privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாபயங்கரவாதி பிரக்யாசிங் கோட்சே விவகாரம் | பாஜக-வின் இரட்டை வேடம் !

பயங்கரவாதி பிரக்யாசிங் கோட்சே விவகாரம் | பாஜக-வின் இரட்டை வேடம் !

'' கோட்சே ஒரு தேசப் பற்றாளர். அவரை பயங்கரவாதி எனக் கூறுபவர்கள் முதலில் தங்களைப் பற்றி பார்த்துக் கொள்ளவேண்டும். '' என நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போதே பேசியவர்தான் இந்த பிரக்யாசிங்.

-

காந்தியைக் கொன்ற கோட்சேயை தேசபக்தர் என்று நாடாளுமன்றத்தில் கூறிய மாலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாதி பிரக்யாசிங் தாக்கூரை பாதுகாப்புத்துறையின் ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்குவதாகவும், இந்த குளிர்கால கூட்டத்தொடரில் பாராளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்குத் தடைவிதிப்பதாகவும் பாஜக-வின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா கடந்த நவம்பர் 28, 2019 அன்று தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 27 அன்று நாடாளுமன்றத்தில் சிறப்புப் பாதுகாப்புக் குழு குறித்த விவாதத்தில், திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், கோட்சே காந்தியைக் கொன்றதன் காரணத்தை நீதிமன்றத்தில் கூறியது குறித்துப் பேசினார். அப்போது இடையில் பேசிய பிரக்யாசிங் தாக்கூர் கோட்சேயை தேசப் பற்றாளர் என்று குறிப்பிட்டார். பிரக்யாவின் இந்தக் கருத்துக்கு எதிர்கட்சிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தன.

அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஆ.ராசா-வின் பேச்சு மட்டும்தான் நாடாளுமன்றப் பதிவேட்டில் இடம்பெறும் என்றும், பிரக்யா சிங்கின் பேச்சு பதிவேட்டில் ஏற்றப்படாது என்றும் தெரிவித்தார். மேலும் பிரக்யா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆ.ராசா பேசுகையில் அவரைப் பேசவிடாமல் பாஜக-வினர் சப்தமிட்டுக் கொண்டிருந்தனர்.

சமூக வலைத்தளங்களிலும் ஜனநாயகவாதிகள் மத்தியிலும், இது குறித்துக் கடுமையான கண்டனங்கள் கிளம்பிய பின்னரே பிரக்யாசிங்கின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது. பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜக செயல்தலைவர் நட்டா, “பிரக்யாசிங் தாக்கூரின் பேச்சு கண்டனத்திற்கு உரியது. பாஜக எப்போதும் அத்தகைய பேச்சை அங்கீகரிப்பதில்லை. மேலும் இந்த சித்தாந்தத்தை நாங்கள் ஆதரிப்பதில்லை” என்று கூறியுள்ளார். ஒருவேளை எதிர்ப்புகளும் கண்டனங்களும் வரவில்லையெனில், விரைவில் கோட்சேவின் படத்தையும் பாஜக நாடாளுமன்றத்தில் திறந்து வைத்திருக்கும்.

பிரக்யாசிங் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் அமைதிகாப்பது, கோட்சேவின் சிந்தனைக்கு பிரதமர் தார்மீக ஆதரவளிப்பதை நிரூபிக்கிறது என்றும், இது பாஜகவின் வெறுப்பு அரசியலின் ஒரு வெளிப்பாடு என்றும் எதிர்க்கட்சியினர் கூறியிருக்கின்றனர்.

பிரக்யாசிங்கின் இந்த பேச்சுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் இந்தூரில் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய செயல் ஒன்று நடந்திருந்தால், பாஜக நாடு முழுவதும் வழக்குப் போட்டு சம்பந்தப்பட்டவரை அலைக்கழிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும்.

பிரக்யாசிங் கோட்சேவை தேசப் பற்றாளர் என்று கூறுவது இது முதன்முறையல்ல. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இதையே கூறினார். ”கோட்சே ஒரு தேசப் பற்றாளர். அவர் தேசப்பற்றாளராகவே நீடிப்பார். அவரை பயங்கரவாதி எனக் கூறுபவர்கள் முதலில் தங்களைப் பற்றி பார்த்துக் கொள்ளவேண்டும். இந்தத் தேர்தலில் அவர்களுக்குப் தக்க பதிலடி கொடுக்கப்படும்.” என்று கூறினார். பின்னர் பல தரப்பினரிடமிருந்தும் கண்டனம் வந்ததும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அச்சமயத்தில் பொதுவான வாக்காளர்களின் வாக்குகளை காத்துக் கொள்ள பிரக்யாசிங்கின் பேச்சிற்கு மோடி கண்டனம் தெரிவித்தார். அது பிரக்யா சிங்கின் தனிப்பட்ட கருத்து என்றும் அக்கருத்துக்கு பிரக்யா சிங் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கூறியது பாஜக.

அப்படி கருத்துச் சொன்ன பாஜகதான், சிறிது நாட்களுக்கு முன்னர், பிரக்யாசிங் தாக்கூரை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக நியமித்தது. மாலேகான் குண்டுவெடிப்பில் நேரடியாகப் பங்காற்றிய பிரக்யாசிங் தாக்கூர், பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினரா என இந்தியா முழுவதும் காரி உமிழ்ந்தது. எனினும் அவரை அந்தப் பொறுப்பில் தக்கவைத்தது பாஜக. இப்போது பிரக்யா சிங் மேலும் அம்பலப்பட்ட சூழலில், கண் துடைப்புக்காக அந்தப் பொறுப்பில் இருந்து அவரை நீக்கியிருக்கிறது. ஆனால் அவரை கட்சியிலிருந்தோ, வேறு பொறுப்புகளில் இருந்தோ நீக்கவில்லை.

படிக்க:
♦ இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !
திரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் ! வழக்கறிஞர்கள் புகார்

ஒருபுறம் சாவர்க்கரை தேச விடுதலை போராளியாக சித்தரிக்க எத்தனிக்கும் பாஜக மற்றொருபுறம் சாவர்க்கரின் சீடனான கோட்சேவை காந்தி கொலைக்காக எதிர்ப்பதாக நாடகமாடுகிறது. இரட்டை வேடம் போடுவதில் சங்கபரிவாரக் கும்பல் நாட்டிலேயே நம்பர்-1 என்பதை நிரூபித்து வருகிறது !


நந்தன்