் இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளதை காட்டுவதாக இருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனித குலத்தின் அறிவுச் செழுமையின் விளைவுதான் என்றாலும் அது யார் கையில் இருக்கிறது என்பதில் இருந்தே அதன் நோக்கம் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் சீனாவும் அமெரிக்காவும் இந்த 5ஜி தொழில்நுட்பத்தை பெரும்பாலும் கண்காணிப்பு மற்றும் தமது தகவல் திரட்டு தொழில்நுட்பத்திற்காகவுமே பயன்படுத்தி வந்திருக்கின்றன.

இனி வரவிருக்கும் 6ஜி தொழில்நுட்பத்தையும் கண்காணிப்பை இன்னும் நுண்ணியமாக மேற்கொள்ளவே பயன்படுத்துவர் என்பது உறுதி. சீனாவும் அமெரிக்காவும் ஏற்கெனவே தமது சொந்த நாட்டு மக்களையும், உலகம் முழுவதையும் கண்காணிப்பதில் தொழில்நுட்பத்தை கேடாக பயன்படுத்தி வருகின்கிறன.

படிக்க :
♦ சுற்றிவளைக்கப்படும் சீனா!
♦ அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?

முதலாளித்துவத்தின் கையில் தொழில்நுட்பம் இருக்கும்வரையில் அது ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்துக்கும், கண்காணிப்புக்குமான தொழில்நுட்ப போட்டியாக, புவியரசியல் ஆதிக்கத்திற்கானதாகவும், சர்வதேச வல்லாதிக்கத்திற்கானதாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு தற்போதைய 5ஜி மற்றும் அடுத்து வரவிருக்கும் 6ஜி தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டியே சாட்சி.

முதலாளித்துவத்தின் கையில் தொழில்நுட்பமானது லாபவெறிக்காகவும், மக்களை கண்காணிப்பதற்கும் சுரண்டுவதற்காகவுமே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனிற்கு என்றும் சேவை செய்யப் போவதில்லை என்பதைத் தாண்டி, அவர்களைக் கண்காணிக்கவும், படிப்படியாக ஒழித்துக் கட்டவுமே அது பயன்படுத்தப்படுகிறது.


ராஜேஷ்
செய்தி ஆதாரம்:
LiveMint

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க