06.09.2024
புதுப்புது வேடங்களில் அரசுப் பள்ளிகளில் ஊடுருவும் காவி கும்பல்:
பரம்பொருள் பவுண்டேஷன் மகாவிஷ்ணு ஒருதுளி மட்டுமே!
பு.மா.இ.மு கண்டன அறிக்கை!
சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரிப்பள்ளி ஆகியவற்றில் சில நாட்களுக்கு முன்பு மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி ஒன்றை பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்து நடத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மாணவ – மாணவிகள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், பரம்பொருள் பவுண்டேஷனைச் சார்ந்த மகாவிஷ்ணு என்ற நபரை பேச்சாளராக அழைத்துள்ளது.
இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்களால் போதிக்க முடியாத வேதங்கள், மத நூல்களில் உள்ள ஞானத்தை-ஆன்மீகத்தைக் கற்றுக் கொடுப்பதாகச் சொல்லிக்கொண்டு மாணவர்களிடம் பாவம், புண்ணியம், கர்மா, முற்பிறவி – மறுபிறவி போன்ற அறிவியலுக்கு ஒவ்வாத, பழமைவாத பிற்போக்குக் கருத்துக்களை மகாவிஷ்ணு பேசியிருக்கிறான். கண் பார்வை குறைபாடுடையவராக-மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக, அழகில்லாமல் பிறப்பது எல்லாம் நாம் முற்பிறவியில் செய்த பாவத்தினால்தான் என்று ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் காவி சித்தாந்தத்தை மாணவர் மண்டையில் திணிக்கும் வேலையைச் செய்துள்ளான்.
படிக்க : திருப்பூர்: தள்ளுவண்டி உணவகத்தைச் சூறையாடிய இந்து முன்னணி வழிபறி கும்பல்!
மாணவர்களிடம் பிற்போக்குத்தனத்தை விதைக்கின்ற அவனது அயோக்கியத்தனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அசோக்நகர் பள்ளியில் பணியாற்றும் பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியரான திரு.சங்கர் எதிர்த்துக் கேட்டிருக்கிறார். உடனே, அந்த ஆசிரியரின் உடல் குறைபாட்டைக் கேலி செய்யும் விதமாக, “அவருக்கு ஏதோ ஈ.கோ பிரச்சினை” என்று பேசி பள்ளி மாணவிகளின் முன்பு அந்த ஆசிரியரை அவமானப்படுத்தியிருக்கிறான், இந்த சங்கி.
பலபேருடன் உறவு வைத்துக் கொள்வது தவறா? காமமே கடவுளை அடையும் மிகச்சிறந்த வழி- வள்ளுவரைப் போல காமத்தைச் சொல்ல முடியாது என்பன போன்ற ‘ஆன்மீக ஆராய்ச்சிகள்’ குறித்தும், நித்தியானந்தா, ஜக்கி போன்றோர் முன்வைக்கும் பிற்போக்குக் குப்பைகளையும் மீண்டும் சந்தைப்படுத்தும் இலக்கில் பேசுவதே இவனது நோக்கம்.
இவன் ஏற்கெனவே, தனது யூடியூப் பக்கங்களிலும், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரின் யூடியூப் பக்கங்களிலும் மேற்சொன்ன வகையில் பேசியுள்ளான். மேலும், பரம்பொருள் அறக்கட்டளை என்ற நிறுவனத்தை ஆரம்பித்து சுமார் 30 நாடுகளில் கிளை பரப்பி தனது ‘ஆன்மீக ஆராய்ச்சி’ – வியாபாரத்தைக் கடைவிரித்து வருகிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய கழிசடையைத்தான், அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் மத்தியில் உரையாற்ற அழைத்துள்ளனர்.
இப்பள்ளிகளில் கலந்துக் கொண்ட நிகழ்ச்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் மகாவிஷ்ணு வெளியிட்ட காணொளியால்தான் இந்த நிகழ்வு குறித்து பொதுச் சமூகத்திற்குத் தெரிய வந்திருக்கிறது. இரண்டு பள்ளிகளிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு எதிராக தமிழ்நாட்டின் ஜனநாயக – முற்போக்கு சக்திகளிடமிருந்து கடும் எதிர்ப்புகளும் கண்டங்களும் எழுந்திருக்கின்றன.
கண்டனங்களுக்குப் பிறகு, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அசோக் நகர் பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் உரையாடியதோடு, ஆசிரியர் சங்கரையும் மேடையில் அமர வைத்துப் பாராட்டியிருக்கிறார். அப்பொழுது பேசிய அமைச்சர், எனது பகுதிக்குள் வந்து எங்களுடைய ஆசிரியரை அவமானப்படுத்திய மகாவிஷ்ணுவை சும்மா விடமாட்டேன். அந்த நபர் மீது காவல்துறையில் வழக்கு பதியப்படும் என்று பேசியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யார்? அனுமதி கொடுத்தது யார்? என்று குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார். தொடர்புடைய இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஆர். எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் ஊடுருவதற்கான பல்வேறு திட்டங்களையும் வழிகளையும் உருவாக்கித் தரும் திமுக அரசின் மீது யார் நடவடிக்கை எடுப்பது?
