மலியானா படுகொலை குற்றவாளிகள் விடுதலை: தொடரும் இந்துராஷ்டிர (அ)நீதி!

தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி, வெளிப்படையாக இந்துராஷ்டிர ஆட்சி என்று மட்டும்தான் அறிவிக்கப்படவில்லை. எனவே, இந்துராஷ்டிரத்தில் மலியானா படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

1987 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரத்தில் உள்ள மலியானா கிராமத்தில் 72 முஸ்லிம்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், அரிவாளால் துண்டுதுண்டாக வெட்டப்பட்டும், எரியும் நெருப்பில் தூக்கி வீசப்பட்டும் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். மலியானாவில் நடைபெற்ற இந்த பாசிச வெறியாட்டம், இந்துமதவெறி கும்பலின் குஜராத் பெருந்திரள் படுகொலைக்கு முன்னோடியாகும்.

36 ஆண்டுகளாக இவ்வழக்கில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், நீதி கிடைக்கும் என்று காத்திருந்த முஸ்லிம் மக்களின் முதுகில் குத்தும் வகையில் கடந்த மார்ச் 31ஆம் தேதி குற்றவாளிகளை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது மீரட் மாவட்ட நீதிமன்றம். “சாட்சிகளின் வாக்குமூலங்களில் போதுமான ஆதாரம் மற்றும் நம்பகத்தன்மை இல்லாததால்” குற்றம்சாட்டப்பட்ட 39 பேரையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளார் நீதிபதி லக்விந்தர் சூட். குஜராத் படுகொலை வழக்கு, பாபர் மசூதி வழக்கு, பில்கிஸ் பானு வழக்கு போன்ற வழக்குகளின் தொடர்ச்சியாக இந்த வழக்கிலும் முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

“குற்றவாளிகள் அனைவரும் நிரபராதிகள் என்றால் எங்கள் மக்களை கொன்றது யார்” என்று கேள்வி எழுப்புகின்றனர் தங்கள் அன்புக்குரியவர்களை பறிகொடுத்த முஸ்லிம் மக்கள். 1987 ஆம் ஆண்டு, மலியானா கிராமத்தில் நடைபெற்ற படுகொலையைப் போலவே, ஹாசிம்புரா பகுதியில் நடைபெற்ற படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையிலும் 2015 ஆம் ஆண்டு “போதிய ஆதாரம் இல்லை” என்று குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.

மலியானா படுகொலை நிகழ்வதற்கு முதல் நாள், ஹாசிம்புராவில் 41 முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். குண்டர் படையோடு, போலீசு, துணை ராணுவம் உள்ளிட்ட அரசின் உறுப்புகளும் இணைந்து முஸ்லிம் மக்கள்மீது நடத்திய இந்த பாசிசப் படுகொலைகளுக்கு எதிராக உறுதியான சாட்சியங்கள் இருந்தபோதும், “போதுமான சாட்சியங்கள் இல்லை” என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் உ.பி.யை ஆண்ட பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் போலீசு, துணை ராணுவப் படையைச் சேர்ந்த குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவே முயற்சித்தன.

யோகியின் ஆட்சிக்கு பிறகு உத்தரப்பிரதேசம் இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாற்றப்படவில்லை; மாறாக அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே உத்தரப்பிரதேசத்தின் அரசுக் கட்டுமானங்கள் எப்படி பாசிசமயமாக்கப்பட்டிருந்தன என்பதற்கு மலியானா, ஹாசிம்புரா படுகொலை நிகழ்வுகளே சாட்சியங்கள்.

பிரதேச ஆயுதப் படை: இந்துமதவெறியர்களின் சட்டப்பூர்வ குண்டர் படை!

