மேற்குவங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் இரவுப்பணியில் ஈடுபட்டிருந்த முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் கொந்தளைப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதிக்கேட்டும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டிக்கக் கோரியும் ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவர்கள் தொடங்கிய போராட்டம் இந்தியா முழுவதும் மருத்துவ மற்றும் இதர கல்லூரி மாணவர்கள் மத்தியில் பற்றி பரவியுள்ளது. மேலும், கொல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டம் மக்கள் போராட்டமாகவும் மாறியுள்ளது.
அதிலும், மேற்குவங்க மாநில மம்தா பேனர்ஜி அரசு தொடக்கத்திலிருந்தே மாணவி கொல்லப்பட்ட சம்பவத்தை மூடி மறைக்கவும் குற்றாளிகளை காப்பாற்றவும் தீவிர முனைப்புக் காட்டிவருவது மேற்குவங்க மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இதனை சமாளிப்பதற்காகவே மாணவியின் மரணத்திற்கு நீதிக்கோரி நடத்தப்பட்ட பேரணியில் மம்தா கலந்துகொண்டார். அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் நிறுவன நாளில் உரையாற்றிய மம்தா, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோரை அவசர அவசரமாக விசாரித்து மரண தண்டனை கொடுக்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவித்தார். இச்சட்டத்திற்கு ஒன்றிய மோடி அரசு ஒப்புதல் தர வேண்டும் என்றும் கூறிவந்தார்.
படிக்க : எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் பறிமுதல்: மாணவர்களை சீரழிப்பது யார்?
இந்நிலையில், தற்போது மேற்குவங்க சட்டமன்றத்தில் பாலியல் குற்றத்திற்காக சிறப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்காக மேற்குவங்கத்தில் செப்டம்பர் 3,4 நாட்களில் நடத்தப்பட்ட சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், “அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் மசோதா (மேற்குவங்க குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்) மசோதா 2024” என்ற சிறப்பு மசோதாவை முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தாக்கல் செய்தார்.
இம்மசோதாப்படி, ஒரு பெண் பாலியல் வன்கொடுமையினால் உயிரிழந்தாலோ அல்லது கோமா நிலைக்குச் சென்றாலோ குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்படும்; பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்படும். இம்மசோதா ஒன்றிய மோடி அரசு கொண்டுவந்த பாரதிய நியாய் சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா – 2023 ஆகிய சட்டங்களிலும் திருத்தத்தை கோருகிறது.
மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் மம்தா, “பாலியல் வன்கொடுமை என்பது மனிதநேயத்துக்கு எதிரான ஒரு சாபம். இதுபோன்ற குற்றங்களை தடுக்க சமூக சீர்திருத்தங்கள் அவசியம். பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துதல், விரைவான நீதி வழங்குதல் மற்றும் குற்றத்துக்கான தண்டனையை அதிகரித்தலுக்கு இம்மசோதா வழிவகுக்கும். மசோதா நிறைவேற்றப்பட்டதும், விசாரணை குறித்த காலக்கெடுவுக்குள் முடிப்பதை உறுதிசெய்ய ஒரு சிறப்பு “அபராஜிதா படையை” உருவாக்குவோம்.
இந்த மசோதா வரலாற்று சிறப்பு வாய்ந்ததும், பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியானதும் ஆகும். இந்த மசோதா மூலம் ஏற்கெனவே இருக்கும் ஒன்றிய அரசு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைப்போம். பாதிக்கப்பட்டவருக்கும், அவரது உறவினர்களுக்கும் நீதியை திறம்பட வழங்குவோம்” என்றார். இதனையடுத்து இம்மசோதாவிற்கு பா.ஜக. உட்பட எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் ஆதரவு தெரிவித்ததையடுத்து மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
பாலியல் வன்கொடுமைகள் உட்பட சமூகத்தில் நடக்கும் பல்வேறு குற்றங்களுக்கும் சட்டம் கடுமையாக்கப்படுவதுதான் தீர்வு என்று கணிசமானோர் கருதினாலும், மக்களின் எதிர்ப்பை திசைதிருப்புவதற்கே சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அனைவரும் புரிந்து வைத்துள்ளனர். ஆனால், இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் வெறுமனே பிரச்சினையை திசைதிருப்புவது மட்டுமல்ல, குற்றத்திற்கு அம்பாக செயல்பட்டவர்களை மட்டும் தண்டித்துவிட்டு, உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கவைத்து பிரச்சினையை மூடி மறைப்பதே இதன் நோக்கம்.
குறிப்பாக, மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை விவகாரத்திலும் மேற்குவங்க மம்தா அரசும் சி.பி.ஐ-யும் பெண்ணை வல்லுறவு செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் என்பவன் மட்டுமே குற்றவாளி என்ற கோணத்தில் திட்டமிட்டே விசாரணையை கொண்டு செல்கிறது. மேலும், மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையும் மாணவியின் உடல் முழுவதுமிருந்த காயங்களும் மாணவி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
படிக்க : கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்கள் போராட்டம்!
