பரந்தூர் செல்ல முயன்றால் கழுகாக பறந்து கைது செய்யும் தமிழ்நாடு போலீசு

இவ்வளவு பெரிய மக்கள் போராட்டம், கட்சிகள் இயக்கங்கள் இத்திட்டத்திற்கு எதிர்த்து பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கார்ப்பரேட் சேவைதான் கட்சியின் சேவை என உறுதியாக இருக்கிறது திமுக அரசாங்கம்.

டந்த ஞாயிற்றுக்கிழமை (09-04-2023) அன்று இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில துணைப் பொறுப்பாளர் ரஹ்மதுல்லா அவரது ஆதரவாளர்களுடன் பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க அப்பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது அவரை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது தமிழ்நாடு போலீஸ்.

இதேபோல் பரந்தூர் விமான நிலைய போராட்டத்தின் 200-வது நாளில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பாக போராட்டத்திற்கு ஆதரவளிக்க சென்ற வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதே போன்று தொடர்ச்சியாக அப்பகுதிக்கு செல்லும் அரசியல் இயக்கங்களை சார்ந்தவர்களை தடுத்து திருப்பி அனுப்புவதும் முக்கியமான அரசியல் தலைவர்களை கைது செய்வதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது இந்திய அரசு. அதையெடுத்து நிலங்களை கையகப்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விமான நிலைய உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 12 கிராம மக்கள் போராடி வருகிறார்கள்.தொடர்ச்சியாக 250 நாட்களுக்கு மேலாக இப்போராட்டம் நடந்து வருகிறது.

இங்கு வாழும் மக்கள் பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருபவர்கள். அவர்களின் கோரிக்கை விவசாய நிலங்களை அழித்துவிட்டு அதன்மேல் விமான நிலையம் கொண்டு வர வேண்டாம், விவசாயம் நடைபெறாத மக்கள் பயன்பாட்டில் இல்லாத காலி இடங்களை தேர்வுசெய்து இதுபோன்ற திட்டங்களை அமுல்படுத்துங்கள் என்பது தான்.

படிக்க: பரந்தூர்: விமான நிலையத்திற்காக அழிக்கப்படும் கிராமம் – கார்ப்பரேட் சேவையில் திமுக அரசு!

இதனையடுத்து இந்த கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கட்சியினர், அமைப்புகள், இயக்கங்கள் பேசி வருகின்றன. குறிப்பாக ஆளும் திமுக அரசின் கூட்டணி கட்சிகளே அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இவ்வாறு போராட்டமும் போராட்டத்திற்கான ஆதரவும் தீவிரமடைந்து வருவதனால் பரந்தூர் கிராமத்தை சுற்றி 200-க்கும் மேற்பட்ட போலீசை குவித்து 24 மணி நேரமும் அப்பகுதியை கண்காணித்து வருகிறது தொடர்ந்து கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்தி வரும் திமுக அரசு. குறிப்பாக வெளியூரை சேர்ந்தவர் யாரும் அப்பகுதிக்குள் எளிதில் நுழைய முடியாத அளவிற்கு பாதுகாப்பை பலப்படுத்தி போராட்டத்திற்கு ஆதரவு தர வரும் எவரும் அப்பகுதியை நெருங்க முடியாத அளவிற்கு செயல்பட்டு
வருகிறது.

இவ்வளவு பெரிய மக்கள் போராட்டம், கட்சிகள் இயக்கங்கள் இத்திட்டத்திற்கு எதிர்த்து பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கார்ப்பரேட் சேவைதான் கட்சியின் சேவை என உறுதியாக இருக்கிறது திமுக அரசாங்கம். மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் தொடர்ச்சியாக காவல்துறை மூலம் அப்பகுதி மக்களையும் அரசியல் இயக்கங்களையும் ஒடுக்கி வருகிறது ‘திராவிட மாடல்’ அரசு.

டேவிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க