ராமஜென்ம பூமி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, பாபர் மசூதி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ராமர் சிலையை வழிபடுவதற்காக இந்துக்களை வளாகத்தினுள் அனுமதிக்க வேண்டும் என்று பைசலாபாத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இத்தீர்ப்பை ஏற்று 1986 பிப்ரவரியில் அன்றைய ராஜீவ் காந்தி அரசாங்கம் மசூதி வளாகத்தை வழிபாட்டுக்காக திறந்துவிட்டது. இது ஆர்.எஸ்.எஸ். மதவெறிக் கும்பல் தனது பாசிச நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் ஊக்கமளித்தது.

“அறம் காப்போம், ஆலயம் காப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து வடமாநிலங்கள் முழுக்க ஊர்வலங்களையும் ரத யாத்திரைகளையும் நடத்தியது ஆர்.எஸ்.எஸ். கும்பல். அதைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல இடங்களிலும் இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தது. 1987 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மீரட் நகரத்தில் காவிக் குண்டர்களால் முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களும் கலவரங்களும் நடத்தப்பட்டன.


படிக்க: மலியானா படுகொலை வழக்கு : முசுலீம்களோடு நீதியையும் கொல்கிறார்கள்


உத்தரப்பிரதேச அரசாங்கம் கலவரத்தைக் கட்டுப்படுத்த, பிரதேச ஆயுதப் படை (uttar pradesh – provincial armed constabulary) என்றழைக்கப்படும் துணை ராணுவப் படையை அனுப்பியது. இந்து மதவெறியர்கள் நிரம்பியிருந்த இப்படை, கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக காவிக் குண்டர்களுடன் இணைந்து முஸ்லிம்களைக் கொத்துக் கொத்தாக கொன்றொழித்தது.

மலியானா கிராமத்தின் அனைத்து வழிகளிலும் சுற்றிவளைத்த இந்து மதவெறியர்கள், கையில் அகப்பட்ட முஸ்லிம்களை அரிவாள்களால் இரக்கமில்லாமல் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்கள். பலர் அரிவாளால் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு எரியும் நெருப்பில் தூக்கி வீசப்பட்டனர். உயிருக்கு பயந்து வீடுகளுக்குள் பதுங்கி இருந்த மக்கள், வெளியில் தாழிட்டு உயிரோடு கொளுத்தப்பட்டனர். பிஞ்சுக் குழந்தைகள் எரியும் நெருப்பில் தூக்கிவீசப்பட்டனர்.

கலவரத்தை அடக்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட துணை ராணுவப் படையினர், மதவெறிக் கும்பலோடு சேர்ந்துகொண்டனர். ஒரு மசூதியில் மதியவேளை தொழுகையை முடித்துவந்த முஸ்லிம்கள்மீது, ஆயுதப் படையினர் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அலறித் துடித்து சிதறியோடியவர்கள் விரட்டி விரட்டி சுடப்பட்டனர்.

சில இடங்களில் துணை ராணுவப் படைதான் கலவரத்தையே தொடங்கியுள்ளது. அதன் பிறகுதான் அவர்களுடன் காவிக் குண்டர்கள் இணைந்துக் கொண்டுள்ளனர். “இங்கு கலவரம் தொடங்கப்பட்டது பிரதேச ஆயுதப் படையினரால்தான். முதலில் காவல்துறையும் பிரதேச ஆயுதப் படையினரும் தாக்குதலைத் தொடங்கினர். பின்னர் கலவரக் கும்பல் வந்தது” என்று கூறுகிறார் இடுப்பில் சுடப்பட்டு உயிர்பிழைத்த வக்கில் அகமது.

மலியானாவைப் போல, ஹாசிம்புரா பகுதியிலும் காவிக் கும்பலும் துணை ராணுவப் படையினரும் இணைந்து அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்தனர். இரண்டு கிராமங்களிலும் மே 18 முதல் 23 வரை நடைபெற்ற கலவரங்கள் மிகக் கொடிய பாசிச வெறியாட்டங்களாகும்.

