சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இறுதித் தேர்வாக, மத்திய அரசாலும் மாநில அரசாலும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அரசால் தேர்வு செய்யப்பட்ட இப்பகுதி விவசாயம் செய்யும் பகுதியாகவும் நீர் நிலைகள் அதிகமாக உள்ள பகுதியாகவும் இருக்கிறது. குறிப்பாக 30 ஏரிகளும் 40 குளங்களும் இப்பகுதியில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பரந்தூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், நெல்வாய், தண்டலம், கூத்தவாக்கம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள சுமார் 4500 ஏக்கர் விவசாய நிலங்கள் இதனால் பாதிப்படைகிறது. இதனை அப்பகுதி மக்கள் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக ஏகனாபுரம் கிராம மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

இக்கிராமத்தில் 800 வீடுகளும் அதில் 2500-க்கும் மேற்பட்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். புதிதாக இப்பகுதியில் விமான நிலையம் அமைய உள்ளதால் இம்மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 8-ஆம் தேதி ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை நேரில் சந்தித்தனர். தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.


படிக்க : வன அதிகாரிகளுக்கு நாங்கள் பயப்படுகிறோம், விலங்குகளுக்கு அல்ல: கர்நாடகாவின் ஜெனு குருபா பழங்குடி மக்கள்!


“எங்களுக்கு தெரிந்தது விவசாயம் மட்டும்தான். நாங்கள் விவசாயத்தையும் கால்நடைகளையும் மட்டுமே நம்பி இருக்கிறோம். இதை தவிர வேறெந்த வேலையும் எங்களுக்கு தெரியாது. திடீரென்று வீடுகளை காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே போவோம்? நீங்கள் தருகின்ற மூன்று அல்லது நான்கு செண்ட் கொண்ட மாற்று குடியிருப்பு வீட்டை வைத்து நாங்கள் என்ன செய்வது?” என்று அம்மக்கள் இந்த அரசை பார்த்து கேள்வி எழுப்பினர்.

மேலும் “நாங்கள் விமான நிலையம் வருவதை எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் அனேக இடங்களில் தரிசு நிலங்கள் உள்ளன. அங்கு விமான நிலையங்களை அமைத்துக் கொள்ளுங்கள்” என்றும் கூறினர்.

விவசாயத்தை அழித்து தான் விமான நிலையம் கொண்டு வர வேண்டும் என்றால் வரும் காலங்களில் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள் என்றும் மக்கள் கேள்வி கேட்டனர். நாங்கள் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என்றும் இதற்காக எதையும் இழக்க தயாராக உள்ளோம், ஏன் உயிரை கூட இழக்க தயாராக இருக்கிறோம் என்றும் அம்மக்கள் கூறினர்.

ஒட்டுமொத்த கிராம குடியிருப்பும், ஏக்கர் கணக்கான விவசாய நிலங்களும், மிகபெரிய நீர்நிலைகளும் மத்திய அரசு வெளியிட்ட அங்கீகரிக்கப்படாத வரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தொலைக்காட்சி ஊடகங்களோ மக்கள் இதை மிகவும் வரவேற்கின்றனர் என்று வெட்கமின்றி ஆளும் வர்க்கத்துக்கு துதி பாடி கொண்டிருக்கின்றன. “ஏதாவது தரிசு நிலங்களில் விமான நிலையம் அமைத்து கொள்ளுங்கள், எங்கள் வாழ்வாதாரத்தை விட்டுவிடுங்கள்” என்று ஏகனாபுரம் கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்கான எதிர்ப்பு குரலை அவ்வூடகங்கள்  தனது “நடுநிலை” வாதத்திற்கு கூட எடுத்துக் கொள்வதில்லை.

அரசு தொடர்ச்சியாக சென்னையை உருவாக்கிய பூர்வ குடி மக்களின் வீடுகளை நீர்நிலைப் பகுதியில் உள்ளது என்று இடித்து அவர்களை சென்னையை விட்டு வெளியேற்றி வரும் நிலையில், இப்பொழுது அரசே நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து விமான நிலையங்களை கொண்டு வருவது விந்தையாக உள்ளதல்லவா? அதற்கு காரணம் இது முதலாளிகளுக்கான தேவை. மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து போன்ற வசதிகள் உருவாக்குவது முதலாளிகளின் தேவைக்காகவும் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் வசதிகளுக்காகவும் தான்.

அதற்காக இந்த அரசு எந்த எல்லைக்கும் செல்லும். எத்தனை ஆயிரம் மக்கள் என்றாலும் கண்மூடித்தனமாக வெளியேற்றும். வெளியேற்றப்பட்ட மக்களுக்கு முறையாக வாழ்வாதாரம் அமைத்து தருமா என்றால் அதுவும் இல்லை.


படிக்க : காசா: “பிள்ளைக்கறி திங்கும் யூத இனவெறி பிடித்த இசுரேல்”


இதுவரை உழைக்கும் மக்களிடம் இருந்து பிடுங்கிய எந்த நிலத்திற்கும் முழுமையான இழப்பீடு தந்ததாகவோ அல்லது மாற்று ஏற்பாடு செய்து தந்ததாகவோ சரித்திரமே இல்லை. மந்தையில் இருந்து ஆடு மாடுகளை அவிழ்த்து துரத்தியடிப்பதை போல தான் இந்த அரசு அவர்களை கையாண்டுள்ளது. மக்களிடம் முறையான அனுமதியோ தகவலோ கூட தெரிவிக்கப்பட்டது கிடையாது. அதனால் தான் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி எள்ளளவும் சிந்தனையின்றி ஒட்டுமொத்த கிராமத்தையும் வரைப்படத்திற்குள் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

4500 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்தும் 2500-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் 800 வீடுகளை அழித்து விமான நிலையம் கொண்டு வருவதால் பயனடைய போவது யார்? இந்நாட்டின் பூர்வகுடி மக்களா? இல்லை இந்நாட்டின் பூர்வகுடி மக்களின் உழைப்பை சுரண்டி தின்னும் முதலாளி வர்க்கங்கள் மட்டுமே.

ஒரு பக்கம் உழைக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகரத்தின் வெளிப்பகுதிக்கு துரத்தியடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் அவர்கள் உருவாக்கிய நகரங்களோ பணம் படைத்தவர்கள் மட்டுமே வாழக்கூடிய பகுதியாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு போராடுவது மட்டுமே அவர்கள் உருவாக்கிய நகரத்தை, அவர்களே தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரே தீர்வு.

செழியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க