படிக்க : மகாராஷ்டிரா தேர்தல் தேதி: எஜமானின் உத்தரவுக்காக காத்திருக்கும் தேர்தல் ஆணையம்!
இந்நிகழ்வுக்குப் பிறகு, இனி அரசுப்பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்படும், அரசு அனுமதியின்றி எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படக் கூடாது, கல்வி சாராத நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அறிவிப்புகள் கூட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் ஊடுருவலை தடுத்து நிறுத்தப் போவதில்லை.
அரசுப்பள்ளிகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது ஒன்றும் புதிதல்ல. பொது சமூகத்திற்குத் தெரியாதவகையில் பல்வேறு பெயர்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக, தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி, யோகா, வேத கணிதம், மாணிக்க மாணவர்கள் தேர்வு எனப் பல வடிவங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட பிற்போக்கு-காவிக் கும்பல்கள் பலர் செயல்பட்டு வருகின்றனர்.
அசோக்நகர் பள்ளியில் ஆசிரியருடன் நடைபெற்ற வாக்குவாதத்தில், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியை விட உங்களுக்கு அறிவு அதிகமா? எதற்கு என்னைப் பேச அழைத்தீர்கள் என்று மகாவிஷ்ணுவின் மிரட்டயது, பல இடங்களில் கல்வித்துறை அதிகாரிகள் அனுமதியுடனே இந்நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட கல்வித்துறை அதிகாரிகள் மூலம் அரசுப்பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் ஒருபுறம்; மறுபுறத்தில், திமுக அரசு செயல்படுத்திவரும் இல்லம் தேடிக் கல்வி, நம்ம ஸ்கூல் பவுண்டேஷன், வானவில் மன்றம் போன்ற திட்டங்கள் தன்னார்வலர்கள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவும் வாய்ப்பை உருவாக்கித் தருகின்றன.
புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்குவோம் என பேசினாலும்,மேற்சொன்ன திட்டங்கள் மூலம் பல்வேறு அம்சங்களில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது திமுக அரசு. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்கள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவவே வாய்ப்பிருக்கிறது என்று இத்திட்டம் அறிவிக்கப்படும் போதே எமது அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இத்திட்டங்கள் தமிழ்நாட்டில், ஆர்.எஸ்.எஸ் காவி கும்பலுக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக் கொடுப்பதோடு, கல்வித் துறையைக் கார்ப்பரேட்டுகள் விழுங்குவதற்கான ஏற்பாடாகவும் இருக்கின்றன. இந்தவகையில், பள்ளிகளில் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு முதன்மைக் காரணம், திமுக அரசும் கல்வித்துறையுமே.
படிக்க : இந்தியாவில் அதிகரித்துவரும் மாணவர்கள் தற்கொலைகள்
தமிழ்நாடு அரசே!
- கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவ உதவி செய்துவரும் அதிகாரிகள், ஊழியர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடு!
- மகாவிஷ்ணு போன்ற பிற்போக்கு கும்பலின் அமைப்புகளை தடை செய்!
- கல்வியில் ஜனநாயகம் அறிவியல் பூர்வமான விசயங்களுக்கு எதிராக உள்ள ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பலை தடை செய்!
- மாநில கல்விக் கொள்கை என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையை பல்வேறு பெயர்களில் அமல்படுத்துவதை நிறுத்திடு!
- மாநில அளவில் கல்வியாளர்கள், மாணவர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்களை அமைத்து, மாணவர் – ஆசிரியர் நலன்சார் திட்டங்கள் குறித்து பரிசீலித்துத் திட்டமிடு!
- பெற்றோர் – மாணவர் – ஆசிரியர் கூட்டுப் பொறுப்பிலும், ஜனநாயக – முற்போக்கு சக்திகளின் பங்கேற்பிலும் வாசிப்பு இயக்கங்கள், கல்வி – மாணவர் நலன்சார் உரையாடல்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வழிவகை செய்திடு!
ஆசிரியர் சங்கங்களே!
- அரசுப் பள்ளி பாதுகாப்பு, மாணவர் நலன்சார் கல்விக் கொள்கை உருவாகவும் போராடுங்கள்!
- சமூக மாற்றத்திற்கான ஆசிரியர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், மாணவர்களை ஜனநாயகப்பூர்வமாக வளர்த்தெடுக்கும் பணியில் ஈடுபடுங்கள்!
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – 9444836642.
rsyftamilnadu@gmail.com