தோழர் விஜயகுமார் (எ) புஷ்கின் 124(A) தேசத்துரோக வழக்கில் கைது!

மே 2022-இல் உச்ச நீதிமன்றம் தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்யக்கூடாது என வழிகாட்டுதல் வழங்கியதையும் மீறி தமிழ்நாடு அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. காவிகளின் விசுவாசமான சேவை ஆளாக போலீசுத்துறை மாறிக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

0

விஜயகுமார் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையைச் சேர்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி, மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திலிருந்து சம்மன் ஒன்று விஜயகுமார் அவர்களுக்கு வந்தது. விஜயகுமார் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் நீதிபதிகளுக்கு விரோதமாக கருத்து தெரிவித்ததாகவும் பல்வேறு கொலை மிரட்டல்கள் விடுத்ததாகவும் கலவரத்தை தூண்டும் விதமாக எழுதியதாகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தேசத்துரோக வழக்கு 124A மற்றும் கொலை மிரட்டல் வழக்கு 506, இன்னும் இது போன்று பல வழக்குகளையும் விஜயகுமார் மீது பதிந்துள்ளார்கள்.

அழைப்பாணையில் கொடுத்திருந்த தேதியில் விஜயகுமார் அவர்களால் செல்ல முடியாத காரணத்தினால் மீண்டும் அழைப்பாணை அனுப்பும்படி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு மீண்டும் சம்மன் வந்தது. அந்த அழைப்பாணை என்பது பேஸ்புக்கில் எழுதியது சம்பந்தமாக விளக்கம் கோருவது தான். ஆனால் போலீசு, தோழரின் தொலைபேசியை பிடுங்கி வைத்துக்கொண்டு அடுத்த நாள் வரச் சொல்லி நெருக்கடி கொடுத்திருக்கிறது. அடுத்த நாள் போலீஸ் நிலையம் சென்றபோது தோழரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தோழரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் இன்று வரை அரசு மருத்துவமனையில் உள்ள சிறையில் அவதிப்பட்டு வருகிறார்.


படிக்க: கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?


தோழர் விஜயகுமார் அவர்கள், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாட்டில் அனுமதி அளித்ததை கண்டித்து தான் எழுதியிருந்தார். சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்த விஷயம் தான் இது. தோழரின் பதிவில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்:

“உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன தலைமை. ஜாதிச்சங்கமான RSS ஊர்வலத்திற்கு தடை கோரினால் இப்படித்தான் தீர்ப்பு வரும். அவர்கள் ஜாதியை ஜாதி நலனை விட்டுக் கொடுப்பார்களா, அதுவும் பார்ப்பனர்களின் பொற்கால ஆட்சியான மோடி ஆட்சியில். இந்த இந்துத் தீவிரவாத RSS இயக்கத்தை சட்டப்படி நேரிட முடியாது
அவர்களை களத்தில் நேரிட வேண்டும். அவர்கள் ஊர்வலம் நடத்தினால் ஊர்வலத்தைத் தடுக்க அனைத்து வழிமுறைகளையும் தமிழர்கள் பயன்படுத்த வேண்டும்.

இதை அனைத்து கட்சிகளும் இணைந்து இந்த சட்டவிரோத மதத் தீவிரவாத கும்பலை விரட்டியடிக்க வேண்டும்.

இது மோடியின் குஜராத் அல்ல
இது பெரியாரின் தமிழ் மண் என்பதை உணர்த்த வேண்டும்”

இதை பதிவிட்டதற்காக தேசத்துரோக வழக்கு என்றால் நாம் இருப்பது தமிழ்நாட்டில் தானா என்ற பெருத்த சந்தேகம் எழுகிறது? பெரியாரின் வாரிசுகள் என மார்தட்டிக் கொள்ளும் திராவிட மாடல் அரசு, ஒடுக்கு முறையை ஏவுவது ஏன்? காவி கும்பலிடம் பம்முவது ஏன்?

ஆர்.எஸ்.எஸ் கலவர கும்பலுக்கு தமிழ்நாட்டில் அனுமதி கொடுத்த நீதிமன்றத்தை விமர்சிக்கக் கூடாதா? இதுதான் ‘ஜனநாயக’ நாடா? இது நிச்சயமாக கேலிக்கூத்தான ‘ஜனநாயகம்’ தான்.


படிக்க: பரந்தூர் செல்ல முயன்றால் கழுகாக பறந்து கைது செய்யும் தமிழ்நாடு போலீசு


மே 2022-இல் உச்ச நீதிமன்றம் தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்யக்கூடாது என வழிகாட்டுதல் வழங்கியதையும் மீறி தமிழ்நாடு அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. காவிகளின் விசுவாசமான சேவை ஆளாக போலீசுத்துறை மாறிக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

தோழர் விஜயகுமார் அவர்கள் மேற்கண்ட பதிவில் எழுதியிருந்ததின் இடையில் பல்வேறு செருகல்களை சேர்த்து பல்வேறு வழக்குகளையும் போட்டுள்ளது போலீசு.

இந்த வழக்கின் போது கீழமை நீதிமன்றத்தில் பிணை வழங்க மறுத்த நீதிபதி, “ஏற்கெனவே விஜயகுமாரின் மீது இதே குற்றச்சாட்டு உள்ளது. அதற்காக அவர் ஏற்கனவே பிணை வாங்கியுள்ளார். மீண்டும் இத்தகைய செயலில் ஈடுபட மாட்டேன் என சொல்லியுள்ளார்” என பேசுகிறார்.

ஒருமுறை பிணை வாங்கிவிட்டால், அடுத்து நாட்டில் நடக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து பேசக்கூடாதா? இது என்ன வகையான ஜனநாயகம் என நீதிபதி தான் விளக்க வேண்டும். இல்லை அனைவரும் சாவர்க்கராக நடந்துகொள்ள முடியுமா?

தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல் அரசு’ என சொல்லிக்கொள்ள தான் வேண்டுமே தவிர உண்மையில் நடப்பது என்னவோ கார்ப்பரேட் சேவையும் காவி கும்பலுக்கு அடிபணிந்து போவதும் தான். இதை எதிர்த்து அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும்.


ரவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க