மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி – பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி – பிரக்யா சிங் தாக்கூர் கடந்த ஜூன் 9 அன்று, முஹம்மது நபியை அவதூறு செய்ததற்கான இடைநீக்கம் செய்யப்பட்ட கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
செய்தியாளர்களிடம் காவி பயங்கரவாதி பிரக்யா, “இது இந்தியா, இது இந்துக்களுக்கு சொந்தமானது, சனாதன தர்மம் இங்கேயே இருக்கும். அதை உயிருடன் வைத்திருப்பது எங்கள் பொறுப்பு, நாங்கள் அதை செய்வோம். இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் (நுபுர் சர்மாவிற்கு எதிரான கருத்து) செய்திருக்கிறார்கள். கமலேஷ் திவாரி ஏதோ சொல்ல கொன்றுவிட்டனர். வேறொருவர் (நுபுர் ஷர்மா) ஏதோ சொன்னார், அவர்களுக்கும் கொலை மிரட்டல் வந்தது. நமது தெய்வங்களை சிதைத்து திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் இதை பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். இது அவர்களின் மனநிலையை காட்டுகிறது.” என்றார்.
நூபுர் ஷர்மாவைத் தவிர, மற்றொரு பாஜக தலைவரான நவீன் ஜிண்டாலும் முகமது நபியைப் பற்றி அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது, இது இந்தியாவில் மட்டுமல்ல, வளைகுடா நாடுகளிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இதனால் நுபர் சர்மாவை இடைநீக்கம் செய்து ஜிண்டாலை வெளியேற்றியது பாஜக.
படிக்க :
♦ மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு !
♦ மாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் !
முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்களுக்காக தண்டிக்கப்பட்ட இந்துத்துவா தலைவர் கமலேஷ் திவாரி – அக்டோபர் 18, 2019 அன்று உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே படுகொலை செய்யப்பட்டார்.
திவாரியின் கொலைக்கு முஸ்லீம் மதகுருமார்கள் மீது போலீசுத்துறை குற்றம் சுமத்தியது – ஆனால், அவரது கொலைக்கு உள்ளூர் பாஜக தலைவர்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆதித்யநாத் அரசாங்கம்தான் காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதன் பின்னர்தான் திவாரி கொலை வழக்கு ஒரு கூர்மையான திருப்பு முனையை எடுத்தது. திவாரியின் தாயும் மருமகனும், தாத்தேரியில் வசிக்கும் உள்ளூர் பாஜக தலைவர் சிவக்குமார் குப்தா, ‘கோயில் தகராறு’பிரச்சினையில் திவாரியைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறினர்.
சிவக்குமார் குப்தா ஒரு “மாஃபியா” என்றும், அவர் மீது சுமார் 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். திவாரி, தான் கொல்லப்படுவதற்கு முன்பு முகநூல் நேரலை வீடியோவில், பாஜக தலைவர்கள் தன்னை கொலை செய்ய சதி செய்வதாக கூறியிருந்தார். ஆதித்யநாத் அரசு பொறுப்பேற்றவுடன், அவரது பாதுகாப்பு அகற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.
மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி – பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி – பிரக்யா சிங் தாக்கூர்
கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளின்படி, திவாரி கொலை செய்யப்பட்ட அன்று காலையில் காவி நிற குர்தா அணிந்த இருவர் திவாரியின் இல்லத்தை நோக்கி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. திவாரியின் வீட்டிற்கு அவரைக் கொல்வதற்காக வந்த இருவர் டீ குடித்துவிட்டு, அவரைக் குத்திக் கொல்லும் முன் சுமார் 30 நிமிடம் அவருடன் அரட்டையடித்திருக்கிறார்கள். இதை வைத்து பார்க்கும் போது, கொலையாளிகள் திவாரிக்கு தெரிந்தவர்கள் என்றும் அவருடைய சக இந்துத்துவவாதிகளகவும் இருக்கலாம் என்றும் போலீசு கூறியது.
ஆனால், தன் சொந்த கட்சிக்காரர்களையே கொலை செய்து அரசியல் செய்யும் வரலாறு கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யான காவி பயங்கரவாதி பிரக்யா, கமலேஷ் திவாரியை ஏதோ முஸ்லீம் மக்கள்தான் கொன்று விட்டார்கள் என்று மதவெறியை தொடர்ந்து கிளப்பி வருகிறார்.
பிரக்யா இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது இதுமுதல் முறையல்ல. நவம்பர் 2019-ல், காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவை ‘தேசபக்தர்’ என்று பிரக்யா குறிப்பிட்டார். இது அவரது அறிக்கையை எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்ததால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.
மே 2019-ல் கூட, லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, ​​பிரக்யா “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர், அப்படித்தான் இருப்பார். அவரை பயங்கரவாதி என்று கூறுபவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பதில் அளிக்கப்படும்” என்றார்.
2008-ம் ஆண்டு செப்டம்பரில் மாலேகானில் ஒரு மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில், 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பிரக்யா சிங் தாக்கூர் மிக முக்கிய குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், மோடி அரசு ஆட்சி அரியணையில் ஏறியது, மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். பிரக்யா சிங்-க்கும் பிணை வழங்கப்பட்டுவிட்டது.
படிக்க :
♦ சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !
♦ பயங்கரவாதி பிரக்யாசிங் கோட்சே விவகாரம் | பாஜக-வின் இரட்டை வேடம் !
இந்த காவி பயங்கரவாதி, இன்னொரு காவி பயங்கரவாதியை ஆதரிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இவர்கள் இந்தியா இந்துக்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று கூறி முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்களை திட்டமிட்டு செய்து வருகின்றனர். இந்து ராஷ்டிரத்திற்காக இவர்கள் செய்யும் படுகொலைகள் ஏராளம். மாலேகான் குண்டுவெடிப்பு, கொத்தரா ரயில் எரிப்பு, குஜராத் படுகொலை, முசாபர் நகர் கலவரம், கோவை கலவரம் என நாடு முழுவதும் முஸ்லீம் சிறுபான்மை மக்களை படுகொலை செய்வதே இவர்களின் முழுநேரப்பணி. மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்ததும் காவி பயங்கரவாதிகளின் அடிதளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
முஸ்லீம் சிறுபான்மை மக்களை காவி பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க, நாடு முழுவதும் பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் அடித்தளங்களை தகர்க்க, பாசிச எதிர்ப்பு படையாய் களமிறங்குவோம்.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க