ஹாம்சிபுராவை சுற்றிவளைத்த பிரதேச ஆயுதப் படை, மக்கள் அனைவரையும் நடுத்தெருவில் துப்பாக்கி முனையில் நிறுத்தியது. வீடுகளில் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தது. மக்களை தனித்தனியாக பிரித்து இளம்வயது முஸ்லிம் இளைஞர்கள் 42 பேரை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி, சட்டவிரோதமாக கடத்திச் சென்றது. 324 பேர் அருகிலுள்ள போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 42 பேர், முராத் பகுதியில் உள்ள மேல்கங்கை கால்வாய் பகுதியிலும், மகான்பூர் பகுதியில் உள்ள ஹிண்டன் கால்வாய் பகுதியிலும் நிற்க வைக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக சுடப்பட்டு கால்வாய்களில் வீசியெறியப்பட்டனர். அவர்களில் ஆறு பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர். போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 324 பேரும் கொடூரமாக தாக்கப்பட்டு மீரட் மற்றும் ஃபதேகர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். போலீசு குண்டர்களின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

மீரட் நகரையும் உள்ளடக்கிய காசியாபாத் மாவட்ட போலீசு கண்காணிப்பாளராக இருந்த விபூதி நாராயண் ராய், இப்படுகொலையைப் பற்றி நினைவுகூறுகையில், “போலீசு மற்றும் பிரதேச ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்களுள் பெரும்பாலானோர் இந்துக்களாக இருந்ததோடு, அவர்கள் அனைவரும் கலவரத்திற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று நம்பினர். மீரட் மினி பாகிஸ்தானாக மாறிவிட்டதென்றும் முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டுவது அவசியமானது என்றும் அவர்கள் கருதி வந்ததாக”வும் குறிப்பிட்டிருக்கிறார்.

குற்றவாளிகளின் விசாரணை?

முஸ்லிம் மக்களை திட்டமிட்டு படுகொலை செய்த பிரதேச ஆயுதப் படை, போலீசு மற்றும் காவிக் குண்டர்களை காப்பாற்றுவதற்காக ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் துணை நின்றுள்ளது. மலியானா படுகொலையில் முக்கிய குற்றவாளிகளான பிரதேச ஆயுதப் படை மற்றும் போலீசு மீது ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை. மாறாக அவர்களுக்கு அடுத்தடுத்து பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. முதல் தகவல் அறிக்கையில் காவி குண்டர்கள் உள்ளிட்டு 94 பேரின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன. அவர்களில் பலர் சம்பவத்திற்கு முன்பே இறந்துவிட்டனர். பலரைக் காணவில்லை. இறுதியாக 38 பேர் மீது மட்டும் வழக்கு நடந்தது.

குற்றப்பத்திரிகை தொலைந்துவிட்டதாக காரணம்கூறி, 20 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெறவே இல்லை. 2009 ஆம் ஆண்டுதான் முதல் சாட்சியான வழக்கறிஞர் அகமதுவின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. 35 சாட்சிகளில் 14 சாட்சிகள்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மற்றும் சாட்சி அளித்தவர்களின் அசல் மருத்துவ அறிக்கைகள் கூட சமர்பிக்கப்படவில்லை. சிகிச்சை அளித்த மருத்துவரின் சாட்சியம் சமர்பிக்கப்படவில்லை. எந்த துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்கள் வந்தன என்பதை கண்டறியும் சோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை.


படிக்க: 2002 குஜராத் கலவரம்: காவி பயங்கரவாதிகளின் படுகொலைகளை மறைக்க முடியாது!


உத்தரப்பிரதேச அரசு முதல் தகவல் அறிக்கையில் பிரதேச ஆயுதப் படை மற்றும் போலீசின் பெயர்களை குறிப்பிடாமல் அவர்களை காப்பாற்றியது என்றால், தற்போது வழக்கை இழுத்தடித்து சாட்சிகளை கூட முறையாக விசாரிக்காமல் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி காவிக் குண்டர்களை காப்பாற்றியுள்ளது நீதித்துறை.