முக்கியமாக, கொல்லப்பட்ட மருத்துவ மாணவி ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த கிரிமினல் குற்றங்களுக்கு எதிராக போராடியதால்தான் இத்துணை கொடூரமாக பழிவாங்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. சக மருத்துவர்களும் பெற்றோர்களும் கொடுத்த வாக்குமூலம் இதனை நிரூபிக்கின்றன. இந்த கிரிமினல் குற்றங்கள் அக்கல்லூரியின் முதல்வர் சந்தீப் கோஷ் தலைமையில்தான் நடந்துள்ளது. போதைப்பொருள் விற்பனை, உடல் உறுப்பு திருட்டு, மருத்துவக் கழிவுகளை வங்கதேசத்தில் கொட்டும் மாஃபியா கும்பலுடன் தொடர்பிலிருந்தது என பல்வேறு புகார்கள் சந்தீப் கோஷ் மீது எழுந்துள்ளன. ஆனால், மம்தா அரசு புகார்களை கண்டுகொள்ளாமல் திட்டமிட்டே பாராமுகம் காட்டி வந்ததோடு, புகார் தெரிவித்தவர்களை பழிவாங்கியுள்ளது.
அதனால்தான், மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு சந்தீப் கோஷ் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, வேறு கல்லூரிக்கு முதல்வராக மாற்றி காப்பற்ற முயற்சித்து, மம்தா அரசு. மேலும், மாணவி கொல்லப்பட்டவுடன் சந்தீப் கோஷ் மருத்துவமனையை மறுசீரமைப்பு செய்ய வைத்தது, மருத்துவர்கள் போராட்டத்தின்போது ஒரு கும்பல் மருத்துவமனைக்குள் நுழைந்து தடயங்களை அழித்தது ஆகியவை மாணவியின் மரணத்திற்கு பின்னால் மருத்துவ கிரிமினல் குற்றங்கள் தொடர்பான பல மர்மங்கள் இருப்பதையும் மேற்குவங்க அரசு அந்த கிரிமினல் குற்றவாளிகளை காப்பாற்றி வருவதையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டின. இக்கும்பலை காப்பாற்றுவதற்கே சஞ்சய் ராயை சுற்றி மட்டுமே விசாரணை கொண்டு செல்லப்படுகிறது.
எனவே, தொடக்கத்திலிருந்தே மாணவியின் படுகொலையை சஞ்சய் ராய் என்ற தனிப்பட்ட ஒருவன் செய்த பாலியல் வன்கொடுமையாகவே மேற்குவங்க அரசு சித்தரித்து வருவதன் பின்னணியிலிருந்துதான் தற்போது மேற்குவங்க அரசு இயற்றியுள்ள, “அபராஜிதா” மசோதாவை பார்க்க வேண்டும்.
ஏனெனில், கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாலேயே பல புதிய அதிர்ச்சிகர விஷயங்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, சஞ்சய் ராயிடம் எடுக்கப்பட்ட உண்மையறியும் சோதனையில்தான் அங்கு செல்லும்போதே மாணவி சடலமாக இருந்ததாக தெரிவித்துள்ளது பல விவாதங்களை எழுப்பியுள்ளது. இவை மாணவியின் மரணத்திற்கு பின்னணியில் உள்ள கிரிமினல் கும்பல்களுக்கு குடைச்சலை ஏற்படுத்துகிறது. அரசியல்வாதிகளையும் மாஃபியா கும்பல்களையும் காப்பாற்ற உள்ளூர் ரவுடிகளை என்கவுண்டர் செய்வதை போல சஞ்சய் ராய் போன்ற அம்புகளுக்கு மரண தண்டனை கொடுத்துவிட்டு உண்மை குற்றவாளிகளை காப்பாற்றுவதே மம்தா அரசு கொண்டுவந்துள்ள இப்புதிய மசோதாவின் உண்மையான நோக்கம்.
மற்றபடி, எந்த சட்டமும் இதுவரை கார்ப்பரேட் முதலாளிகளையும், அரசியல்வாதிகளையும், மாஃபியா கும்பலையும் சிறையிலடைத்ததில்லை. இக்கொள்கையில் அனைத்து ஆளும் வர்க்க கட்சிகளும் ஒன்றிணைகின்றன. அதன் காரணமாகவே பா.ஜ.க. உட்பட அனைத்து கட்சிகளும் குறைந்தபட்ச அரசியல் கூட செய்யாமல் இச்சட்டத்திற்கு ஆதரவளித்து சட்டத்தை நிறைவேற்றியுள்ளன. மாறாக, பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காக அப்பாவி மக்களை தண்டிக்கும் மனித உரிமை மீறல்களுக்கே இச்சட்டம் வழிவகுக்கும்.
எனவே, பாலியல் குற்றவாளிகளையும் மாஃபியா கிரிமினல் கும்பலையும் பாதுகாக்கும் அரசு உள்ளவரை, சட்டங்கள் கடுமையாக்கப்படுவதாலும் மரண தண்டணை விதிப்பதாலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் எவ்வித்திலும் தடுத்து நிறுத்தப்படப் போவதில்லை. மாறாக, உண்மைக் குற்றவாளிகளை பாதுகாப்பதற்காகவும், குற்றத்தை மூடிமறைப்பதற்காகவும் சஞ்சய் ராய் போன்ற அம்புகளும் குற்றத்திற்கு தொடர்பில்லாத அப்பாவி மக்களுமே பலியாக்கப்படுவார்கள்.
சோபியா