செப்டம்பர் 7 (சனிக்கிழமை) அன்று மணிப்பூரின் ஜோதிடம் நகரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளது ஒரு வன்முறைக் கும்பல். அதனைத் தொடர்ந்து இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அன்று இரவுக்குள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் காவி கும்பலானது அதானி, அம்பானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் கும்பல்களுக்காக மலைகளில் உள்ள கனிம வளங்களைச் சுரண்டுவதற்குக் குக்கி மெய்தி இன மக்களிடையே கலவரத்தை தூண்டியது.
படிக்க : பரந்தூர் விமான நிலையம்: கார்ப்பரேட் சேவைக்காக சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் திமுக அரசு!
அதன் தொடக்கப் புள்ளியாக மெய்தி இன மக்களைப் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் எஸ்.டி பிரிவில் சேர்ப்பதற்கு மணிப்பூர் உயர்நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதி முரளிதரன் அனுமதியளித்து உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, மெய்தி இன மக்கள் எஸ்.டி பிரிவில் சேர்க்கப்பட்டால் தங்களுக்கு வழங்கப்பட்டுவரும் குறைந்தபட்ச உரிமைகளும் பறிக்கப்பட்டுவிடும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர் குக்கி இன மக்கள். குக்கி இன மக்களுக்கு எதிராக மெய்தி இன மக்களைத் தூண்டிவிட்டு அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி அப்போராட்டத்தைக் கலவரமாக மாற்றியது பைரன் சிங் அரசு.
அதன் தொடர்ச்சியாகவே, அண்மையில் மெய்தி இனவெறி கும்பலானது மேற்கு இம்பாலில் ட்ரோன்கள் மூலம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர், தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு இம்பாலில் உள்ள மக்கள் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் என அனைவரும் ஒன்றிணைந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர்.
மக்களின் போராட்டத்தை நீர்த்து போகச்செய்து கலவரமாக மாற்றக் காவி கும்பல் எத்தனித்து வருகிறது. அன்றைய தினமே மறைந்த முன்னாள் முதல்வர் வீட்டில் காவி கும்பலானது திட்டமிட்டு ராக்கேட் குண்டை வீசி தாக்குதல் நடத்தியது. அதில், ஒருவர் உயிரிழந்தார், 12 வயது சிறுமி உட்படப் பலர் படுகாயம் அடைந்தனர். அதற்கு அடுத்த நாளும் இரு இன மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மணிப்பூரில் கலவரத்தைத் தடுப்பதற்கு பைரன்சிங் இல்லத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடைபெற்றது. அதில், வன்முறையைத் தடுப்பதாக பேசிக்கொண்டே, பழங்குடியின மக்களைத் தீவிரவாதிகள் என்றும் மலைகளில் வாழும் தீவிரவாதிகள் அதிகமாகிவிட்டார்கள் என்றும் உடனடியாக அவர்களை தடுக்க வேண்டும் என்றும் ஆலோசித்துள்ளனர்.
படிக்க : “அபராஜிதா” மசோதா: பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கவா? தப்பிக்கவைக்கவா?
அண்மையில், மணிப்பூர் கலவரத்தைத் திட்டமிட்டு தான் தான் உருவாக்கினேன் என்றும் மெய்தி இன மக்களுக்கு ஆயுதங்களை வழங்கியது தான் தான் என்றும் பைரன்சிங் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ஆடியோ ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கலவரத்தைத் தடுக்கப்போகிறார்களாம் இந்த காவி பயங்கரவாதிகள்.
மணிப்பூரில் தொடர்ந்து கலவரத்தை தூண்டிவரும் காவி பயங்கரவாதிகளையும் அதற்குத் துணை நிற்கும் கார்ப்பரேட் பயங்கரவாதிகளையும் மணிப்பூர் மாநிலத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட்டால் மட்டுமே இரு இன மக்களிடையிலான கலவரத்தையும் தடுக்க முடியும், மணிப்பூர் மாநிலத்தின் கனிம வளங்களையும் பாதுகாக்க முடியும்.
இன்குலாப்