பரந்தூர்: விமான நிலையத்திற்காக அழிக்கப்படும் கிராமம் – கார்ப்பரேட் சேவையில் திமுக அரசு!

வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களையும், கிராமங்களையும் அழிக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிப்போம். பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!

0

காஞ்சிபுரம் மாவட்டம் பாரந்தூரில் அமையவுள்ள விமான நிலையம் குறித்து தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, “நிலத்தை விட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு இழப்பீடு தொகையை விட மூன்றரை மடங்கு அதிகமாக வழங்கப்படும். அவர்களின் நிலம் மதிப்பு வாய்ந்தது” என்று ஆகஸ்ட் 26 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

“கிராம மக்கள் சிலர் ஓடுபாதையை மாற்ற வேண்டும் என்று விரும்பினர். நாங்கள் அதிகாரிகளுடன் இதைப் பற்றி விவாதிப்போம் என்று அவர்களிடம் (கிராம மக்களிடம்) கூறியுள்ளோம். திருப்போரூர் மற்றும் பட்டாளம் ஆகிய இடங்கள்தான் இரண்டாவது விமான நிலையத்திற்கு பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அவை கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் தாம்பரம் விமானப்படை நிலையத்திற்கு அருகாமையில் இருப்பதால் நிராகரிக்கப்பட்டது. இரண்டாவது விமான நிலையம் சென்னைக்கு காலத்தின் தேவை. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏனெனில் இங்கு குறைவான குடியிருப்புகள் மற்றும் வீடுகள் உள்ளன” என்று அமைச்சர் கூறினார்.

மேலும், விமான நிலையம் அமைப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக இருப்பதாகவும், எவ்வாறாயினும், விவசாய நிலங்களை எடுக்காமல் இவ்வாறான திட்டங்களை கொண்டு வருவதற்கு வேறுவழியில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

படிக்க : பரந்தூர் விமான நிலையம்: கார்ப்பரேட் நலனிற்காக மக்களை வெளியேற்றும் திமுக அரசு | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ

அக்கிராம மக்களுக்கு மாற்று நிலங்களை வழங்குவதுடன் அவர்கள் வீடுகளை நிர்மாணிப்பதற்கு பணத்தையும் வழங்குவோம். நாங்கள் விவசாயிகளை துன்புறுத்தவோ, அவர்களை தொந்தரவு செய்யவோ விரும்பவில்லை. மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் முன் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும் வேலை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் விஜய் குமார் சிங், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமையும் என்று ஆகஸ்ட் 1 அன்று தெரிவித்தார். “சென்னைக்கும் பாரந்தூருக்கும் இடையிலான தூரம் சுமார் 73 கி.மீ. பயணிக்க ஆகும் நேரம் 1 மணி நேரம் 54 நிமிடங்கள். சென்னையில் இருக்கும் விமான நிலையம் தற்போது மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது மற்றும் 150 லட்சம் பயணிகள் போக்குவரத்தை கையாளும் திறன் கொண்டது. பயணிகளின் எண்ணிக்கை 220 லட்சத்தை தொட்ட பிறகு மற்றொரு விமான நிலையம் தேவைப்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து தென்மேற்கு திசையில் சுமார் 59 கிமீ தொலைவில் பரந்தூர் விமான நிலையம் அமைந்துள்ளது.” என்று கூறினார்.

படிக்க : 12 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து யாருக்காக விமான நிலையம்?

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எட்டுவழி சாலை திட்டத்தை எதிர்த்தது. “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்ற புதிய வாதத்தை வைத்து ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” என்று மு.க.ஸ்டாலின் எடப்பாடி ஆட்சியை விமர்சித்தார். ஆனால் தற்போது 8 வழிச்சாலை போடக்கூடாது என திமுக சொல்லவே இல்லை என்று அமைச்சர் எ.வ.வேலு கூறுகிறார். இது பச்சை துரோகம் இல்லையா? பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஒரு கிராமத்தையே நிர்மூலமாக்க விருக்கிறது திமுக அரசு. வளர்ச்சி என்ற பெயரில்தான் இவர்களும் இதனை செய்கிறார்கள். பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களையும், கிராமங்களையும் அழிக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிப்போம். பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க