மலியானாவில் பணியமர்த்தப்பட்ட துணை ராணுவப் படைப் பிரிவு ஆர்.டி.திரிபாதி தலைமையிலானது ஆகும். அப்போதைய காங்கிரஸ் அரசு திரிபாதியை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. ஆனால் அவர் மீது துறைரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறும் வரை பல்வேறு பதவிகளில் இருந்தார்.

ஹாம்சிபுரா படுகொலையிலும் துணை ராணுவப் படை அதிகாரிகள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இப்படுகொலை நடந்த இரண்டாவது நாளே உ.பி மாநில அரசின் சி.பி.சி.ஐ.டி பிரிவு விசாரணையைத் தொடங்கிவிட்டாலும் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆயுதப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டு 60 பேரை சி.பி.சி.ஐ.டி குற்றவாளிகளாக அடையாளம் காட்டி இருந்தாலும் 19 கீழ்நிலை போலீசார் மீது மட்டுமே வழக்கு தொடரப்பட்டது. அதில் 16 பேர் மீதுதான் கொலைக் குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், 19 பேரும் பதவியில் இருந்து இடைநீக்கம் கூட செய்யப்படவில்லை. மாறாக, அவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.

உ.பி: இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலை!

மலியானா மற்றும் ஹாசிம்புராவில் முஸ்லிம் மக்கள் காவிக் குண்டர்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்படும்போது காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. ஆனால் உண்மையான அதிகாரம் காவிகளின் கையில் இருந்தது. மேலும், காவிகள் உத்தரப்பிரதேசத்தில் தங்களுக்கான ஒரு அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நீண்டகாலமாக செயல்பட்டு வந்தனர். அரசு உறுப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதிகளை நுழைத்து வந்தனர்.

1987-ல் நடந்த மலியானா மற்றும் ஹாசிம்புரா படுகொலைகள் மட்டுமல்ல, இதற்கு முன்னரும் பின்னரும் முஸ்லிம் மக்கள் மீது பல்வேறு திட்டமிட்ட தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இத்தாக்குதல்களில் காவி குண்டர்களுடன் போலீசு மற்றும் துணை ராணுவப் படையினரும் இணைந்து செயல்பட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

1961 ஆம் ஆண்டு அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில், முஸ்லிம் இளைஞர்களால் இந்து மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார் என்ற வதந்தியைப் பரப்பி, காவிக் குண்டர்கள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர். அதைத் தொடர்ந்து மீரட்டில் கலவரம் வெடித்தது. போலீசு இந்துமதவெறி குண்டர்களுடன் இணைந்துகொண்டு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.

1977 ஆம் ஆண்டு வாரணாசியில் இந்துமதவெறிக் குண்டர்கள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்துவதற்காக துர்கா பூஜை ஊர்வலத்தை முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிக்குள் நடத்த முயன்றனர். இதில் கலவரம் வெடித்தது. முஸ்லிம் வீடுகளில் கொள்ளையடித்தல் மற்றும் தீ வைத்தல் போன்ற சம்பவங்களில் போலீசே ஈடுபட்டது.

1980 ஆம் ஆண்டு மொராதபாத் கலவரத்தில், போலீசு மற்றும் பிரதேச ஆயுதப் படை காவிக் குண்டர்களுடன் இணைந்துக் கொண்டு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. 400 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அப்பகுதி முஸ்லிம் மக்கள் 2500 பேர் வரை கொல்லப்பட்டதாகக் கூறுகின்றனர்.

இக்கலவரங்கள் மூலம் காவி பாசிஸ்டுகள், இந்துமதவெறியைத் தூண்டி மக்கள் மத்தியில் தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளனர். ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி, வெளிப்படையாக இந்துராஷ்டிர ஆட்சி என்று மட்டும்தான் அறிவிக்கப்படவில்லை. எனவே, இந்துராஷ்டிரத்தில் மலியானா படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இந்த கொடிய இந்துராஷ்டிர பாசிச ஆட்சிதான், குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களையும் தாண்டி இன்று நாடு முழுக்க நான்கு திசைகளிலும் விரிந்து பரவிவருகிறது!


அமீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க